இலக்கிய வம்பர்கள்

அசோகமித்திரன் என்னும் அளவுகோல்

ஜெ

உங்கள்  ‘எதிர்’ வாசகர் ஒருவர் ஆவேசமாக நீங்கள் எழுதிய கட்டுரையின் சுட்டியை அளித்தார்  “உங்காளு அசோகமித்திரனைத் திட்ட ஆரம்பிச்சிட்டார். போய்ப்பாருங்க” என்றார். மிக உற்சாகமாக, “நான் சொன்னேனே, அவர் இனிமே திட்டுவார்னு” என்றார். அந்தக்கட்டுரையை வாசித்தபோது அதில் நீங்கள் எப்போதுமே சொல்லிவரும் விஷயங்களை வேறுகோணத்தில் சொல்கிறீர்கள் என்று தெரிந்துகொண்டேன். தொடர்ந்து இதுதான் அக்கப்போராக இருக்கிறது. நீங்கள் சொல்வதுபோல இணையவெளி என்பது கருத்துக்களைப் பேசுவதற்கு மிகப்பெரிய தடை.

கதிரேசன்

***

sura

அன்புள்ள கதிர்,

இது எப்போதும் உள்ளதுதான். 1995 ல் என நினைக்கிறேன். நான் அசோகமித்திரன் பற்றி தினமணியில் ஒரு கட்டுரை எழுதினேன். அப்போது தினமணி நவீன இலக்கியத்திற்கு வாசல்திறந்த தருணம். எல்லா எழுத்தாளர்களையும் சுருக்கமாக அறிமுகம் செய்யும் வாய்ப்பு அமைந்தது. நான் அசோகமித்திரனின் கதைகளைப் பற்றி எழுதிய கட்டுரையின் தொடக்கத்தில் ஓர் உவமை இருந்தது. கடலை மிக நெருங்கி அமர்ந்து பார்க்கும் சிறுபுழு ஒன்றின் நோக்கு அசோகமித்திரனுடையது.  அதனால் துளியையே பார்க்கமுடியும். ஆனால் பெருங்கடலின் அலைக்கொந்தளிப்பை அந்தத்துளியும் காட்டும்.

நான் நன்கறிந்த ஒருவர் மெனக்கெட்டு கிளம்பிச்சென்று நான் அசோகமித்திரனை புழு என்று சொல்லிவிட்டேன் என்று அவரிடம் கூறினார். அவர் ஓர் இலக்கிய ஒட்டுண்ணி. அதாவது அனைத்துச் சிற்றிதழ் வம்புகளையும் அறிந்து வைத்திருப்பார். எதையும் வாசிக்கும் வழக்கம் கிடையாது. அவருக்கு இலக்கியம் என்பது ஒரு பூசல்வெளி மட்டுமே.

நான் அசோகமித்திரனை மீண்டும் சந்தித்தபோது அவர் நெடுநேரம் உம்மென்று இருந்தார். எனக்குப் புரியவில்லை. ஆனால் அவரால் நெடுநேரம் அப்படி இருக்க முடியவில்லை. அவரே சொன்னார். நான் விளக்கியபின்னர் “அப்டிச் சொல்றியோ?” என்று விட்டுவிட்டார். அசோகமித்திரனுக்கு நான் தொகுத்த மலரில் இருந்த கட்டுரையின் முதல் பத்தியே அதுதான். என் நவீனத்துவத்தின் முகங்கள் நூலில் அது விரிவாக்கப்பட்ட வடிவில் உள்ளது. [அசோகமித்திரன் படைப்புலகுக்கு ஒரு வாசல்-1. ] கிண்டலாகச் சிரித்தபடி  “அப்ப அதையே திருப்பி எழுதிட்டியா? இவன் காசு தரான்ல?” என்று அசோகமித்திரன் கேட்டார். “அப்ப எழுதினத மாத்தி அனுப்பினாலும் காசு குடுத்திடறானா?” என்று தனக்குத்தானே சிரித்துக்கொண்டார்.

