‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 43

tigதீர்க்கனைத் தொடர்ந்து வந்த இரண்டு ஏவலர்கள் மதுக்குடுவைகளையும் வெள்ளிக்கோப்பைகளையும் கொண்டுவந்தனர். அவற்றை தாழ்வான பீடத்தில் வைத்து மதுவை ஊற்றி இருவருக்கும் அளித்தனர். விகர்ணன் பீதர் மதுவை கையிலெடுத்தபோதே குமட்டி உலுக்கிக்கொண்டான். குண்டாசி “தங்களுக்கு பழக்கமில்லை, மூத்தவரே. தாங்கள் யவன மதுவையே அருந்தலாம்” என்றதும் “இல்லை” என்றபின் வாயில் வைத்து ஒரே மூச்சாக உறிஞ்சி விழுங்கி குமட்டி வாயை கையால் பொத்திக்கொண்டு குனிந்தமர்ந்து உடல் உலுக்கிக்கொண்டான். இருமுறை எதிர்க்கெடுத்துவிட்டு சிறிய ஏப்பத்துடன் “நீ சொன்னது சரிதான். இது வெறும் அனல். நேரடியாகவே அனலை விழுங்குவதுதான் இது” என்றான்.

“தாங்கள் சற்று நீர் அருந்தலாம்” என்றான் குண்டாசி. “நான் அனலை அணைக்க விரும்பவில்லை” என்று விகர்ணன் சொன்னான். அவன் வாய் திறந்தபோதெல்லாம் வயிற்றின் ஆவி வெளிவந்தது. “அனற்புகை” என்றான். குண்டாசி மதுக்கோப்பையை கையில் எடுத்தான். அந்த இளமஞ்சள் நிறமான திரவத்தை வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தான். மீண்டும் ஒருமுறை நீண்ட ஏப்பம் விட்ட விகர்ணன் கோப்பையை நீட்டி “இன்னும் சற்று…” என்றான். தீர்க்கன் “முதன்முறை என்றால் இதுவே மிகுதி. போதும், இளவரசே” என்றான். “ஊற்றுக!” என்று விகர்ணன் சொன்னான். ஏவலன் ஊற்றியவுடன் ஒருகணமும் தயங்காமல் அதை அப்படியே விழுங்கி கோப்பையை கீழே போட்டுவிட்டு மேலாடையால் வாயை பொத்திக்கொண்டு உடலை இறுக்கி அமர்ந்தான். பின்னர் வாயுமிழும் ஓசையெழுப்பி குனிந்தான்.

“தங்களுக்கு இது பழக்கமில்லை” என்று சொன்னான் குண்டாசி. விகர்ணன் தலையை அசைத்தபடி உடல் வியர்வைகொள்ள மல்லாந்து மூச்சை இழுத்துவிட்டான். அவன் தொண்டைமுழை ஏறியிறங்கியது. குண்டாசி ஏவலனை நோக்கி “நீங்கள் செல்லலாம்” என்று சொன்னான். தீர்க்கன் “நான் மதுகோப்பைகளை எடுத்துப்போகச் சொல்கிறேன், இளவரசே” என்றான். விகர்ணன் புரண்டு தலைதூக்காமலேயே கைவீசி “இல்லை, எனக்கு இன்னும் தேவையாகும்” என்றான். “எடுத்துச் செல்லுங்கள்” என்று தீர்க்கன் உறுதியான குரலில் சொன்னான். ஏவலர் மதுக்கோப்பைகளை எடுத்துக்கொண்டு வெளியே சென்றனர். விகர்ணன் “இன்னும் சற்று தேவையாகும்… என் உடல் இன்னமும் தளரவில்லை” என்றான்.

