பனிமனிதன்

pani-manithan-original-imadeww5533bgmfb

அன்பின் ஜெ

நலமே விழைகிறேன். இரு வாரங்களுக்கு முன் ஒரு அறுவை சிகிச்சைக்காக என் மகளை மருத்துவமனையில் சேர்த்திருந்தோம். செல்வதற்கு முன் தயாரான போது மகாதர்சினி மறக்காமல் எடுத்துவைத்தது பாதிவரை படித்திருந்த பனிமனிதன் நாவலை. ஏழாம் வகுப்புக்கு செல்கிறாள் இவ்வருடம். மறுநாள் சிகிச்சை முடித்து மயக்கம் நன்றாக தெளிந்த பின் அன்று பகல் முழுக்க வலியும் வேதனையுமாக சென்றது. இரவு பதினோரு மணிவாக்கில் என்னை பனிமனிதனை வாசிக்க சொன்னாள். புனைவெழுத்தை வாசிக்கும் போது, குறிப்பாக விவரனைகள், பெரும்பாலும் எனக்கு காட்சிகளாகவேத் தோன்றும். மனமொன்றி வாசிக்கும் போது சற்றுநேரத்திலெல்லாம் எழுத்துகள் மறைந்து காட்சிகளாகவேத் தோன்றுமெனக்கு (நல்லதா கெட்டதா எனத் தெரியவில்லை). நமது சென்னை வெண்முரசு கலந்துரையாடலின் போது நண்பர் முத்து சொன்னார் ” ஆக நீங்க வெண்முரச வாசிக்கிறதே இல்ல. எல்லாத்தையும் காட்சிகளாக படமாகத்தான் பாக்குறீங்க போல”.

அதே பழக்கம் என் பெண்ணுக்கும் உண்டு. அவ்வாறு கற்பனையில் விரியாத எழுத்துகள் பிடிப்பதில்லை. வெறுமனே தகவல்களை மட்டும் தராமல் டாக்டர் திவாகர் மூலம் ம்விளக்கும் அறிவியல் கருத்துகளும் பாண்டியனின் சாகச விருப்பங்களும் கிம்சுங்கின் அமைதியும் அப்படியே உள்ளே இழுத்துக்கொள்கின்றன.

மெதுவாக சூரிய ஒளி சிவக்க ஆரம்பித்து மலைச்சிகரங்கள் சிவப்பு நிறம் பெற்று எல்லாப் பக்கமும் செந்நிறமாகி தீயாலான ஒரு பெரிய வெட்டவெளியில் நிற்கும் போது கிம் சொல்கிறான் ” புத்தர் புன்னகை புரிகிறார்”

வலிமறந்து என் மகளும் கண்கள் விரிய முகம் செந்நிறமாக புன்னகைத்தாள்.

அன்பும் நன்றியும் ஜெ.

தங்கபாண்டியன்

செங்கல்பட்டு.

அன்புள்ள ஜெ

பனிமனிதன் நாவலை பன்னிரண்டு நாட்களாக என் குழந்தைக்கு வாசித்துக் காண்பித்தேன். அவளுக்கு ஏழுவயது. இன்னமும் சரளமாக எதையும் வாசிக்கமுடியாது. எழுத்துக்கூட்டி தமிழ் படிப்பாள். ஆங்கிலத்தில் காமிக்ஸ் படிக்கமுடியும். ஆகவே வாசித்துக்காட்டினேன். பனிமனிதனின் ஆழமான தத்துவப் பகுதிகள் கூட இன்றைய குழந்தைகளுக்குப் புரிகின்றன ஏனென்ளால் லயன் கிங் போன்ற காமிக்ஸ்களிலேயே இந்திய தத்துவசிந்தனை பற்றிய முக்கியமான பகுதிகள் வந்துவிட்டன. பலவரிகளை நாம் புரிந்துகொள்வதற்கு முன்னரே அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். சூரிய ஒளி பனியில் விழுவதை புத்தரின் காட்சி என்று சொல்லும்போது அவர்களும் நேரடியாக உள்ளே வந்துவிடுகிறார்கள்

சாகசம் தத்துவம் இரண்டும் கலந்த ஒரு கற்பனை உலகத்தை வாசகர்களுக்குக் காட்டும் நாவல். இதற்கிணையாக ஏராளமான மேலைநாட்டுக் குழந்தைக்கதைகள் உள்ளன. ஆனால் அவற்றில் இல்லாத்து இதிலுள்ள இந்தியத்தன்மை. கதாபாத்திரங்கள் மட்டுமல்ல சிந்தனைகளில் உள்ள அசலான இந்தியத்தன்மை. அதைத்தான் குழந்தைகளுக்கு அளிக்கவேண்டும் என நினைத்தேன்

ஜெயராமன்

முந்தைய கட்டுரைசங்க இலக்கியம் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது