ராஜ் கௌதமனின் காலச்சுமை – சுரேஷ் பிரதீப்

ராஜ்-கௌதமன்

நவீன இலக்கியத்தின் முக்கியமான ஒரு பொதுக்கூறாக குறிப்பிடப்படுவது தனிமனிதனுக்கு அதில் கொடுக்கப்படும் முக்கியத்துவம். டால்ஸ்டாயின் எழுத்துக்களிலேயே அப்பண்பினை காண முடியும். அவருடைய புத்துயிர்ப்பு நாவலில் அரசமைப்பின் உச்சப் பதவிகளில் இருப்பவர்களின் மீது நெஹ்லூதவ் கொள்ளும் எரிச்சலை இப்பண்பிற்கு உதாரணமெனச் சுட்டலாம். அமைப்புகளால் கைவிடப்பட்ட அல்லது கண்டுகொள்ளப்படாதவர்களால் ஆனது அசோகமித்திரனின் படைப்புலகம். தற்கொலை செய்து கொள்ளுதல் எனும் உளவியல் சிக்கலில் சிக்கித் தவிப்பவள் அடுத்த வீடு கிடைக்குமா என நடைமுறைச் சிக்கலுக்குத் தள்ளப்படுவது (தண்ணீர்), தேசப்பிரிவினை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது பக்கத்து வீட்டு இஸ்லாமியர் ஒரு இந்து வீட்டிற்குள் நுழைந்து தண்ணீர் டேப்பை கடுமையாக பேசிவிட்டு சாத்திச் செல்வது (18வது அட்சக்கோடு)என ஒருபுறம் அபத்தமாகவும் மறுபுறம் அமைப்பின் மீதான தனிமனித எள்ளலாகவும் வெளிப்படுவது அமைப்புகளுக்கும் தனிமனிதனுக்குமான தொடர்பே.

தமிழின் இயல்புவாத எழுத்தின் மிகச் சரியான முன்னோடியாக கொள்ளப்படும் பூமணியின் எழுத்துகளில் சலிப்பூட்டும் அத்தியாயங்களை இப்பின்னணியில் வைத்து நன்றாகவே புரிந்து கொள்ள முடியும். அழகிரிப் பகடையின் வாழ்வை சித்தரித்துச் செல்லும் பிறகு நாவலின் வழியாக பூமணி முன் வைக்கும் அடங்கலான அதேநேரம் கூரிய சமூக விமர்சனம் தனிமனிதனின் நியாய உணர்வுகளை நுண்மையாக அசைத்துப் பார்ப்பது. நவீன இலக்கியம் அந்தரங்க வாசிப்புக்குரியது எனும் போது அதனிடமிருந்து எதிர்பார்க்கப்படும் விளைவுகளும் அந்தரங்கமானதாகவே இருக்க இயலும். நவீன இலக்கியம் குறிப்பாக இயல்புவாத படைப்புகள் சலிப்பூட்டுவதற்கு முக்கிய காரணம் அவை சுவையான நீதிக்கதைகளைச் சொல்லவோ போதிக்கவோ உத்தேசிக்கப்பட்ட வடிவம் கிடையாது என்பதுதான்.

ராஜ் கௌதமனின் காலச்சுமையை இந்தப் பின்புலத்தின் வழியாகவே நான் புரிந்து கொள்கிறேன். அங்கதம் மிகுந்த தன் வரலாற்றுத் தன்மை கொண்ட படைப்பு. இப்படைப்பில் இழையோடும் அங்கதம் இயல்பாகவே விரைவான வாசிப்பனுபவத்தைத் தருகிறது. பெரும்பாலும் பேச்சு நடையிலேயே உரைநடையை அமைத்துக் கொண்ட நாவல். சாதாரண பேச்சு நடையை ஆர்வத்துடன் வாசிக்கத் தகுந்ததாக மாற்றி விடுகிறார் ராஜ் கௌதமன். விரிவான வாசிப்பும் பேச்சு மொழியை கூர்ந்து கவனிக்கும் திறனும் வெளிப்படும் ராஜ் கௌதமனின் மொழியில் “பெரிதாக” ஒன்றும் நடைபெறாத இந்த நாவலை விரைவாக வாசிக்க வைக்கின்றன. ஆனால் ஆசிரியர் உத்தேசிக்கும் தருணங்கள் மிக்கூர்மையாக இப்பேச்சு மொழியில் வெளிப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

