‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 46

tigவிதுரரின் மாளிகை முற்றத்தில் அரசியர் மூவரும் அமர்ந்த அணித்தேர் சென்று நின்றது. முன்னரே அங்கு அணிவகுத்திருந்த காவலர்கள் வாள் தாழ்த்தி வாழ்த்துரை முழக்கினர். மாளிகையின் உள்ளிருந்து மூன்று சேடியர் கையில் மலர்த்தாலமும் சிற்றகல்சுடரும் மஞ்சள்நீருமாக வெளியே வந்து அரசியரை வரவேற்றனர். தாரையும் அசலையும் இறங்கி நின்றபின் பானுமதி கைகூப்பியபடி இறங்கினாள். தாலத்தில் இருந்த நீரை சேடி அவள் காலில் விட்டு கழுவ மலர் எடுத்து குழலில் சூடி, சுடர் தொட்டு கண்ணில் ஒற்றி அவள் மாளிகைக்குள் நுழைந்தாள்.

அவளை எதிர்கொண்ட முதிய சேடி தயக்கத்துடன் “பொறுத்தருள்க, அரசி! அமைச்சர் தன் அறையில் இருக்கிறார். தாங்கள் வருவதை மூன்று முறை சென்று உரைத்தேன். நீ செல்க, நான் வருகிறேன் என்றார். முறைப்படி அவர் வந்து தங்களை வரவேற்க வேண்டும் என்று நான் மூன்றாம் முறையும் சொன்னபோது…” என்று சொல்லிச்செல்ல பானுமதி கையமர்த்தி தடுத்தாள். “எங்கிருக்கிறார் என்று மட்டும் காட்டுக!” என்றாள். முதுசேடி “அவர்…” என மேலும் தயங்கி “அவர் வழக்கமில்லாமல் இன்று…” என்றாள். “சொல்க!” என்றாள் பானுமதி. “அறியேன். ஆனால் அகிபீனா கொண்டிருப்பாரோ என ஐயமாக உள்ளது” என்றாள். பானுமதி தலையசைத்தாள். “வருக, அரசி!” என்று முதுமகள் மரப்படிகளினூடாக பானுமதியை மேலே அழைத்துச் சென்றாள்.

பானுமதி இடைநாழியில் நின்று அங்கு திறந்துகிடந்த சாளரத்தைப் பார்த்து ஒருகணம் தயங்கி பின் முதுசேடியிடம் “அந்தச் சாளரமா?” என்றாள். “ஆம், இரவும் பகலும் அங்குதான் அமர்ந்திருக்கிறார். துயில்வதேயில்லை, சற்றே அயர்ந்து விழிப்புகொள்வதுடன் சரி” என்றாள் முதுமகள். “சற்று முன் சிறுமருத்துவர் ஒருவர் வந்தார். துயிலுக்கு மருந்து கோரியிருக்கிறார் என்று எண்ணினேன்… ஆனால் அவர் துயிலவில்லை.” பானுமதி தலையசைத்து “துயில் எளிதல்ல” என்றாள். “இப்போது எங்கிருக்கிறார்?” என்று தாரை கேட்டாள். “தன் தனியறைக்குள். அவ்வறையை ஒட்டி மிகச் சிறிய வைப்பறை ஒன்றும் உள்ளது. அதற்குள் உள்ள பேழைகளில் என்ன இருக்கிறதென்று அறியேன். பெரும்பாலான பொழுதுகளில் அங்குதான் இருக்கிறார். பொருட்களை ஒன்றிலிருந்து ஒன்று எடுத்து இடம் மாற்றுகிறார் என்று தோன்றுகிறது” என்றாள் சேடி.

பானுமதி “அவரை அழை” என்றாள். முதுசேடி அறைக்கதவருகே சென்றாள். பெரிய ஒற்றைக்கதவு மூடப்பட்டிருக்கவில்லை. சேடி அதை மெல்ல தட்டி “அமைச்சரே! அமைச்சரே!” என்று அழைத்தபோது உள்ளிருந்து “யார்?” என்றொரு குரல் கேட்டது. “நான் சூக்தை, கதவை திறவுங்கள்” என்றாள் சேடி. “யார்?” என்றார் விதுரர். அவர் குரல் குழறியது. “அமைச்சரே, அரசியர் வந்துள்ளார்கள். பட்டத்தரசி வந்துள்ளார்” என்று அவள் சொல்ல “நான் இங்கு அலுவலில் உள்ளேன்” என்றார் விதுரர். “என் மருகியர் கீழே இருப்பார்கள். அல்லது சுருதையிடம் சொல். அவர்களுக்குத்தான் அதெல்லாம் தெரியும்.” பானுமதி “நன்றாக தட்டு” என சொல்ல சேடி வலுவாகத் தட்டி “அமைச்சரே…” என்றாள். விதுரர் எரிச்சலுடன் “உள்ளே வா” என்றார்.

