அன்புள்ள அண்ணா,
வணக்கம் , கடந்த எட்டு ஆண்டுகளாக தொடர்ச்சியாக காவிய முகாம்களை கவனித்து வருகிறேன். தொடர்ச்சியாக நீங்கள் அழகுணர்வையும், வாழ்வை பற்றிய பெரு நோக்கையும், மதிப்புமிகுந்த தருணங்களையும் உற்றுப்பார்த்து உள்ளுக்குள் சேமிக்க சொல்லிக்கொடுத்துக்கொண்டே வருகிறீர்கள். கலையின் வழியாக தத்துவத்தை, அறிதலை, புரிந்து கொள்ளுமாறு வழி காட்டுகிறீர்கள். கலையின் மேன்மை, அழகு இவை எல்லாமே ஒட்டு மொத்த மானுட சமூகத்திற்குமான விளக்கம் என்றும், மாறாத உண்மையின், அறிதலின் பல முகங்களையும் தரிசிக்க வழி என்று ஒவ்வொருவரும் உணரும் அரிய பல தருணங்களை கடந்து வந்திருக்கிறேன். கலை கலைக்காக எனும் பள்ளியின் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து கூடிக்கொண்டிருக்கிறது.
அழகியலின் வழியாக தத்துவத்தை, இசையை, இலக்கியத்தை, வரலாறை, தொல்கதைகளை, கவிதைகளை, இணைத்து ஒரு பிரமாண்ட மாலையை பின்னுகிறீர்கள். விஷ்ணுபுரம் மாதிரி ஆகாயத்தில் இருந்து பார்த்தால் மிகப்பெரும் மாலையாகவும், அருகில் இருந்து பார்ப்பவர்களுக்கு ஆயிரம் ஆள் உயர மலர்களை கண்டு பீதியடைவது போல அனைவரும் பிரமித்து அதிலேயே லயிக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் இங்கு நான் பல சூதர்களை , பித்தர்களை, யோகிகளை காண்கிறேன். கவிதையால் ஆகர்ஷிக்கப்பட்டு அதில் தோய்ந்து காணும் மெய் அனைத்தையும் கவிதையாய் காண்போர், இலக்கிய இயக்கியும், இசை தேவதையும், காவிய யட்சியும் , தத்துவ தேவனும், தர்க்க யமனும் பீடித்திருக்கும் பலரை காண்கிறேன். இவர்களை எல்லாம் நீங்கள் அழகியல், தர்க்கவியல் எனும் பெருமந்திரம் மூலம் இணைத்து வழி நடத்துகிறீர்கள். அதை ஒரு வழிபாடு போல, ஊறிப்பெருகும் காதலோடும், ஆதுரத்தோடும், இறைவனின் ஆணை போலவும் வழி நடத்துகிறீர்கள். ஆத்மார்த்தமான அர்ப்பணிப்போடு ஆற்றப்படும் அனைத்து செயல்களும் வேள்வியே. தன் வாழ்வையே ஆகுதியாக்கி புரியும் வேள்விகளுக்கு இறைவன் இறங்கி வந்தே ஆக வேண்டும்.
எல்லாரும் உங்களின் முன்னெடுப்புகளை விதைக்கும் செயல் என நினைக்கிறார்கள். நீங்கள் விருட்சத்தை அல்ல, வனத்தை பேருலகம் உருவாக்கும் பெருவனத்தை உத்தேசித்து விதை பரப்புகிறீர்கள். இங்கு ஒவ்வொருவரும் தங்கள் அறிதலால், அழகுணர்வால், தனித்திறனால், இசையால், சஹ்ருதயர்களை செம்மையாக்குகிறார்கள்.துலக்குகிறார்கள், பேணுகிறார்கள். அறிவின் ஒளி சிறு சிறு ஷமித்துகளாக பற்றி பெரிய ஹோமத்தீயாக ஜொலித்து எரிகிறது. புது புது கோணங்களில் வெளிச்சம் பாய்ச்சப்படும் வைரங்கள் தங்களின் அனைத்து சாத்தியமான தரிசனங்களையும் வாசக மனங்களுக்கு அளிக்கிறது. காவிய முகாம் முடிந்து நண்பர்களிடம் கேட்கும் போது ஒருவர் வில் தூரந்தின் மேற்கத்திய தத்துவகதையிலும், இன்னொருவர் இந்த நூற்றாண்டின் 100 மகத்தான படைப்புகளின் பட்டியலோடும், இன்னொருவர் சிற்றிலிக்கியத்திலும், இன்னொருவர் வாக்னரின் இசை கோர்ப்பிலும் தவத்தில் ஆழ்ந்து இருக்கிறார்கள். ஒவ்வொரு காவிய முகாமிலும் சிலர் தங்களுக்கான ஊழ்க நுண்சொல் கொண்டு தவத்தில் ஆழ்ந்து விடுவதை பார்த்துக்கொண்டே தான் இருக்கிறேன். ஓவிய அறிதலின் கரை தொடும் மணிகண்டனும், தத்துவ கல்வியில் தன்னை மூழ்கித்து கொள்ளும் சந்திரசேகரும், கவிதையின் இறுதி சொட்டையும் எக்கி பருகும் வேணுவும்,அழகியல் முழுமை தரிசனம் பெற்ற தேவதேவனும் , கம்பனில் ஞானம் கொண்ட நாஞ்சிலும், இன்னும் கோடி சொல்லித்தீராத நுட்பம் கைவரப்பெற்ற வாசக மனங்களுக்கும் ஊட்டி குருகுலம் ஒரு காமதேனு…
வாக் சூக்தம் (ரிக் வேதம் 10.125)
நான் ருத்ரர்களுடனும் வசுக்களுடனும் உலவுபவள் –
ஆதித்யர்களுடனும் பிரபஞ்சத்தின் சகல தேவர்களுடனும்
அலைபவள் நான்.