தன் கையில் பீதர் மதுக்கோப்பை வாய்தொடாமல் இருப்பதை குண்டாசி உணர்ந்தான். மீண்டும் அந்த திரவத்தை பார்த்தான். அது சீழ் என்ற எண்ணம் எழுந்தது. உடல் உதறிக்கொள்ள குமட்டி வந்தது. அதை பீடத்தில் திரும்ப வைத்தான். “ஏன், நீ அருந்தவில்லையா?” என்றான் விகர்ணன். “நோயுற்றிருக்கிறேன், மூத்தவரே. இன்று காலை மூத்தவர் என்னை தாக்கியதனால்” என்றான்.  “ஆம், மூத்தவர் உன்னை தாக்கியது எனக்கும் விந்தையாகவே இருந்தது. அது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை” என்றான் விகர்ணன். குண்டாசி “எனக்குத் தெரியும், நான் அவரை சீண்டினேன்” என்றான். “ஆனால் கடந்த சில மாதங்களாகவே அவர் தெய்வச் சிலைகளுக்குரிய உறுதியும் நிகர்நிலையும் கொண்டவராக இருக்கிறார். ஒவ்வொரு சொல்லும் எண்ணி எடுக்கிறார். எதனாலும் உளநகர்வற்றிருந்தார். இன்று காலை உன்னைக் கண்டதும் ஏன் கொதித்தெழுந்தார்?” என்றான்.

“அதற்கான விடை சற்றுமுன் கிடைத்தது” என்று குண்டாசி சொன்னான். மீண்டுமொருமுறை குமட்டி வாயுமிழ்வதுபோல் கேவலோசை எழுப்பியபடி முன்னால் குனிந்து வாயை பலமுறை திறந்து மூடிய விகர்ணன் நீண்ட இருமல் தொடரொன்றில் சிக்கி நெடுந்தொலைவு சென்று தலையை அசைத்தபடி பீடத்தில் மல்லாந்தான். “என் தசைகள் அனைத்தையும் எரிக்கிறது இது. என் தலைக்குள் தீக்கங்குகள் நிறைந்துள்ளன” என்றான். “ஆனால் முன்னர் இருந்த தீ அணைந்திருக்கும்” என்றான் குண்டாசி. “இல்லை அனைத்துத் தீயும் இணைந்து பெருகியிருக்கின்றன” என்று விகர்ணன் சொன்னான். மீண்டும் மீண்டும் இருமியும் குமட்டியும் உடல் உலுக்க தவித்தான். மெல்ல அடங்கி தலை சரிந்தான். இருமுறை மூச்சில் குறட்டை கலந்தொலித்தது.

பின்னர் விழித்துக்கொண்டு “நீ என்ன சொன்னாய்? இருமுறை குறிப்பு கொடுத்தாய் மூத்தவர் உன்னிடம் ஏதோ சொன்னதாக” என்றான். “ஒன்றுமில்லை” என்று குண்டாசி சொன்னான். விகர்ணன் தலையை அசைத்து “என்ன நிகழ்கிறது என்று எனக்கு தெரியவில்லை. என் கைகளும் கால்களும் உடலில் இருந்து கழன்றுவிட்டதுபோல் தோன்றுகின்றன” என்றான். அவன் நாக்கு தடிக்கத் தொடங்கியிருந்தது. கழுத்துத் தசைகள் இழுபட்டு அதிர்ந்தபடி இருந்தன. குழறலாக “உருகிக்கொண்டிருக்கிறேன்” என்றான். குண்டாசி “நீங்கள் ஓய்வெடுக்கலாம்” என்றான். “ஓய்வு… ஆம், அது தேவை. ஆனால் என்னால் என் அறை வரைக்கும் செல்ல இயலாது. நான் இங்கேயே படுத்துக்கொள்கிறேன்” என்றான் விகர்ணன்.

ஆவி கொப்பளிக்கும் அடுகலத்தின் அருகே நிற்பவன்போல் விகர்ணன் வியர்த்திருந்தான். அவன் நெற்றியில் பரவிய வியர்வைத்துளிகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து வழிந்து கன்னத்தில் இறங்கின. புருவத்தில் துளிகளாகத் தங்கி நின்றன. மூக்கு நுனியிலிருந்து அவன் மடியில் ஒரு வியர்வைத்துளி சொட்டியது. கழுத்தும் தோள்களும் மெல்ல அதிர்ந்து இழுத்துக்கொண்டிருந்தன. தொய்ந்துகிடந்த வலதுகையின் சுட்டுவிரல் சுழன்று காற்றில் ஏதோ எழுதுவதுபோன்ற அசைவை காட்டிக்கொண்டிருந்தது. “மூத்தவரே, நீங்கள் இம்மஞ்சத்திலேயே படுத்துக்கொள்ளலாம்” என்று குண்டாசி சொன்னான்.