சேடி உள்ளே செல்ல முயல மெல்ல அவள் தோளை தொட்டபின் கதவைத் திறந்து பானுமதி உள்ளே நுழைந்தாள். கைகூப்பியபடி “வணங்குகிறேன், அமைச்சரே” என்றாள். சிறிய அறைக்குள் விதுரர் மஞ்சத்தில் அமர்ந்து தன்னைச் சூழ்ந்து வெவ்வேறு பொருட்களை பரப்பி வைத்து நோக்கிக்கொண்டிருந்தார். திரும்பி நோக்கி திகைத்து எழுந்து நின்று “அரசி, தாங்களா? தாங்கள் வருவதை எவரும் சொல்லவில்லை” என்றார். “மறந்துவிட்டிருப்பார்கள்” என்றபடி நான் “அமரலாமல்லவா?” என்றாள் பானுமதி. “அமர்க! அமர்க!” என்றபின் தாரையையும் அசலையையும் பார்த்து “வருக! அரசியர் என் இல்லத்திற்கு வந்தது பெரும்பேறு. பொறுத்தருள்க! இங்கு தங்களை வரவேற்க பெண்டிர் எவரும் இல்லை. என் இரு மகன்களும் மருகியரும் யாதவ நிலத்திலிருக்கிறார்கள். நான் வேண்டுமென்றால் கீழே சென்று…” என்று உடலில் கிளம்பும் அசைவை கொண்டார்.

“அமருங்கள், அமைச்சரே. தங்களை சந்தித்து சொல்லுரைத்துச் செல்லலாம் என்றுதான் வந்தேன்” என்றாள் பானுமதி. “ஆம், நான் கிளம்பிக்கொண்டிருக்கிறேன். இன்று இரவுக்குள் நான் கிளம்பிச் செல்லவேண்டும். நெடுந்தொலைவு செல்ல வேண்டியிருக்கிறது. கங்கையில் படகுக்கு சொல்லிவிட்டேன். மூத்தவரிடம் விடை பெற்றுவிட்டேன். பிறிதொன்றும் இங்கு செய்வதற்கில்லை” என்று விதுரர் சொன்னார். விந்தையானதோர் விசையும் உரத்த ஒலியும் அவர் குரலில் இருந்தது. அது அவரை பிறிதொருவர் என காட்டியது. அவர் உடலில் மெல்லிய நடுக்கு இருந்துகொண்டிருப்பதை பானுமதி பார்த்தாள். வெவ்வேறு அளவிலான பேழைகளும் சிமிழ்களும் மஞ்சத்தில் பரவிக்கிடந்தன.

அவள் விழிபோன திசையில் அவரும் நோக்கினார். “இவை என் மறைந்த துணைவி சுருதையின் நகைகள். நான் அனைத்தையும் மருகியருக்கு அளிக்கவில்லை. சிலவற்றை நானே வைத்துக்கொண்டேன். இந்த நகைகளில் அவள் வாழ்கிறாள். இதோ இப்படி இந்த மஞ்சத்தில் இந்த ஆரத்தை பரப்பி வைத்தால் சற்று நேரத்தில் அவளை பார்த்துவிட முடியும். இளமையாக இருப்பாள்.” முகம் மலர “அவளை முதுமையில்தான் நான் கூடுதலாக பார்த்தேன். இளமையில் அவளைவிட அலுவல்களே பெரிதென்று எனக்கு தோன்றின. ஆனால் இன்று அவளுடைய முதுமைத்தோற்றம் முற்றாகவே என் நினைவிலிருந்து அகன்றுவிட்டிருக்கிறது. ஏனென்றால் அவள் இன்றிருக்கும் விண்ணுலகில் முதுமை இல்லை. அழியா இளமை வாழும் இடம் அது” என்றார்.

