யுயுத்ஸுவுடன் இடைநாழியில் நடந்தபோது குண்டாசி ஒவ்வொரு கணமும் இறுகியபடியே சென்றான். தன் தசைகள் அனைத்தும் இழுபட்டு விரல்கள் இறுக மடிந்திருப்பதை சற்று நேரம் கழித்து உணர்ந்து நின்று ஒவ்வொரு விரலாக தளர்த்தி உடலை எளிதாக்கிக்கொண்டான். இரண்டடி முன்னால் சென்று நின்று திரும்பி நோக்கிய யுயுத்ஸு “தங்கள் உடலில் வலி தெரிகிறது, மூத்தவரே” என்றான். அப்பேச்சை தவிர்க்கும்படி கைவீசி காட்டிய பின் ஆழ்ந்த இருமலொன்றுள் சிக்கி உடலதிர்ந்து இரு கைகளையும் தொடையிலூன்றி குனிந்து நின்று மூச்சிளைத்தான் குண்டாசி. அவனுக்கு சற்று பின்னால் நின்றிருந்த காவலன் அவனை நோக்கிவர விழிகளால் வேண்டாமென்று தடுத்தான். பின்னர் நிமிர்ந்து “செல்வோம்” என்று சொன்னதுமே மீண்டும் இருமல் எழ குண்டாசி நிலையுலைந்து அருகிருந்த தூணை பற்றிக்கொண்டு மெல்ல நிலத்தில் அமர்ந்தான்.
கண்களில் நீர்வழிய அவன் இருமி முடித்ததும் ஏவலன் அப்பாலிருந்து கோளாம்பியை கொண்டு வந்து அருகே வைத்தான். அதில் சில முறை துப்பியபின் தலையை இரு கைகளாலும் பற்றியபடி முழங்காலில் மூட்டமர்த்தி கண்மூடி அவன் அமர்ந்திருந்தான். யுயுத்ஸு “தாங்கள் வேண்டுமென்றால் சற்று ஓய்வெடுக்கலாம், மூத்தவரே” என்றான். “இல்லை” என்றபின் தன்னை தூக்கிவிடும்படி ஏவலனை நோக்கி அவன் கையை நீட்டினான். ஏவலனின் கையைப்பற்றி எழுந்து நின்று அவன் தோளைத் தொட்டபடி நிலையமைந்தான். “செல்வோம்” என்றபடி மீண்டும் தன் மெலிந்த கால்களை எடுத்துவைத்து முன்நோக்கி விழுபவன்போல நடக்கத்தொடங்கினான்.
யுயுத்ஸு “தந்தையிடம் என்ன சொல்வதென்று நான் இன்னும் முடிவெடுக்கவில்லை. சொல்சூழ்ந்து அவ்வாறு பேசுவது என் வழக்கமும் அல்ல. நான் அங்கு சென்ற பின்னர் என் நாவிலெழுவது எதுவாயினும் நன்று என்று எண்ணுகிறேன்” என்றான். “தாங்கள் எனக்கென எதுவும் உரைக்கவேண்டியதில்லை, மூத்தவரே. வெறுமனே உடன் வந்து நின்றிருந்தால் போதும்.” குண்டாசி மூச்சிளைத்தபடி சற்று நேரம் நடந்தபின் இடையில் கைவைத்து வளைந்த முதுகை நிமிர்த்தி நின்று மூச்சை மும்முறை ஆழ இழுத்துவிட்டான். “நான் வருவதனால் என்ன பயன் என்கிறாய்?” என்றான். யுயுத்ஸு “தாங்கள் அறியாததல்ல, மூத்தவரே. தந்தை இரு முனைகளிலாக ஓய்விலாது ஆடிக்கொண்டிருப்பவர். அறத்தில் அமைந்தது அவர் உள்ளம். மைந்தர்மேல் கொண்ட பற்றில் அமைந்தது அவரது ஆழம். நான் இத்தாலத்துடன் சென்று அவரை பார்க்கையில் எந்த முனையில் அவர் இருப்பார் என்று என்னால் சொல்லவியலாது. தாங்கள் என்னுடன் வந்தால் அறத்தின் முனையில் அவர் வந்து நின்றிருப்பார் என்று எண்ணினேன்” என்றான்.
யுயுத்ஸுவின் விழிகளை நோக்கி “அறம் அவருடைய நடிப்புதான். விழியிழந்தோருக்கு ஒளியுலகின் மேலுள்ள அணையாத வஞ்சத்தால் ஆனவர் அவர்” என்றான் குண்டாசி. “அவ்வஞ்சத்தைக் கண்டு அவரே அஞ்சுகிறார். ஆகவே பேரறத்தான் என தனக்கோர் ஆளுமையைச் சமைத்து அதை சூடிக்கொண்டிருக்கிறார். நெடுங்காலமாக அதை நடிப்பதனால் ஒவ்வொரு கணமுமென அதை அவர் நிகழ்த்தமுடியும்” என்றான். யுயுத்ஸு வலி தெரியும் முகத்துடன் “இச்சொற்களை நீங்கள் அவரை நோக்கி சொல்லவில்லை, மூத்தவரே. இதை உங்களை வருத்தும்பொருட்டே சொல்கிறீர்கள். நீங்கள் அறிவீர்கள், அது உண்மையல்ல என்று” என்றான்.