விகர்ணன் தலையை தூக்கியபோது இரு இமைகளும் தடித்துச் சிவந்து எடை தாங்காது தழைந்தன. வாயில் ஊறிய கோழையை அருகிலேயே துப்பிவிட்டு “என் தலை இரும்பாலானதுபோல் இருக்கிறது. எங்கோ எவரோ அறையும் ஓசை கேட்கிறது. அடுகலனில் சட்டுவத்தால் அடிப்பது போல… யார் அது?” என்றபின் இரு கைகளையும் ஊன்றி பீடத்திலிருந்து எழமுயன்று முடியாமல் மீண்டும் பீடத்திலேயே அமர்ந்தான். “அறைந்துகொண்டே இருக்கிறார்கள்… அவர்களிடம் அதை நிறுத்தும்படி சொல்” என்றான். மீண்டும் ஒருமுறை எதிர்க்கெடுத்து ஓங்கரிப்பு ஓசையை எழுப்பினான். “என்ன ஆகிறது எனக்கு? மிதமிஞ்சி அருந்திவிட்டேனா? ஒருவேளை நெஞ்சுடைந்து இறந்துவிடுவேனா?” என்றான்.

“இல்லை, நீங்கள் களத்தில்தான் இறப்பீர்கள்” என்றான் குண்டாசி. விகர்ணன் அவனை விழிதூக்கி நோக்கி “ஆம், களத்தில்தான். களத்தில்தான் இறப்பேன், ஐயமில்லை” என்றான். கண்களை மூடி தலையை அசைத்துக்கொண்டே இருந்தான். அவன் வாய் தாடையுடன் ஒருபக்கமாக கோணி இழுபட அதற்கேற்ப இடப்பக்கக் காலும் இழுபட்டு அசைந்தது. “தண்ணீர்! தண்ணீர்!” என்றான். குண்டாசி அருகிலிருந்த கலத்திலிருந்து நீரை ஊற்றி அவனுக்கு அளித்தான். அதை வாங்கி பார்த்தபின் பற்கள் கிட்டித்துக்கொள்ள கை நடுங்கி மீண்டும் பீடத்திலேயே வைத்தான். “இல்லை, நீரைப் பார்த்தாலே குமட்டுகிறது” என்றபின் பீடத்தில் இருந்த குண்டாசியின் மதுக்கோப்பையைப் பார்த்து “அதை நீ அருந்தப்போவதில்லையா?” என்றான்.

குண்டாசி அந்த மதுக்கோப்பையைத் தூக்கி மறுபக்கமாக வைத்து “வேண்டாம், மூத்தவரே” என்றான். “கொடு அதை! இன்னும் சற்று மது. இன்னும் சற்று இடம் ஒழிந்திருக்கிறது. அதை நிரப்பினால் இந்தக் கொப்பளிப்பு இருக்காது” என்றான் விகர்ணன். குண்டாசி “இது சற்று நேரம்தான். தலை மதுவால் முழுக்க நனைந்தபின் துயின்றுவிடுவீர்கள். காலையில் நல்ல தலைவலி இருக்கும்” என்றான். “காலையில்… ஆம் காலையில் விடியுமுன்னரே நாம் எழுந்திருக்க வேண்டும். அங்கே அரண்மனை முற்றத்தில் அணிவகுக்கவேண்டும், மூத்தவரின் ஆணை” என்றான். “இப்போது தாங்கள் படுத்தால் காலையில் எழுந்துவிடலாம்” என்றான் குண்டாசி.

விகர்ணன் “நீ என்னைப்பற்றி என்ன நினைக்கிறாய்?” என்றான். சிரித்தபடி “இந்த வினாவைக் கேட்க இவ்வளவு பீதர்நாட்டு மது உங்களுக்கு தேவைப்பட்டிருக்கிறது” என்றான் குண்டாசி. விகர்ணன் “ஆம், அவ்வாறே கொள். நீ என்னைப்பற்றி என்ன நினைக்கிறாய்?” என்றான். குண்டாசி “எதைச் சார்ந்து?” என்றான். “நான் எதன்பொருட்டு என் மூத்தவருடன் நின்றிருக்கிறேன்?” என்றான் விகர்ணன். “அதை சொல்லிவிட்டீர்கள், செஞ்சோற்றுக்கடன்” என்றான் குண்டாசி. “ஆனால் ஒருவனுக்கு அறத்தின்மேல் இருக்கும் பற்று அதைவிட ஒருபடி மேலானதல்லவா? இந்த செஞ்சோற்றுக்கடன் அன்று அவையில் எழுந்து என் மூத்தவரை பழித்துரைக்கும்போது எனக்கு ஏன் எழவில்லை?” என்றான் விகர்ணன். “அதையும் விளக்கிவிட்டீர்கள். அது அவையறம், இது குலஅறம்” என்றான் குண்டாசி.

“அச்சொற்கள் அனைத்தும் வீண். அறம் அவ்வாறெல்லாம் பிளவுபடாது. அறம் என்று ஒன்று இருக்குமென்றால் அது எங்கும் அறம்தான். ஒருவனால் இடத்திற்கேற்ப அறத்தை மாற்றிக்கொள்ள முடியுமென்றால் அக்கோழை அறம் என்ற சொல்லையே சொல்லக்கூடாது” என்றான் விகர்ணன். “ஆம், சொல்லக்கூடாது” என்று குண்டாசி சொன்னான். “நானும் கிளம்பிச் சென்றிருக்கவேண்டும். வாளெடுத்து பெண்பழி தீர்க்கும்பொருட்டு போரிட்டிருக்கவேண்டும். ஆண்மையுள்ளவனின் வழி அது. காலத்தைக் கடந்து கொடிவழியினரால் போற்றப்படும் செயல் அது” என்றான் விகர்ணன். புன்னகையுடன் “ஆம், அதை செய்திருக்கலாம்” என்று குண்டாசி சொன்னான். விகர்ணன் நெஞ்சில் கைவைத்து விசும்பினான். “ஆனால் அதைச் செய்ய என்னால் இயலவில்லை. ஏனெனில் நான் என் மூத்தவரிடம் இருந்து உளம் விலக்க இயலாது.”

குண்டாசி சலிப்புற்றான். “ஆம், அது உண்மை” என்றான். “அப்படியென்றால் நான் யார்? இதுவரைக்கும் நான் பேசிய அனைத்துமே வெறும் பசப்புகள்தானா?” என்றான் விகர்ணன். குண்டாசி எரிச்சலுடன் “மூத்தவரே, இப்புவியில் நெறியில் மாறாமல் நின்றிருப்பவரென எவருமில்லை. தலைமுறைகளுக்கு ஒருவர், ஆயிரத்தில் லட்சத்தில் ஒருவர், அவ்வாறு வருவார். அவர்களும் ஆழத்தில் பிறரறியாத் தனிமையில் அறம் பிழைத்தவராகவே இருப்பார்கள். இல்லாத ஒன்றை எண்ணி நம்மை நாம் சிறுமைப்படுத்திக்கொள்ள வேண்டியதில்லை” என்றான். விகர்ணன் தன் நெஞ்சில் ஓங்கியறைந்தான். குழறிய குரலில் “இல்லை, நான் என்னை வெறுக்கிறேன். மெய்யாகவே வெறுக்கிறேன். நான் செய்திருக்கவேண்டியது ஒன்றே. அவைச்சிறுமை செய்யப்பட்ட அரசியின் பொருட்டு வாளெடுத்திருக்கவேண்டும். செய்யவேண்டியதை செய்ய இயலாதவனே மிகுதியாக எண்ணம் ஓட்டுகிறான். நூறு ஆயிரம் செவிகளுக்குமுன் தன்னை மீளமீள முறையிடுகிறான். நூறு கோணங்களில் தன் தரப்பை முன்வைக்கிறான். அவ்வாறாக அவன் மெதுவாக தன்னை நிறுவிக்கொள்கிறான். வீணர்களின் வழி. கோழைகளின், சிறுமதியர்களின் வழி” என்றான்.

“நீங்கள் எதை சொன்னாலும் அதை ஆமென்று சொல்லுமிடத்திலிருக்கிறேன்” என்றான் குண்டாசி. “நான் செய்வதற்கொன்றே உள்ளது. அதை மட்டுமே செய்திருக்க வேண்டும். ஆனால் அதை இன்று செய்யக் கூடாது, அன்று அவைக்களத்தில் நம் குலத்துக்கு வந்த அரசி சிறுமை செய்யப்பட்ட அந்த அவையில் வாளெடுத்து என் சங்கில் குத்தியிறக்கியிருக்க வேண்டும். அவர்கள் இங்கிருந்து துரத்தப்பட்டபோது அது அறமின்மை என்று ஓங்கி உரைத்து அவர்களுடன் நானும் கிளம்பிச்சென்றிருக்க வேண்டும். அல்லது இங்குள்ள அனைத்தையும் துறந்து வெறும் மனிதனாக காடேகியிருக்க வேண்டும். எதையும் நான் செய்யவில்லை. இங்கிருந்து அரசருக்கும் மூத்தவர்களுக்கும் அறமுரைக்கிறேன் என்று என்னை ஏமாற்றிக்கொண்டேன். பூசல்களைப் பேசி சீரமைக்க முயல்கிறேன் என்று நடித்தேன்.”

அவன் குரல் உடைந்தது. விம்மல்களும் விசும்பல்களுமாக அழுதான். இடதுவிழியிலிருந்து மட்டும் நீர் வழிந்தது. “அனைத்தும் ஒன்றுக்காகவே. செய்யவேண்டிய ஒன்றை செய்யவில்லை. செய்யும் துணிவும் திறனும் இல்லை. ஆம், நான் கோழை.” அவன் பற்கள் தெரிய இளித்தான். தன் ஒழிந்த கோப்பையை சுட்டிக்காட்டி “நன்று! கோழைகள் அனைவரும் தவறாது வந்து சேருமிடத்திற்கு நானும் வந்து சேர்ந்துவிட்டேன். நீ அந்தக் கோப்பையை இங்கு கொடு. அதையும் அருந்தினால் நான் நிறைவுறக்கூடும்” என்றான். குண்டாசி அக்கோப்பையை நீட்டி “ஆம், இச்சொற்களை நிறுத்திக்கொண்டால்தான் நீங்கள் துயில்வீர்கள். அருந்துக!” என்றான். அதை வாங்கி இரண்டு மிடறுகளாக அருந்தி கோப்பையை கீழே நழுவவிட்டு “இம்முறை இது அத்தனை அனலென தோன்றவில்லை” என்றான் விகர்ணன்.

“தாங்கள் படுத்துக்கொள்ளலாம்” என்று குண்டாசி சொன்னான். “நான் அறிவேன் அவர் ஏன் அதை செய்தார் என்று. கௌரவ நூற்றுவர்களும் அதை அறிவார்கள். நாங்கள் நூற்றுவரும் ஓருடல், ஓருளம். அவர் ஏன் அதை செய்தாரென்று நான் அறிவேன். அதை அறிந்தமையால் அன்று சினங்கொண்டேன். அதை அறிந்திருந்தமையால்தான் அறம் அறிந்தும் அதை ஆயிரம் நடிப்புகளால் கடந்துவந்தேன்” என்றான் விகர்ணன். அவன் குரல் தழைந்து வந்தது. கையைத் தூக்கி அசைத்து “ஆனால் சிறுமை என்பது…” என்றான். இருமுறை குமட்டி உமிழ்ந்தபின் “சிறுமை என்பது… ஆனால்” என்றான். “பீஷ்மர் அறிவார். ஏனெனில் தன் குருதியை அறியாதவர் எவரும் இல்லை. பீஷ்மருக்குத் தெரியும். தந்தைக்கும் தெரியும். அனைவருக்கும் தெரியும். நான் சொல்கிறேன், ஆயிரம் உபகௌரவர்களுக்கும் தெரியும். ஆண் என பிறந்த அனைவருக்கும் சற்றேனும் தெரியும்…”

“இன்றுவரை இந்நிலத்தில் அப்படி எத்தனை அவைகள்! எத்தனை அன்னையர்! அதை செய்தவர் கோடி. ஆனால் அதை செய்து…” அவன் விக்கல் கொண்டு அது இருமலாக உடல் எழுந்து எழுந்து அசைய தவித்தான். பின்னர் மூக்கிலும் வாயோரமும் வழிந்த கோழையுடன் “நான் அவரே. ஆனால்…” என்றான். சுட்டுவிரலைத் தூக்கி “அதை எவர் செய்தாலும்… நான் பார்த்தேன். நானே பார்த்தேன். ஆனால் அது வேறு. நான் பார்த்தேன் என்று சொன்னேன் அல்லவா? அப்போது அங்கிருந்த ஆண்களின் கண்கள்… ஆம், அங்கிருந்த அத்தனை கண்களும்…” என்றான். “எனக்கு இன்னும் சற்று மது வேண்டும்” என்றான்.