பேச்சை மாற்றும்பொருட்டு பானுமதி “நீங்கள் அமைச்சர்களிடம் சொல்லிவிட்டீர்கள் அல்லவா?” என்றாள். விதுரர் “இங்கே எனக்கு இப்போது அமைச்சுப்பொறுப்பு என ஏதுமில்லை… உண்மையில் எனக்கு இன்று எவரிடமும் எப்பொறுப்பும் இல்லை” என்றபின் உரக்க நகைத்தார். “நான் இப்போது விரும்பினால் இந்த உடைவாளை எடுத்து என் கழுத்தை அறுத்துக்கொள்ளலாம். நான் சற்று முன் எண்ணினேன், அந்த ஆரத்தின் பதக்கம் வேல்முனை போலிருப்பதாக. அது சுருதை அணிந்த ஆரம். அவள் நெஞ்சில் எப்போதுமிருந்த வேல்முனை அது. அதை எடுத்து என் நெஞ்சில் பாய்ச்சினாலென்ன என்று எண்ணினேன். முன்பு செவ்வேள் முருகனுக்கு பலிகொடுக்கும் விலங்குகளை பொன்வேலால் குத்திக் கொல்வார்கள். நான் பலிவிலங்குபோல் தூயவன் அல்ல.” அவர் மீண்டும் நகைத்து “ஆனால் பலியாகப்போவதனாலேயே எவ்விலங்கும் தூயதாகிவிடுகிறது” என்றார்.

பானுமதி மீண்டும் பேச்சை மாற்றினாள். “எப்போது செல்லவிருக்கிறீர்கள்?” என்றாள். “இன்றே. சொல்லப்போனால் இப்போதே. நான் சில பொருட்களை எடுத்துச்செல்லவேண்டும். அவற்றை தேடிக்கொண்டிருந்தேன். நீங்கள் வருவீர்கள் என எண்ணவில்லை. ஆகவே உங்களிடம் என்ன பேசுவதென்று எனக்கு தெரியவில்லை” என்றார் விதுரர். “ஆனால் நான் சென்றாகவேண்டும். இங்கிருந்து படைகள் கிளம்புவதற்கு முன்னரே நான் கிளம்பியாகவேண்டும். படைகள் கிளம்பிய பின் இந்நகர் எப்படி இருக்கும்? அம்பு அகன்ற வில் என நாண் தளரும். இல்லை கொலைவாளின் குருதிபூசிய அமைதி கொண்டிருக்குமா? அதை பார்க்க நான் விரும்பவில்லை. உண்மையில் அதை பார்த்தால் என் பெருந்தவிப்பு ஒன்றுக்கு விடை கிடைக்கும். ஆனால் நான் இங்கிருக்க முடியாது. நான் இன்றே செல்லவேண்டும். எவர் சொல்லையும் நான் கேட்கப்போவதில்லை.”

பானுமதி “தாங்கள் ஏன் செல்கிறீர்கள் என்று நான் கேட்கப்போவதில்லை, அமைச்சரே. அது தங்கள் உரிமை. இப்போரில் நீங்கள் நடுநிலை வகிப்பதே அனைத்து வகையிலும் உகந்தது என்றும் தோன்றுகிறது” என்றாள். விதுரர் சீற்றம்கொண்டு எழுந்து உரத்த குரலில் “நடுநிலை வகிக்கப்போவதில்லை, வேண்டிக்கொள்ளப்போகிறேன். பாண்டவர்கள்தான் என் மைந்தர். அவர்கள் வெல்ல வேண்டுமென்று வேண்டுவேன். அறச்செல்வனாகிய யுதிஷ்டிரன் அஸ்தினபுரியையும் இந்திரப்பிரஸ்தத்தையும் கைப்பற்றி முடிசூடவேண்டுமென்று வேண்டுவேன். என் மைந்தனென்றால் அவன் யுதிஷ்டிரனே. சுசரிதனோ சுபோத்யனோ அல்ல. உடலில் எழுந்தவரா மைந்தர்கள்? உள்ளம் கொண்டவற்றுக்கு உரிமை உள்ளவர்களே மைந்தர்கள். ஆம், என் மைந்தன் அவனே” என்றார்.

“யுயுத்ஸுவும் என் மைந்தன்தான். அவன் இங்கு இருந்ததனால்தான் நான் இங்கு இருந்தேன். அவனிடம் நான் சொல்லிக்கொண்டிருந்தேன், அறத்தின்பொருட்டு உயிர்துறப்பவனுக்குரியதே வீடுபேறு என்று. என் சொற்கள் அவனில் முளைத்தெழுந்தன. அவன் என்னிடம் வந்து அங்கு செல்லப்போவதாக சொன்ன அன்றே முடிவு செய்துவிட்டேன். நானும் அங்கு செல்லவேண்டுமென்று.” அவருடைய சொற்கள் ஒன்றுடன் ஒன்று முட்டி மோதுவனபோல் வெளிவந்தன. “ஆனால் அங்கு நான் சென்றால் அது அவர்களுக்கு பெருஞ்சுமை. களம் நின்று பொருதும் உடல் எனக்கு இல்லை. வெறுமனே அங்கு அரண்மனையில் அமர்ந்திருக்கவும் என்னால் இயலாது. படைசூழ்கைகளைப்பற்றி எதுவும் சொல்லும் நிலையிலும் நானில்லை. ஆனால் நான் அஸ்தினபுரியின் அனைத்துப் படைசூழ்கைகளையும் முன்னுரைத்துவிட்டேன் என்னும் பழியும் பாண்டவர்களுக்கு வரும். ஆகவேதான் அஸ்தினபுரியிலிருந்து கிளம்பி மிகிர நாட்டுக்கு செல்கிறேன்.”

