இயல்புவாதத்தின் வெற்றியும் எல்லைகளும்- கே.என்.செந்திலின் ‘சகோதரிகள்’
அன்புள்ள ஜெ
நீங்கள் சகோதரிகள் கதையைப்பற்றி எழுதியிருந்ததை வாசித்தேன். நான் ஓர் எளிய வாசகன். விமர்சகன் அல்ல. நான் இந்தக்கதை இந்தவகையான அழகியல்கொண்டது என்று தெரிந்துகொள்ளவேண்டிய அவசியம் உண்டா? இந்த விமர்சன முறைகளைத் தெரிந்துகொள்ளாமல் வாசித்தால் இலக்கியம் புரியாதா? இவை ஏன் எனக்கும் இலக்கியத்திற்கும் நடுவே வரவேண்டும்?
எஸ்.ராஜ்குமார்
***
அன்புள்ள ராஜ்குமார்,
இந்தவகையான பேச்சுக்கள் பொதுவாக முன்பெல்லாம் வெட்டி அரட்டைகளில்தான் இருந்தன. அரட்டைகள் அப்படியே அச்சாகும் முகநூல்சூழலில் இவை கருத்துக்களின் தகுதி பெற்றுவிட்டன. இவற்றுடன் போராடுவதே இன்று இலக்கியச் செயல்பாடாக மாறிவிட்டிருக்கிறது
நீங்கள் ஒரு தாய் உணவகத்துக்குச் செல்கிறீர்கள். அங்கே சீன உணவுக்குரிய சுவைச்சாறை [sauce ] எதிர்பார்க்க மாட்டீர்கள். அந்த தாய் உணவு என்ன வகை, அதன் தனிச்சுவை என்ன என்று தெரிந்திருப்பீர்கள். அதைச் சுவைக்க தயாராக இருப்பீர்கள். என் நாக்கு ஒன்றுதான், எளிய சுவைஞன் நான், நான் ஏன் சமையற்கலை பற்றியும் சமையல்வடிவங்கள் பற்றியும் தெரிந்துகொள்ளவேண்டும் என்று கேட்க மாட்டீர்கள். அங்கே இட்லிச்சுவையை எதிர்பார்த்தால் நீங்கள் ஒரு கோமாளி. இலக்கியத்திற்கு மட்டும் என்ன வேறுபாடு? இதுவும் சுவையே.
வெவ்வேறுவகையான இலக்கிய அழகியல் முறைகள் வாழ்க்கையை வெவ்வேறு கோணத்தில், வெவ்வேறு நோக்கங்களுக்காக அணுகும்பொருட்டு உருவானவை. அவற்றை அறிந்து வாசிப்பதற்குப்பெயர்தான் இலக்கியவாசிப்பு. எல்லாவற்றையும் ‘கதையாக’ வாசிப்பது இலக்கியத்திற்கு எதிரானது. ஓர் இலக்கிய அழகியல் முறையின் இலக்கணத்தை அறிவது அதைக் கையாண்டுள்ள படைப்பை முழுமையாக அறிய உதவக்கூடியது.
அவ்வாறு இலக்கணத்தை ஓரளவேனும் அறியாவிட்டால் நமக்குப் பழகிய, நாம் ஏற்கனவே ரசித்த ஒன்றை ஒவ்வொரு படைப்பிலும் எதிர்பார்ப்போம். ஏதேனும் ஒன்றை அளவுகோலாகக் கொண்டு பிறவற்றை நிராகரிப்போம். அதைவிடப் பெரும்பிழை ஓர் அழகியல்வடிவம் எதை தன் தனிச்சிறப்பாக்க் கொண்டுள்ளதோ அதையே அதன் குறைபாடு என்று புரிந்துகொள்வோம். அவ்வாறு எழுதப்படும் சக்கைவிமர்சனங்கள் இன்று ஏராளமாக உருவாகின்றன. இலக்கியத்திற்கு இவை பெருந்தடைகள்.
