‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 40

tigகுடிக்கக் குடிக்க பெருகும் விடாய் கொண்டிருந்தான் குண்டாசி. இரு கைகளாலும் கோப்பையைப்பற்றி உடலை கவிழ்த்து ஒரே மூச்சில் உள்ளிழுத்து விழுங்கினான். “மேலும்! மேலும்!” என்று கூவியபடி அமர்ந்திருந்த பீடத்தை ஓங்கி தட்டினான். தீர்க்கன் “போதும், இளவரசே. தங்கள் அளவுக்குக்கூட இதுவரை அருந்தியது மிகுதி. இதற்குமேல் தாளமாட்டீர்கள். ஏற்கெனவே இருமுறை தங்களுக்கு வலிப்பு வந்துள்ளது. மூன்று கோப்பைக்கு மேல் அருந்துவது தங்கள் உயிருக்கே இடர் என்று மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள்” என்றான். “உயிர் இன்னும் நெடுநாட்கள் தங்க வேண்டியதில்லை. கொண்டுவரச் சொல்” என்று குண்டாசி சொன்னான்.

“படுகளத்தில் பிரிய வேண்டிய உயிர் மது அருந்தி பிரிவது எவ்வகையிலும் மாண்பல்ல” என்றான் தீர்க்கன். “மூடா, மது அருந்தி பிரிவதென்றால் இது எப்போதோ அகன்றிருக்கும். இந்த அம்பு செல்வது அக்களத்திற்குத்தான்” என்றபின் உரக்க நகைத்த குண்டாசி “மீண்டும்! மீண்டும் ஒரு கோப்பை!” என்றான். தீர்க்கன் அசையாமல் நிற்க “அறிவிலி, நீ என் பணியாள். இது உன் தலைவனின் ஆணை! இப்போதே இங்கு பீதர் மது வந்தாகவேண்டும்” என்றான். தீர்க்கன் பெருமூச்சுடன் திரும்பிச் சென்று மது கொண்டுவந்தான். அதை வாங்கி அருந்தியபோது அவன் நெஞ்சுக்குழி அடைத்துக்கொண்டது. உள்ளிருந்து எதுவோ துடிதுடித்து வெளியேறத் தவிப்பது போலிருந்தது. உயிர் பிரியும் கணமா? மெய்யாகவே இந்தக் கெடுமணம் கொண்ட இழிந்த பொருள்தான் என்னை இங்கிருந்து அகற்றப்போகிறதா? குண்டாசி கையூன்றி எழமுயன்றான். தரையை ஒரு விரிப்புபோல மறுபக்கம் எவரோ இழுப்பதாக உணர சுவர்கள் சுழன்று திரும்ப எலும்புகள் அறைபட தரையில் விழுந்தான். கையூன்றி எழுவதற்குள் வயிற்றிலிருந்து மது பீறிட்டு வெளியே கொட்டியது. இருமுறை ஓங்கரித்து துப்பியதும் நெஞ்சிலிருந்த அடைப்பு விலகியது.

கையால் வாயை துடைத்தபடி மஞ்சத்தின் விளிம்பில் தலைசாய்த்து கால் நீட்டி அமர்ந்தான். அருகே முழந்தாளிட்டு அமர்ந்த தீர்க்கன் அவனை மெல்ல தூக்கி மஞ்சத்தில் அமரவைத்தான். மேலாடையால் அவன் வாயை துடைத்து “படுத்துக்கொள்ளுங்கள், இளவரசே” என்றான். அவன் கால்களைத் தூக்கி மஞ்சத்தில் வைத்துக்கொண்டான். மஞ்சம் அடியிலி நோக்கி விழத்தொடங்கியது. மேலும் மேலும் என இருளுக்குள் அமிழ்ந்து சென்றுகொண்டே இருந்தான். பின்னர் உலுக்கப்பட்டவன்போல் கையூன்றி ஒருக்களித்து தீர்க்கனை பார்த்து “நான் இன்று மிகையாக நடந்து கொண்டேனா?” என்றான். “இல்லை” என்றான் தீர்க்கன்.

உரத்த குரலில் குண்டாசி “உனக்கு எப்படி தெரியும்? நான் உன்னிடம் சொன்னது வேறு. நான் நடந்துகொண்டது பிறிதொரு முறையில்” என்றான். “நீங்கள் கேட்பதிலிருந்தே தெரிகிறது” என்று தீர்க்கன் சொன்னான். “ஆம், நான் மிகையாக நடந்துகொண்டேன். ஏனெனில் இனி ஒரு சொல்லும் எஞ்சலாகாதென்று எண்ணினேன். இத்தருணத்துடன் அனைத்தும் முடிவுக்கு வந்துவிடவேண்டும். இது ஓர் இறப்பு. நெடுநாட்களாக சொல்லப்படாத சொற்கள் எத்தனை நஞ்சு கொள்கின்றன என்று இன்று அறிந்தேன்” என்றான். “ஆனால் அதை சொல்லாமல் இருந்திருக்கக் கூடாது. எஞ்சும் விழைவுடன், எழாச் சொல்லுடன் எவரும் உயிர்துறக்கலாகாது.” தீர்க்கன் “ஆம், எவ்வாறாயினும் அது நன்று. அது முடிந்துவிட்டதல்லவா?” என்றான்.

“அவன்!” என்று குண்டாசி குழறினான். “அவன் முட்களின் நடுவே சிறு ஈ பறந்துசெல்வதுபோல் இவையனைத்திற்கும் நடுவே கடந்து செல்கிறான்.” கண்களை மூடியபடி “சூதர்களுக்கு வளைவதெப்படி என்று தெரிந்திருக்கிறது… இழிமகன்!” என்றான். தலையை அசைத்து “தந்தையுடன் இருந்திருக்கிறான். அதைவிட மூத்தவரிடம் இருந்திருக்கிறான். நூற்றுவர் தம்பியரைவிட ஒருபடி மேலாகவே அவனை நடத்தினார். இளமையில் அவர் நெஞ்சிலும் தோளிலும் பெரும்பாலும் அவன்தான் இருந்தான். இன்று ஒரு துளித் துயர்கூட இல்லாமல் இங்கிருந்து கிளம்புகிறான். அவன் அவ்வாறு செல்வதில் ஒரு அறமின்மை உள்ளது, தீர்க்கரே. அது ஓர் சிறுமை. பேரன்புகளை புறக்கணிக்கும் தகுதி மானுடனுக்கு உண்டா? அன்பை கடந்துசென்றவன் அதைவிட மேலான எதை அடைவான்?”

“அவன் பற்றறுத்துச் செல்கிறேன் என்றான். பற்று இருப்பவர்களால் அதை அறுக்க இயலாது. பற்று அறுப்பவர்கள் முன்னரே பற்றில்லாதவர்கள்.” தனக்குத்தானே என தலையசைத்து பற்களைக் கடித்து கைகளை இறுக்கி குண்டாசி சொன்னான் “அவனை வெறுக்கிறேன். அவனுடைய அந்த நிலைகுலையாமையை வெறுக்கிறேன். அது என்ன? நிலைகுலையாத ஒருவர் இப்புவியிடம் என்ன சொல்கிறார்? இங்குள்ள எதுவும் என்னை தொடாது என்றா? இல்லை, இங்குள்ள எதனுடனும் எனக்கு கடப்பாடில்லை என்று. இங்குள்ள எதையும் நான் விரும்பவில்லை என்று. இங்கிருந்து பெற்றுக்கொண்ட எதையும் திருப்பி அளிக்க விரும்பவில்லை என்கிறான் அவன்.”

குண்டாசி கையூன்றி ஒருக்களித்து ஓங்கி துப்பினான். சிவந்த விழிகளால் தீர்க்கனை நோக்கி “தன்னை தன்முனைப்பு அற்றவன் என்கிறான் அந்த மூடன். அங்கு சென்று தன்னை முழுமைப்படுத்திக்கொள்ள விழைகிறானே, அதுவே தன்முனைப்பு. பெரிதினும் பெரிதென்று ஒன்றை நாடிச் செல்வது எது? தன்னுள் இருக்கும் பெரிதொன்றை அறிந்துகொள்வதல்லவா? அது தன்முனைப்பு அல்லவா? மூடன்!” என்றான். கண்களை மூடி சற்று நேரம் அவன் தலையை அசைத்துக்கொண்டிருந்தான். விழிநீர் சுரந்து இரு கன்னங்களிலும் வழிந்தது. மெல்ல தன் குறட்டையொலியை தானே கேட்டான். தாடை தொய்ந்து வாய் திறந்து மூச்சு வெளியேறியது.