“மிகிரநாட்டில் எனக்கான குடில் ஒருங்கியுள்ளது. ஆனால் அது தவக்குடில் அல்ல. அங்கு என் உள்ளம் போரில்தான் ஈடுபட்டிருக்கும். இப்பிறப்பில் தவமும் தனிமையும் எனக்கு அமையப்போவதில்லை. நான் வாளேந்தாத படைவீரன்… களம்நில்லாமல் கொல்பவன், குருதிசிந்துபவன்” என்றார் விதுரர். தொடர்ந்து பேசியதன் இளைப்பில் இடையில் கையூன்றி நின்றார். மூச்சுக்களாலேயே பேசிவந்ததன் தொடர்ச்சியை இழந்து தலையை அசைத்தார். கசப்புடன் சிரித்தபடி மீண்டும் மஞ்சத்தில் அமர்ந்தார். “இந்த நகரின் முகப்பில் தலைமுறை தலைமுறையாக அம்புகள் இறுகிக் காத்திருக்கும் கைவிடுபடைகளைப் போன்றவன் நான். அவை தங்கள் விசையால் தங்களையே கட்டி வைத்திருப்பவை.” நீள்மூச்சுடன் மஞ்சத்தில் கிடந்த ஒரு சிமிழை எடுத்து நோக்கியபடி விழிதாழ தலைதாழ்த்தி தன்னுள் ஆழ்ந்து அமைதியானார். நுரைக்குமிழிகள் உடைந்தழிவதுபோல கண்முன் அவர் சுருங்கி இல்லாமலாவதை பார்ப்பதுபோல் பானுமதி உணர்ந்தாள். தாரையின் வளையல்கள் ஒலித்த ஓசையில் அவர் நிமிர்ந்து அவர்கள் எவர் என வியப்பதுபோல அவளை பார்த்தார்.

பானுமதி “தங்கள் விழைவு எதுவாயினும் அது நிகழட்டும். அஸ்தினபுரியின் மணிமுடியின் சார்பாக நான் வந்து தங்களுக்கு முறைப்படி விடையளிக்கவேண்டும். ஆகவேதான் இளையோருடன் வந்தேன்” என்றாள். விதுரர் மிகையான பணிவுடன் உடல்வளைத்து வணங்கி “அஸ்தினபுரியின் அரசி இங்கு வந்தது என்னை மகிழ்விக்கிறது. ஆனால் அஸ்தினபுரியின் அவையிலிருந்து நான் தலைப்பாகை நீங்கி நெடுநேரமாகிறது. அறுபதாண்டுகள் இந்நகரின் அமைச்சனாக இருந்தேன். இந்நகரை நான் ஆள்கிறேன் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். சிலந்திபோல வலை பின்னி இந்த நாட்டின் அனைத்துச் சிற்றூர்களையும் ஒருங்கிணைத்து மையத்தில் நச்சுக்கொடுக்குடன் அமர்ந்திருக்கிறேன் என்று நான் சொன்னதுண்டு. எல்லாம் வெறும் உளமயக்குகள். யானையை தான் செலுத்துவதாக பாகன் எண்ணிக்கொள்வதைப்போல…” என்றார்.

“நான் அங்கே சாளரத்தில் இரவுகளில் அமர்ந்திருக்கையில் சில தருணங்களில் மிக அருகிலென அன்னை சத்யவதியை காண்கிறேன். அவர் விழிகளில் சிறிய நகைப்பு இருக்கிறது. இளமையில் நான் போர் குறித்து பேசும்போதெல்லாம் அவர் அந்நகைப்பையே காட்டினார். அன்று நான்…” என தொடங்கி நிறுத்திக்கொண்டு உளச்சோர்வுகொண்டவராக தலையை அசைத்து “நாம் ஏன் இதை பேச வேண்டும்? எல்லாம் வீண்மயக்குகள். நன்று, இத்தருணம் தெய்வங்களுக்குரியது. நானும் துரோணரும் பீஷ்மரும் சல்யரும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் தெளிவுகொண்டு துலங்கியிருக்கிறோம். நாங்கள் சூடிய அனைத்தையும் களைந்து வெறும் மண்ணில் நின்றிருக்கிறோம்” என்றார்.

