ஜெ
நேற்று திருச்சியில் பெருந்தேவியின் கவிதைகளைப்பற்றி ஒரு கூட்டம். அதில் ஒருவர் எழுந்து கலாட்டா செய்து கவன ஈர்ப்பு செய்து பெரும்பாலும் கூட்டத்தை பயனற்றதாக ஆக்கிவிட்டார்
அதைப்பற்றி பெருந்தேவி எழுதியது இது
ஆனால் கூட்டம் ஒருவரால் ஹைஜாக் செய்யப்பட்டது. கட்டுரைகள் வாசிக்கப்படும்போதே நடுநடுவே தன்னைப் பேச விடவில்லை, தூயன் போன்றவர்கள் தன்னைப் போல மனதில் தோன்றியதைப் பேசாமல், கட்டுரை எல்லாம் எழுதிக்கொண்டு வந்து பேசுகிறார்கள் என்றெல்லாம் வருத்தம் வேறு அவருக்கு. “நான் அப்படித்தான் பேசுவேன்” என்று அவ்வப்போது ரைமிங்காக உரத்த குரலில் எங்களுக்குத் தெரிவித்துக்கொண்டிருந்தார். அரதப் பழைய நாடகப் பாணி கலவரம் .அவரது பொதுவெளி ஜனநாயக மாண்பால் திகைப்படைந்த இளைஞர்கள் சிலர் கோபப்பட்டதையும் பார்க்கமுடிந்தது. நான் ஏன் பதிலுக்குக் கோபப்படவில்லை என்றும் சில இளைஞர்கள் கூட்டம் முடிந்தபின் என்னிடம் கோபப்பட்டார்கள் என்பது தனி விஷயம்.
இது தமிழில் நடந்துகொண்டே இருக்கிறது. இதைத் தடுக்க என்ன செய்வதென்றே தெரியவில்லை. உண்மையில் ஆக்கபூர்வமான எந்த விவாதமும் நிகழாமல் இவர்கள் செய்கிறார்கள்.
ஜெயபாலன்
***
அன்புள்ள ஜெயபாலன்
வருந்தத்தக்க நிகழ்வு. பெருந்தேவி முக்கியமான கவிஞர். அதோடு கவிதையின் கோட்பாட்டுத்தளம் பற்றியும் பேசத்தகுதி கொண்டவர். கவிதைக்காக ஒரு கூட்டம் என்பது இன்றைய சூழலில் மிக அரிதானது. அது அடுத்த தலைமுறைக்குப் பெரிய வாய்ப்பு. அதை வீணடித்திருக்கிறார்கள்.
நான் இவர்களை சென்ற முப்பதாண்டுக்காலமாகப் பார்த்துவருபவன். இவர்களின் தரம் என்ன என்றும் தெரியும். இருபதாண்டுகளுக்கு முன்பு திருவையாறு தியாகையர் ஆலயத்தின் வழிபாட்டு நிகழ்ச்சியில், அவருடைய பாடல்கள் மட்டுமே அங்கே பாடப்படும் என்றும் அவர் தெலுங்கில் மட்டுமே எழுதியவர் என்றும் தெரிந்துகொண்டே சிலர் வந்து அமர்ந்து “தமிழில்பாடு இல்லையேல் தமிழ்நாட்டை விட்டு ஓடு” என்று கலாட்டா செய்தார்கள். அதே வாரம் கோவையில் வொக்கலிக மாநாடு நடந்த்து. சரோஜாதேவி, எஸ்.எம்.கிருஷ்ணா பங்கெடுத்த அந்த மாநாடு முழுக்க முழுக்க கன்னடத்தில் நடைபெற்றது. கலாட்டா செய்த இடதுசாரி தீவிரவாத அமைப்பு நண்பரிடம் கேட்டேன். “அங்கே போகலையா தோழர்?” அவர் நேர்மையாகப் பதில் சொன்னார் “அடிப்பாங்க தோழர்”
முன்பு அ.மார்க்ஸ், எஸ்.வி.ராஜதுரை கோஷ்டியினரில் சிலர் எந்த இலக்கியக்கூட்டத்திலும் எழுந்து ‘புரட்சிகரக் கலாட்டா’க்களைச் செய்வார்கள். அவர்களே மரணதண்டனைக்கு எதிராக ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தனர். அதில் வளர்மதி என்பவர் பங்கேற்று சிலகேள்விகள் கேட்டார். அடித்துத் துவைத்து அப்பால் போட்டுவிட்டனர்.
இவர்கள் இலக்கியநிகழ்ச்சிகளில் கலாட்டா செய்வதற்கு ஒரே காரணம் அது சிறிய அளவில் செய்யப்படுகிறது, அமைப்புவல்லமை இல்லை என்பது மட்டும்தான். தமிழகத்தின் எந்த பெரிய அரசியல்கட்சியின் நிகழ்ச்சிகளிலும் எந்தப்புரட்சியாளரும் கலகக்காரர்களும் எந்தக்கேள்வியும் இன்றுவரை எழுப்பியதில்லை.