குண்டாசி இதழ்கோண புன்னகைத்து “உண்மையா அல்லவா என்று இனி எவருக்கு தெரியும்? இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் குருகுலத்தின் கதை இங்கு பேசப்படும். அனைத்திலும் விழியிருண்டு உள்ளமும் உடனிருண்ட மனிதர் என்றே அவர் குறிப்பிடப்படுவார். அவர் கொண்ட சிறப்புகள் எவையும் இங்கு நிலைகொளாது” என்றான். யுயுத்ஸு “நான் அவ்வாறு எண்ணவில்லை” என்றான். “தாங்கள் சொல்வதை மீண்டும் மீண்டும் எவரேனும் என்னிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள், மெய்மை என்பது புலவரும் சூதரும் சமைத்து நமக்களிப்பது மட்டுமே என. மானுடர் மறைந்த பின் அவர்கள் மொழியில் எஞ்சுவது வாழ்பவர்களின் விருப்பின் பொருட்டே என்று. அல்ல, அவ்வாறெனில் மண்மறைந்த அசுரர்களின் பெருமைகள் இன்றளவும் நின்றிருக்காது. இங்கு நிகழ்ந்த தெய்வங்களின் தீமைகள் அழியாது நிலைகொள்வதும் அதனாலேயே.”
யுயுத்ஸு அதைப்பற்றி முன்னரே நிறைய எண்ணம் சூழ்ந்திருக்கவேண்டும். அவன் குரலில் விசை ஏறியது. “நான் மொழியென்று நம்மை சூழ்ந்திருக்கும் இந்த விராடவடிவத்தை நம்புகிறேன். அதற்கு மானுடர் ஒரு பொருட்டல்ல. அவர்களின் அறங்களும் பொருட்டல்ல. அது நாமறியாத திசையொன்றை நோக்கி சென்றுகொண்டிருக்கும் பெருநதி. யுகங்கள் அதன் சிறுகுமிழிகள். மூத்தவரே, அது எந்த மானுடர் மேலும் பக்கநோக்கு கொள்வதில்லை. ஏனெனில் அது பொருட்படுத்தும் அளவுக்கு பெரியவர் என இப்புவியில் எவருமில்லை. விண்கதிர்களைத் தொட தலையெழுந்து கோடி கைகள் விரித்து பேருருக்கொண்டு நின்றிருக்கும் இளைய யாதவர்கூட” என்றான்.
குண்டாசி சிரித்து “நன்கு சொல்லாடக் கற்றிருக்கிறாய். அவைகளில் செவியொன்றே என நீ நின்றிருப்பதை கண்டபோதெல்லாம் நான் எண்ணியதுதான் இது. சொல்மகள் உனக்கு தந்தையின் முன்னும் வந்தருளட்டும்” என்றான். புஷ்பகோஷ்டத்தின் வாயிலை அவர்கள் அடைந்தபோது குண்டாசி நன்கு களைத்திருந்தான். தூணைப்பற்றியபடி நின்று “தந்தையின் அறைக்குள் நுழைவதற்கு முன் எனக்கு மூன்று கோப்பை பீதர்நாட்டு மது கொண்டு வரச்சொல்” என்றான். யுயுத்ஸு “மது அருந்திய பின் தந்தையின் முன் போவது…” என சொல்ல அதை கைகாட்டி தடுத்து “என் குருதி மதுவாலானது என்பதை அறியாத எவருமில்லை. ஷத்ரியருக்கு மது விலக்கும் அல்ல” என்றபின் அப்பால் நின்ற ஏவலனை கைகாட்டி அழைத்து “பீதர் நாட்டு மது… உடனே வந்தாகவேண்டும்” என்றான் குண்டாசி. அவன் தலைவணங்கி விலகிச் செல்ல “மது என்னுள் குருதியை எரியவைக்கிறது. என் சொற்களுக்கு அதுதான் நெய்” என்றான்.
குரல் தாழ “பேரரசரிடம் தாங்கள் எதுவும் பேசவேண்டியதில்லை, மூத்தவரே” என்றான் யுயுத்ஸு. அவன் சற்று உளம்கலைந்திருப்பது தெரிந்தது. “என்னை அழைத்திருக்கவேண்டியதில்லை என்று இப்போது எண்ணுகிறாயா?” என்று குண்டாசி கேட்டான். யுயுத்ஸு “ஆம்” என்றான். குண்டாசி உரக்க நகைத்து “உன்னிடம் நான் விரும்புவதே இதுதான். எப்போதும் எண்ணுவதை விளைவு நோக்காது அவ்வண்ணமே சொல்கிறாய். சூதர்கள் அவ்வாறு சொல்வதில்லை” என்றான். யுயுத்ஸு “ஆம், ஏனெனில் நான் எப்போதும் எந்தைக்கு முன் நின்றிருக்கிறேன். எதன்பொருட்டும் அவர் என் மேல் சினம் கொள்வதில்லை என்று அறிந்திருக்கிறேன். தந்தைக்கு இனியவன் என்பதனால் மூத்தோர் ஒரு நோக்கிலும் என்னிடம் கடுமை காட்டியதில்லை” என்றான்.