விதுரர் முன்பின் தொடர்பற்ற சொற்களால் பேசுவதை அதற்கு முன் பானுமதி கேட்டிருக்கவில்லை. விதுரரின் வடிவில் பிறிதொருவர் அங்கிருப்பதாக அவள் உள்ளம் எண்ணியது. அத்தருணத்தை முடித்து எழுந்துசெல்ல அவள் விழைந்தாள். “தாங்கள் எங்களை வாழ்த்தி விடைகொள்ள வேண்டும் என்று விரும்புகிறோம், அமைச்சரே” என்றாள். “நலம் சூழ்க! அதுவன்றி வேறெதை சொல்வேன்! நீங்கள் அறியாததா என்ன? விண்பேருருவன் இந்நகரைவிட்டு செல்லும்போது உரைத்ததென்ன? இந்நகரில், இவ்வரசில், இங்குள்ள குடிகள் மேல், இனி அவருக்கு பொறுப்பேதுமில்லை. தெய்வம் கைவிட்ட பின் எச்சிறப்பு கூடும்? எவர் தங்கி வாழமுடியும்? கெட்டது குடி, பட்டது கொடிநகர், பரவி நிறைகிறது இருள் எங்கும்!”

விதுரரின் விழிகள் வெறிப்புகொண்டிருந்தன. “நான் இருளை மட்டுமே பார்க்கிறேன். ஒருதுளி ஒளிக்காக இரவும் பகலும் விழி துழாவியதுண்டு. ஆனால் இருளை மட்டுமே பார்க்கிறேன்” என்றார். விரைந்த உடலசைவுகளுடன் எழுந்து கதவைத் திறந்து வெளியே சென்று சாளரத்தைச் சுட்டி அங்கு நின்றபடியே பதறும் குரலில் சொன்னார் “முன்பு இந்தச் சாளரத்தில் நின்று என் அன்னை பார்த்ததென்ன என்று நான் வியந்ததுண்டு. அங்கே உங்கள் மாளிகையில் சம்படை தேவி அமர்ந்து பார்த்ததென்ன? இன்று அமர்ந்திருக்கும் இளவரசியர் பார்ப்பது என்ன? நான் சொல்கிறேன் எதை பார்க்கிறார்கள் என்று. இருளை!”

அவருடைய விழிகள் பித்தனின் விழிகள்போல் நிலையற்று அலைந்தன. “இருளை! முற்றிருளை! குருதியால், கண்ணீரால், தனிமையால், வெறுமையால் நிறைக்கப்பட்ட இருளை! அதைத்தான் அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள். நாமெல்லாம் வேறெதையோ நோக்கி உழன்றுகொண்டிருக்கையில் அவர்கள் மெய்யுருவான அதை பார்த்தார்கள். செல்வழியில் ஒரு திருப்பத்தில் நாம் பேய்த்தெய்வம் ஒன்றை பார்த்துவிடுவதைப்போல.” கைகளைத் தூக்கி விரித்து “இருள், வேறொன்றுமில்லை… வேறொன்றுமில்லை!” என்றார். “அவர்கள் எண்ணியிருக்கவில்லை. ஆனால் பார்த்துவிட்டார்கள். இப்போது நானும் அதை பார்த்தேன்.”

தன்னிலை உணர்ந்து பெருமூச்சுவிட்டு தோள் தளர்ந்து அவர் மீண்டும் வந்து தன் மஞ்சத்தில் அமர்ந்தார். “என்ன பேசிக்கொண்டிருக்கிறேன் என்று தெரியவில்லை. எனக்கு பித்தெழுந்துவிட்டதா என்றே ஐயுறுகிறேன். நான் சற்று அகிபீனா புகை கொண்டேன். இந்த அலைக்கழிப்பில் இருந்து விடுதலைபெற எண்ணினேன். தமையனிடம் விடைபெற்று வரும்போது என் உள்ளம் சிதறிவிடும் என்று தோன்றியது. சற்றேனும் துயின்றாலொழிய நிலையுள்ளத்துடன் நகர்நீங்க இயலாது என்று கருதினேன். ஆனால்…” அவர் கைகூப்பி “நன்று! தாங்கள் வந்தது எனக்கு பெரும்பேறு. என் துணைவி இருந்திருந்தால் மகிழ்ந்திருப்பாள். தெரிந்திருக்கும், அவள் பெயர் சுருதை. உத்தர மதுராபுரியின் தேவகரின் மகள். அவள் தமக்கைதான் தேவகி. அவ்வகையில் இளைய யாதவன் எனக்கு மகன்” என்றார்.

