பிழையின் படைப்பூக்கம்
அன்புள்ள ஜெ
பிழை சிறுகதை பற்றிய கடிதம் வாசித்தேன். நான் உங்களுக்கு எழுதவில்லை. ஆனால் என் வாழ்க்கையில் மிக முக்கியமான கதை பிழை. ஏனென்றால் என் மொத்த வாழ்க்கையே இரண்டு பிழைகளால் ஆனது. ஒன்று எனக்கு நன்மை செய்தது இன்னொன்று தீங்கு செய்த்து என நினைக்கிறேன். ஆனால் அதைக்கூட நான் இப்போது சொல்லமுடியாது. அது நன்மையா தீங்கா என்பதை காலம் போனால்தானே சொல்லமுடியும்?
பிழை கதை பல அடுக்குகள் கொண்டது. சென்றுபோன வாழ்க்கையை நினைவுகூர்ந்து பேசும் ஒருவர். அவர் அன்றிருந்த பல சரிகளையும் தவறுகளையும் சொல்கிறார். ஆனால் அவருக்கு வரலாற்றில் நிகழ்ந்த ஒரு பிழைதான் மிகவும் முக்கியமானது என்று தோன்றுகிறது. அதில்தான் கடவுள் எழுகிறார். அந்தக்கதையின் பெரிய மர்மம் என நா நினைப்பது அந்தப்பிழையை காந்தி புரிந்துகொண்டாரா என்பது. காந்தி கண்ட அந்த ராமன் ஒரு அற்புதமான பிழையால் உருவானவன்.
பலமுறை இந்தக்கதை பற்றி எழுதவேண்டும் என நினைத்திருக்கிறேன். ஏராளமானபேர் சொல்வார்கள், நாம் எதுக்கு என்று நினைத்தேன். ஆனால் இலக்கியவாதிகாள் வாசிக்கும் முறையைப் பார்க்கும்போது ஏமாற்றமும் சலிப்பும் ஏற்படுகிறது. ஒரு கட்டத்துக்குமேல் அவர்களுக்கு இலக்கியச்சூழலில் உள்ள வம்புகள் மட்டுமே தெரியவருகின்றன. அதற்குமேல் வாழ்க்கையே தெரியாத அளவுக்கு மூளை குறுகிவிடுகிறது. அவர்கள்தான் அடிக்கடிக் கருத்தும் சொல்கிறார்கள். நீங்கள் நினைப்பதுபோல ஏன் எழுதவேண்டும் என்றே தோன்றிவிடலாம். ஆகவே வாசகர் கடிதங்கள் எவ்வளவு முக்கியம் என்று தெரிந்த்து. அதனால்தான் எழுதவேண்டும் என இதை எழுதினேன்
சங்கரநாராயணன்.
அன்புள்ள ஜெ
பிழையின் படைப்பூக்கம் பதிவும், பிழை சிறுகதையும் படித்தேன், பீனா மதுர மதுர கச்சுப்போல் பாடலையும் கேட்டேன். நானும் லட்சுமன் ரானேவின் மனநிலைக்கே போய்விட்டேன். துக்கம் தொண்டையை அடைத்தது பாடலைப்பார்த்ததும் கேட்டதும்.
சிறிய விஷயங்களை செய்தாலும் பெரிய விஷயங்ககளுக்கு பக்கத்திலிரு என்ற வரிகள் கொஞ்சம் நெஞ்சை தைத்தன.
முன்பெல்லாம் பெரிய நிறுவனங்கள் education gap, employment gap பார்ப்பது மிகக்குறைவு, நேர்முகத்தேர்வுக்கு பலருக்கும் வாய்ப்பு கிடைக்கும். இன்று எல்லாம் கேம்பஸ் மூலமாக முடிந்து விடுகிறது. அதில் வேலை கிடைக்காதவன் பல தடுமாற்றங்களை சந்திக்கின்றான்.
நான் ஒரு பெரிய நிறுவனத்தில் ஒட்டிக்கொண்டிருக்கிறேன், எதுவும் சாதித்தேனா என்றால் இல்லை…
சரித்திரத்தில் ஈ போல, நான் ஒரு பெரிய நிறுவனத்தில் பணியில் இருக்கிறேன் என்பதே பெருமை என ஆறுதல் அடைந்து கொள்கிறேன்.
பதிவுக்கு நன்றி,
அன்புடன்
பகவதி