குண்டாசி “குருதிகொள் கொற்றவையின் ஆலயத்தில் விகர்ணர் என்னிடம் பேசினார். அறத்தைவிட செஞ்சோற்றுக்கடனே பெரிதென்றார். ஆகவே வஞ்சினம் உரைத்து கௌரவர் படையுடன் நின்று களம்பொருதப்போவதாக சொன்னார்” என்றான். யுயுத்ஸு “ஆம், என்னிடம் அவர் அதை பலமுறை சொல்லியிருக்கிறார். உண்மையில் என்னிடம் சொல்லிச்சொல்லித்தான் அந்நிலைபாட்டை அவர் முழுமை செய்துகொண்டார்” என்றான். குண்டாசி “நானும் எண்ணினேன். அத்தனை தெளிவாக பேசவேண்டும் என்றால் எவரிடமேனும் மீளமீள சொல்லிக்கொண்டிருக்கவேண்டும் என்று. அவர் தன் துணைவி தாரையிடம் சொல்லியிருக்கலாம் என்று கருதினேன். அவரிலெழுவது அவர் அரசியின் சொல்லே என்பார்கள்” என்றான். “இது தாரையின் நிலைபாடல்ல. தன் நிலைபாடென்ன என்பதை அவர் நேற்றுதான் மச்சநாட்டரசியிடம் சொன்னார்” என்றான் யுயுத்ஸு. “ஓ” என்று குண்டாசி பொருளில்லாமல் சொன்னான். ஏவலன் சென்ற திசைநோக்கி “எங்கு சென்றான் மூடன்!” என்றான். யுயுத்ஸு “நீங்கள் வேண்டுமென்றால் சென்று சற்று ஓய்வெடுக்கலாம், நானே தந்தையை பார்க்கிறேன்” என்றான். குண்டாசி ஏவலன் வரும் வழியை நோக்கியபடி அப்பேச்சை கைவீசி கலைத்தான்.
ஏவலன் மதுவுடன் வருவதைக் கண்டபின் திரும்பி “நீ என்ன எண்ணுகிறாய்? செஞ்சோற்றுக்கடன் உனக்கில்லையா?” என்று குண்டாசி கேட்டான். “நான் முன்பு சொன்னதே மீண்டும். என் சொல், என் கடன் என்பதெல்லாம் நானென்னும் எண்ணத்தின் விரிவுகளே. நான், எனது எனும் சொற்களைச் சுமக்கும் அளவுக்கு வலுவில்லாதவன் நான்” என்றான் யுயுத்ஸு. குண்டாசி “இதை நீ எவ்வாறு சொன்னாலும் இந்நிலைபாடு சொல்லாடலுக்கு பொருத்தமாக இருக்கிறதென்பதை மறுக்கமாட்டேன்” என்றான்.
ஏவலன் கொண்டுவந்த பீதர் நாட்டு மதுவை வெள்ளிக்குவளையிலூற்றி அளிக்க அதை ஆவலுடன் வாங்கி மும்முறை விழுங்கினான். யுயுத்ஸு “பீதர் நாட்டு மதுவை இத்தனை விரைவாக எவரும் அருந்துவதில்லை. அது தசைகளை எரிக்கும் என்பார்கள்” என்றான். குவளையில் எஞ்சியிருந்த மதுவை வாயில் விட்டு மதுக்குடுவையை நன்றாகக் கவிழ்த்து நோக்கிய பின் திரும்ப அளித்து குண்டாசி “காட்டெரியில் எஞ்சிய கழியையே சிதையெரிக்க எடுத்துக்கொள்வார்கள்” என்றபின் “வருக!” என்று யுயுத்ஸுவின் தோளைத்தட்டி முன்னால் நடந்தான்.
திருதராஷ்டிரரின் அறைவாயிலில் நின்றிருந்த சங்குலன் யுயுத்ஸுவை பார்த்ததும் தலைவணங்கி உள்ளே செல்லும்படி கைகாட்டினான். குண்டாசி அவனைப் பார்த்து புன்னகைத்து “எப்படியிருக்கிறார் முதியவர்?” என்றான். சங்குலன் புன்னகை புரிந்தான். அவன் தோளில் கைவைத்து அழுத்தி “இறுதியாக எப்போது அவருடன் மற்போர் புரிந்தாய்?” என்றான். சங்குலன் அதற்கும் மறுமொழி கூறாமல் புன்னகைத்தான். குண்டாசி யுயுத்ஸுவுடன் சென்றபடி “இப்பேருடலனை அவ்வப்போது பார்ப்பதுண்டு. இவன் ஆலயவாயிலில் நின்றிருக்கும் காவல்பூதம். உள்ளிருக்கும் தெய்வமே பிறிதொரு வடிவில் வாயிலில் நின்றிருக்கும் என்பார்கள். இவன் வெள்விழிகளில் நோக்கிருக்கிறதா என்றே எனக்கு ஐயம்தான்” என்றான். நின்று திரும்பி மீண்டும் அவனை நோக்கி “விப்ரருடைய விழைவே இப்பேருடலனாகியது. எனில் நான் யார்? திருதராஷ்டிரரின் எது நானாகியது?” என்றான்.
