தம்பி [சிறுகதை]
அன்புடன் ஆசிரியருக்கு
பேய்க்கதைகள் தேவதைக்கதைகள் நூலில் என்னை அதிகமாக அச்சுறுத்திய கதை தம்பி. அக்கதையை மீண்டும் இன்று வாசித்தேன். அக்கதையில் இருக்கும் தர்க்கப்பூர்வமான ஒரு தளம் தான் கதை முடியும் போது அத்தகைய பயத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது என்று நினைக்கிறேன். சரவணன் பியூட்டிஃபுல் மைண்ட் படம் பார்த்து வருகிற அன்றிரவில் இருந்து தான் செந்தில் அவனுக்குள் நுழைவதற்கான விருப்பம் உருவாகிறது. அடக்கமான ஜான் நாஷுடன் கட்டற்ற ஒரு குடிகாரனும் அழகான சிறுமியும் படம் முழுக்க வருகின்றனர். நாஷுக்கு வயதான பிறகு கூட அவர்கள் இளமையுடனே இருக்கின்றனர். குடிப்பழக்கம் உட்பட எந்தத் தீய பழக்கங்களும் இல்லாத சரியான வாழ்க்கை ஒன்றை வாழும் சரவணனின் முதல் விரிசல் அந்தப் படத்தில் வரும் குடிகாரன் என்று தான் தோன்றுகிறது. சரவணனின் வாழ்க்கை இவ்வளவு சீராகச் செல்வதற்கு கூட செந்தில் தான் ஒரு வகையில் காரணம். அவனைப் பற்றிய பிரக்ஞையே இவனைக் கட்டுக்குள் வைக்கிறது. ஆனால் அக்கட்டுப்பாட்டின் மீதான சலிப்பே அவனுக்குள் விரிசலை உருவாக்குகிறது.
இத்தனை நாட்கள் கட்டி உருவாக்கி வைத்திருந்த வாழ்வை அவனே சிதைத்துக் கொள்ளத் தொடங்குகிறான் என்பதே திகிலூட்டுகிறது. உணவகத்தில் இரண்டு ஆளாக நடந்து கொள்வது நாய் ஊளையிடுவது போன்றவற்றை சிவசண்முகம் விளக்கும் இடங்கள் தர்க்கரீதியானவை தான்.ஆனால் அவையே அச்சத்தை அளிக்கின்றன. புறத்தில் இருந்து ஏற்படுவதை விட அகமே ஒருவனை உருக்கி வேறொருவனாக மாற்றுகிறது என்பது அளிக்கும் திகிலுக்கு பிரத்யேகமான ஒரு காரணமுண்டு. அது என்று வேண்டுமானாலும் நமக்கும் நடக்கலாம்.
அதன்பிறகு இக்கதை செந்திலுக்கும் சரவணனுக்குமான உறவை விவரித்து குற்றம் குற்றவுணர்ச்சி என்ற எல்லைக்குள் நுழையும் போது மேலும் அச்சுறுத்தத் தொடங்கிறது. சரவணன் வழியாக செந்திலைப் புரிந்து கொள்ளத் தொடங்கிறோம். செந்தில் தன்னை விட வலுவானவன் மூர்க்கம் மிக்கவன் என்பதை சரவணனே நம்மிடம் சொல்கிறான். நான்கு பேர் சேர்ந்து இழுத்து நிறுத்த வேண்டிய உடல் பலம் கொண்டவன் சரவணனின் ஒரு சொல்லுக்கு கட்டுப்படுகிறான்.
இறுதியில் செந்திலை சரவணனுக்கு பழக்குகிறார் மருத்துவர். ஒரு புள்ளியில் சரவணனின் அன்பை செந்தில் பெறத் தொடங்குகிறான். அவனிடமிருந்து விலகவும் தொடங்கி விடுகிறான். ஆனால் அவன் ஏன் அத்தனை விசையுடனும் மூர்க்கத்துடனும் சரவணனிடம் மீள வேண்டும்? தம்பிக்கு உதவிகள் செய்தவன் (சரவணன் தனக்கு தானே செய்து கொண்ட உதவிகள் தான் அவை) முத்தமிடுகிறவன் அன்புடன் இருக்கிறவன் தம்பி தன்னை ஏற்றுக்கொள்ளும் போது ஏன் அவ்வளவு விசையுடன் சீற்றம் கொண்டு திரும்புகிறான். கதையில் அதற்கான காரணம் சொல்லப்பட்டிருக்கிறது.
மருத்துவர் இப்படிச் சொல்கிறார்
“அவனைமாதிரிப் பிறவிகள் அன்பைக் காட்டினால் அது முழு அன்பாகத்தான் இருக்கும். சுயலநலமோ பயமோ இருக்காது. அவன் உங்கள் கூடவே இருந்தான். நீங்கள் அவன் மேல அன்பு காட்டவில்லை. …”
அத்தகைய ஒரு அன்புக்கான ஏக்கம் எல்லோ மனதிலும் இயல்பாக இருப்பதே. ஆனால் சரவணன் தன்னுடைய குற்றச் செயலினால் அத்தகைய அன்பை புனிதமென்றும் மீட்பென்றும் எண்ணி விடுகிறான்.