அவர் உதடுகள் கடுங்குளிரில் என நடுங்கின. “அவள் இன்று இருந்திருக்கலாம். இப்புவியில் ஏதேனும் ஒன்று எஞ்சியிருக்கும் எனக்கு. நான் பற்றிக்கொள்ள ஒரு கோல்.” அக்கணமே உள்ளம் பற்றிக்கொள்ள கைவீசியபடி கொந்தளிப்புடன் அவர் எழுந்தார். “கணவனை விட்டு முன்னரே மறையும் மனைவியரைப்போல் கொடியவர் எவருமில்லை. அவனைத் தூக்கி முடிவிலாத் தனிமையில் வீசிவிட்டுச் செல்கிறார்கள். இரக்கமே இல்லாமல் அவனுக்கு அவர்கள் அளித்த அனைத்தையும் திரும்ப எடுத்துச்செல்கிறார்கள். அவள் மேலே எங்கிருந்தோ நோக்கி நகைக்கிறாள் என்று நினைக்கிறேன். வாழ்நாளெல்லாம் அவளுக்கு நான் ஒரு வஞ்சம் இழைத்தேன். உள்ளத்தின் ஆழத்தில் அவள் அதை அறிந்திருப்பாள். அதன் பொருட்டே இந்தப் பெருவஞ்சத்தை எனக்கிழைத்துச் சென்றிருக்கிறாள்.”

விதுரர் நகைத்து “என்ன வஞ்சம் என்கிறீர்களா? என் ஆணவத்தால் நான் உருவாக்கிக்கொண்ட வஞ்சம். என் தகுதிக்கு ஒரு பேரரசி எனக்கு துணைவியாக வேண்டாமா? பட்டத்து யானைக்கு சற்றும் குறைவான எதில் நான் ஊரமுடியும்? ஆம், அதுதான். ஆனால் அதை நான் கூறப்போவதில்லை” என்றார். அவர் ஒரு பேழையை சுட்டிக்காட்டி “இங்கிருந்து கிளம்புகையில் நான் அதை எடுத்துச்செல்லக்கூடாதென்று எண்ணினேன். என் தமையன் எனக்கு அளித்த அஸ்வதந்தம் எனும் வைரம் அது. இத்தனை நாள் என்னை ஆணவத்தில் ஆழ்த்தியது அது. இந்நகரை நான் ஆள்கிறேன் என்ற உளமயக்கை எனக்கு அளித்தது. நானில்லையேல் இந்நகரில்லை என்று எண்ணிக்கொள்ள வைத்தது. அதைச் சுழற்றி அப்பால் வீசியிருந்தால் என்றோ விடுபட்டிருப்பேன். எத்தனை ஆயிரம் முறை அதை வீசியிருப்பேன்! எத்தனை முறை அதை வெறுத்து கடுஞ்சொல் உரைத்திருப்பேன்! ஆனால் என்னால் இயலாதென்று சற்று முன்னர்தான் உணர்ந்தேன்” என்றார்.

“ஏனென்றால் அது இல்லையேல் நான் வெறும் சூதன். கொடுநரகில் உழல்வதைவிட நான் அஞ்சுவது வெறும் சூதன் என்னும் நிலையை. அவ்வாறாகாமல் இருக்கும்பொருட்டு நான் எவ்வஞ்சத்தையும் இயற்றுவேன். பெற்ற தாயை கொல்வேன்…” என்றார் விதுரர். “நீங்கள் வருவதற்கு முன் அதை எடுத்து வீசினேன். கிளம்பிச் செல்வதற்குரிய மரவுரி ஆடைகளை கட்டி அதோ அங்கே வைத்தேன். ஆனால் மீண்டும் அதை எடுத்தே ஆகவேண்டுமென்று தோன்றியது. வேண்டாம் கிளம்புக கிளம்புக என்று எனக்கு நானே ஆணையிட்டேன். சவுக்கடிபோல அந்த வலியை வாங்கிக்கொண்டு என் உள்ளம் பின்னால்தான் சென்றது. அப்போதுதான் சேடி வந்து சொன்னாள் நீங்கள் வந்திருப்பதாக. ஆம், அவள் சொன்னாள். நினைவிருக்கிறது. ஆனால் நான் திரும்பிச் சென்று அதை தேடத் தொடங்கினேன். மீண்டும் மீண்டும் அவள் வந்து ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாள். சினந்து செல்க, நான் வருகிறேன் என்றபின் மீண்டும் தேடினேன்.”