இலக்கியத்தின் வகைமைகளும் சாத்தியங்களும் எல்லையற்றவை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடத்தை நிரப்புகின்றன. அவற்றை அறிந்து வாசித்து தன் ரசனையை முழுமையாக்கிக்கொள்பவனே நல்ல வாசகன். அவனே இலக்கியத்தை ஒட்டுமொத்தமாக அறிகிறான். தன் அறிவின், ரசனையின் குறுகிய எல்லைக்குள் நின்றுகொண்டு இலக்கியத்தை அதற்குள் நின்று மதிப்பிடுபவன் மேலும் மேலும் குறுகியபடிச் சென்று தன் சுவாசத்தை தானே உள்ளிழுக்க ஆரம்பிப்பான். ஆகவே அழகியல்முறைகளைத் தெரிந்துகொள்வது இன்றியமையாத்து
பொதுவாக இலக்கிய அழகியல் முறைகளை வகுத்துக்கொள்ளலாம். சகோதரிகள் கதையில் சித்தரிக்கப்படும் உலகம் ஏறத்தாழ தஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும்தண்டனையும் கதையில் வரும் மார்மல்டோஃபின் குடும்பக் கதைக்குச் சமானமானது. ஆனால் அதில் மார்மல்டோஃப் மிக மிக நீளமாகப் பேசுகிறான். உளறலாகவும் மெய்ஞானமாகவும் வெளிப்படும் பேருரைகள் அவை. சோனியா தெய்வீகமான அமைதியுடன் இருக்கிறாள். அவள் சித்தி உச்சகட்ட உணர்ச்சிகளை பேச்சுக்களாலேயே வெளிப்படுத்துகிறாள். உவமைகள், வர்ணனைகள், அரிய சொற்றொடர்கள் வந்தபடியே உள்ளன.
இப்படி உண்மையில் ஒரு குடிகாரனின் வீடு இருக்குமா, இப்படிப்பட்ட மனிதர்கள் நிஜவாழ்வில் எங்கே உள்ளனர் என்ற கேள்விக்கே இடமில்லை. ஏனென்றால் அதன் அழகியலை செவ்வியல் அழகியல் [classicism] என்கிறோம். அது காவியத்தன்மை கொண்டது. காவியமாந்தர் உதாரணக் கதைமாந்தர்களே ஒழிய யதார்த்தமானுடர் அல்ல. அங்கே வாழ்க்கையின் ஒட்டுமொத்தத் தரிசனம் கவித்துவமும் நாடகத்தன்மையும் கொண்டு எப்படி வெளிப்படுகிறது என்பதே வாசகனின் தேடல்
ஏறத்தாழ இதே உலகை அசோகமித்திரன் தண்ணீர் நாவலில் எழுதியிருப்பதை வாசிக்கிறோம். அது யதார்த்தவாதம். [realism] . யதார்tத்தத்த்தில் பேசப்படாத எதுவும் அதில் இல்லை. அன்றாடம் காணமுடியாத கதாபாத்திரங்களும் இல்லை.முற்றிலும் நம்பகமான உலகம், கதைமானுடர். அதிலுள்ள தண்ணீர் என்ற குறியீடுகூட சற்றும் கவித்துவம் வெளிப்படாதபடி இயல்பான அன்றாடநிகழ்வாக அமைக்கப்பட்டுள்ளது. மார்மல்டோஃப் பேசும் மகத்தான ஒருவரி தண்ணீர் நாவலுக்குள் வந்தால் அது அழகியல்ப்பிழை.
யதார்த்தவாதம் அதை எழுதும் ஆசிரியனால் தொகுத்து ஒரு முனை நோக்கிச் செலுத்தப்பட்ட யதார்த்தத்தை முன்வைக்கிறது. தண்ணீர்ப் பஞ்சம் என்ற குறியீட்டின் வழியாக அசோகமித்திரன் உருவாக்குவது உறவுகளின் வரட்சியை. யதார்த்தவாதம் ஆசிரியனின் நோக்கத்தையே மையச்சரடாகக் கொண்டது. அதன்பொருட்டு அது கதாபாத்திரங்களின் உள்ளத்தை விளக்கும். சூழலைச் சித்தரிக்கும். நேரடியாகப் பேசவும்கூடும்.