நவீனத்துவத்தின் முகங்கள் நூலில் தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த எட்டு சிறுகதைகளை பட்டியலிட்டிருந்தேன்.  [இன்று இலக்கியமுன்னோடிகள் என்ற பேரில் ஒரே நூலாக அந்த ஏழுநூல்களும் கிடைக்கின்றன. நூலை தேடி வாசித்து பட்டியலை அறிக  இலக்கிய முன்னோடிகள் நற்றிணை பதிப்பகம் ] அதில் அசோகமித்திரன், சுந்தர ராமசாமி கதைகள் இல்லை. லா.ச.ரா, தி.ஜானகிராமன், கு.அழகிரிசாமி உண்டு.கி.ராஜநாராயணனும் ஜெயகாந்தனும் உண்டு. சுந்தர ராமசாமியிடம் இன்னொரு இலக்கிய வம்பர் சென்று ”ஜெயகாந்தனையும் கிராவையும் சேத்திருக்காப்ல. உங்கள விட்டுட்டாரு. உங்க மேலே உள்ள தனிப்பட்ட கோவத்த எழுத்திலே காட்டலாமா? மனசுக்கு கஷ்டமா போச்சு” என்று சொன்னார். இவர் மிகச்சிறந்த வாசகர், எல்லாவற்றையும் வாசிப்பார். எல்லாமே வம்பாக மட்டும்தான் தெரியும்.

சுந்தர ராமசாமி வேறு வகையானவர். அப்போது எனக்கும் சு.ராவுக்கும் உளவிலக்கம். எம்.எஸ் என்னிடம் வந்து “அப்டி ஒரு பட்டியலை மட்டும் போட்டிருந்தா அது தப்பு. அது ஏன்னு அவர் சரியா விளக்கலைன்னா அதைச் செய்யச்சொல்லுங்கன்னு சு.ரா சொல்றார்” என்றார். நான் அதை விளக்கி எழுதினேன். என் விளக்கம் இது. வடிவக் கச்சிதத்தையே நவீனத்துவச் சிறுகதைகள் அடைகின்றன. ஆனால் அவை பெரும்பாலும் எதிர்மறைப் பண்பு கொண்டவை. இலக்கியத்தின் உச்சம் என்பது நேர்நிலையாகவே இருக்க இயலும். ஆகவேதான் நான் நவீனத்துவ எழுத்தாளர்களை இலக்கிய அழகியல்நோக்கில் கொண்டாடுவேன், அவர்களின் வாழ்க்கைநோக்கை மறுப்பேன். மகத்தான சிறுகதை இருகூறுகளும் இணைவது. அது ஒரு அழியாத வாழ்க்கைத்தரிசனத்தின் கலைவிளக்கமாகவே இருக்கும்.

எல்லா காலத்திலும் இந்த இலக்கிய வம்பர்கள் புழங்கிக் கொண்டே இருக்கிறார்கள். இணையம் அவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பை அளிக்கிறது .எந்தப்புது வாய்ப்பையும் எதிர்ச்சக்திகளே எளிதில் கைப்பற்றிக் கொள்கின்றன.மழை விழுந்தால் களைதான் பெரிதாக வளரும் என விவசாயிகளுக்குத்தெரியும். ஆகவே பயிர் பேணப்படவேண்டும் . வம்பர்களுக்குச் செவிகொடுக்காமலிருக்கலாம். அவர்களுக்கு எந்த கருத்தாடலும் வம்புகளாகவே தெரியும். ஒருவகையில் இரக்கத்திற்குரியவர்கள்

ஜெ

***

அசோகமித்திரன் விமர்சனமலர் 1993

அசோகமித்திரன் படைப்புலகுக்கு ஒரு வாசல்-1

அசோகமித்திரன் படைப்புலகுக்கு ஒரு வாசல்-2

முந்தைய கட்டுரைபிழையின் படைப்பூக்கம்
அடுத்த கட்டுரைசமஷ்டி