மீண்டும் விழித்துக்கொண்டு “எங்கிருக்கிறேன் நான்?” என்றான். “உங்கள் அறையில்” என்று தீர்க்கன் சொன்னான். அவன் ஆடையை சீரமைத்து “ஓய்வெடுங்கள், இளவரசே” என்றான். “இல்லை, நான் அரசரின் அவைக்கு செல்லவேண்டும். அந்த மூடன் அங்கு சென்று அவரிடம் விடைபெறப் போகிறான். அப்போது நான் அங்கு இருக்கவேண்டும். அவனிடம் சொல்வதற்கு சில சொற்கள் எனக்குள்ளன” என்றான் குண்டாசி. தீர்க்கன் “இளவரசே, இங்குள்ள அனைவரிடமும் சொல்வதற்கு சில சொற்கள் தங்களிடம் உள்ளன. அவற்றை பலமுறை தாங்கள் சொல்லியும்விட்டீர்கள். இன்றிரவு வரை நீங்கள் துயிலலாம். நாளை இங்கிருந்து கிளம்பவிருக்கிறீர்கள்” என்றான்.

குண்டாசி “ஆம், நாளை கிளம்பவிருக்கிறேன். இதுவே இறுதித் தருணம். அவன் சென்று பேசுவதற்கு முன் நான் அவனை சந்திக்கவேண்டும். அவனிடம் ஒரு வினாவை மட்டுமே கேட்க விரும்புகிறேன்” என்றான். “வேண்டியதில்லை, தாங்கள் ஓய்வெடுக்கலாம். தாங்கள் கேட்கவிருப்பதென்ன என்று அவர்கள் அனைவரும் முன்னரே அறிந்திருப்பார்கள்” என்று தீர்க்கன் சொன்னான். “விலகு, மூடா! உனக்கெப்படி தெரியும்? நான்…” என்று குண்டாசி தன் நெஞ்சில் கைவைத்தான். பின்னர் “இவை நான் கேட்பவையல்ல. எனக்குள் அனல் ஓடிக்கொண்டிருக்கிறது. என் தலைக்குள் கனல் துண்டுகள் நிறைந்திருக்கின்றன. இது அனலின் கேள்வி. நான் சென்று அவனிடம் கேட்கவிருக்கிறேன்” என்றான்.

“நான் கேட்கவிருப்பது ஒன்றே. அவன் தன்னை மேலும் மேலும் சிறிதாக்கிக்கொள்வது எதனால்? ஈயென்றும் எறும்பென்றும் உருமாறினால் மதவேழங்களின் காலில் மிதிபடாமல் தப்பிச் செல்லலாம் என்பதுதானே அவன் எண்ணம்? நேரடியாகவே அவனிடம் கேட்கிறேன். எந்தையின் பெருந்தன்மையையும் என் மூத்தவர்களின் அளவிட முடியாத அன்பையும் அல்லவா அவன் இப்போது பயன்படுத்திக்கொள்கிறான்? அவர்கள் அவனிடம் தன்னலத்தையும் சிறுமையையும் வஞ்சத்தையும் காட்டினார்கள் என்றால் அதை எதிர்கொள்ளும் திறன் அவனிடம் இருக்கிறதா? ஒரு சிறுமையை எதிர்கொள்ள முடியாது என்றால் அவன் கொண்டுள்ள பெரியவற்றுக்கு என்ன பொருள்?”

“இங்கிருந்து அவன் கிளம்புவது அவனுடைய மெய்நாட்டத்தாலோ தன் விலக்காலோ பணிவினாலோ அல்ல. இங்குள்ள தந்தையும் தமையன்களும் அவன் மீது கொள்ளும் கனிவால் மட்டுமே. அதை அவன் முகம் நோக்கி சொல்லவில்லையென்றால் அச்சொல் என்னுள்ளிருந்து அழுகும்” என்று சொன்ன குண்டாசி கையூன்றி எழமுயன்றான். “என் மேலாடையை மாற்றுக! நான் கிளம்பவேண்டும்.” இருமுறை கை மடங்க மஞ்சத்தில் விழுந்த பின் எழுந்து மஞ்சத்தின் மரச்சட்டத்தை பற்றியபடி நின்றான். மெல்ல ஆடியபடி “நான் அவனை சந்தித்தாக வேண்டும். அவன் அதை சொல்லும்போது உடனிருந்தாகவேண்டும்” என்றான்.

