«

»


Print this Post

ராஜ் கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம்


Rajgauthaman1-225x300

தன்வரலாறு எப்படி இலக்கியமாகிறது, ஆசிரியன் அந்தத் தானிலிருந்து கொள்ளும் தொலைவால்தான். இரண்டு வழிகளில் அந்தத் தொலைவு நிகழ்கிறது இலக்கியத்தில். ஒன்று, ,மாபெரும் தத்துவ, வரலாற்றுத் தரிசனத்தால் அதுவரையிலான தன்னை குறுக்கிச் சிறிதாக்கி ஆசிரியன் எழுந்து பேருருக்கொள்கையில். போரிஸ் பாஸ்டர்நாக்கின் டாக்டர் ஷிவாகோ அதற்கான உதாரணம் அதைவிட எளிய ,இனிய வழி ஒன்றுண்டு. தன்வரலாற்றின் கதைத்தலைவனை அதை எழுதும் ஆசிரியன் தோழன் எனக்கொண்டு தோளில் கையிட்டு வேடிக்கையும் சிரிப்புமாக உரையாடிச்செல்வது. இரண்டாவது வகைக்குச் சிறந்த உதாரணம் ராஜ் கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம்.

 

இது சிலுவைராஜின் இளமைப்பருவம்.  கே.புஷ்பராஜ் என்னும் பெயரில் சிறுவனாக இருந்த ராஜ் கௌதமனின் பிறிதொரு வடிவம். ராஜ் கௌதமன் இன்று எழுதுவது அல்ல இந்தக் கதாபாத்திரம். இளமையில் புஷ்பராஜ் எவருக்கும் தெரியாமல் இந்தச் சிலுவைராஜை தன்னுள் வளர்த்து வந்திருக்கவேண்டும். நிகழ்ந்தவையும் புனைந்தவையும் ஊடுகலந்த ஒரு யதார்த்தம். கூரிய அங்கதமே நாவல் முழுக்க சிலுவைராஜை நமக்கு அணுக்கமாக ஆக்குகிறது. ராஜ் கௌதமன் சிலுவைராஜிலிருந்து எங்கு விலகுகிறார்,  எங்கு  இணைகிறார் என்று பார்ப்பது இந்நாவலை நுண்ணிய உள்ளடுக்குகள் கொண்ட புனைவாக ஆக்குகிறது

 

சிலுவையின் வாழ்க்கையில் ‘அரிய நிகழ்வுகள்’ என ஒன்றும் இல்லை. அவருடைய அப்பா வழக்கமான அப்பாதான், எந்த அளவுக்கு மகனை அடிக்கிறோமோ அந்த அளவுக்கு அவன் உருப்படுவான் என நம்புபவர். அது மேலோட்டமான பாவனை. அதற்கு அடியில் அவர் ஆண். குடும்பம் என்னும் அக்கட்டுமானத்திற்குள் இன்னொரு ஆணை அனுமதிக்க முடியாத கடுவன் பூனை. ஆகவே வன்முறை.

 

அம்மா கச்சிதமான இந்தியத் தாய். அனேகமாக புனைவுகளில் வராதவள். அப்பா மகனுக்கிடையே உள்ள நுண்மையான அந்த உயிரியல்பூசலை புரிந்துகொண்டவள். ஆனால் அதை அவள் ‘அறிந்திருக்கவில்லை’ . ஆகவே மிக இயல்பாக எந்த பெண்ணும் ஆடும் அந்த உயிரியல்நாடகத்தை நடிக்கிறாள். பையனை தந்தையிடம் போட்டுக்கொடுத்து அவரிடம் நற்பெயர் ஈட்டுகிறாள். அவர் ராணுவத்திலிருந்து திரும்பிவந்து, உச்சகட்ட காமம் கொண்டாடும் அந்தப்பொழுதில் அவள் அதைச் செய்வது குறிப்பிடத்தக்கது. அவர்களின் காமத்துக்கு அது தேவை என அவளுக்குத்தெரியும்.