ஜெகசிற்பியனின் ஜீவகீதம் என்னும் நாவலில் ஏறத்தாழ இதே உலகம் உள்ளது. அது கற்பனாவாத அழகியல் கொண்டது. [Romanticism] அதில் ஆசிரியர் அந்த நகர்ப்புறச் சேரிச்சூழலின் வறுமையை முடிந்தவரை உணர்ச்சிகரமாக்கி முன்வைக்கிறார். வாசகனின் உணர்ச்சிகளைத் தூண்டுகிறார். சுதந்திரம் பெற்று இருபத்தைந்தாண்டுகளாகியும் வாழ்க்கை இப்படி உள்ளதே என்ற கொந்தளிப்பை வாசகனிடம் உருவாக்க எண்ணுகிறார். ஆகவே மொழி நேரடியாகவே பொங்குகிறது, வாதாடுகிறது.
பொதுவாக கற்பனாவாதமே வணிக எழுத்தின் அழகியல். அது வாசகனிடம் சென்று சேர்வது எளிது. ஓரளவு யதார்த்தவாதமும் வாசகனைக் கவர்கிறது. செவ்வியல் தேர்ந்த வாசகனுக்கு மட்டுமே உரியது. ‘நம்பகமாக’ சூழலையும் மனிதர்களையும் காட்டுவதல்ல இலக்கியத்தின் உச்ச இலக்கு என்றும், மானுட உள்ளத்தின் ஆழத்தையும், வரலாற்றுப்பெருக்கின் ஒட்டுமொத்தத்தையும் , பிரபஞ்சமெய்மைகளையும் கூற முயல்வதே என்றும் உணர்ந்தவன் அவன்.
இயல்புவாதமும் [naturalism] ஓரளவு தேர்ந்த இலக்கியவாசகனுக்குரியது. அது உள்ளது உள்ளபடி காட்டுகிறேன் என பாவிப்பது. மிகையற்றது . ஆகவே கவித்துவம் அற்றது. கூடவே ஆசிரியனின் நோக்கம் என எதுவும் வெளிப்படாதது. ஆகவே தத்துவமோ மெய்யியலோ இல்லாதது.ஆய்வகத்தில் மாதிரிக்கு அனுப்பப் படும் ஒருதுளி குருதியோ விந்துவோ கோழையோ போன்றது. அதன் அந்த பற்றற்ற தன்மையே அதன் அழகு. அதன்மூலம் அது கண்டடையும் உண்மையே அதன் இலக்கு. [தத்துவதளத்தில் உள்ள naturalism வேறு. அதை இயற்கைவாதம் என மொழியாக்கம் செய்யலாம்]
ஓர் இயல்புவாதப் படைப்பில் செவ்வியல்படைப்பிலுள்ள எந்த விரிவும், தீவிரமும் நிகழமுடியாது. மொழி தட்டையானது. கதைமாந்தர் மிகச்சாதாரணமானவர்கள். கற்பனாவாதப் படைப்பின் உணர்ச்சிகரம் அதில் இருக்காது. யதார்த்தவாதப் படைப்பு போல நாமும் சென்று உள்ளே வாழும் அனுபவத்தையும் அது அளிக்காது. இவ்வம்சங்கள் அதில்கூடினால் அது அழகியல்பிழை. பிரியாணி நல்லது, பால்பாயசமும் சுவையானது. பால்பாயசத்தில் ஒருதுண்டு பிரியாணி விழுந்தால் சாப்பிடமுடியாது.
இவ்வாறு அழகியல்வடிவங்களை கொஞ்சம் புரிந்துகொள்ளும்போது நாம் படைப்புக்கு அணுக்கமான வாசகர்களாக ஆகிறோம். முடிந்தவரை படைப்பைநோக்கிச் செல்லவிழைபவன், அதற்காக அனைத்து வகையிலும் முயல்பவனே நல்ல வாசகன். வாசிப்பின் உச்சநிலையே விமர்சனம்.
ஜெ
***