அவர் அப்பேழையை திறந்தார். உள்ளே ஏதுமில்லை “ஆ!” என்று பதறியபின் திரும்பி அறைக்குள் அலைமோதினார். “இங்குதான் இருந்தது. நான் தேடி எடுத்தேன். அதை எவரோ கவர்ந்துவிட்டனர்… இல்லை, இங்கே எங்கோ உள்ளது அது.” ஒவ்வொரு பொருளாக எடுத்து நோக்கி வீசியெறிந்தார். பின் நினைவுகூர்ந்து எழுந்து துணியை பற்றமுடியாதபடி பதறி நடுங்கிய கைகளால் தன் கச்சையை அவிழ்த்து அதிலிருந்து அஸ்வதந்தத்தை எடுத்துக்காட்டினார். வெண்ணிறமான சிறு கூழாங்கல்போல் அது ஒளியற்றிருந்தது. பற்கள் தெரிய பித்துச்சிரிப்புடன் “இதுதான் அஸ்வதந்தம்! மொத்த அஸ்தினபுரிக்கும் இது நிகரானது. என் உடன்பிறந்தார் பாண்டு எனக்கு இதை அளித்தார். நீங்கள் அறிந்திருக்கமாட்டீர்கள். அஸ்தினபுரிக்கு நிகராக அளிக்கப்பட்டது இது. அதைவிட பெரிய பலவற்றுக்கும் நிகரானது” என்றார். அவர் அந்த வைரத்தை நீட்டிக்காட்டினார். அது மிக மெல்ல ஒளிகொள்ளத் தொடங்கியது. பறவைவிழி இமை தாழ்ந்து ஒளிகொள்வதுபோல. பின்னர் உப்புக்கல் என மின்னியது.

அவர் அதை தன் இரு விரல்களில் வைத்து ஓட்டிக்கொண்டிருந்தார். “புரவியின் பல்! ஊழிப்புரவி! வடவைப் பேரெரி!” அவர் அதை மீண்டும் தன் மடியில் வைத்தார். உடனே மீண்டும் அதை எடுத்து நோக்கினார். “தென்னெரி இல்லங்களில் எரிவது. வடஎரி வானில் திகழ்வது. இரண்டு எரிகள். இரண்டுக்கும் நடுவே அலைக்கழிபவன் நான்.” பானுமதியை நோக்கி நீர்ப்படல விழிகளுடன் “அறிக, தென்னெரிகள் அனைத்திற்கும் அனல் அளிப்பது வடக்கே எரியும் ஊழிக்கனல்தான். பெருவெள்ளம் எழுந்து ஊற்றுகளையும் கிணறுகளையும் நிறைப்பதுபோல் வடஎரி எழுகையில் தென்னெரி மறைந்துவிடும்” என்றார். அந்த வைரம் அவர் கையில் அனல் என ஒளிவிடத் தொடங்கியது. சிறிய அகல்போல அவர் கை தோன்ற அதில் ஏற்றப்பட்ட சுடராக அது தோன்றியது. “அரசி, இதை நான் எடுத்துச் செல்கிறேன். இது இல்லாமல் சென்றால் நான் விடுபடுவேன். ஆனால் என் உள்ளம் விடுபடுதலை விரும்பவில்லை. திரும்ப வரவேண்டுமென்று அது ஆணையிடுகிறது. இப்புரவியின் வாலை பற்றிக்கொண்டு ஒருகணமும் நில்லாமல் ஓடுவதே என் ஊழ்.”

“நான் எளியவன், சிறியவன். அதை இப்போது உணர்கிறேன். இதை எனக்கு அளிக்கையில் என் தமையன் என்ன எண்ணியிருப்பார்? உனக்கு வேண்டியது இதுதானே என்றா? எஞ்சிய வாழ்நாளெல்லாம் இதை வைத்து என்னை கட்டிப்போட முடியுமென்றா? எத்தனை சரியாக என்னை புரிந்துகொண்டிருக்கிறார்!” பெருமூச்சுடன் அவர் மீண்டும் அமைதியடைந்தார். “பேசலாகாதென்று என் ஆவியை கட்டுப்படுத்தினேன். சென்ற பல மாதங்களாக அவைகளில் நான் சொல்லுரைத்ததில்லை. இப்போது ஏன் இத்தனை பேசுகிறேன் என்று தெரியவில்லை. ஆம், நான் அகிபீனா இழுத்தேன். முன்பும் சிலமுறை இழுத்துள்ளேன். துயில்வதற்காக. ஆனால் துயில் என்னைவிட்டு முழுதாக நீங்கிவிட்டது. நான் துயின்றால் அந்தப் பொழுதில் போர்மூண்டு இந்நகரும் என் குடியும் முற்றழிந்துவிடும் என அஞ்சுகிறேன். சற்று கண்ணயர்ந்தாலும்கூட போர்முரசுகளும் படையோசைகளும் சாவோலங்களும் கேட்டு விழித்துக்கொள்கிறேன்.”

