எம்.எஸ் – கடிதங்கள்

ms

எம்.எஸ். அலையும் நினைவுகள்-1

எம்.எஸ். அலையும் நினைவுகள்-2

எம்.எஸ். அலையும் நினைவுகள்-3

 

அன்பின் ஜெ..

 

தொலைவில் மங்கலாகத் தெரிந்து கொண்டிருந்த ஒரு ஆளுமையை உருப்பெருக்கி மூலம், அருகில் கொணர்ந்து துல்லியமாகக் காட்டி விட்டீர்கள்.

 

அங்கீகாரம் தேடாத / தேவையற்ற / தவிர்த்த  (சரியாக சொல்ல முடியவில்லை) செயலூக்கம் கோடியில் சிலருக்கே சாத்தியம்..

 

காலையில் வெகு  நேரம் மௌனமாக அமரவைத்து விட்டது உங்கள் கட்டுரை.

 

நன்றி

 

அருண் மதுரா

 

 

பெயர், புகழ், பணம் ஏதுமில்லாமல் இலக்கியத்தில் செயல்பட முடியுமா? இலக்கியம் தன்னளவில் மனநிறைவையும் மகிழ்ச்சியையும் அளிக்குமா? வாழ்க்கையின் அனைத்துச்சிக்கல்களையும் இலக்கியத்தை மட்டுமே கொண்டு கடக்கமுடியுமா? இலக்கியம் எல்லா வாழ்வலைகளிலும் நம்மைக் காப்பாற்றுமா? இலக்கியம் நம்மை மேம்பட்ட மானுடராக ஆக்குமா?  ஓர் உபாசனா மூர்த்தியாக இலக்கியத்தை வழிபட்டு வீடுபேறடைய முடியுமா? ஆம் என்பதற்கான சான்று எம்.எஸ். அன்னைப்பெருந்தெய்வமாக இலக்கியம் அவருடன் என்றுமிருந்தது – என்ற வரிகளை வாசித்து உருகிவிட்டேன் ஜெயமோகன். அற்புதம்

 

செல்வம்

கனடா

 

ஜெ

நீங்கள் ஆளுமைகளைப் பற்றி எழுதும் குறிப்புகள் மிக முக்கியமானவை. சுந்தர ராமசாமி அவ்வகையில் உங்களுக்கு வழிகாட்டி என்று நினைக்கிறேன். இவர்கள் இருந்தார்கள் என்ற நூலில் வரும் அனுபவக்குறிப்புகளின் வழியாகத் தெரிந்தவர்களும் தெரியாதவர்களுமான ஏராளமான எழுத்தாளர்கள் உயிர்பெற்று வருகிறார்கள்.  எந்த தன்முனைப்போ பாவனையோ இல்லாமல் அவர்களின் ஆளுமையை முழுமையாக முன்னால்கொண்டு வருகிறீர்கள். அவர்களை அவர்கள் வாழ்ந்த காலத்தில்  அந்தச்சூழலில் பொருத்துகிறீர்கள். அதன்பின்னர் அவர்களின் ஆளுமையைப்பற்றிய நுட்பமான ஒரு சித்தரிப்பை அளிக்கிறீர்கள். அதன்பின்னர் அவர்களின் பங்களிப்பை வரையறை செய்கிறீர்கள்.  வரலாற்றாசிரியனும் புனைகதை ஆசிரியனும் இலக்கியவிமர்சகனும் சேர்ந்து எழுதியவை போல உள்ளன இக்கட்டுரைகள்.  எம்.எஸ் பற்றிய கட்டுரையில் மூன்று பகுதிகளும் அவ்வாறாக தனித்தனியாகப் பகுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு எழுத்தாளர்களைப்பற்றிய பதிவுகள் செய்வதென்பது மிகப்பெரிய ஒரு பணி. உண்மையில் நேற்று யோசித்துக்கொண்டிருந்தேன். நீங்கள் எவரையெல்லாம் எழுதினீர்களோ அவர்களெல்லாம் அப்படியே கண்முன் வாழ்ந்தவர்கள் போல நின்றுள்ளனர். ஆனால் பல எழுத்தாளர்களைப்பற்றி ஒரு குறிப்பே கிடையாது.  உதாரணமாக எங்களூர் எழுத்தாளரும் புதுக்கவிதை ஆசானுமாகிய சி.மணி. அவர் எப்படி இருப்பார், எப்படி யோசிப்பார் என்று இன்று எவருக்குமே தெரியாது. ஆனால் சுந்தர ராமசாமி நினைவின் நதியில் என்ற நூல் வழியாக அவர் எனக்கு பல ஆண்டு தெரிந்தவராக ஆகிவிட்டார். எழுத்தாளனால் எழுதப்படுவது பெரிய பாக்கியம். எல்லாருக்கும் அமைவதில்லை. அவர்கள் சாவதில்லை. எம்.எஸ். அவர்களுக்கு வணக்கம்

 

ஆர்.ராமகிருஷ்ணன்

pk

அன்புள்ள ராமகிருஷ்ணன்

எழுத்தாளர்கள் பிற ஆளுமைகளைப்பற்றி ஆளுமைச்சித்திரம் எழுதுவது உலகமெங்கும் உள்ளதுதான். சுந்தர ராமசாமிக்கும் முன்னுதாரணமாக அமைந்தது மாயாத்த ஸந்த்யகள் என்ற பேரில் பி.கே.பாலகிருஷ்ணன் எழுதிய தொகுதி. புனைவின் கருவிகளைக்கொண்டு சித்தரிக்கப்பட்ட எழுத்தாளர்களின் சித்திரங்கள் அவை. சுந்தர ராமசாமி அந்நூலைப்பற்றி உளக்கிளர்ச்சியுடன் என்னிடம் பேசியிருக்கிறார். அவர் ஜீவா குறித்து எழுதிய முதல் ஆளுமைச்சித்திரம் அப்படிப்பட்டதுதான். மாயாத்த சந்த்யகளில் உள்ள சி.ஜே.தாமஸ் பற்றிய நினைவுக்குறிப்பே ஜே.ஜே.சிலகுறிப்புகளுக்கு முதற்தூண்டுதல்

 

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 42
அடுத்த கட்டுரைகாப்பீடு -கடிதங்கள்