குண்டாசி மறுமொழி ஏதும் சொல்லாமல் விகர்ணனை வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தான். அவன் கட்டைவிரல் இழுத்து இழுத்து துடித்தது. பீடத்தில் ஒருபக்கமாக சரிந்து கைப்பிடியில் முழு உடலை அழுத்தி தொய்ந்தான். அவன் வலது கை விழுந்து தரையை தொட்டது. தலை எடைகொண்டு மேலும் சரிய வாயிலிருந்து எச்சில் கோழை தோளில் வழிந்தது. குண்டாசி “தீர்க்கரே…” என்று அழைத்தான். வெளியிலிருந்து தீர்க்கன் வந்தான். “மூத்தவரைத் தூக்கி படுக்கவையுங்கள்” என்றான் குண்டாசி. தீர்க்கன் ஒன்றும் சொல்லாமல் வந்து விகர்ணனை தூக்கினான். “என்னை தூக்க வேண்டியதில்லை. நான் இந்த ஆற்றில் நீராடும்போது…” என்றான் விகர்ணன். “ஆனால் இது இத்தனை வெம்மையாக இருக்கிறது. இந்த ஆறு… இந்த ஆறு செல்லுமிடம்… தொலைதூரத்தில் இந்த ஆறு” என்று குழறினான்.

அவனைத் தூக்கி மஞ்சத்தில் படுக்க வைத்து ஆடைகளையும் கச்சையையும் தளர்த்தி கைகால்களை விரித்து தலையணை கொடுத்து தலையை சற்றே தூக்கி வைத்தான் தீர்க்கன். குண்டாசி “கள்மயக்கில் விழுந்தவனை எப்படி படுக்கவைப்பதென்பதில் நெடுங்கால கைப்பழக்கம் கொண்டிருக்கிறீர், தீர்க்கரே” என்றான். தீர்க்கன் அவனை திரும்பிப்பார்க்க “இன்று எனக்கு உமது உதவி தேவைப்படாது” என்றான். தீர்க்கன் ஒன்றும் சொல்லவில்லை. விகர்ணன் “நான் அவளை பார்க்க வேண்டும். அவள் என்னிடம் சொன்னாள், அவள் என்னிடம் சொன்னதுதான் உண்மை, அவளை நான் பார்க்கவேண்டும். அவளைப் பார்த்து…” என்று குழறியபடி படுக்கையில் நீந்துவதுபோல் கைகால்களை அசைத்தான்.

“அவள் என்னிடம் சொல்லி… அவள் என்னிடம் சொன்னது…” என்றான். அவன் உதடுகள் ஓசையற்ற சொற்களையும் கொண்டு அசைந்தன. “அவள் சொன்னாள்… அவள் சொன்னாள்… அவள்…” என சொற்கள் ஓய்ந்தன. உதடு வெடித்த ஒலியுடன் மூச்சு வெளிவந்தது. ஆழ்தொண்டையிலிருந்து குறட்டை வந்தது. அதன் அடைப்பால் உடல் அதிர்ந்து விழித்துக்கொண்டு “அவள் சொன்னது…” என்றான். மீண்டும் “அவள்…” என்றான். அவள் என்ற ஒலியில் ஒன்றி துயிலில் வீழ்ந்தான். குண்டாசி “இறுதியாக அவர் சொன்னதுதான் அனைத்துக்கும் அடியில் உள்ளது. தன் துணைவியை காணச் செல்வதை தவிர்க்கும் பொருட்டு இங்கு வந்திருக்கிறார்” என்றான்.