தீர்க்கன் “இளவரசே, உங்கள் உடலில் பீதர் மது வீச்சமடிக்கிறது. இத்தோற்றத்துடன் நீங்கள் அரசவைக்குச் செல்வது உகந்ததல்ல” என்றான். “என் உடலில் பீதர் மது வீச்சமடிக்காத பொழுதே இருந்ததில்லை” என்று இதழ்வளையச் சிரித்த குண்டாசி “அதோடு நான் இப்போது அரசவைக்கு செல்லவில்லை. அவை முடிந்து தனியறைக்குள் அரசர் இருக்கையிலேயே அந்த மூடன் அவரை சந்திக்கச் செல்கிறான். அதற்குள் நான் அங்கு சென்றாகவேண்டும். தாலத்தில் நீர் எடும்! முகத்தை அலம்புகிறேன்” என்றான்.

தீர்க்கன் “இறுதியாக இதையே சொல்வேன். இதை நீங்கள் தவிர்க்கலாம்” என்றான். “தீர்க்கரே, நீர் சொன்ன எதையும் நான் ஏற்றுக்கொண்டதில்லை. எடும் நீரை” என்று உரத்த குரலில் குண்டாசி ஆணையிட்டான். தீர்க்கன் தலைவணங்கி திரும்பிச்சென்று கொண்டுவந்த மரத்தாலத்தில் இருந்த நீரை அள்ளி முகத்தை கழுவிக்கொண்டான். பிறிதொரு சால்வையை தோளில் அணிந்து தீர்க்கனின் தோளைப்பற்றி “என்னை அரசரின் தனியறைக்கு அழைத்துச் செல்க! விரைவாக” என்றான்.

tigகுண்டாசி இடைநாழியினூடாக நடக்கையில் அரசவை முடிந்த கொம்போசையை கேட்டான். “அவை முடிந்துவிட்டது. அரசர் தன் தனியறைக்கு திரும்பும் பொழுது. விரைந்து செல்க!” என்றான். தீர்க்கன் “அவர் சற்று ஓய்வெடுப்பார் என்று எண்ணுகின்றேன்” என்றான். “இல்லை, இன்று அவர் ஓய்வெடுக்க வாய்ப்பே இல்லை. இன்று மாலையும் இரவணைந்து பொழுதுஎழும் வரையிலும் இடைவிடாத பணிகளே இருக்கும். இப்போது தன் தனியறையில் அவர் அமர்ந்திருக்கும் சிறு பொழுது மட்டுமே அவரை சந்தித்து உரையாட முடியும். யுயுத்ஸு அதை கணித்துத்தான் சென்றிருக்கிறான். இப்போது அவ்வறை வாயிலில் அவன் நின்றிருப்பான்” என்றான்.

தீர்க்கன் “இறுதியாக ஒருமுறை சொல்கிறேன் இளவரசே, இத்தருணத்தில் தாங்கள் சென்று அந்த விடைபெறலை கசப்புமிக்கதாக ஆக்கவேண்டியதில்லை. அது ஒரு நாடகமென்றே கொள்வோம். சொல்பெறுபவரும் அளிப்பவரும் அறிந்தே அதை நடிக்கிறார்கள். அத்தகைய இனிய நாடகங்களினூடாகவே இங்கு மானுட வாழ்க்கை நடந்து முடிகிறது. உள்ளிருப்பவை அனைத்தையும் கிழித்து வெளியே போட்டு என்ன பயன்? உடலைப் படைத்த இறைவனேகூட அனைத்தையும் தோல்போர்த்தித்தான் பிறருக்கு காட்டும்படி அமைத்திருக்கிறான்” என்றான்.

“ஆம், இங்கு வரும் வழி முழுக்க அதைத்தான் எண்ணிக்கொண்டிருக்கிறேன். அங்கு சென்று எதை சொல்லவிருக்கிறேன்? அத்தருணத்தை குலைப்பதனூடாக எதை அடைவேன்? ஆனால் அத்தருணத்தில் நான் இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. அங்கு நான் ஒன்றும் சொல்லாமல்கூட இருக்கலாம்” என்றான் குண்டாசி. “தாங்கள் ஒன்றும் சொல்லாமல் இருக்கப்போவதில்லை. தங்கள் இயல்பல்ல அது” என்றான் தீர்க்கன். குண்டாசி நகைத்து “மெய்தான். என் நாவுதான் என்னை உயிரசைவு கொண்டவனாக்குகிறது, தலைப்பிரட்டைக்கு வால்போல” என்றான்.