சிகிச்சையின் ஒரு கட்டத்தில் அவனே இப்படிச் சொல்கிறான்
“அவனது இயல்பு என்னை மோசமான தந்திரக்காரனாகவும் குரூரமானவனாகவும் எனக்குக் காட்டியது ””
“முழுமையாக செந்திலை வெறுத்த போதிருந்த அவனது சுயம் மெல்ல மாறுதலடைந்து செந்திலை நேசிக்க கற்றுக் கொள்கிறது. ஆனால் அது நிர்பந்தத்தால் எழும் நேசம்.
“அவன் குரூபி. என்னையும் அவனையும் ஒப்பிடவே முடியாது. ஆனால் எனக்கு உள்ளூரத்தெரியும் அவனும் நானும் ஒன்று என்று”
தன் சகோதரன் கபடற்றவன் என்றும் தூயவன் என்றும் அவன் எண்ணுவதே அவன் இருந்த போது தன்மீது அன்புடன் இருந்திருப்பான் என்று சரவணனை எண்ணிக் கொள்ள வைக்கிறது. ஆனால் அத்தகைய தூய ஒருவனை தன்னால் மடைமாற்றி திருப்பிவிட முடிகிறது என்பதை அவனால் ஏற்க இயலவில்லை. தன் இறந்த சகோதரனும் தன் போன்ற ஒருவனா என்ற எண்ணமே மீண்டும் உக்கிரமாக அவனுக்குள் இருந்து செந்திலை எழச் செய்கிறது.
கதையின் முடிவை என்னால் விளக்க இயலவில்லை. ஆனால் அதுதான் சரி என்று தோன்றுகிறது. செந்திலின் வழியாகவே சரவணனின் மீட்பு நிகழ இயலும். உன்னதத்தை மட்டுமே எண்ணக்கூடிய ஒரு மணமாக மாறிவிட்ட சரவணனுக்கு வேறு எவ்வகையிலும் முடிவு ஏற்பட முடியாது.
கதையில் வருவது போல
“மனதின் திறன்கள் கடல் போன்றவை… ”
அன்புடன்
சுரேஷ் பிரதீப்
அன்புள்ள சுரேஷ்
சிற்றிதழ்ச் சூழலில் எண்பதுகளில் பேய்க்கதை என்பதை இலக்கியமாகக் கருதமாட்டார்கள். முழுக்கமுழுக்க தர்க்கத்துக்கு உட்பட்டதே இலக்கியமாக முடியும் என்ற நம்பிக்கை ஓங்கியிருந்த காலகட்டம். அது நவீனத்துவத்தின் சிந்தனைமுறை. பேய்க்கதைகள் அடிப்படையில் பொய்யான உணர்ச்சிகளைக் கொண்டவை, வாசகனின் உணர்ச்சிகளுடன் விளையாடுபவை, ஆகவே அவை வணிக இலக்கியம் சார்ந்தவை என்று அன்று எண்ணினார்கள். எல்லா வகையான கதைகளையும் எழுதிப்பார்த்தவரும் அதேசமயம் நவீனத்துவத்தின் பிதாமகருமான புதுமைப்பித்தன் காஞ்சனை பிரம்மராக்ஷஸ் போன்ற கதைகளை எழுதியிருந்தார். பேய்க்கதைகளை விரும்பிப் படிப்பவரான கநாசு அவை புதுமைப்பித்தனின் விளையாட்டுக்கள் என்று எண்ணினார். சுந்தர ராமசாமிக்கும் அதே கருத்துதான்.
ஆனால் எனக்கு அவற்றில் பெரிய ஈடுபாடு இருந்தது. ஏனென்றால் யக்ஷிகளும் பேய்களும் நாகங்களும் பூதங்களும் நிறைந்த ஒரு நிலம் குமரிமாவட்டம். நான் அவற்றை எழுத விரும்பினேன். ஆனால் அவற்றையும் ஏன் இலக்கியம் என்று சொல்லவேண்டும் என்று வாதிட எனக்குத்தெரிந்திருக்கவில்லை. அன்று, எண்பதுகளின் இறுதியில் திடீரென அமெரிக்காவில் எடித் வார்ட்டன் அதிகமாகப் பேசப்பட்டார். நான் அவருடைய நக்கல்கதைகளை விட பேய்க்கதைகளால் மிகவும் கவரப்பட்டேன். அதற்கு முன்னரே என் உள்ளம் கவர்ந்த மேரி கெரெல்லிக்குச் சமானமானவர் என தோன்றினார். அவருடைய கெர்ஃபோல் என்ற கதையைச் சுருக்கமாக மொழியாக்கமும் செய்தேன். அது இலக்கியப்படைப்புதான் என்று தோன்றியது
அதையொட்டியே எண்ணிக்கொண்டிருந்தேன். பேய்க்கதைகளில் இரண்டு வகை உள்ளது. awe என ஆங்கிலத்தில் சொல்லப்படும் ஓர் உணர்வு உண்டு. அச்சம்தான், ஆனால் தானழிந்து நின்றிருக்கும் நிலையின் உணர்வு அது. அவ்வுணர்வை நாம் அடையும் தருணங்கள் அனைத்துமே ஆழமானவை. பெருந்தரிசனங்களை நம்முள் நிகழ்த்துபவை. சிறந்த பேய்க்கதைகள் என்பவை நம்முள் அந்த தானழிவின் அச்சத்தையே அளிக்கின்றன. வழக்கமான தருணங்களை உருவாக்கி நம்மை அச்சுறுத்தி விளையாடும் கதைகளுக்கும் அவற்றுக்கும் மிகப்பெரிய வேறுபாடுண்டு.