தீர்க்கன் அதற்கு மறுமொழி சொல்லாமல் “தாங்களும் சற்று துயிலலாம், இளவரசே” என்றான். “இல்லை, நான் உடனே கிளம்புகிறேன்” என்றான் குண்டாசி. “இப்போதேவா?” என்று தீர்க்கன் கேட்டான். “ஆம், இவர் இங்கிருக்கட்டும். விழித்தெழுந்தால் அழைத்துச்செல்ல ஏவலரிடம் சொல்லுங்கள். என் கச்சையும் வாளும் ஒருங்கட்டும்.” தீர்க்கன் “நீங்கள் விடைகொள்ளவில்லை” என்றான். “வேண்டியதில்லை” என்று குண்டாசி சொன்னான். “பேரரசியிடமாவது ஒரு சொல் உரைப்பது நன்று.” குண்டாசியின் உதடுகள் ஒரு சொல்லுக்கென அசைந்தன. தனக்குத்தானே என தலையசைத்து “வேண்டாம்” என்றான். “நீராட்டறை ஒருங்கட்டும்” என்று அவன் சொன்னான். தீர்க்கன் தலைவணங்கி வெளியே சென்றான்.

குண்டாசி நீராட்டறையில் அரைத்துயிலில் என அமைதியுடன் இருந்தான். அவன் கள்மயக்கில் இருப்பதாக எண்ணிய சமையர் அவ்வாறல்ல என்று உணர்ந்ததும் விந்தையுடன் ஒருவரை ஒருவர் விழிமுட்டிக்கொண்டனர். ஆடியில் தன் உடலை நெடுநேரம் பார்ப்பது அவன் வழக்கம் என்பதை அறிந்திருந்தவர்கள் அவன் ஒருகணம்கூட பாவையை நோக்காமல் கிளம்பியது கண்டு திகைப்படைந்தனர். அவன் அணியறைக்கு வந்தபோது தீர்க்கன் இரு படைவீரர்களுடன் அங்கே காத்திருந்தான். அவன் சென்று பீடத்தில் அமர்ந்தபோது அவர்கள் அவனுக்கு தாளாடையை முழங்கால்முதல் இடைவரை சுற்றிச்சுற்றிக் கட்டினர். கச்சைமுறியை இறுக்கி முடிச்சிட்டனர். எருமைத்தோலால் ஆன மணிக்கட்டுக் காப்பையும் முழங்கால் காப்பையும் பொருத்தியமைத்தனர். அவன் குழல்கற்றைகளை அள்ளிச்சுருட்டிக் கட்டி தோல்வாரிட்டு முடிந்து கொண்டையாக்கினர்.

இடைக்கச்சையில் அஸ்தினபுரியின் அமுதகல முத்திரை கொண்ட குறுவாளை செருகியபடி குண்டாசி எழுந்து நின்றான். ஆடியில் தெரிந்த தன் உருவத்தை நோக்கிக்கொண்டிருந்தான். அவர்கள் அவன் நெற்றியில் கொற்றவை அன்னையின் செங்குருதிச் சாந்தால் நீள்குறியிட்டதும் பின்நகர்ந்து தலைவணங்கி அணி முடிந்துவிட்டது என்று காட்டினர். குண்டாசி தீர்க்கரிடம் “சென்று வருகிறேன், தீர்க்கரே. இப்பிறப்பில் கடன் என எஞ்சுவது உமக்கே. மறுமையில் அதை ஈடு செய்கிறேன்” என்றான். தீர்க்கன் விழிகளில் மெல்லிய ஈரத்துடன் உணர்வற்ற முகத்துடன் கைகூப்பி நின்றான். குண்டாசி அவன் கைகளை தொட்டபின் வெளியே சென்றான்.

இடைநாழியில் நடந்து படிகளில் இறங்கி கூடத்தை அடைந்தான். அவனுக்கான தேர் முற்றத்தில் நின்றிருப்பதை கண்டான். முற்றத்தின் சாயும்வெயில் கண்கூசச் செய்தது. தலைகுனிந்தபடி சென்று தேரிலேறிக்கொண்டான். தேர்ப்பாகன் மெல்லிய குரலால் ஆணையிட்டதுமே புரவிகள் விரைந்த காலடிகளுடன் செல்லத் தொடங்கின. காவல்மாடத்தைக் கடந்து பெருஞ்சாலையில் ஏறியபோது குண்டாசி மீண்டும் அந்த விளக்கவியலாத இனிமையுணர்வை அடைந்தான்.

முந்தைய கட்டுரைராஜ் கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம்
அடுத்த கட்டுரைமௌனியும் ஜெயகாந்தனும்