siluvairaj-sariththiram-10004573-550x600

அப்பாவைச் சொல்லி மிச்ச நாளெல்லாம் மகனை அச்சுறுத்துகிறாள். அஞ்சாமல் தந்தையை மகன் எதிர்க்கும்நாளில் கூசாமல் மகனுடன் சேர்ந்து தந்தையை தூக்கி அப்பால் போடுவாள்.  அந்த ஆடல் எத்தனை பழையது, எவ்வளவு இயல்பானது என காட்ட  எதுவுமறியாத சிலுவை வழியாக அது வெளிப்படுவது அருமையாக உதவுகிறது

 

சிலுவை அப்பாவுக்கு எதிர்வினையாக தன்னை உருவாக்கிக் கொள்கிறான். அம்மாவைச் சீண்டுவதனூடாக மறைமுகமாக அப்பாவுக்கு சவால் விடுகிறான். அம்மாவை ஒரு பொருட்டாக நினைக்காமலிருப்பதே அவள் தன்னிடம் பணியவைக்கும் என அவன் அறிந்திருக்கிறான். கட்டற்ற துடுக்குத்தனம் வழியாக அவன் தன்னை கண்டடைகிறான். அல்லது அவன் தன்னைக் கண்டடையும் வழியே துடுக்குத்தனமாக பிறரால் கொள்ளப்படுகிறது

 

சிலுவையின் புறவுலகு சினிமாவாலும் விளையாட்டுக்களாலும் ஆனது. சினிமா வழியாக காமத்தையும் விளையாட்டுகளில் உள்ளடங்கியிருக்கும் சமூகவியல் அரசியலையும் அவன் கண்டுகொள்கிறான். புறவுலகு நுட்பமாக ஆடவேண்டிய ஒரு விளையாட்டு என கண்டுகொள்ளும் சிலுவை  மதமாற்றம் என்னும் சீட்டை இறக்கி அதில் வெல்லுமிடத்தில் நாவல் முடிவடைகிறது.

 

தலித் தன்வரலாறுகள் ஏராளமாக இந்தியாவில் எழுதப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும் நேர்மையானவை. ஆனால் அவை தலித் தன்வரலாறுகள் என்ற அடையாளத்தைச் சூடிக்கொண்டமையாலேயே சமூகவிமர்சனத்தன்மையையும் சுமக்கவேண்டியிருக்கிறது. ஆகவே அவற்றின் கலைத்தன்மை குறைவுபடுகிறது. சிலுவைராஜ் சரித்திரம் தன்னை நாவல் என்று சொல்லிக்கொள்வதனாலேயே புனைவின் சுதந்திரத்தைக் கொண்டாடுகிறது. ஆகவே கலைத்தன்மைகொண்டுள்ளது. மேலும் வலிமையான சமூக விமர்சனமாக நிலைகொள்கிறது

 

சென்ற நூறாண்டுகளில் தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த தன்வரலாற்று நாவல் என்றும், தமிழிலக்கியத்தின் முதன்மையான இலக்கியப்படைப்புகள் சிலவற்றில் ஒன்று என்றும் சிலுவைராஜ் சரித்திரத்தைச் சொல்லலாம்.

 

சிலுவைராஜ் சரித்திரம் வாங்க

———————————————————————————————————————————————————————————————–

சிலுவைராஜ் சரித்திரத்தை மதிப்பிடுதல்

ராஜ்கௌதமனின் இரு நூல்கள்

ராஜ் கௌதமன் -கடிதங்கள்

விளக்கு விருதுகள் ராஜ் கௌதமன், சமயவேல்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

Permanent link to this article: https://www.jeyamohan.in/110963/

2 pings

  1. ராஜ் கௌதமன் படைப்புக்கள்

    […] ராஜ் கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம் […]

  2. ராஜ் கௌதமன் ,திருப்பூர் சந்திப்பு,சிலுவைராஜ் சரித்திரம்…

    […] ராஜ் கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம் […]

Comments have been disabled.