அச்சத்துடன் குண்டாசியின் தோளைத் தொட்டு “மெல்ல. நாம் பேசுவது உள்ளே அரசருக்கு கேட்கும்” என்றான் யுயுத்ஸு. “பேசத்தானே போகிறோம்?” என்று சொல்லி ஏப்பம் விட்டான் குண்டாசி. “நன்று! உயர்தர பீதர் மது… என் தசைகள் உயிர்கொள்கின்றன. சொற்கள் எழுகின்றன” என்றபின் “வழக்கமாக அவன் உள்ளே சென்று ஒப்புதல் பெற்றுத்தானே எவரையும் விடுவான்?” என்றான். “நான் எப்போது வேண்டுமானாலும் இங்கு வர ஆணையுள்ளது” என்றான் யுயுத்ஸு. “அவருடைய இசை ஏன் நூற்றொரு மைந்தரிலும் எழவில்லை? அது எழவேண்டுமென அவர் விழையவில்லையா? அல்லது அது அவருடைய மேலோட்டமான நடிப்பா?” என்றான் குண்டாசி. யுயுத்ஸு “அல்ல, அது அவர் எவரிடமும் பகிராத ஆழம். விழியிழந்தோர் எவரும் அவர் மைந்தரில் இல்லை அல்லவா?” என்றான். “ஆம், அது மெய். விழியிழந்த ஒருவன் பிறந்திருக்கலாம். விழியின்மையால் அவர் அடைந்த அனைத்தும் அவருடன் மண்மறையாமல் இருந்திருக்கும்” என்றான் குண்டாசி.
அவர்கள் மெத்தை இடப்பட்ட தரையில் கால் புதைய நடந்தனர். தள்ளாடி யுயுத்ஸுவின் தோள்களை பற்றிக்கொண்ட குண்டாசி “இங்கே இசைமட்டும் ஒலிக்க வேண்டுமென்று விரும்பி பிற ஓசைகளை தடுத்திருக்கிறார் முதியவர். அதுவும் நன்றே. வெளியே ஒலிக்கும் போர்க்கூச்சல்கள் எவையும் இங்கு வந்து சேர்வதில்லை. அலைகளின் ஆழத்தில் மூழ்கிக்கிடக்கும் கற்சிலைபோல் இவ்வறைக்குள் இருக்கிறார்” என்றான். எதிர்பாராத வகையில் அவன் யுயுத்ஸுவின் தோளை அறைந்து உரக்க நகைத்து “நல்ல ஒப்புமை. இந்த அறையுடன் அப்படியே மண்ணில் புதைந்து போய்விட்டிருக்கிறார். மூதாதை உலகு இப்படித்தான் இருக்கும். ஓசையே இன்றி. நன்று” என்றான். யுயுத்ஸு தவிப்புடன் “தாங்கள் ஒன்றும் பேசப்போவதில்லை என்று சொன்னீர்கள், மூத்தவரே” என்றான். “ஆம், பேசுவதாக இல்லை. நீ பேசு” என்றான் குண்டாசி.
அவர்களுக்கெதிரே வந்த சஞ்சயன் தாழ்ந்த குரலில் “விதுரருடன் பேசிக்கொண்டிருக்கிறார்” என்றான். “அமைச்சர் எப்போது வந்தார்?” என்று யுயுத்ஸு திகைப்புடன் கேட்டான். “சற்று முன்னர்தான், கிளம்பவிருக்கிறார்” என்றான் சஞ்சயன். “அவர் இங்கு வந்து நெடுநாளாயிற்று” என்று யுயுத்ஸு திரும்பி குண்டாசியிடம் சொன்னான். “ஆம், அவர் தன் மாளிகையைவிட்டு வெளியே வருவதில்லை என்று சொன்னார்கள். தன் அன்னை அமர்ந்த அச்சாளரத்திலேயே இரவும் பகலும் அமர்ந்திருப்பதாக ஏவலன் ஒருவன் சொன்னபோது நானும் என் அன்னை அமர்ந்த சாளரத்தில் சென்று அமரவேண்டுமென்கிறாயா என்று அவனிடம் கேட்டேன்” என்றபின் “என்ன பேசிக்கொள்கிறார்கள்?” என்று குண்டாசி சஞ்சயனிடம் கேட்டான். சஞ்சயன் ஒன்றும் சொல்லாமல் “வருக!” என்று கைகாட்டினான். “அரசியல் பேச வாய்ப்பில்லை. அது முடிந்து சாம்பல் அல்லவா எஞ்சுகிறது?” என்றபின் முனகலாக “சொல்லமுடியாது. சாம்பலில் சிற்பம் செய்ய முயல்வார்கள் முதியோர்” என்றான் குண்டாசி.
