அசோகமித்திரன் என்னும் அளவுகோல்
அன்புள்ள ஜெ
அசோகமித்திரன் கதைகளை ஓர் அளவுகோலாகக் கொள்வது பற்றிச் சொல்லியிருந்தீர்கள். அவர் யதார்த்தவாத எழுத்தில் ஒரு மாஸ்டர். ஆகவே அவ்வகையான கதைகளுக்கு அவரை ஓர் அளவுகோலாகக் கொள்ளமுடியும். ஆனால் யதார்த்தவாதம் இலக்கியத்தின் ஒரு சின்ன வகைப்பாடு மட்டும்தான் இன்றைய புனைவுக்குத்தேவையாக உள்ள பலவகையான எழுத்துக்களை யதார்த்தவாதத்திற்குள் அடக்கிவிட முடியாது
அதோடு இன்றைக்குள்ள ஆவணப்படுத்தல்களின் துல்லியம் மேலும் மேலும் யதார்த்தவாதத்தின் இடத்தை இல்லாமலாக்கிக்கொண்டிருக்கிறது என்பதும் ஓர் உண்மை. பலவகையான எழுத்துக்கள் இன்று வந்துகொண்டிருக்கின்றன. புராணம்போன்ற எழுத்துக்களே நிறைய உள்ளன. இலக்கியத்திற்கு கவிதையும் கனவும் முக்கியமானவை. அவற்றுக்குப் பதிலாக அன்றாட யதார்த்தத்தை முன்வைத்தால் மட்டுமே அசோகமித்திரனை அளவுகோலாகக் கொள்ளமுடியும் என்பது சரிதான். ஆனால் அப்படிப்பட்ட கற்பனை குறைவான வாசகர்கள் எப்போதும் உள்ளனர்
மனோகர்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
இக்கடிதம் ‘அசோகமித்திரன் என்னும் அளவுகோல் ‘ குறித்த தங்களின் விரிவான விளக்கத்திற்கு சற்றே தொடர்புடையது. தாங்கள் அசோகமித்திரன் எழுத்தின் எல்லைகளைக் குறித்து மிகவும் அழுத்தமாக பதிவு செய்துள்ளீர்கள். நான் அசோகமித்திரன் எழுத்துக்கள் அனைத்தையும் விரும்பி வாசித்தவன் என்ற வகையில் அதிலுள்ள எல்லைகளையும் நன்கு உணர்ந்தவன். அவர் எழுதிய கதைப்புலன்கள் ஒரு வரையறைக்கு உட்பட்டவைதான். ஆனால் அந்த வரையறைக்குள் உன்னதமான பல கதைகளை, மனித உணர்வுகளை துல்லியமாக பிரதிபலிக்கும் வகையில் அவர் எழுதியுள்ளார். வேறு இலக்கிய ஆக்கங்கள் பிற்கால எழுத்துக்கள் வேறு முனைப்புகளுடன் எழுதப்பட்டு வாழ்வின்பல்வேறு பரிமாணங்களை பிரிதிபலித்தன. அவையும் தேவையே, வாசிக்கவும் விமர்சிக்கவும். இது இப்படி நிற்க .
நான் அசோகமித்திரன் மற்றும் அ .முத்துலிங்கத்தை மறுவாசிப்பு செய்துவருகிறேன். பல ஒற்றுமைகளை அறிகிறேன். இருவரின் பல சிறுகதைகளிலும் சராசரி மனிதனின் மெல்லுணர்வுகள் மிகத் துல்லியமாக வெளிப்படுகின்றன. ஒரு வியத்தகு ஒற்றுமையை அசோகமித்திரனின் “எலி ” மற்றும் அ.முத்துலிங்கத்தின் “எதிரி ” சிறுகதைகளில் காணக்கிடைக்கிறது.
“எலி ” யில் ஒரு தனி முயற்சிக்குப் பின் வீட்டுக்காரர் எலியை கூண்டில் பிடிக்கிறார். அதை கொல்ல மனமின்றி ஒரு மைதானத்தில் திறந்துவிட, சிறுவர்கள் கல்லால் அடிக்க அதை தடுக்கிறார் .ஒரு காகம் அதை கொத்திச் செல்கிறது. பொறியில் வைத்த வடை அப்படியே இருக்கிறது. மன வருத்தம் கொள்கிறார். இதே குற்ற மென்னுணர்வை மிக சிறப்பாக முத்துலிங்கம் தன் “எதிரி ” சிறுகதையில் முன்வைக்கிறார். கொடிய விஷப்பாம்பு கோழிப்பண்ணையை நாசமாக்குகிறது. அதை தடுக்க பல வழியிலும் முயன்று இறுதியில் பண்ணைக்காரர் ஒரு யோசனையாக ‘பிங் பாங்’ பந்துக்களை முட்டைகளுடன் கலந்துவைக்கிறார். மறுநாளே பாம்பு அந்த பந்துகளை விழுங்கி சாக கிடக்கின்றது. அக்கம் பக்கத்தோர் பாராட்டுகள். ஆனால் பண்ணைக்காரருக்கோ பெரும்துக்கம். கபடமும் வஞ்சமும் வென்றதில் அவருக்குத் தலைகுனிவு.தோல்வியில் கிடைக்கும் அமைதிகூட அவருக்குக் கிடைக்கவில்லை. இரண்டு கதைகளிலும் ஒரு சராசரி மனிதனின் மென்னுணர்வு மிக அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.
