உயிர்த்தேன் பற்றி,,,

thija

 

தி.ஜானகிராமன் விக்கி

அன்புள்ள ஆசிரியருக்கு,
உங்கள் தளத்தில் தி.ஜானகிராமனின் அம்மா வந்தாள் மற்றும் மோகமுள் தாவல்களைப் பற்றிய விமரசனமும் கருத்துக்களும் தொடர்ந்து காணக்கிடைக்கிறது…

ஆனால் அவரின் உயிர்த்தேன் நாவலை, அப்படி ஒரு நாவல் எழுதியுள்ளார் என்றுகூட தாங்கள் எந்த இடத்திலும் குறிப்பிடாமல் தவிர்த்ததுபோல தெரிகிறது.தங்களின் இலக்கிய முன்னோடிகள் நூலில் கூட அவரின் பிற நாவல்களையெல்லாம் குறிப்பிட்டிருந்தாலும் இதன் பெயரைக்கூட குறிப்பிடவில்லை.

வண்ணதாசன் தனது கடிங்களின் தொகுப்பு நூலான எல்லோர்க்கும் அன்புடன் நூலின் ஒரு கடிதத்தில் தி.ஜானகிராமன் நூல்களில் தனக்குப் பிடித்தமானது அம்மா வந்தாளோ மரப்பசுவோ அல்ல உயிர்த்தேன் தான் எனவும் அனுசுயா பாத்திரம் தன்னை மிகவும் பாதித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.இதைப் படித்தபிறகுதான் நான் உயிர்த்தேன் நாவலைப்படித்தேன்.

அதில் செங்கம்மாள் மற்றும் அனுசுயா பாத்திரங்களைவிட என்னை பாதித்தது பழநி பாத்திரம்தான். தான் கொண்டுள்ள காதலை சம்மந்தப்பட்ட நபரிடம் கூட தெரிவிக்காமல் மனதினுள்ளேயே வைத்து மருகும் இம்மாதிரியான குணங்களுடன் எப்போதுமே சிலரை கண்டுகொண்டுதான் இருக்கிறேன்…

தங்களிடம் நான் கேட்பது இந்த நாவலை தாங்கள் பெயரைக்கூட குறிப்பிடாமல் கடந்து செல்வதற்கு ஏதேனும் காரணம் உண்டா, இந்நாவல் உங்களுக்கு ஒவ்வாமை அளிப்பதேன் ..பல மோசமான நாவல்களை மோசமானது எனக்கூறி கடந்து செல்லும் நீங்கள் இதனை மட்டும் தவிர்ப்பது ஏன்?(நீங்கள் நாவலை படித்திருப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்தான் கேட்கிறேன்)

அன்புடன்

சிவா

uyir

அன்புள்ள சிவசுப்ரமணியம்

உயிர்த்தேன் ஜானகிராமனின் மிகச்சுமாரான நாவல்களில் ஒன்று. சொல்லப்போனால் நாவல் அல்ல, தொடர்கதை. ஆனந்த விகடனில், விகடனின் அனைத்துத்  தேவைகளுக்கும் ஏற்ப, அக்கால மோஸ்தர்கள் அனைத்தையும் கடைப்பிடித்து எழுதப்பட்டது.

ஜானகிராமன் போன்ற ஒரு தேர்ந்த எழுத்தாளர் உரையாடல்கள், பெண் வர்ணனைகள் ஆகியவற்றை திறனுடன் அமைக்கக்கூடியவர். ஆனால் அதற்கப்பால் இந்நாவலில் ஒன்றுமில்லை. அந்நாவல் வெளிவந்த காலம் ‘கிராமநிர்மாணம்’ என்ற கருத்து ஓங்கி ஒலித்தது. கிராமத்துக்கு ஓர் இலட்சியவாதி வருவது, அங்கே அழகிய கதாநாயகி இருப்பது போன்ற ‘டெம்ப்ளேட்டுகள்’ அதிகமாக விரும்ப்பட்டன. அவை வங்க நாவல்களிலிருந்து பெறப்பட்டவை. [வங்க மூலங்கள் பெரும்பாலும் அசலான இலக்கியப் படைப்புகள்]. அன்றைய சினிமாவில்கூட இது ஒரு வழக்கமான கதைப்போக்கு.