யுயுத்ஸுவின் தோளைப் பற்றியபடி அசைந்து நடந்து இசைக்கூடத்தை கடந்து திருதராஷ்டிரரின் முன் சென்று நின்றான். பெரிய பீடத்தின் கைப்பிடிகளின்மேல் இரு கைகளும் தொய்ந்திருக்க, தலை கவிழ்ந்து தாடை மார்பில் படிய அமர்ந்திருந்த திருதராஷ்டிரருக்கு முன்னால் சிறிய பீடத்தில் மெலிந்த உடலில் கைகளை மார்போடு கட்டி வேறெங்கோ நோக்கியபடி விதுரர் அமர்ந்திருந்தார். யுயுத்ஸு அருகே சென்று குனிந்து திருதராஷ்டிரரின் கால்களைத்தொட்டு சென்னி சூடி “வணங்குகிறேன், தந்தையே” என்றான். அவர் மூக்கைச் சுளித்து “குருதிமணம்… என்ன அது?” என்றார். விதுரர் திரும்பிப் பார்த்தார். யுயுத்ஸுவின் கையிலிருந்த தாலத்தை நோக்கியபின் திரும்பிக்கொண்டார்.
“அந்த இழிமகன் ஏன் உன்னுடன் வந்தான்?” என்று திருதராஷ்டிரர் குண்டாசியை நோக்கி மூக்கை சுளித்தார். குண்டாசி “நான் குருக்ஷேத்திரத்திற்கு செல்கிறேன், தந்தையே. எனது தலையை இளைய பாண்டவர் பீமன் தன் கதையால் அடித்து உடைக்கவிருக்கிறார். அதற்கு முன் அந்தத் தலையை தங்கள் பாதத்தில் வைத்து எடுக்கவேண்டுமென்று தோன்றியது. அதற்காகவே வந்தேன்” என்றான். “எதுவும் முறைமைப்படி நிகழவேண்டும் அல்லவா? அதைத்தானே சிறிய தந்தை விதுரரும் இளமையிலேயே கற்பித்தார்?” திருதராஷ்டிரர் “நாளை புலரியில் அவர்கள் கிளம்புகையில் முறைப்படி அனைவருக்கும் நான் வாழ்த்து சொல்வேன், அப்போது நீயும் வா” என்றார். “ஆம், நாளை பெறும் வாழ்த்து வேறு. இன்று தனிப்பட்ட முறையில் ஒரு வாழ்த்து பெற்றாகவேண்டும். அதற்காகவே வந்தேன்” என்றான்.
யுயுத்ஸு பேச்சை மாற்றும்பொருட்டு “இது குருதிகொள் கொற்றவை அன்னையின் படையல்சோறு, தந்தையே. தங்களுக்கென அரசரால் அளிக்கப்பட்டது” என்றான். விதுரர் திரும்பி யுயுத்ஸுவை பார்த்தார். திருதராஷ்டிரர் தலையை உருட்டியபடி “உன்னிடம் அதை தந்தனுப்பினானா?” என்றார். “ஆம், இதை தங்களிடம் வந்து அளிக்கவேண்டும் என்றார்” என்றான் யுயுத்ஸு. திருதராஷ்டிரர் விதுரரைப் பார்த்து “நீ என்ன எண்ணுகிறாய், விதுரா?” என்றார். விதுரர் ஒன்றும் சொல்லாமல் மீண்டும் நோக்கை விலக்கிக்கொண்டார். இரு கைகளாலும் பீடத்தின் கைப்பிடியை அழுத்தியபின் கைநீட்டி “கொடு. அவ்வண்ணமெனில் அதுவே நிகழ்க!” என்றார். யுயுத்ஸு அன்னத்தை திருதராஷ்டிரருக்கு அளித்தபின் வணங்கி அவரது வலதுபக்கம் நின்றான். அவர் அதில் ஒரு துளி எடுத்து நாவில் வைத்துவிட்டு அப்பால் வைத்தார்.