அன்புடன்
பா.ரவிச்சந்திரன்
அன்புள்ள ஜெ,
அசோகமித்திரனை அளவீடாகக் கொள்வதைப்பற்றிய உங்கள் கட்டுரையை வாசித்தேன். ஆச்சர்யமான சங்கதி என்னவென்றால் நானும் நண்பர்களும் எண்பதுகளின் தொடக்கத்தில் இதே விஷயத்தை இதேபோல விவாதித்திருக்கிறோம் என்பதுதான். அன்று சென்னைசார்ந்த ஒர் எழுத்தாளர் வட்டம் இருந்தது. அனைவருக்கும் அசோகமித்திரன் ஒரு பெரிய ஆதர்ஸம். ஆதர்ஸம் என்பதைக்காட்டிலும் அவரைப்போல எளிதாகத் தாங்களும் எழுத முடியும் என அவர்கள் நினைத்தார்கள் என்பதுதான் உண்மை. அவரைப்போலவே அன்றாட வாழ்க்கையை எழுதினார்கள். உணர்ச்சியில்லாத நடை. குறைந்த அளவிலான சித்திரிப்பு. பெரிய கதையம்சம் ஏதுமில்லாத நிகழ்ச்சிகள். முடிவோ முத்தாய்ப்போ இல்லாத கதைகள் அவை. சென்னையிலிருந்து வந்துகொண்டிருந்த கணையாழி, முன்றில், விருக்ஷம் போன்ற சிற்றிதழ்களில் இந்தவகையான கதைகள் வெளிவரும். இந்தவகையான கதைகள் அன்றைக்கு ஆயிரம் கதைகளாவது வெளிவந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
இந்தவகையான கதைகள் ஒருபக்கம் என்றால் அன்றிருந்த செம்மலர் தாமரை போன்ற இதழ்களில் நாச்சுரலிச பாணியில் எழுதப்பட்ட் கிராமக்கதைகள் இன்னொரு பக்கம். கொஞ்சம்கூட கிரியேட்டிவிட்டியே இல்லாதவை. ஒரு கதை நல்ல இலக்கியமாக ஆவது அதில் ஒரு finding நடக்குபோதுதான். அப்படி ஒன்றுமே இல்லாத கதைகள். அந்தச் சலிப்பில் இருந்து விடுதலையாக அமைந்தது கோணங்கியும் நீங்களுமெல்லாம் எழுதிய fantasy வகையான கதைகளால்தான். கோணங்கியின் மதினிமார்கள் கதை, கருப்பன்போன பாதை உங்கள் படுகை, மாடன்மோட்சம் எல்லாம் புதிய காற்றுபோல ஆசுவாசத்தை அளித்தன.
ஆனால் அன்றைக்குச் சென்னைவட்டாரத்தில் ஒரு கூட்டம் அசோகமித்திரன் எழுதும் கதைகளை முன்வைத்து தாங்கள் எழுதிய கதைகளையே பேசிக்கொண்டிருப்பார்கள். அவற்றை அன்றைக்கு ஐராவதம் போன்றவர்கள் அஞ்சறைப்பெட்டிக் கதைகள் என்பார்கள். அவர்கள் புதிய வகையான எந்தக்கதை வந்தாலும் “இதெல்லாம் கதையா? பாருங்க அசோகமித்திரன் கதையிலே. ஒண்ணுமே இல்ல. சாதாரணமான சம்பவங்கள். சாதாரணமான ஆட்கள். எப்டி எழுதறார். அதான் கதை” என்று சொல்லி அவர்களை நிராகரித்துப்பேசுவார்கள். “சாதாரணமான சம்பவங்களையும் சாதாரணமான ஆட்களையும் எழுதலாம். ஆனா அசோகமித்திரன்கிட்ட findings உண்டு , உங்க கிட்ட அது இல்லை” என்று பதில் சொல்வோம்.
அசோகமித்திரனை ஸ்கேலாக வைத்து கதைகளை மதிப்பிட ஆரம்பித்தால் இலக்கியத்தையே மறுக்கும் இடத்தில்தான் சென்று நிற்போம். அவர் ஒரு genre. அவர் கண்ட வாழ்க்கையைச் சொல்ல அவர் அந்த முறையை உருவாக்கிக் கொண்டார். அது எழுதத்தெரியாத chroniclers எழுதுவதை எல்லாம் நியாயப்படுத்திவிடாது. இவர்களுக்கு வாழ்க்கை தெரியாது. வாழ்க்கையில் உள்ள கொடுமைகளும் துக்கங்களும் கொந்தளிப்புகளும் ஒன்றும் தெரியாது. சாதாரண அன்றாடவாழ்க்கையின் சின்னச்சின்ன பிரச்சினைகள் மட்டும்தான் தெரியும். அதையே எழுதிவைத்து அதுதான் அண்டர்ஸ்டேட்மெண்ட் என்றும் மைல்ட் ஆர்ட் என்றும் சொல்லிக்கொள்கிறார்கள். கலை அறுவைசிகிச்சைக் கத்தி போல கீறிச்செல்லும் என்று சுந்தர ராமசாமி சொல்கிறார். அதைத்தான் இவர்களிடம் சொல்லவேண்டியிருக்கிறது. உங்கள் அஞ்சறைப்பெட்டிக்குள் இலக்கியம் அடங்காது.
சங்கரநாராயணன்
இலக்கிய வம்பர்கள்