தீர்க்கன் அறைவாயிலில் நின்றிருந்த காவலனை கண்டதும் “அரசர் சிற்றவை புகுந்துவிட்டார்” என்றான். “அவருடன் துச்சாதனரும் துர்மதரும் சுபாகுவும் இருப்பார்கள். பிறர் இருக்க வாய்ப்பில்லை. பிறர் ஒவ்வொருவருக்கும் இன்று தனித்தனியாக பணிகள் அளிக்கப்பட்டிருக்கும்” என்று குண்டாசி சொன்னான். பின்னர் நகைத்து “கௌரவப் படைகளிலேயே எந்தப் பணியும் அளிக்கப்படாதவன் நானாகவே இருப்பேன். இறுதியாக நிகழ்ந்த அரசப்பேரவையில் அமராதவனும் நான் மட்டுமே என்று தோன்றுகிறது” என்றான். “தாங்கள் எப்போதும் தனியர்” என்று தீர்க்கன் சொன்னான்.

அவை வாயிலை அணுகி காவலனிடம் தன்னை அறிவிக்கும்படி குண்டாசி சைகை காட்டினான். அவன் தலைவணங்கி உள்ளே சென்றதும் “யுயுத்ஸு உள்ளே இருக்கிறார்” என்று தீர்க்கன் சொன்னான். “எப்படி தெரியும்? அவன் இன்னும் இங்கு வந்து சேரவில்லை என்று எண்ணுகிறேன்” என்றான் குண்டாசி. “அல்ல, அவர் உள்ளே இருக்கிறார் என்று என் உள்ளுணர்வு சொல்கிறது” என்று தீர்க்கன் சொன்னான். காவலன் வெளியே வந்து உள்ளே செல்லும்படி பணிவுக்குறி காட்டினான். தீர்க்கனின் தோளிலிருந்து தன் கையை விலக்கி நிலைப்படியை பற்றி ஒருகணம் உடலை நிறுத்தி மூச்சை இழுத்துவிட்ட பின் சால்வையை சீரமைத்தபடி குண்டாசி உள்ளே நுழைந்தான்.

சிற்றவையில் துரியோதனன் பெரும்பீடத்தில் அமர்ந்திருக்க துர்மதனும் சுபாகுவும் அவனுக்கெதிரே நின்று பேசிக்கொண்டிருந்தனர். பின்னால் சாளரத்தருகே கைகளைக் கட்டியபடி துச்சாதனன் நின்றிருந்தான். அறை நுழைவுக்கு அருகே சுவர் ஓரமாக யுயுத்ஸு நின்றிருந்தான். குண்டாசி உள்ளே நுழைந்ததும் யுயுத்ஸுவின் விழிகளை சந்தித்தான். அதில் அதிர்ச்சியோ வியப்போ தெரியாதது கண்டு சற்று குழப்பத்துடன் துரியோதனனை பார்த்தான். யுயுத்ஸு இன்னும் தன் எண்ணத்தை முன்வைக்கவில்லை என்று உணர்ந்துகொண்டான். “வணங்குகிறேன், மூத்தவரே” என்றான்.

துரியோதனன் விழிகள் சுருங்க “என்ன செய்கிறாய் இங்கே? மது உன்னுடலை முழுக்க நனைத்திருக்கிறது. சென்று படு!” என்றான். “இல்லை, என்னால் படுக்க முடியாது. ஆனால் உங்கள் அரசப்பேரவையில் வந்திருந்து அங்கு நிகழும் நாடகங்களை பார்க்கவும் உளம் ஒப்பவில்லை” என்றபின் சிரித்து “ஆகவே இங்கு நிகழும் சிறிய நாடகத்தை பார்க்கலாம் என்று வந்தேன். நான் எங்காவது அமரலாமல்லவா?” என்று சுற்றிலும் பார்த்தான் குண்டாசி. துர்மதன் “நாங்கள் படைபுறப்பாடு குறித்த முடிவை எடுக்கவிருக்கிறோம். இங்கு நீ இருக்கவேண்டியதில்லை. கிளம்பு!” என்று சொல்லி குண்டாசியின் தோளை பற்றினான். துரியோதனன் “அவன் வீணாக வந்திருக்கமாட்டான். அச்சிறு பீடத்தில் அவனை அமர்த்துக!” என்றான். “மூத்தவரே, இவன்…” என்றபின் துர்மதன் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு “வா!” என்று பெரிய கைகளால் குண்டாசியின் மெலிந்த தோள்களைப்பற்றி சுள்ளியை மடித்து வைப்பதுபோல் பீடத்தில் அமர்த்தினான்.