இதில் நாம் தெளிவுபடவேண்டியது ஒன்றில்தான். இது எவ்வகையிலும் இலக்கியம் சார்ந்தது அல்ல. இதை ஜனநாயகம் கருத்துச்சுதந்திரம் என்றெல்லாம் அனுமதிக்கும் ‘பரந்த உள்ளம்’தான் இவர்களை வளர்த்துவிட்டது. இன்று ஓர் இலக்கியக்கூட்டம் ஏற்பாடு செய்ய முப்பதாயிரம் ரூபாய் வரை செலவாகிறது. பெரும்பாலும் இது இலக்கியவாசகர்களின் பணம். அது வீணாகாமல் பார்க்கும் பொறுப்பு அமைப்பாளர்களுக்கு உண்டு. அவர்களின் முதல்கடமை அந்த நிதியளித்த வாசகர்களுடன்தான்
இந்நிகழ்ச்சிகளில் பலர் பயணம் செய்து வந்து கலந்துகொள்கிறார்கள். இன்றைய சூழலில் ஒரு நாள் பயணமும் விடுப்பும் எளிய விஷயம் அல்ல. இலக்கியநிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் ஒவ்வொருவரும் அவ்வாறு வந்துசேரும் இலக்கியவாசகர்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறார்கள். கவன ஈர்ப்பை விரும்பும் வெட்டிகள் நிகழ்ச்சிகளைக் கையிலெடுக்க அனுமதிப்பது, அதற்கு என்ன காரணம் சொல்லப்பட்டாலும், அந்நிகழ்ச்சியை நம்பி வருபவர்களை சிறுமைசெய்வதுதான்.இத்தகைய மைக் பிடுங்கி ஒருவர் நிகழ்ச்சியை ஆக்ரமிக்கிறார் என்றால் அதன்பொருள் அமைப்பாளர்கள் தங்கள் பொறுப்பை நிறைவேற்றவில்லை என்றுதான். அந்த மைக்பிடுங்கி அடையாளம் காணப்பட்டு எந்த நிகழ்ச்சிக்கும் நுழைவாயிலிலேயே மறித்து வெளியே அனுப்பப் படவேண்டும்.இதை இருபதாண்டுகளாக நான் சொல்லிவருகிறேன்.
ஓர் இலக்கிய நிகழ்ச்சி இயல்பாகவே சிலருக்கு முக்கியத்துவத்தை உருவாக்குகிறது. அவர்களின் இலக்கியப் பங்களிப்பாலும், அவர்களின் அறிவுத்திறனாலும் அது உருவாகிறது. இப்பிறவியில் அது நமக்கு அமையாது என நம்பும் சிலரே இத்தகைய கவனஈர்ப்பு, மைக் ஆக்ரமிப்புகளில் ஈடுபடுகிறார்கள். அதற்கு புரட்சிகரம், கலகம், ஒடுக்கப்பட்டோர் சார்பு என பல பாவலாக்கள் உண்டு. அந்த இரு சில்லறை ஆசாமிகளும் இதை நெடுங்காலமாகச் செய்துவருகிறார்கள். இவர்களை இனிமேலாவது இலக்கிய அரங்குகளில் நுழையவிடக்கூடாது.
பொதுவாக நாங்கள் நடத்தும் கூட்டங்களை ‘மீறலைக்’ கொண்டாடும் கவிஞர்கள் ‘ராணுவ ஒழுங்கு’ என்றும் ’பஜனைமடம்’ என்றும் இளக்காரமாகச் சொல்வதுண்டு. அவர்களுக்கே இதெல்லாம் அனுபவமாகும்போது புலம்ப ஆரம்பித்துவிடுவார்கள். சிற்றிதழ்ச்சூழலில் சில்லறைகளும் அலப்பறைகளும் உருவாக்கிய அழிவு தொண்ணூறுகளின் தொடக்கத்தில் அறியப்படலாயிற்று. எண்பதுகளில் நிகழ்ந்த ஆக்கபூர்வமான இலக்கியப் பரிமாற்றம் வெறும் குடிக்கேளிக்கை, வம்புவழக்கு, போலிநாடக்க்கூச்சல்கள் என ஆகி அனைத்து இலக்கியச் சந்திப்புகளும் நின்றுவிட்டன.
அந்த வெறுமையிலிருந்துதான் அக்குறைகளை களைந்து மீண்டும் சந்திப்புகளை நாங்கள் ஒருங்கிணைக்கத் தொடங்கினோம். இன்று நிகழும் பெரும்பாலான கூட்டங்கள் அவ்வாறு நிபந்தனைகளுடன் நாங்கள் ஒருங்கிணைத்த கூட்டங்களின் பாணியிலானவை. அத்தகைய சீரிய கூட்டங்களில் எழுந்து ஒரு சொல்லும் பேச திராணி இல்லாதவர்களால் இன்றும் அவை கேலிசெய்யப்படுகின்றன. இனியாவது இலக்கியமென்பது ஒரு தீவிரமான செயல்பாடு என்றும், அது வாசிப்பவர்களுக்கும் எழுதுபவர்களுக்கும் மட்டுமே உரியது என்றும், குடிக்காகவோ கவன ஈர்ப்புக்காகவோ அங்கே நுழையும் சில்லறைகளைக் கறாராக களையவேண்டும் என்றும் இலக்கியச்சூழல் உணரவேண்டும்
ஜெ