கெர்ஃபோல் வரலாற்றின் குரூரத்தை, அதன் அமைதியை குறியீடாக நமக்கு உணர்த்தும் கதை. ஓசை அற்ற அந்த நாய்கள் மிகப்பெரிய குறியீடு. நாம் அக்கதையில் அடையும் உணர்வு என்பது வரலாற்றை அடர்த்தியான கூரிய படிமமாக அருகே காண்பதனால் வரும் பதற்றம். அதை அன்றாடவாழ்க்கையைச் சித்தரிக்கும் ஓர் எளிய யதார்த்தக் கதை நமக்கு அளிக்காது.
எனக்கு மிகவும் பிடித்தமான இன்னொரு பேய்க் கதை ஷெரிடன் லெ ஃபானு எழுதிய கார்மில்லா. இளமையில் அஜிக்கும் சைதன்யாவுக்கு அந்தக்கதையை பலவகையில் உருமாற்றிச் சொல்லியிருக்கிறேன். அந்தக்கதை ஒர் இளம்பெண்ணின் உள்ளத்தின் நுண்ணிய திரிபு, அதிலுள்ள அச்சுறுத்தும் பித்தின் ஆழம். ஆனால் அது ஒரு ரத்தரக்ஷஸ் கதையும்தான்.[ கார்மில்லா] உலகின் சிறந்த பேய்க்கதைகள் என்ற ஒரு தொகுதி என்னிடம் இருந்தது. அதிலுள்ள பெரும்பாலான கதைகள் எனக்கு ஆழ்ந்த அர்த்தங்கள் திறந்துகொள்ளும் கவிதைவெளிப்பாடுகளாகவே தெரிந்தன.
மெல்ல பேய்க்கதைகளும் இலக்கியத்தின் சிறந்த வகைமாதிரிகளில் ஒன்றே என்ற எண்ணத்தைச் சென்றடைந்தேன். மானுட உள்ளம் அது எண்ணி எண்ணிச் சென்றடைய முடியாத சில அறுதி எல்லைகளை வெவ்வேறு வகையில் குறியீடுகளாக ஆக்கிக் கொண்டு தன்னுடன் வைத்துள்ளது. பேய்களும் தேவர்களும் பூதங்களும் சார்ந்த படிமங்கள் அதில் ஒரு வகைமாதிரி. அவை மானுடத்தின் விடைதெரியாத வினாக்களின் கற்பனை வடிவங்கள். அந்த படிமங்களினூடாக அந்த விடைதெரியாத கேள்வியின் தருணத்தைச் சென்றடையும் படைப்புக்கள் முக்கியமானவை. அவை பேரிலக்கியங்கள்தான். மொழியில் அவை என்றுமிருக்கும்.
பெரும்பாலான பேய்க்கதைகள் வாழ்க்கையின் அடிப்படையான சில வினாக்களையே சென்றடைகின்றன. வரலாற்றின் பெருங்கொடுமைகளை எப்படி காலம் மிக இயல்பாக மண்மூடச்செய்துவிடுகிறது என்னும் திகைப்பு. எதிர்வினையாற்ற முடியாதவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் அப்படியே மறைந்துவிடத்தான் வேண்டுமா என்ற சீற்றம். மானுட உறவுகளுக்குள் ஆழத்தில் இருக்கும் குரூரத்தின் உண்மையான பொருளென்ன என்னும் அலைக்கழிப்பு.இறப்பு என்பது வாழ்க்கையின் முழுமுற்றான முடிவாக இருக்குமென்றால் வாழ்வின் நிகழ்வொழுக்குக்கும் உணர்ச்சிகளுக்கும் என்ன பொருள் என்னும் தேடல். தான் என நாம் உணர்வது அன்றாடச்சூழலால் வகுத்துக்கொள்வதா அன்றி வரலாற்றால் தொகுக்கப்படுவதா என்னும் ஊசலாட்டம். அந்த அடிப்படை வினாக்கள் நோக்கிக் கொண்டுசெல்லும் பேய்க்கதைகளும் தேவதைக் கதைகளும் பேரிலக்கியங்கள்தான்.
ஜெ