மெலிந்து சிறுபுண்களுடன் இருந்த கால்களைத் தூக்கி பீடத்தின்மேல் மடித்து வைத்துக்கொண்ட குண்டாசி ஈறிலிருந்து உந்தி நின்ற பற்களைக் காட்டி உரக்க நகைத்து “நான் தந்தையிடம் பேசியதை மூத்தவர்கள் அறிந்திருக்கிறீர்கள். முகங்கள் காட்டுகின்றன” என்றான். “ஆம், உன் சொற்கள் தாளாமல் தந்தை அகிபீனா உண்டு துயிலில் அழுதுகொண்டிருக்கிறார்” என்றான் துர்மதன். “மூத்தவரே, முன்னரே அவரிடம் அதை பலமுறை உள்ளத்தால் சொல்லிவிட்டேன், அவரும் கேட்டுவிட்டார் என்பதை மெய்யாகவே வாயால் சொன்னபோதுதான் உணர்ந்தேன். இன்னும் அழகாக உரிய சொற்களுடன் சொல்லியிருக்கலாம். நாளை இத்தருணத்தை சூதர்கள் பாடும்போது அவர்களுக்கு உரிய முறையில் அமைக்கப்பட்ட சொற்கள் என்று எதுவும் கிடைக்காது” என்றபின் கைவீசி “நன்று, தருணத்தை மட்டுமே நாம் அமைக்க முடியும். அவற்றின் உட்பொருட்களை சூதர்களும் புலவர்களும் அமைத்துக்கொள்வார்கள். என்ன எண்ணுகிறீர்கள்?” என்றான்.

அவனை ஒருகணம் பார்த்த பின் முற்றிலும் புறக்கணித்து துரியோதனன் சுபாகுவிடம் “படைபுறப்பாட்டு ஆணைகள் நள்ளிரவுக்குள் அனைத்து படைப்பிரிவுகளுக்கும் சென்று சேர்ந்துவிட்டதா என்று மறுமொழிகளினூடாக உறுதி செய்துகொள்ளவேண்டும். உணவும் பிற பொருட்களும் கங்கை வழியாகவே செல்லட்டும். கரைவழியாக வரும் பொருட்கள் இறுதியாக வந்து சேர்ந்தால் போதும்” என்றான். குண்டாசி உரக்க நகைத்து “இந்த எளிய முடிவையா இங்கு அமர்ந்து எடுக்கிறீர்கள்? ஏற்கெனவே பலமுறை இந்த ஆணையை பிறப்பித்திருப்பீர்கள். மீண்டும் இதை இங்கே சொல்கிறீர்கள் என்றால் இத்தருணத்தை இவ்வாறு நடிக்க விரும்புகிறீர்கள் என்றுதான் பொருள்” என்றான்.

துர்மதன் சினத்துடன் குண்டாசியை நோக்கி திரும்ப துரியோதனன் சிறுகையசைவால் அவனை தடுத்தான். பின்னர் சுபாகுவிடம் “அவர்களின் படைநகர்வு குறித்த செய்திகள் மூன்று நாழிகைக்கொருமுறை எனக்கு வந்துகொண்டே இருக்கவேண்டும். நான் எங்கு எந்த உரையாடலில் இருந்தாலும்” என்றான். குண்டாசி “அவர்கள் செல்வது குருக்ஷேத்திரத்திற்கு. நாம் செல்வதும் அங்குதான். அங்கு படையெதிர் நிற்கப்போகிறோம். ஒருவரையொருவர் நேர்விழிகொண்டு அங்கு நோக்கவும் போகிறோம். செல்லும் வழி மூன்று நாழிகைக்கொருமுறை தெரிந்தென்ன பயன்? நமது படைகள் அப்போது பயணத்தில் இருக்கும். படைசூழ்கையை மாற்றவும் இயலாது” என்றபின் குரலைத் தாழ்த்தி “இது ஓர் அரிய பகடையாட்டம் அல்லவா? இதன் ஒவ்வொரு நகர்வையும் நீங்கள் இழக்க விரும்பவில்லை. என் கணிப்பு மெய்தானே?” என்றான்.