குண்டாசி நடுங்கும் கால்களுடன் முன்னால் வந்து முழந்தாளிட்டு தன் தலையை திருதராஷ்டிரரின் கால்களில் வைத்து “வாழ்த்துக, தந்தையே!” என்றான். “நீ விழைவதே நிகழ்க! ஆம், அவ்வண்ணமே ஆகுக!” என்று திருதராஷ்டிரர் வாழ்த்தினார். குண்டாசி எழுந்து ஆடையை நீவி நிலைகொண்டு பல் தெரிய புன்னகைத்து “நீங்கள் இவ்வாறு வாழ்த்துவீர்கள் என்று எனக்குத் தெரியும். ஏனெனில் நெடுங்காலமாக நீங்கள் என் இறப்பை எதிர்நோக்கியிருக்கிறீர்கள்” என்றான். பற்களைக் கடித்தபடி திருதராஷ்டிரர் “ஆம், அதை நான் மறுக்கவில்லை. நீ உயிருடனிருப்பது என் உடலில் ஒரு சிறுவிரல் புண்வந்து அழுகிக்கொண்டிருப்பதுபோல. அதை வெட்டி எறிந்தாகவேண்டும் என்றே விழைகிறேன்” என்றார்.
குண்டாசியும் பற்களைக் கடித்தான். அவன் விழிகள் இடுங்கின. “ஆனால் எப்போதும் உங்கள் ஓர் உறுப்பு நோயுற்றிருக்கிறது அல்லவா? என் அன்னை அங்கு சாளரத்தில் அமர்ந்திருந்தாள். நான் களம்பட்டாலும் அச்சாளரம் அங்குதான் இருக்கும். அதில் வேறு பெண்டிர் அமர்ந்திருப்பர். உங்கள் அரண்மனையில் அந்தியிருண்ட பின் அழுத விழிநீரே எஞ்சும். அணங்குகள் இருளில் நின்றிருக்கும்” என்றான். திருதராஷ்டிரர் இரு கைகளையும் இறுகப்பற்றி பெருமூச்சுவிட்டு மெல்ல அசைந்தமர்ந்து இயல்பாகி “என்னை சினம்கொள்ள வைக்க விரும்புகிறாயா?” என்றார். “ஆம், இன்று காலை மூத்தவர் என்னை கொல்ல முயன்றார். என் உடலுக்குள் எத்தனை தசைகள் சிதைந்திருக்கின்றன என்பது நாளை என்னால் எழுந்து நிற்க முடியுமா இல்லையா என்பதைப் பொறுத்தே தெரியும். அவரைவிட இருமடங்கு ஆற்றல் கொண்டவர் நீங்கள். உங்கள் கையால் ஓங்கி ஓர் அறை விட்டால் போதும். எனது குருக்ஷேத்திரம் இங்கு நிகழும்” என்றான் குண்டாசி.
திருதராஷ்டிரர் “அதை நான் விரும்பவில்லை. உன் இலக்கு போர்க்களம்தானே? அங்கு அது நிகழ்க!” என்றார். விதுரர் சஞ்சயனிடம் “இளவரசரை அழைத்துச் செல்க!” என்றார். குண்டாசி சஞ்சயனை விலகி நிற்கும்படி கைகாட்டி “நான் பிறிதொருமுறை இவரிடம் பேச வாய்க்குமென்று தோன்றவில்லை. விண்ணில் பேச நேரும்போது இப்போது என்னிலெழும் சொற்கள் இருக்குமா என்று சொல்ல இயலாது” என்றான். “சொல்” என்றார் திருதராஷ்டிரர். “வேண்டாம்” என்று விதுரர் சொன்னார். “அவன் சொல்லட்டும். அவன் இச்சொற்களுடன் வரும் நாளை நான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்… சொல்!” என்றார் திருதராஷ்டிரர்.
குண்டாசியால் சொற்களை எடுக்க முடியவில்லை. அவன் உடல் சற்று அலைபாய்ந்தது. அந்தக் குருதிச்சோறை பார்த்தான். “இன்று மூத்தவர் குருதிகொள் கொற்றவையின் ஆலயத்தில் நின்று சொன்னார், கௌரவ நூற்றுவரும் அவரே என்று. நானும் விகர்ணரும் இவனும்கூட அவர் குரல்களே என்றார். இப்போது தோன்றுகிறது, நாங்கள் நூற்றொருவரும் நீங்களே என்று. தந்தையே, உங்கள் நூற்றொன்று முகங்களில் மூன்றில் மட்டுமே சிறு திரிபுள்ளது. விகர்ணர் முரண்கொள்கிறார். இவன் மாறுபடுகிறான். நான் சிதைந்தழிகிறேன்” என்றான்.
திருதராஷ்டிரர் எரிச்சலுடன் முகம்சுளித்தபோது பெரிய பற்கள் வெளியே தெரிந்தன. “நீ படைவஞ்சினம் கொண்டாயா?” என்றார். “ஆம்” என்றான் குண்டாசி. சிலகணங்களுக்குப் பின் திருதராஷ்டிரர் “விகர்ணன்?” என்றார். “அவரும்தான்” என்றான் குண்டாசி. “ம்ம்” என அவர் முனகிக்கொண்டார். “தந்தையே, நான் உங்களிடம் பேசவேண்டியது ஒன்றே. நான் உங்கள்மேல் இளமையிலேயே வெறுப்பு கொண்டிருந்தேன். ஏனென்றறியாமலேயே எழுந்த வெறுப்பு அது. பின்னர் உணர்ந்தேன், நான் தங்கள் மைந்தரில் தங்களுக்கு அணுக்கமானவன். நோயுற்ற ஆழமொன்று உங்களில் உள்ளதல்லவா, அவ்வாழத்தால் கருபுகுந்தவன் நான்” என்றான்.
