தமிழிசையும் ராமும்

ஆபிரகாம் பண்டிதர்

து.ஆ.தனபாண்டியன்

தமிழிலே பாடு இல்லையேல் தமிழ்நாட்டை விட்டு ஓடு என்ற குரல் டிசம்பர் ஜனவர்யில் எழுந்து உடனே அடங்கிப்போவதாக சில வருடங்களாக இருந்து வருகிறது. தமிழிசை இயக்கத்தினரின் தரப்பை இடதுசாரிகள் சிலர் கையிலெடுத்ததன் விளைவு. அவர்களுக்கு வரலாறோ, பண்பாடோ எதுவுமே அரிச்சுவடி அறிமுகம் இல்லை. கோஷம் எங்கே கிடைத்தாலும் வாங்கி எழுப்புவது அவ்வளவுதான்.

தமிழிசை இயக்கத்தின் சாரத்தை தமிழகத்தில் எல்லாரும் தமிழில் மட்டுமே பாடவேண்டும் என்று சுருக்கிக்கொண்டிருக்கிறார்கள் இவர்கள். இக்குரலும் இதனுடன் எழும் வாதங்களும் எப்போதும் கர்நாடக இசைரசிகர்களுக்கும் பாடகர்களுக்கும் சஞ்சலம் அளிக்கின்றன.

அப்படிச் சொன்னால் நானூறுவருடங்களாக கர்நாடக இசை என்ற ஒரு வடிவத்தை உருவாக்கி வளர்த்தெடுத்த முன்னோடிகள் அனைவரையும் கைவிட வேண்டியிருக்கும், அது சாத்தியமல்ல என்பது கர்நாடக இசைதரப்பின் பதில். வரலாற்றின் போக்கினால் 17 ஆம் நூற்றாண்டுமுதல் தென்னிந்தியா முழுக்க தெலுங்கர் ஆட்சியில் இருந்தமையால் கர்நாடக இசை தெலுங்கில் அதிகமாக இருக்கிறது. ஒரு மரபுக்கலையில் மரபை விலக்க முடியாது.

தமிழிசையின் தரப்பு இன்றைய கர்நாடக இசை என்பதே தொன்மையான தமிழிசைதான் என்பதே. அதற்காக சிலப்பதிகாரம் முதல் ஆதாரங்களை காட்டுகிறார்கள். இவர்களில் இரு சாரார் உண்டு. ஒரு சாரார் தமிழிசை மரபே காலப்போக்கில் பலவாறு வளர்ச்சி அடைந்து கர்நாடக சங்கீதமாக ஆகியது என்கிறார்கள். பண் என்பதே ராகம் என்ற வடிவமாக ஆகியது என்கிறார்கள்.

இந்தத் தொடர்ச்சியை நிறுவ வேண்டும் என்பதே அவர்களின் இலக்கு. கர்நாடக இசையாக இன்றுள்ள தமிழிசையானது தொன்மையான தமிழிசையின் பிற கூறுகளையும் உள்ளிழுத்துக்கொண்டு தமிழிசையாகவே வளரவேண்டும் என்கிறார்கள்.

இரண்டாம் சாரார் இதில் அரசியலைக் கலக்கிறார்கள். தமிழிசையை கர்நாடக சங்கீதமாக ஆக்கி பிராமணர் அழித்துவிட்டார்கள் என்கிறார்கள். ஒருபடி மேலே சென்று இந்தியா முழுக்க உள்ள ஒட்டுமொத்த இசையும் தமிழனிடமிருந்து ’திருட’ப்பட்டதே என்கிறார்கள். உலக இசையே தமிழிசைதான் என்றுகூட எழுதப்பட்ட நூல்கள் உள்ளன.

இந்த இரண்டாம்தரப்பினரின் காழ்ப்புள்ள வரலாற்று நோக்கு தான் அதிகமும் வெளியே தெரிகிறது. அதையே சாதிய அரசியல் பேசுபவர்கள் அதிகம் முன்வைக்கிறார்கள். அதைத் தமிழகத்தின் ஒரு சிறு அரசியல்குழு தவிர எந்த மாநிலத்திலும் எந்த இசைவாணரும் பொருட்படுத்துவதே இல்லை.

இலக்கியவாசகரும் இசைவாணாருமாகிய ராமச்சந்திர ஷர்மா இதைப்பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். ‘தமிழில் பாடு இல்லையேல் தமிழ்நாட்டைவிட்டு ஓடு’

தமிழிசையின் தரப்பாக ஷர்மா வாசிக்க நேர்ந்தது இந்த இரண்டாவது தரப்பை. இதை அவர் வெறும் வெறுப்பு- மிகைப்பிரச்சாரம் என நினைக்கிறார். என் நோக்கில் இது உண்மையே.  நா.மம்முது ஆரம்பத்தில் முதல் தரப்பின் குரலாக இருந்தார். ஆனால் பின்னர் அவரை மேடையேற்றிய அரசியல்குழுக்களின் விருப்பத்துக்கு ஏற்ப இரண்டாம் தரப்பின் குரலாக ஆகியிருக்கிறார்.

தமிழிசை வாதிகள் வளர்ச்சி என்பது வரலாற்றில் இயல்பாக நிகழ்வது என்பதை ஏற்க மறுக்கிறார்கள். கர்நாடக சங்கீதத்தின் மூலவடிவம் தமிழிசையே என்றாலும் பின்னர் முகலாயர் காலத்திலும் நாயக்கர் காலத்திலும் இங்கே வந்து சேர்ந்த பலவகையான இசைவடிவங்களுடன் கலந்து அது இன்றைய வடிவை அடைந்தது.