பறையர் சாதியில் பிறந்து ஆர்.சி கிறிஸ்துவனாக வளரும் சிலுவைராஜ் தன்னை ஒரு மனிதனாக வாழ்வில் நிலைநிறுத்திக் கொள்வதும் அவனுடைய தேடலும் துயரும் மகிழ்ச்சியுமே இந்த நாவலின் கதையோட்டத்தை உருவாக்குகின்றன. சிக்கலற்ற நேரடி கதை சொல்லலை எடுத்துக் கொண்டு அதன் வழியாகவே தன் மொழியின் மூலம் மனிதர்களின் மன அடுக்குகளுக்குள் புகுந்து பயணிக்க வைக்கிறார் ஆசிரியர்.

பின் நவீனத்துவத்தின் தனிமனிதன்

சிலுவைராஜ் காரைக்காலில் ஒரு கல்லூரியில் துணைப் பேராசிரியராகச் சேர்வதுடன் நாவல் தொடங்குகிறது. நாவல் முழுக்கவே வாழ்வை விலகி நின்று அணுகும் சிலுவையின் நக்கல் மொழி வெளிப்பட்டபடியே இருக்கிறது. வாசிக்கத் தொடங்கும் போது எளிய தன் வரலாற்று நடை போல தோற்றம் தரும் மொழி பக்கங்கள் நகரும் போது தனக்கான கூர்மையைக் கண்டடைந்து விடுகிறது.

வரலாற்றால் கைவிடப்பட்டனாக உணரும் ஜோசப் ஜேம்ஸ்(ஜே ஜே சில குறிப்புகள்), சந்திரசேகரன்(18 வது அட்சக்கோடு) போன்றவர்களின் சலிப்பும் நம்பிக்கையின்மையும் சிலுவையிடம் இல்லை. எளிய மனிதர்கள் எப்போதும் இப்படி கைவிடப்பட்டவர்களாக எளிய சூத்திரங்களைக் கொண்டு வாழ்வை புரிந்து கொள்கிறவர்களாக இருக்கிறார்கள் என்பதை நகைப்புடன் நோக்கும் ஒரு பின்நவீனத்துவ தனியனின் வருகையை சிலுவை தெளிவாகவே அறிவிக்கிறான்.

இந்நூலில் இழையோடும் சாதி குறித்த சாடல்களும் இத்தகையை அபத்தப் பின்னணியிலேயே நிகழ்கிறது. கழிவறையை அசுத்தப்படுத்துவதை சுட்டிக்காட்டும் போதும் தன்னெழுச்சியுடன் அவன் உளறும் போதும் அவன் எல்லைகள் உணர்த்தப்பட்டு அவமானப்படுத்தப்படுகிறான். நாவலின் நடை மாறும் போதெல்லாம் உணர்வு நிலைகளும் மாறிச் செல்கின்றன. கல்லூரிக்கு புதிதாக பொறுப்பேற்கும் பிராமண முதல்வரை அறிமுகம் செய்யும் பகுதிகள் அதிகாரத்துக்கே உரிய இறுக்கத்தையும் இலக்கியம் சார்ந்த பகுதிகள் சரளமாக (இலக்கியம் வாசிப்பவர்களுக்கு மட்டும்?) வாசித்துச் செல்லக்கூடியதாகவும் மகள்களை பறிகொடுத்து சிலுவை தவிக்குமிடங்களில் அதீத நெகிழ்வுடையதாகவும் மொழி மாறுகிறது.