திருதராஷ்டிரர் “ஆம், உன் அன்னை என்னை ஏற்றுக்கொண்டதில்லை. அவள் என் விழியின்மையை அஞ்சினாள். அவ்வச்சத்தை நான் சிறுமையென எடுத்துக்கொண்டேன். அதை என் ஆற்றலால் நிரப்ப எண்ணினேன். என்றும் நான் அவ்வாறுதான் சிறுமைகளை ஆற்றலால் ஈடு செய்ய முனைபவன். அவளை நான் மேலும் அச்சுறுத்தினேன். அச்சத்தினூடாக அவளை வென்றேன். அச்சம்கொள்பவர்கள் அதை மெல்ல வெறுப்பாக ஆக்கிக்கொள்கிறார்கள். பெண்டிர் ஆண்கள் தங்களுக்கு அளிப்பதையே மைந்தராக திருப்பி அவர்களுக்கு அளிக்கிறார்கள். கருவறை என்பது புடம்போடும் எரிகலம் என்பார்கள்” என்றார்.
பற்கள் தெரிய இளித்தபடி “ஆகவேதான் அச்சத்தின் கூறே இல்லாமல் பிறந்தேன்” என்று குண்டாசி சொன்னான். “இதோ உங்கள் கையெட்டும் தொலைவில் வந்து நின்று இதை சொல்கிறேன், தந்தையே. நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுக்க கடைபிடித்த அறமனைத்தும் அச்சிறு பெண்ணுக்கு செய்த தீங்கினால் நிகர் செய்யப்பட்டது. அதன்பொருட்டு உங்கள் நூறு மைந்தரின் குருதியை நீங்கள் காண்பீர்கள். உங்கள் கைகளால் உங்கள் நூறு மைந்தருக்கு அன்னமும் எள்ளும் அளிப்பீர்கள்.”
“அறிவிலியே! கீழ்மகனே!” என்று கூவியபடி திருதராஷ்டிரர் பாய்ந்தெழுந்தார். அவ்விசையில் எடைமிக்க பீடம் சரிந்து பின்னால் விழுந்தது. விதுரர் எழுந்து தன் மெலிந்த சிறுகைகளால் அவர் தோளைப்பற்றி “மூத்தவரே” என்றார். மிகத் தாழ்ந்தொலித்த குரல் திருதராஷ்டிரரை குளிர்ந்து அமைய வைத்தது. “வேண்டாம், மூத்தவரே” என்று மேலும் தளர்ந்த குரலில் விதுரர் சொன்னார். “இவ்வறிவிலி… கீழ்மகன்… இவன் எனக்கு தீச்சொல்லிடுகிறான்! இவன்…” என்று திருதராஷ்டிரர் நடுங்கினார். அவருடைய பெரிய சுட்டுவிரல் குண்டாசியை நோக்கி நீண்டிருந்தது. “இந்த இழிமகன்… இக்கீழ்மகன்… இவன் சொல் எனக்கு முன் எழுகிறது!” என்று குரல் இடறினார். “அது ஒரு வேளை ஊழின் சொல்லாக இருக்கலாம்” என்றார் விதுரர். “என்ன சொல்கிறாய்?” என்று அவரை நோக்கி திரும்பினார் திருதராஷ்டிரர். “ஆம், அமர்க! அமர்க, மூத்தவரே!” என்றார் விதுரர்.
சஞ்சயன் ஓசையின்றி பீடத்தை தூக்கி நிறுத்தியிருந்தான். திருதராஷ்டிரர் குனிந்து கைகளால் துழாவி தன் பீடத்தைத் தொட்டு தடவிய பின் நடுங்கும் கால்களுடன் அமர்ந்தார். அவர் உடல் முழுக்க தசைகள் இறுகி நெளிந்தன. இரு கைகளையும் ஒன்றுடனொன்று கோத்து அழுத்தியபடி உரத்த முனகல் ஒன்றை எழுப்பினார். மீண்டும் முனகியபோது அது உறுமல் என்று ஆயிற்று. “அவனிடம் இங்கிருந்து செல்லும்படி ஆணையிடுகிறேன். இக்கணமே இங்கிருந்து அவன் செல்ல வேண்டுமென்று ஆணையிடுகிறேன்” என்றார். குண்டாசி திரும்பி யுயுத்ஸுவை நோக்கிய பின் “நான் இவற்றை சொல்லவேண்டும் என்று வரவில்லை. பிறிதொன்றுக்காகவே வந்தேன்” என்றான்.
