மரியாதைக்கு உரிய ஜெயமோகன்,
உங்களுடைய ‘இலக்கியத்தில் மாற்றங்கள்’ உரையை யு டியூபில் கண்டடேன். உங்கள் இலக்கியப்பணிகள் குறித்துப் பெருமிதம் அடையும் தமிழன் என்று அறிமுகம் செய்து கொள்ள விரும்புகிறேன். ரப்பர், விஷ்ணுபுரம், வெள்ளையானை, அறம் இன்னும் சில நூல்களை வாசித்திருக்கிறேன். உங்களுடைய பல உரைகளை யூ டியூபில் பார்த்திருக்கிறேன். இன்னும் பார்ப்பேன். நூல்களைப் படிப்பேன்.
இலக்கியத்தில் மாற்றங்கள் உரையில் பதிவு செய்த பெரும்பாலான கருத்துக்கள் விவாத வெளியில் நான் வாசித்த கேட்ட கருத்துக்களின் தொகுப்பு என்று தோன்றுகிறது. கடைசியில் ‘கதாசிரியன் காணாமல் போகிறான்’ என்பது வரைக்கும்.
விஷ்ணுபுரத்தில் கதாசிரியன் அல்லது அவன் குரல் இல்லை என்பதை நான் ஒத்துக் கொள்ளவில்லை. நீங்களும் நீங்கள் படித்த அறிந்தவற்றின் தொகுப்புத்தான். அதனாலேயே நீங்கள் என்ற ‘ஆளுமை’ இல்லாமல் போவதில்லை. பல அடுக்குக் கதைகளைக் கொண்ட நூல் அதனாலேயே ‘நாவல் ‘ ஆக முடியாது என்று சொல்வது போன்றது இது.
அந்த நாவலில் நீங்கள் இல்லாமல் இருக்கவே முடியாது.
உங்களுடைய கதைக்களங்கள், தளங்கள் கோணங்கள் அனைத்தும் வெவ்வேறாக இருந்த போதிலும், அதாவது, ஆயிரங்கால் மண்டபம் கதையின் சிறுமியோ, வெள்ளையானையின் தலித் உணர்வோ, விஷ்ணுபுரத்தின் பெரும் மட, மத நிறுவனங்களின் அற வீழ்ச்சியோ கதாசிரியன் இருப்பதை நிறுவுகின்றன. என் எழுத்தில் ‘நான்’ இல்லை என்று சொல்வது, ‘நான் இறந்து விட்டேன்’ என்று நீங்களே அறிவிப்பது போன்றது. நிகழ இயலாத முரண்பாடு.
அன்பன்
வே. ராஜகோபால்
அன்புள்ள ராஜகோபால்
நான் கூறியவற்றை விவாதிக்கவேண்டியிருப்பதே அவை ஒரு கருத்துத் தரப்பு என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. முதல் விஷயம் ஓர் எழுத்தாளனாக என்னிடம் கேட்கப்படும் கேள்வி என் அனைத்து எழுத்துக்களின் வழியாகவும் நான் முன்வைக்கும் பொதுவான அரசியல், வாழ்க்கை நோக்கு என்ன என்பது. நான் அந்தந்த நாவல்களில் என்னை முன்வைக்கிறேன். அந்தந்த கதாபாத்திரங்களுக்கேற்ப வெளிப்படுகிறேன். அதை அவர்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை. ஆகவே அவர்களே என்னைத் தொகுத்துக்கொள்கிறார்கள். அந்த ஆளுமையை எனக்கு அளித்து இதுதான் நீ என்று என்னிடம் சொல்கிறார்கள். விஷ்ணுபுரம் முதல் அனைத்து நாவல்களிலும் எழுந்த முக்கியமான கேள்வி இதில் ஆசிரியர் என்ன சொல்லவருகிறார் என்பதுதான். அப்படி ஒருங்கிணைவுடன் பின்னால் நின்றிருக்கும் ‘ஓர்’ ஆசிரியன் இல்லை என்பதே நான் சொல்லவருவது. இது நிலைபாடு அல்ல, நானே அவற்றில் கண்டடைவது
ஜெ
அன்புள்ள ஜெ
ஒரு கேள்வி. சங்ககாலத்தை தத்துவமற்ற காலகட்டம் என்று சொல்லமுடியுமா? யாதும் ஊரே யாவரும் கேளிர் போன்ற உயர்ந்த தத்துவங்கள் அக்காலகட்டத்தில் உருவானவை அல்லவா?
எஸ்.சங்கரன்
அன்புள்ள சங்கரன்,
தத்துவசிந்தனை இல்லாமல் ஒரு காலகட்டம் இருக்கவியலாது. பல தத்துவங்களின் வேர்கள் பழங்குடிப் பண்பாட்டில் அமைந்தவை. தத்துவம் இலக்கியத்தில் இயல்பாக வெளிப்படுவதும் எப்போதுமுள்ளதுதான். நான் தத்துவக் காலகட்டம் என்று குறிப்பிடுவது தத்துவசிந்தனை ஒருங்கிணைக்கப்பட்டு ஒரு பெருங்கட்டுமானமாக ஆனபின்னர் இலக்கியத்தை அது முழுமையாக தீர்மானிக்க ஆரம்பித்த பின்னர் உள்ள காலகட்டத்தை. அதாவது தத்துவம் சமூகத்தை வழிநடத்த ஆரம்பித்தபின்புள்ள இலக்கியப்பரப்பை. அது நமக்கு காப்பியகாலகட்டத்தில்தான் நிகழ்கிறது. சங்க இலக்கியங்களில் அவ்வப்போது புறத்துறையின் பாடாண் திணையின் பொருண்மொழிக்காஞ்சில் தத்துவசிந்தனையின் கூறுகளை ஓரளவு காணமுடியும். ஆனால் தத்துவம் மையப்பேசுபொருள் அல்ல என்பதை மேலோட்டமாக படித்தாலே புரிந்துகொள்ளமுடியும். இதைப்பற்றி கைலாசபதி போன்றவர்கள் முன்னரே விரிவாக எழுதிவிட்டார்கள்
ஜெ
இலக்கியத்தில் மாற்றங்கள் – கடிதம்
இலக்கியத்தில் மாற்றங்கள் -கடிதம்
புதிய எழுத்துக்கள்