நான் மித்திரனையும் வருணனையும் தாங்குபவள் –
இந்திரனையும் அக்னியையும் அஸ்வினிக்குமர்களையும்
என்னில் கொண்டுள்ளவள் நான்.
சோமரஸத்தையும்,
வேள்விக்கூடங்களை அமைக்கும் த்வஷ்டரையும்,
அதனை காக்கும் பூஷனையும், பகனையும்
ஏந்திச்செல்பவள் நான்.
மனம்குவிந்து வேள்வி நிகழ்த்தும் அதன் யஜமானனுக்கு
பெருசெல்வமெல்லாம் வழங்குபவளும் நானேயாம்.
நான் இந்நிலத்தின் பேரரசி.
மங்களங்களும் செல்வங்களும் திரட்டுபவள்.
பிரக்ஞை வடிவானவள்.
முதன்மையாக வணங்கத்தக்கவள்.
பல்வேரு இடங்களில்
பலவடிவமாக
சிதறிப்பரந்து விரிய
ஆணையிட்டிருக்கின்றன
தெய்வங்கள் எனக்கு.
என்வழியாகத்தான்
உண்பவன் உண்கிறான்,
காண்பவன் காண்கிறான்,
கேட்பவன் கேட்கிறான்,
சுவாசிப்பவன் சுவாசிக்கிறான்.
என்னை உணராதவன் கூட
என்னிலேயே உறைகின்றான்.
கேள்!
கவனத்துடன் கேட்பவனுக்காக மட்டுமே
இதைச்சொல்கிறேன் நான்.
தேவர்களுக்கும் மானுடர்களுக்கும்
விருப்பமான இச்சொற்களை
நானே, நான் மட்டுமே,
இங்கு, இப்போது
மொழிகிறேன், கேள்.
எவன் ஒருவன்
என் விருப்பத்துக்குள்ளானவனோ
அவனை
வலிமைகொண்டவனாக,
பிரம்மத்தை அறிந்தவனாக,
ரிஷியாக,
மேதமைகளெல்லாம் பொருந்தியவனாக
ஆக்குபவள் நானே.
பிரம்மத்தின் எதிரிகள் மீது அம்புதொடுக்க
ருத்திரனின் வில்லை வளைக்கிறேன் நான்,
உயிர்களுக்கெல்லாம் போர்புரிகிறேன் –
நான்
விண்ணையும் மண்ணையும் நிறைத்துவிட்டேன்.
மலைச்சிகரத்தில் என் தந்தையை நான் பெற்றெடுக்கிறேன்
என் பிறப்பிடமோ கடலாழத்தில்.
அங்கிருந்து நான் வளர்ந்து வளர்ந்து
உலகிலெல்லாம்
இவ்வுயிர்களிலெல்லாம்
பரவிப்பரவி
வானுயர
ஓங்கி நின்று
தொட்டுவிட்டேன் அதை,
அந்த உச்சத்தை.
வாடையென வீசும்
என் மூச்சுக்காற்றினால்
நானே,
நான்மட்டுமே,
இவை அனைத்தையும்
வடித்தெடுக்கிறேன்.
ஆகவே
விண்ணையும்
மண்ணையும்
மீறிய பெரியோளாக,
பெருமாண்பு பொருந்தியோளாக திகழ்கிறேன்
நான்.
*
இங்கே வாக் சூக்தத்க்தின் இறை ஆணையை நோற்கிறீர்கள். அறிந்தவர்கள் அள்ளி அள்ளி முலை பருகட்டும். வாக்தேவியின் அருள்கிட்டாதோர் வாசலில் பிரார்த்திக்கட்டும்.
அன்புடன்
ராஜமாணிக்கம் வீரா.
***