“இவன் உங்கள் அறமைந்தன். எனக்கு நேர் எதிரானவன். உங்கள்மேல் இவன் அன்னைகொண்ட பெருங்காதலின் வடிவம் இவன். உங்கள் விருப்பத்திற்குரிய இம்மைந்தன் பிறிதொன்றை உங்களிடம் சொல்ல வந்திருக்கிறான்” என்றபின் திரும்பி யுயுத்ஸுவிடம் “சொல்!” என்றான். விதுரர் எழுந்து “அதை பிறிதொரு முறை சொல்லலாம், இது பொழுதல்ல” என்றார். குண்டாசி “இவன் இங்கு என்ன சொல்லப்போகிறான் என்பதை கேட்ட பின்னரே நான் இங்கிருந்து செல்வேன். அச்சொற்களும் உங்கள்மேல் இதைவிட விசையுடன் பொழியும். அதை நான் பார்க்கவேண்டும்” என்றான்.
திருதராஷ்டிரர் உடைந்த குரலில் “செல்… அளிகூர்ந்து செல். சென்றுவிடு!” என்றார். குண்டாசி “இவன்தான் என்னை அழைத்து வந்தான். நீங்கள் கொண்டிருக்கும் நடிப்புகளில் ஒன்றை என் பொருட்டு சூடுவீர்கள் என்று எண்ணினான்” என்றான். ஓசையெழ நகைத்து “அவன் பேரறத்தானாகிய திருதராஷ்டிரரிடம் பேச வந்திருக்கிறான்” என்றபின் யுயுத்ஸுவிடம் “சொல்!” என்றான். யுயுத்ஸு பேசாமல் நிற்க விதுரர் யுயுத்ஸுவிடம் கைகாட்டி “செல்க!” என்றார். யுயுத்ஸு சற்றே பின்னகர்ந்தான். குண்டாசி அவனை கைகாட்டி நிறுத்தி “மூடா, நீ சொல்ல வந்ததை சொல்லிவிட்டுத்தான் இப்போது செல்லவேண்டும். இல்லாவிட்டால் அதை நான் சொல்வேன்” என்றான். பதறி கைநீட்டி “வேண்டாம்” என்று யுயுத்ஸு சொன்னான்.
திருதராஷ்டிரர் திரும்பி யுயுத்ஸுவிடம் “நீ சொல்வதற்குரியது என்ன?” என்றபின் கைவீசி “நீ விரும்பிய வண்ணம் செய்யலாம். எனது வாழ்த்துக்கள் உன்னுடன் அமையும்” என்றார். யுயுத்ஸு “தந்தையே…” என்று குழைந்த குரலில் சொல்ல “நீ எண்ணுவதென்ன என்று நெடுநாட்களுக்கு முன்னரே எனக்கு தெரியும். மானுடரை வெறும் புழுதித் துளிகளென்றாக்கும் பெரும்புயல் அவன். அவனுக்கு முழுதளிப்பதே உன் வழி. அங்கு செல்க, சிறப்புறுக! எந்நிலையிலும் உன் தந்தையின் வாழ்த்து உன்னுடன் இருக்குமென்று உறுதி கொள்க!” என்றார். யுயுத்ஸு குனிந்து அவர் கால்களைத் தொட்டு சென்னி சூடி “நன்று, தந்தையே. இச்சொற்களே தங்களிடமிருந்து எழும் என்று எனக்கு தெரியும்” என்றான்.
“யுதிஷ்டிரனிடம் சொல், தந்தையென்றன்றி வேறெவ்வகையிலும் அவனை நான் எண்ணியதில்லை என்று. மைந்தர்மேல் கொண்ட பற்றினால் பித்தனும் கடையனும் கீழோனுமாக நின்றிருக்கும் ஒருவன் நான். எனது தெய்வங்களிடம் ஆம் நான் அவ்வாறுதான் என்றே என்னால் சொல்ல இயலும். அதையே நான் அவனிடம் சொல்கிறேன். அவனிடம் சொல், நான் வெறும் தந்தை மட்டுமே என்று. ஆனால் அவனும் நானே என உணர்ந்துள்ளேன்…” பின்னர் கையை அசைத்து “ஆனால் இளைய யாதவனிடம் நீ எதையும் சொல்ல வேண்டியதில்லை. அவனறியாத ஒன்றுமில்லை. நன்று!” என்றபின் திரும்பி விதுரரிடம் “மூடா, என்ன செய்கிறாய்? என்னை கைபிடி. நான் அறைக்கு செல்லவேண்டும்” என்றார்.
அவர் பீடத்தைவிட்டு எழுந்ததும் சங்குலன் விரைந்த காலடிகளுடன் வந்து அவர் கைகளை பற்றிக்கொண்டான். அங்கு நிகழ்ந்தன எதையும் அறியாத தொலைவிலிருந்தாலும் அவர் கிளம்பும்பொருட்டு எழும் ஓசையை மட்டும் அவன் அறிந்திருந்தான் என்று குண்டாசி எண்ணினான். சங்குலன் அவர் தோளை பற்ற தளர்ந்த கால்களுடன் திருதராஷ்டிரர் இசைக்கூடத்திலிருந்து நடந்தகன்றார்.