இவ்வாறுதான் எல்லா கலைவடிவங்களும் உருவாகின்றன. அந்த வளர்ச்சிக்கு காரணமாக அமைந்தவர்கள் அன்று அவ்விசையைக் கையாள நேர்ந்தவர்கள். அவர்களின் சாதனைகளைத் திரிபு என்றும் துரோகம் என்றும் சொல்வது வெறும் காழ்ப்பு மட்டுமே.

தமிழில் நாவலை எழுதியவர்கள் பிராமணரும் வேளாளரும். காரணம் அவர்களே ஆங்கிலக் கல்விக்குள் ஆரம்பத்தில் புகுந்து ஐரோப்பிய இலக்கியங்கலுடன் அறிமுகம் கொண்டவர்கள். சிலப்பதிகாரம் என்ற காவிய வடிவத்தை ஒட்டியே நாவல்வடிவம் இருக்கிறது. தமிழனின் காவிய மரபை ராஜம் அய்யர் கெடுத்து நாவலாக ஆக்கிவிட்டார் என்று சொல்ல முடியுமா? தமிழனின் காப்பியம் திருடப்பட்டுவிட்டது எனலாமா?

ஷர்மா சொல்லும் வாதம் இதுதான். தமிழிசையின் பண் என்ற வடிவம் பழையானதாக இருக்கலாம். ஆனால் கர்நாடக சங்கீதத்தின் அடிப்படையாக உள்ள கீர்த்தனை என்ற வடிவம் தொல்தமிழ் மரபில் இருப்பதாக தெரியவில்லை. அது இந்தியாவின் பக்தி மரபில் இருந்து வந்தது. அதற்கு இந்திய பக்திப்பயணிகளின் பாடல்களே முன்னுதாரணம்.

கர்நாடக இசை என்பது நானூறு வருடம் முன்பு அதற்கு முன்னால் இருந்த பல வடிவங்களில் இருந்து தனித்து வந்து உருவானது. அந்த புது வடிவை உருவாக்கியவர்களே அதன் படைப்பாளிகள் – அதாவது நாவலின் பிதா வேதநாயகம்பிள்ளை என்கிறோம். இளங்கோ அடிகள் என்பதில்லை – இதுவே அவரது தரப்பு.

மறுபக்கம், கர்நாடக சங்கீதம் அந்தரத்தில் இருந்து வந்திருக்காது. அதற்கு தொடர்ச்சி தேவை. அந்த தொடர்ச்சி எது என்றால் தமிழ்மரபைத் தொடாமல் சாமவேதம் வரைச் செல்லக்கூடிய ஒன்றாக மட்டும் உருவகித்துக்கொள்கிறார்கள் கர்நாடக சங்கீதத்தின் தரப்பினரில் ஒரு சாரார். இந்த வரலாற்று மறுப்பைத் தமிழிசை தரப்பினர் சுட்டிக்காட்டுகிறார்கள்.

அதாவது நாவலின் ஊற்றுமுகத்தை முழுக்க முழுக்க ஐரோப்பாவில் தேடி, சிலப்பதிகாரத்தின் இடத்தை முழுமையாக நிராகரிப்பதற்குச் சமம் இது. இதுவும் மிகையானதே. ஆக, இரு தரப்பிலும் இருப்பது ஒருவகை வரலாற்று மறுப்பு அடிப்படைவாதம். விவாதமே நிகழ முடியாத பரஸ்பர நிராகரிப்பு.

ஆனால்இன்றைய இளைய கர்நாடக இசை நிபுணர்கள் தமிழிசையின் தரப்பை பெரும்பாலும் ஏற்றுக்கொள்கிறார்கள். நிகழ்ச்சிகளில் சிறந்த தமிழ்ப் பாடல்களை பாடுகிறார்கள். ஏன், சர்மாவே தமிழிசைப் பாடல்களைச் சிறப்பாக பாடுகிறார். தமிழிசை விழாக்களிலேயே இவர்கள்தான் பாடுகிறார்கள். ஆனால் தமிழிசை தரப்பு இசை பாடுவதை- கேட்பதை விட்டுவிட்டது. தமிழிசையை ஒரு காழ்ப்புக்கருவியாக மட்டுமே கையாள்கிறது

சர்மா இரு தரப்புக்கும் நடுவே நின்று இன்றைய இசைவாணர் ஒருவர் கேட்டுக்கொள்ளும் கேள்விகளை கொஞ்சம் திகைப்புடன் கொஞ்சம் கோபத்துடன் கொஞ்சம் குழப்பத்துடன் கேட்கிறார். எவராவது எனக்கு காழ்ப்பில்லாமல், வரலாற்று பூர்வமாக விளக்குங்கள் என்கிறார். தமிழிசையாளர் விவாதிக்கவேண்டியது அவருடன்தான்.

ஜெ


தமிழிசை: காழ்ப்பே வரலாறாக…


தமிழிசை ,மீண்டும் கடிதங்கள்

இசை, மீண்டும் சில கடிதங்கள்

தமிழிசையா?

இசை, கடிதங்கள்

இசை, நீடிக்கும் விவாதம்

தமிழிசையும் தஞ்சை ஆபிரகாம் பண்டிதரும் – 1 பேட்டி : இசை ஆய்வாளர் நா. மம்மது சந்திப்பு : ஜெயமோகன்

http://www.jeyamohan.in/?p=2457 ஆபிரகாம் பண்டிதர்

முந்தைய கட்டுரைமலேசியா
அடுத்த கட்டுரைஜெயமோகன் நூல்கள்