எரிச்சலுடன் பற்களைக் கடித்து “நீ இங்கு எதற்கு வந்தாய்?” என்று சுபாகு கேட்டான். “இதோ இவன் உங்களிடம் எதையோ சொல்லவிருக்கிறான். இவன் முன்னரே அதை தந்தையிடம் சொல்லி ஒப்புதல் பெற்றுவிட்டான். உங்களிடம் ஒப்புதல் பெறவிருக்கிறான். நீங்கள் ஒப்புதல் அளிப்பீர்கள். ஏனெனில் தந்தையும் நீங்களும் வேழங்கள். வேழங்கள் இரக்கத்திற்குரியவை, அவை வேழங்களாகவே நடந்துகொள்ளவேண்டிய கட்டாயத்திலிருப்பவை. நான் இங்கு வந்தது அவன் அந்தக் கோரிக்கையை முன் வைத்து நீங்கள் பெருந்தன்மையுடன் அதை ஏற்றுக்கொள்வதற்கு முந்தைய ஒருகணத்தில் உங்கள் கண்ணில் என்ன நிகழ்கிறது என்று பார்ப்பதற்காகவே. இந்தப் பீடம் நன்று. உங்கள் கண்களை என்னால் நன்கு நோக்க முடிகிறது” என்றான் குண்டாசி.

துரியோதனன் “சரி, நோக்கு” என்றபின் திரும்பி யுயுத்ஸுவிடம் “சொல்க இளையோனே, நீ கேட்க விரும்புவதென்ன?” என்றான். “சற்றுமுன் பேரரசரிடம் நான் கேட்டதை இதற்குள்ளாகவே அறிந்திருப்பீர்கள். அதைத்தான்” என்று யுயுத்ஸு சொன்னான். “ஆம், நான் அறிவேன். ஆனால் இவன் சொன்னதுபோல இது ஒரு நாடகத்தருணம். முறையான சொற்களில் நீ அதை கேட்கலாம்” என்றான் துரியோதனன். “மூத்தவரே, என் வாழ்வும் எனது விண்ணேற்றமும் தந்தைக்கும் உங்களுக்கும் கடன்பட்டவை. நீங்கள் அளித்தவற்றுக்கு நிகராக ஒரு துளியேனும் திருப்பி அளித்தவனும் அல்ல. ஆயினும் இந்தப் போரில் நான் இளைய யாதவரின் தரப்பில் அவருடைய எளிய படைக்கலமாக நிற்கவேண்டுமென்று முடிவு செய்திருக்கிறேன். எனக்கு வாழ்த்துரைத்து அனுப்புக!” என்றான் யுயுத்ஸு.

துச்சாதனன் அதிர்ச்சியுடன் “என்ன சொல்கிறாய்? அறிவிலி!” என்று கூவியபடி முன்னால் வர சுபாகு “பொறுங்கள் மூத்தவரே, அரசர் இங்கிருக்கிறார்” என்றான். “இவன் என்ன சொல்கிறான் கேட்டீர்களா? இவன் என்ன சொல்கிறான் என்றால்…” என்று துச்சாதனன் கூவ “அதை தான் முன்னரே அறிந்திருப்பதாக அரசர் கூறிவிட்டார். பொறுங்கள்” என்றான் சுபாகு. “இவர்கள் நம் பெருந்தன்மையுடன் விளையாடுகிறார்கள். நமது அன்பை ஆற்றலின்மையென்று எடுத்துக்கொள்கிறார்கள்” என்று துச்சாதனன் கூவினான். துச்சாதனனை நோக்கி “இளையோனே” என்றான் துரியோதனன். “மூத்தவரே” என்று உடைந்த குரலில் சொன்ன துச்சாதனன் “இவனை மண்ணில் கால்படாமல் சுமந்தலைந்தவன் நான், மூத்தவரே” என்றான்.

“ஆம், ஆகவே அவனுடைய நலனை மட்டுமே நாம் நாடவேண்டும்” என்றபின் யுயுத்ஸுவிடம் “நீ அங்கு செல்வதற்கு நான் எந்தத் தடையும் சொல்லப்போவதில்லை, இளையோனே. நீ நலம்பெறுக! என் நற்சொற்கள் என்றும் உன்னுடன் வரும்” என்றான் துரியோதனன். “ஆம், தாங்கள் தடையேதும் சொல்லமாட்டீர்கள் என்று நான் அறிவேன். நான் வந்தது தங்கள் வாழ்த்து பெறுவதற்காகத்தான். பாண்டவர் தரப்பிலிருந்து படைக்கலமேந்தி தங்கள் தரப்புடன் போராடுவேன். அஸ்தினபுரியின் படைவீரர்களை கொல்வேன். தேவையென்றால் தங்கள் உடன்பிறந்தாரையும் கௌரவ மைந்தரையும்கூட நான் கொல்ல நேரலாம். எத்தயக்கமும் இன்றி அதை செய்வேன். ஏனெனில் நான் அவருக்கு என்னை முழுதளிக்கப் போகிறேன். அதற்குத்தான் தங்கள் வாழ்த்து எனக்கு தேவை” என்றான் யுயுத்ஸு.