அவர் முற்றாக அணைந்து நனைந்த துணியென உடல் துவண்டார். நெஞ்சில் கைவைத்து தலைவணங்கி “நீங்கள் என்னை வழியனுப்ப வந்திருக்கிறீர்கள். உங்களிடம் நற்சொல் உரைத்து முறைமை செய்யும் பொறுப்புள்ளவன் நான். அதைத்தான் நான் செய்யவேண்டும்” என்றார். எழுந்து தன் மேலாடையை சரிசெய்து கைகூப்பி வணங்கி “நீங்கள் வந்தமைக்கு நன்றியுடையவனாக இருப்பேன். உள்ளம் நிறைவுற்றது” என்றார். பானுமதி எழுந்து “நன்று அமைச்சரே, சென்று வருக! அஸ்தினபுரி உங்கள் முன் பணிந்து வழியனுப்புகிறது. தாங்கள் திரும்பி வரும்போது இதே பணிவுடன் இந்நகர் தங்களை வரவேற்கும். அமைச்சரென்றும் சென்ற மூதரசரின் மைந்தரென்றும் இன்றுள பேரரசரின் இளையோர் என்றும் தங்களுக்கு இருக்கும் இடம் ஒருபோதும் இல்லாமல் ஆவதில்லை” என்றாள்.

“ஆம், அதை நான் அறிவேன்” என்று சோர்ந்து தழைந்த குரலில் அவர் சொன்னார். பானுமதி “பாண்டவர்களின் வெற்றிக்காக நீங்கள் வேண்டிக்கொள்வது எவ்வகையிலும் தவறல்ல, அமைச்சரே. ஆனால் எளிய பற்றுகளின் பொருட்டு சார்புநிலை எடுப்பவர்கள் துயரத்தை மட்டுமே ஈட்டுகிறார்கள்” என்றாள். அவர் முள்ளால் குத்தப்பட்டதுபோல் உடலில் மெல்லிய துடிப்பெழ “எவர் மேல் பற்று?” என்று கேட்டார். “எவர்மேல் எனக்கு பற்று? சொல்க!” பானுமதி “அறத்தின்மேல் பற்றுகொள்க! பேரறத்தானாக நின்றிருக்கும் இளைய யாதவர்மேல் பற்று கொள்க! நீங்கள் கொண்ட பற்று அதுவல்ல. அது நீங்கள் கைக்கொள்ள முனைந்து ஊழால் தவிர்க்கப்பட்ட ஒன்று. அது நீங்களே சற்று முன் சொன்னதுபோல் வெற்றாணவம் மட்டுமே” என்றாள்.

விதுரர் “ம்” என முனகியபடி மஞ்சத்தில் அமர்ந்தார். “எப்பெருந்தவமும் ஒருநாள் நிறைவேறும் என்று சொல்லுள்ளது, அமைச்சரே. ஆனால் உலகியலில் எதையேனும் தவம் செய்து அடைந்தவர்கள் அத்தவத்திற்கு முன் தாங்கள் வென்றடைந்தது மிக மிகச் சிறிதென்று உணர்வார்கள். அதுவே தங்களுக்கும் நிகழும்” என்றாள். விதுரர் மெல்லிய விம்மலோசை ஒன்றை எழுப்பினார். “தங்களை துன்புறுத்தும் பொருட்டு சொல்லவில்லை, அமைச்சரே” என்றாள் பானுமதி. “இல்லை, நான் அறிவேன். நீங்கள் பிறவியிலேயே பேரரசி. மும்முடி சூடி புவியாள பெற்றி கொண்டவர். அன்னை பெருந்தெய்வங்களின் சொல் உங்கள் நாவில் எழுகிறது. அது நிகழ்க! அவ்வாறு நிகழ்ந்து அதிலிருந்து நான் விடுபட்டேனெனில் அதுவே எனக்கு வீடுபேறு. அவ்வாறே ஆகுக!” என்றார் விதுரர்.

“நான் கிளம்புகிறேன், அமைச்சரே” என்று சொல்லி மீண்டும் பானுமதி கைகூப்பினாள். திரும்பி தன் இளையோரை நோக்கியபின் மேலாடையை இழுத்து அணிந்துகொண்டு திரும்பி நடந்தாள். விதுரர் மெல்ல நடுங்கியபடி கைகூப்பி நின்றார்.

முந்தைய கட்டுரைநூலகம் எனும் அன்னை
அடுத்த கட்டுரைகாப்பீடு, இரண்டு முட்டாள்கள்