வெண்முரசு நூல்நிரையில் பதினாறாவது படைப்பு குருதிச்சாரல். மகாபாரதப் போர் முதிர்ந்துகொண்டிருக்கும் சூழல். ஊழ் அனைத்து விசைகளையும் இணைத்துக்கொண்டு அதைநோக்கி செலுத்துகிறது. போருக்கு எழும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அறமும் நெறியும் சொல்வதற்கென்று உள்ளது. வஞ்சங்களுமும், விழைவுகளும் உள்ளன. இழப்பு மட்டுமே கொண்டவர் அன்னையர். விழுவன அனைத்தும் மண்ணையே வந்தடையவேண்டும் என்பதுபோல போரின் துயர்கள் இறுதியாக அவர்களுக்கே சேர்கின்றன. ஆகவே அவர்கள் தங்கள் மைந்தர்களைக் காக்கும்பொருட்டு போரைத் தவிர்க்க முயல்கிறார்கள். குருதிச்சாரலின் கதையின் பேரொழுக்கு இதுவே.
அப்போக்கில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் தங்களைக் கண்டுகொள்கிறார்கள். சிலர் மேலும் ஆழமாக வாழ்வில் சிக்கிக் கொள்கிறார்கள். சிலர் விடுதலைபெறுகிறார்கள். சிலர் நின்ற இடத்திலேயே சுழல்கிறர்கள். கௌரவர்களும் பாண்டவர்களும் மணந்த அரசியரின் பெயர்கள் மட்டுமே மகாபாரத்ததில் உள்ளன. வியாச மகாபாரதத்தில் அரசி என்றால் அது திரௌபதி மட்டுமே. வெண்முரசு அவ்வரசிகள் அனைவரையும் முகமும் வாழ்வும் உணர்வுகளும் கொண்டவர்களாக விரித்தெழுப்புகிறது. அவர்களின் நோக்கில் பெரும்போரின் வருகையைச் சித்தரிக்கிறது.
அன்னையரின் பார்வைக்கோணத்தில் கிருஷ்ணன் பாண்டவர்களுக்காக மேற்கொள்ளும் மூன்று தூதுகள் இந்நாவலில் காட்டப்படுகின்றன. பாதி நாடு கோரி வந்தவன் ஐந்து இல்லங்களாவது கொடுங்கள் என்று கேட்டு மறுக்கப்பட்டு கால்புழுதியை தட்டிவிட்டுவிட்டு அஸ்தினபுரியிலிருந்து கிளம்புவது வரையிலான கதை. போருக்கான அணிசேரல்கள், அரசவைக்கூடல்கள், வேள்விகள். ஊழுக்கு எதிராக ஒருபக்கம் அன்னையரும் மறுபக்கம் மெய்ஞானியும் துயரமும் கனிவுமாக நின்றிருக்க அது எறும்புகளை அறியாத யானை என நடந்து செல்கிறது.
இந்நாவலை அருண்மொழிக்கு அன்பளிக்கை செய்கிறேன். நான் முக்கால்பங்கு எழுதிய பெருநாவலான அசோகவனத்தையே அவளுக்குச் சமர்ப்பணம் செய்யவேண்டுமென எண்ணியிருந்தேன். அதை முடிக்க முடியவில்லை. இந்நாவல்நிரையின் அனைத்துப் படைப்புக்களும் வெவ்வேறுவகையில் என் ஆசிரியர்களாக இருந்தவர்களுக்கே படைக்கப்பட்டன. அவ்வரிசையில் அருண்மொழியும் வருவதில் ஒரு பொருந்தாமை தெரியலாம், என்வரையில் அதில் ஒரு பொருத்தமும் உள்ளது.
அன்புடன்
ஜெயமோகன்
***