புரட்சிப்பத்தினி -கடிதங்கள்

vindan

புரட்சிப்பத்தினி

அன்புள்ள ஜெ.,

ஓஷோ ஒருமுறை, இந்திய பெண்கள் சீதையை அல்ல திரௌபதியையே தன் முன்மாதிரியாகக் கொள்ளவேண்டும் என்று சொல்லி இருப்பார்..

உங்கள் கட்டுரையைப் பார்க்கும் போதும், வெண்முரசு படிக்கும் போதும் அது மீண்டும் மீண்டும் உறுதிப்படுகிறது..

என் மகளுக்கு யாரை அடையாளமாக முன்னிறுத்த வேண்டும் என்பதும் புலப்படுகிறது..

நன்றி

ரத்தன்

***

அன்புள்ள ஜெ

புரட்சிப்பத்தினி கட்டுரை வாசித்தேன். நம் இலக்கியம் சினிமா ஆகியவற்றுக்கும் நிஜவாழ்க்கைக்கும் நிறையவே வேறுபாடுண்டு. இலக்கியத்தில் நாம் உருவாக்கும் பெண்கள் நடுத்தர வர்க்கம் சார்ந்தவர்கள். அடித்தளத்தில் விதவைமறுமணம் விவாகரத்து பெண்ணுரிமை எல்லாம் சாதாரணமாக இருந்துகொண்டுதான் இருந்த்து. இதை நான் கிராமத்திலேயே பார்த்திருக்கிறேன். நாம் பிராமணர் வேளாளர்களின் பிரச்சினையை தமிழகத்தின் பிரச்சினையாக்க் காட்டிவிட்டோம் என நான் நினைத்ததுண்டு

ஆனந்த்

***

ஜெ

நான் வளர்ந்தது எல்லாம் சென்னையில் ஒரு குப்பத்தின் அருகில். எங்கள் தெரு தான் நடுத்தர மக்கள் வாழும் கடைசி தெரு. அதற்கு அடுத்ததிலிருந்து குப்பம் ஆரம்பிக்கும். எங்கள் தெருவில் ஒரு அம்மாள் பூவிற்று கொண்டு இருப்பாள். ஒரு நாள் அந்த அம்மாள் ஒரு மெலிந்த குடிகாரனை போட்டு காலால் மிதி மிதி என்று மிதித்து கொண்டு இருந்தாள். பக்கத்தில் இருந்த ஒருவர்,“ என்ன இருந்தாலும் அவன் உன் புருஷந்தானே இப்படியா காலால் மிதிப்பது” என்று சொல்லி சமாதானப்படுத்த முயன்றார். “இதுவா த்து” என்று அந்த அம்மாள் ஒரு ஐந்து ரூபாயை தூக்கி அந்த “புருஷன்” மேல் எறிந்தார், அவரும் அழுது கொண்டே அந்த பணத்தை எடுத்து கொண்டார்.

சற்று நேரம் கழித்து, அந்த அம்மாள் சென்ற பிறகு, வேறு ஒருவர் அந்த முதலாமவரிடம் “இவன் அவளோட புருஷன்னா அந்த கட்டு மஸ்தா தாட்டியா ஒருத்தன் வருவானே அவன் யாரு”. அதற்கு முதலாம் அவர் இவன் “கட்டிண்ட புருஷன்” அவன் “வெச்சீண்ட புருஷன்”. இவ்விரண்டிற்கும் வித்தியாசம் புரிய எனக்கு பல வருடங்கள் ஆயிற்று.

எங்கள் வீட்டிலோ நிலைமையே வேறு, எங்கள் வீட்டில் எங்கள் தந்தை எதோ சிங்கம் குகைக்குள் நுழைவது போல் வீட்டிற்குள்ளே நுழைவார். என் தாயாருக்குகோ (அன்று) அவர் புருஷனை கண்டாலே பயம்.

இன்றும் மேல்சொன்ன நிகழ்வு என்னை பிரம்மிக்கவே செய்கிறது. அந்த அம்மாளுக்கு உள்ள தைரியத்தில் பத்து சதவிதம் கூட எனக்கு இல்லை என்றே நினைக்கிறேன். என் அம்மாவுக்கோ, என்ன சொல்வது பாவம். கட்டின பாவத்திற்காக அந்த ஐந்து ரூபாயை விட்டு எறிந்தது இன்றும் நினைவில் நிற்கிறது

பரத் பிக்காஜி

***

முந்தைய கட்டுரைதிருமதி டென்,ஒன்றுமில்லை -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅசோகமித்திரன் என்னும் அளவுகோல்