“நீ அவர்மீதான இப்பெரும்பற்றை எங்கிருந்து பெற்றாய்?” என்றான் துரியோதனன். “நான் இறுதி மைந்தன் ஆகையால் அன்னையர் நடுவே வளர்ந்தவன். பேரரசியும் அரசியும் என் அன்னையும் பிற அரசியர் அனைவரும் தங்கள் உள்ளாழத்தால் அறிந்த ஒன்றை எனக்களித்தனர். அது இப்புவியில் இன்று வாழ்பவர்களில் அவர் ஒருவரே முழு மானுடர், அவருக்கு தலைகொடுப்பதினூடாகவே இக்காலகட்டம் எனக்களிக்கும் அனைத்துக் குறைவுகளையும் சிறுமைகளையும் கடந்து நான் முழுமையடைய முடியும் என்னும் மெய்யறிதல்” என்றான். துரியோதனன் “நன்று! ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கு உகந்த வழியை தெரிவுசெய்துகொள்ளும் உரிமை இருக்கிறது. தன் வழியை தெரிவுசெய்பவன் உறவுகளில் ஒரு பகுதியை துறக்காமல் முதலடியை எடுத்துவைக்க இயலாது. நீ முழு உறவையும் துறந்து இப்பாதையில் செல்கிறாய். இது உனக்கு நிறைவையும் முழுமையையும் அளிக்கட்டும்” என்றான்.

யுயுத்ஸு குனிந்து துரியோதனனின் கால்களைத் தொட்டு சென்னி சூடி “தங்கள் அருளால் நிறைவுற்றேன், மூத்தவரே” என்றான். துரியோதனன் அவன் தலையில் கைவைத்து “வெல்க! நீடுழி வாழ்க! சிறப்புறுக!” என்றான். யுயுத்ஸு எழுந்து துச்சாதனனை நோக்கி கைகூப்பியபடி செல்ல அவன் கைநீட்டித் தடுத்து “உம்” என்றான். திரும்பி நோக்காமலேயே “இளையோனே, அவனை வாழ்த்துக!” என்றான் துரியோதனன். “மூத்தவரே…” என்று முழு உடலும் தவிக்க துச்சாதனன் முனகினான். “இது என் ஆணை!” என்றான் துரியோதனன். யுயுத்ஸு துச்சாதனனை அணுகி அவன் கால்களைத் தொட்டு வணங்கினான். அவன் தலைமேல் கைவைத்து “நீள்வாழ்வு கொள்க!” என்று துச்சாதனன் வாழ்த்தினான். துர்மதனையும் சுபாகுவையும் வணங்கிவிட்டு “நான் இப்போதே கிளம்புகிறேன், மூத்தவரே” என்றான் யுயுத்ஸு.

“அன்னையரிடம் விடைபெற்றுவிட்டாயா?” என்று துரியோதனன் கேட்டான். “ஆம், இங்கு வருவதற்கு முன் அகத்தளத்திற்கு சென்றேன். பேரரசியைக் கண்டு நான் கிளம்புவதை சொன்னேன். மறுசொல்லின்றி நலம் சூழ்க என்று என்னை வாழ்த்தினார். அரசியிடமும் சொல் பெற்றேன். என் அன்னை வாழ்த்துரைக்கவில்லை. தலைகுனிந்து விழிநீர் உகுத்துக்கொண்டிருந்தார். அவரிடம் நான் செல்வதை அறிவித்தேன். என் துணைவியிடமும் மைந்தரிடமும் விடைபெற்றுவிட்டேன்” என்றான் யுயுத்ஸு.

“இளைய யாதவரிடம் என் வணக்கத்தை தெரிவி. எதிர்நிலையில் நிற்பவனைப்போல் அவரை அறிந்தவர் எவரும் என்றுமிருந்ததில்லை என்று சொல்” என்றான் துரியோதனன். “யுதிஷ்டிரனிடமும் தம்பியரிடமும் நானும் என் தம்பியரும் கொண்டிருக்கும் அன்பை சொல். பிறிதொரு பிறவியில் ஷத்ரியர்கள் அல்லாமல் பிறந்து எளிய உள்ளத்துடன் இணைந்து வாழ்வோம் என்று கூறு.” யுயுத்ஸு தலைவணங்கினான்.

முந்தைய கட்டுரைஎனது கல்லூரி – புகைப்படங்கள்
அடுத்த கட்டுரைபிழையின் படைப்பூக்கம்