கிராமத்தைச் சீர்திருத்த அங்கே வந்து தங்கும் பூவராகன், அந்த ஊர் அழகி செங்கம்மா இருவருமே செயற்கையான இலட்சியவாதத் தோரணையில் செதுக்கப்பட்ட கதாபாத்திரங்கள். செங்கம்மாவுக்கும் பூவராகனுக்கும் நடுவே காமம் மறைமுகமாக ஊடாட விடப்படுகிறது. ஆகவே அதை காதல் அல்லாமல் அமைத்திருக்கிறார் ஆசிரியர்

ஜானகிராமனின் கதாபாத்திரங்களிலேயே பலவீனமானது செங்கம்மாதான் என்றுகூடச் சொல்லலாம். அக்கால ஆர்வி, எல்லார்வி பாணி கதாபாத்திரம். ஆறுகட்டி ஊரின் நிலவியல், சமூக அமைப்பு, சாதியச் சிக்கல்கள் எதுவுமே இலக்கியத்திற்குரிய நுட்பத்துடனும் கூர்மையுடனும் சொல்லப்படவில்லை. வணிகக், கேளிக்கை எழுத்துக்குரிய மேலோட்டமான சித்திரங்களே உள்ளன. ஒப்புநோக்க இதேகாலத்தில் ஏறத்தாழ இதேபோல எழுதப்பட்ட எல்லார்வியின் கிராம மோகினி சுவாரசியமான படைப்பு.

நீங்கள் குறிப்பிடும் பழனி, அவனுடைய ரகசியக்காதலை அவன் வெளிப்படுத்தும் உச்சத்தருணம், அதன்பின் செங்கம்மாவின் மாற்றம் எல்லாமே அகிலன் நாவலின் பாணியில் உள்ளன. எந்தச் சந்தர்ப்பமும்  இலக்கியமே. செயற்கையான சந்தர்ப்பங்கள் வழியாகவே உலகின் மாபெரும்நாவல்கள் பலவும் பேசுகின்றன. ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தைத் தொடர்ந்து ஆசிரியர் சென்று சேரும் இடம், உளவியலாழமும் தரிசனமும், அதை இலக்கியமாக்குகிறது. வெறும் கதைத்திருப்பமாக அது அமைந்தால் பயனில்லை.

பொதுவாக நான் ஜானகிராமனின் நாவல்களில் அம்மாவந்தாள், மோகமுள் தவிர வேறு படைப்புகளை கருத்தில்கொள்வதில்லை. அவை அக்காலத்துத் தொடர்கதைகள் மட்டுமே. பின்னாளில் எழுதிய மரப்பசு அதன் மீறல்தன்மைக்காக கருத்தில்கொள்ளப்படலாம். பிறநாவல்களை நான் அவரை புரிந்துகொள்வதற்காக மட்டும் பயன்படுத்துகிறேன், மேற்கோள்காட்டுகிறேன். அவை இலக்கிய முயற்சிகள் அல்ல, வணிகத் தொடர்கதைகள். ஆகவே அவை கலைரீதியான வெற்றிபெற்றனவா இல்லையா என்பது கேள்வியே அல்ல. அனைத்திலும் சில அழகிய தருணங்கள் அமைந்துள்ளன என்பதும் உண்மை. கு.அழகிரிசாமியும் இத்தகைய தொடர்கதைகள் பலவற்றை எழுதியிருக்கிறார், அவருடையச் சிறுகதைகள் மட்டுமே குறிப்பிடத்தக்கவை.

நாவல்களில் ஜானகிராமன் வெற்றிபெறுவது அம்மாவந்தாளில் மட்டுமே. மோகமுள்ளே கூட ஆழமற்ற கதையொழுக்கு மட்டும்தான் என்பது என் எண்ணம். கதைவாசிப்பவர்களுக்குப் பிடிக்கலாம். ஆனால் நாவலுக்குரிய ஆழ்ந்த தேடலும் அழுத்தமான முரண்களும் நிகழாத புனைவுப்பரப்பு அது. ஜானகிராமனின் சிறுகதைகளிலேயே அவர் தமிழின் மாபெரும் படைப்பாளி என்பது உறுதியாகிறது. இன்று வாசிக்கையில் எண்ணிக்கையிலேயே கூட தமிழின் அதிகமான நல்ல சிறுகதைகளை எழுதியவர் புதுமைப்பித்தனுக்குப்பின் ஜானகிராமன்தான் என்று எண்ணத் தோன்றுகிறது

ஜெ

உயிர்த்தேன் – தி. ஜானகிராமன் ரெங்கசுப்ரமணி

உயிர்த்தேன் – சந்தியா

உயிர்த்தேன் சிவராம்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 45
அடுத்த கட்டுரைவாக்குறுதிகளைமீறும்காப்புறுதிநிறுவனங்கள்- எம்.ரிஷான்ஷெரீப்