காலூன்றுதல்

தமிழகத்தில் தலித் சொல்லாடல்கள் உருவாக ஆரம்பித்த சென்ற நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் அதுவொரு உத்தேசமான பொதுச் சமூகத்தால் தலித்துகள் நோக்கி வீசப்பட்டதாகவே இருந்தது. பொதுச் சமூகம் உருவாக்கிய விழுமியங்களால் கைவிடப்பட்டவர்கள் என்பதால் “எதிர் விழுமியங்கள்” கொண்டவர்களாக அவர்கள் இருக்க வேண்டும் என்பது போன்ற அறைகூவல்கள் எழுந்திருக்கின்றன. ஆகவே கொச்சையாக பேசுவது அசுத்தமாக இருப்பது போன்றவை புரட்சிகர அடையாளங்கள் போல முன்வைக்கப்பட்டன. இந்தக் கதையாடல்களில் இருந்து விலகி உருவான பூமணயின் “பிறகு” நாவலே இன்றுவரை வாசிக்கவும் விவாதிக்கவும் படுகிறது. அந்த நாவலின் மையக்கதாப்பாத்திரமான அழகிரி பகடை ஒரு பிரச்சார பாத்திரமாக முன்வைக்கப்படவில்லை. தன் எல்லைகளை அறிந்தவனாக தன் கௌரவத்திற்கு இழுக்கு வருகையில் சினம் கொள்கிறவனாக குடும்பத்தின் மீது அக்கறை உடைய ஒரு தகப்பனாக கணவனாக ஒரு உத்தேச “நவீன” மனிதனின் அத்தனை குணமும் கொண்டிருக்கிறான்.

ராஜ் கௌதமனின் சிலுவைராஜை அழகிரியின் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சியாகப் பார்க்கலாம். கிறிஸ்துனான சிலுவை இட ஒதுக்கீட்டு சலுகை பெறுவதற்காக (மீண்டும்?) இந்துவாகிறான். அவனைப் போலவே அரசு வேலை செய்யும் அவன் சாதிப் பெண்ணொருத்தியை மணக்கிறான். அவன் பணிபுரியும் இடமான காரைக்காலில் தான் நாவலின் களத்தின் பெரும்பகுதி அமைந்துள்ளது. மணம் புரிந்து கொள்ளும் சிலுவை ஒரு சராசரி மத்திய தர இந்தியன் அனுபவிக்கும் அத்தனை இடையூறுகளையும் சந்திக்கிறான். அவனது முன்னேற்றம் சொந்தங்களிடம் குடும்பத்திடம் நண்பர்களிடம் ஏற்படுத்தும் பொறாமையும் எரிச்சலும் மிக நேர்த்தியான சொற்களில் வெளிப்படுகின்றன. வீடு மாற்றி அலைகிறான் சொந்த வீடு கட்டுகிறான் சென்ற நூற்றாண்டின் கௌரவ அடையாளங்கள் ஒவ்வொன்றும் அவனை நோக்கி வருகின்றன.

இப்படி இயல்பான தன்வரலாற்றுத் தன்மை கொண்ட படைப்பை ஒரு பின் நவீனத்துவ நாவலாக்குவது ஆசிரியரின் சமூகப் பிரக்ஞையே. அவன் தானொரு பறையன் என்பதை இயல்பாக வெளிப்படுத்த முடிவதில்லை. தன்னுடைய பெண் தன்னிடம் வந்து சாதியைக் கேட்கும் போது தடுமாறுகிறான். தன் தங்கையை சாதி காரணமாக அவள் கணவனே கொலை செய்யும் போது மௌனமாக திகைத்துப் போய் திரும்புகிறான். நவீன லட்சியவாதங்களுடனும் பழமையுடனும் பொருந்த முடியாமல் சிலுவை தத்தளித்தபடியே இருக்கிறான். அதேநேரம் அவன் வாழ்வு மெல்ல மெல்ல ஒரு நவீன இந்தியனின் வாழ்வாக பரிணாம வளர்ச்சி பெற்றபடியே உள்ளது.

அவன் தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வுக்கதையை சொல்லும் பகுதிகளும் ஆர்வமூட்டுகின்றன. பொதுவாக உயர்சாதி ஆய்வு வாழிகாட்டி தாழ்ந்த சாதி ஆய்வாளனுக்கு இடையே இருக்கும் பாகுபாடுகள் ஏதுமின்றியே பெண்ணான அவனுடைய வழிகாட்டி பழகுகிறார். ஆனால் அவருடைய ஆணவம் காலத்தில் சற்று பின் தங்கிய பார்வையால் சீண்டப்படும் இடம் நுண்மையாக சொல்லப்பட்டுள்ளது. அவ்விடத்தில் ஒரு கணம் அந்த உயர்ந்த தாழ்ந்த அடையாளங்கள் சட்டென தலைகீழாகின்றன. அவரை ஒரு பெண்ணாக “பின் தங்குதலுக்கு” வேறொரு சொல்லாடலை உருவாக்குவதாக அத்தருணம் மாற்றிவிடுகிறது. வழக்கமாக சொல்லப்படும் பொத்தாம் பொதுவான சமூக அநீதிக் கதைகளில் இருந்து விலகி யதார்த்தத்திற்கு அணுக்கமானதாக நிற்கிறது இப்படைப்பு.

இப்படைப்பின் குறை என்பது எவ்வளவு அங்கதத்துடன் வெளிப்பட்டாலும் ஆசிரியரின் குரலோங்குதல் நடைபெறுவதை தவிர்க்க முடியாமல் இருப்பதே. ஜெயமோகனின் காடு நாவல் தான் கதை சொல்லியால் முழுக்கதையும் சொல்லப்படுவது போல அமைக்கப்பட்டு நான் வாசித்த முதல் நாவல். ஆனால் அந்த நாவலுக்குள்ளாக ஒலிக்கும் கதை சொல்லியின் குரல் குட்டப்பன் அய்யர் நீலி கதை சொல்லியின் தாய் என அழுத்தமாக உருவாக்கப்பட்டிருக்கும் “மற்றவர்களால்” சமன்செய்யப்பட்டிருக்கும். ஆனால் காலச்சுமையில் சிலுவைராஜின் பார்வையிலேயே மற்றவர்கள் வந்து செல்வது பிரக்ஞையுடன் உத்தேசிக்கப்பட்டதாகவே இருந்தாலும் அது நாவலுக்கான விரிவினை அளிப்பதைத் தடுக்கிறது. அதை சிலுவைராஜின் “அறிவும் அனுபவமுமே” வாசகனிடமிருந்து மறைக்கிறது. ஆனால் இந்த நாவலின் சொல்லாடல்கள் புழங்கு மொழியாக மாறும் இன்னும் சில ஆண்டுகளில் இது ஒரு குறையாகவே தென்படும்.

சாதி ஒரு தனிமனிதனுடன் கொள்ளும் உறவை செயற்கையான நாடகீயத் தருணங்கள் வழியே அல்லாமல் ஒரு இயல்பான வாழ்க்கைப் போக்கின் அறிவால் புரிந்து கொள்ளக்கூடிய அசூசை தரக்கூடிய ஒரு பழம்பொருளாக மட்டும் கண்டிருப்பது இப்படைப்பு உருவாக்கும் தனிப்பட்ட தரிசனமாக எனக்குப்படுகிறது. அதேநேரம் சாதியை மையப்பொருளாக்காமல் மறைக்கப்பட வேண்டிய விட்டு ஓடியாக வேண்டிய ஒன்றாக பதற்றம் தருவதாக மாற்றிக் காட்டியிருப்பதும் இந்நாவலின் சிறப்பு.

ஒவ்வொரு மனிதனும் தன்னை ஒரு சமூக மனிதனாக அடையாளம் கண்டு கொள்ளும் போது அவன் விட்டு ஓடியாக ஒன்று இருக்கவே செய்கிறது. அவன் உடலாக பின்னணியாக பால் தேர்வாக லட்சியமாக ஏதோவொன்று அவனைப் பதற்றப்பட வைத்துக் கொண்டுதான் இருக்கிறது. அப்பதற்றமே அவன் மீதான சுமையாகப் படிகிறது. அவனால் விலக்க முடியாதவற்றால் விட்டு ஓடிவிட முடியாதவற்றால் ஆனதாக அவன் உலகம் மாறும்போது சுமையேறிய ஒரு மனிதனாக அவன் மாறிப்போகிறான். சிலுவை தன் முயற்சியால் அறிவால் குடியால் தனிமையால் தனித்தன்மையால் வாழ்வு முழுக்க அவன் தவிர்க்க நினைப்பதை தவிர்த்தபடியே இருக்கிறான். இறுதியில் பறவைகளை ரசிப்பதில் அவன் மனைவிக்கு குழந்தையாவதில் தன் நிறைவினைக் கண்டடைகிறான்.

முந்தைய கட்டுரைகொற்றவை தொன்மமும் கவிதையும்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 45