காப்பீடு -கடிதங்கள்

Medical-Insurance

 

காப்பீட்டில் மோசடிகள்

காப்பீடு, ஊழல்- ஒரு விளக்கம்

 

ஜெ

 

காப்பீடுகள் குறித்த தங்களின் பார்வைகாப்பீட்டில் மோசடிகள்என்னை பொறுத்தவரை 90% உண்மையே .இன்சூரன்ஸ்  இழுபறிகளிடம் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறேன். LIC யில் 5 வருடத்திற்கு ஒரு முறை போனஸ் வரும் திடடத்தில் இந்த முறை வர வேண்டிய பணம் வர வில்லை. ஆதார் இணைக்க வில்லை என எனது வாங்கி கணக்கு முடக்கப்பட்டிருக்கிறது. இந்த இடைவெளியில் பணத்தை போட்டுள்ளனர்.  வங்கி பணம் வர வில்லை என சொல்கிறது. LIC யோ பணத்தை அனுப்பி விட்டோம் என்ற கணக்கு விபரங்களை அளிப்பதற்கே 3 மாதமாக இழுத்தடிக்கின்றனர்.

 

திரு ராஜகோபாலன் அவர்களின் கடிதத்தில் காப்பீடு, ஊழல்- ஒரு விளக்கம் பல முறை “சட்டப்படி” என வருகிறது. அதை பார்த்தாலே பீதி தான் மிஞ்சுகிறது. சட்டத்தை தனி நபர் மட்டும் தான் மதிக்க வேண்டும் போல.

 

நன்றி,

ரமேஷ்

 

 

அன்புள்ள ஜெ சர்,

 

நோய் இங்கு புறவயமாக நிரூபிக்கப்பட வேண்டியிருக்கிறது.நோய் கூறை புறவயமாக நிறுவுதல் முதன்மையாகவும், நோய் தணித்தல் அடுத்த நிலை அடைவதும் இங்கே நிகழ்கிறது

இவ்வாறு ஒவ்வோர் நோய்க்கும் அதன் பிரத்யோக நோய் கூறு சார்ந்த சோதனை இன்றியமையாததாக ஆக்கப்பட்டுள்ளது.

 

மருத்துவர்-நோயுற்றவர் என்ற உறவு நிலை மறைந்து, சேவை வழங்குநர்-நுகர்வோர் என்ற நிலை இங்கு நிலவுகிறது

(சில வருடங்களுக்கு முன் ஒரு செவிலியர் மாணவி நோயுற்றவரை குறிக்க Client என்ற பதத்தை பயன்படுத்தினார், ஏன் என்று கேட்டதற்கு Nursing பள்ளியில் அவ்வாறு கற்பிக்கப்படுவதாக கூறினார்)

 

Burden of establishing the diagnosis objectively escalates the costs.

திட்டவட்டமாக, புறவயமாக நிறுவப்படக்கூடிய நோய்களுக்கான சிகிச்சைகளுக்கான காப்பீட்டு தொகையை பெறுவதில் பெரிய சிக்கல் இல்லை.

ஆனால் இப்படி அப்படி நிறுவப்பட முடியாத நிலை இருக்கின்றனவே

அந்த சூழலில் நோயுற்றவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறவேண்டியும், பிரத்யேக சோதனையில், அந்த நோய்க்கூறு இல்லை என்று வரும்போது, நோயுற்றவருக்கு அது காப்பீடு தொகை பெருவதில் இன்னும் பாதகமே.

 

தினமும் காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து வரும் Specific queriesக்கு பதில் எழுதி வருகிறேன், பல வருடங்களாக. அதற்கு பெரும்பாலும் ஒரு சட்ட நிபுணனுக்கே உரிய ‘சாதூர்யமான’ மொழியில்தான் பதில் எழுத வேண்டி உள்ளது.

 

என்னிடம் காப்பீடு உள்ளது, ஆனால் இச்சூழலில் எனக்கு அது பயனற்றதாக உள்ளது என்று நோயுற்றவர், உறவினர் நிற்பதை காண நேர்கிறது(அதற்கான காரணத்தை ஜாஜா தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்)

 

ஒரு நிலையில் காப்பீட்டு தொகையை திரும்ப பெறுவது என்பது ஒரு விதமான சட்ட நிபுணத்வ விளையாடல் ஆகி விடுகிறது.

 

வேணு வேட்ராயன்

 

அன்புள்ள ஜெ,

 

நலமா? என்னுடைய பார்வை.

 

இப்போது உள்ள இந்திய மருத்துவ காப்பீட்டு நிறுவனங்களின் விதிகள் எல்லாமே அமெரிக்கா காப்பீட்டு நிறுவனங்களின் விதிகளை அப்பிடியே பின்பற்றுகின்றன. ஆரம்பத்தில் மக்களின் ஏமாற்று வேலைகளை கட்டுபடுத்துவதற்காக விதிகளை கடுமையாக்கின. போகப் போக அதில் உள்ள வருமானத்தை ருசித்தப்பின், அதை வைத்து பெரும் லாபம் சம்பாதிக்க தொடங்கி விட்டனர். இதனால் மருத்துவர்களும், மருத்துவமனைகளும் லாபம் இழக்க தொடங்கினர், மேலும் கடும் நெடுக்கடிகளை வாடிக்கையாளர்களிடவும், காப்பீட்டு நிறுவனங்களும் பணம் தராமல் இழுத்தடித்தன.அதனால் அவர்களின் விதிமுறைகளை மாற்ற முடியாமல் அரசாங்கம் தடுத்ததால், அவர்கள் இப்படி நயவஞ்சமாக பேசி மக்களிடம், தேவையில்லாத பரிசோதனைகளையும், அறுவை சிகிச்சைகளையும் பரிந்துரைத்து, பணம் கொழிக்க தொடங்கிவிட்டனர். அதையும் மீறி நீதிமன்றங்களுக்கு சென்றால்,  மக்களால் வெற்றியடைய முடியாது, ஏனெனில் மருத்துவமனைகளும், காப்பீட்டு நிறுவனங்களும் புத்திசாலி வழக்கறிஞர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளனர். அவர்கள் வழக்குகளை இழுத்தடித்து, காசு தராமல் ஏமாற்றி விடுவர். இதில் வேடிக்கை என்னவென்றால், காப்பீட்டு நிறுவனங்களின் விதிமுறைகள் மிகவும் சிக்கலானவை, அவர்களின் வாடிக்கையாளர் சேவைக்கு தொலைபேசினால், அவர்களுக்கே சொல்ல தெரியாது. இந்த தந்திரங்களை கார், ஆயுள் காப்பீடு மற்றும் எல்லா துறை காப்பீட்டு நிறுவனங்களுக்கும் பின்பற்றுகின்றன. இதை தடுக்க அமெரிக்க அரசாங்கம் பெரும்முயற்சி செய்கிறது, ஆனால் ஒன்றும் செய்யமுடியவில்லை. பிஸ்கோத்து இந்திய அரசாங்கம் நன்றாக வேடிக்கை பார்க்கத்தான் முடியும். இதில் மருந்து கம்பெனிகளின் கொள்ளை தனிக்கதை. இதற்கு பணத்தை கொடுத்து ஏமாறுவதைவிட, நோயினால் சாவதே பெரும் நிம்மதி.

 

 

நன்றி!

அசோக்

 

 

முந்தைய கட்டுரைஎம்.எஸ் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைராஜ் கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம்