காட்டில் அலைதல்

kadu2

காடு அமேசானில் வாங்க

காடு வாங்க

அன்புள்ள ஐயா

தள்ளிப் போட்டுக்கொண்டே வந்து, கடைசியில் காடு வாசித்து விட்டேன். காட்டிற்குள் முழுவதும் போகமுடியவில்லை. ஒரு கோணம். ஒரு பார்வை. ஒரு ஒளிக்கோடு மட்டுமே ஒரு வாசிப்பில் சாத்தியமாகியது.

காட்சி விவரங்கள் என் மனதில் காட்டை உருவாக்கவில்லை.ஆனால் உணர்வு காட்டைக் கண்டுகொண்டிருந்த்து. அந்த அயினி மரம், ஒரே தடியாக இருந்தும் வெட்டப் படவில்லை. சலனமில்லாமல் சிறுத்தைக்கு உணவான தேவாங்கு, அந்த்த் தேவாங்கு போலவே சாதுவாக இருந்த ரெசாலம், தேவாங்கு போனதும் பழிவாங்குதலில் நிறைவடைகிறார்.

மழையை வாசிக்கையில் மலைக்காய்ச்சல் போன்ற வாதை ஏற்பட்டது. சில ராகங்கள் சில உணர்வுநிலையில்  கொண்டுவிடுவது போல உங்கள் எழுத்தாலும் முடிகிறது

காட்டிற்கு மலையே ஆதாரம் போலும். மலை இருந்தால் காட்டை உருவாக்கிவிடமுடியும். நகரங்களை தொலைவில் இருந்து மலைகள் பார்த்தபடியே இருக்கின்றன.  தொலைவு, மறைந்து வெளிப்படுதல், கிறக்கம் தரும் மறைபொருள் ஆகிய ஒற்றுமைகளால் சிகரமும் ஆழ்மனமும் ஒன்று போல.

மனிதர்கள் காட்டையும் மனதையும் அறிவதில் வேறுபடுகிறார்கள்.  மனக்காட்டை அறிந்து, கடந்து அடங்கியவன் குட்டப்பன். அவனே இதில் உலையிலே தானூதி உலக கனல் வளர்ப்பவன். சொல்லைப் பிடித்து, சூட்சுமத்தில் தாவி, கபிலரில் கால் வைத்து, அடங்கும் அய்யர் அறிதலில் குட்டப்பனுக்கு அடுத்து நிற்கிறார். அழகில் சொக்கிய கிரி,  பொன்னை ஆற்றில் வீசும்போது உடல் உணர்வையும் வீசி விடுகிறான் கிறங்கி இறங்கும்போது கருணையற்ற விதியால் தூக்கிவீசப்படுகிறான். அவனுடைய கடையேற்றம் மகன்மூலம் வரும்.  .. குரிசு மளிகைக்கடைக்கு வந்து காட்டையும் அறிதலையும் இழக்கிறார். இரட்டையர்கள் கடும் உழைப்பு மூலம் கடக்கிறார்கள்

ரெசாலத்திற்கு தேவாங்கு மீதான பற்றே காட்டை இழக்க வைக்கிறது.தேவாங்கு இயலாமையின் இனிய சரணடைதலின் குறியீடு. இழந்தவரான ரெசாலம் தற்காப்பற்ற இனிய இரையான தேவாங்கின் மூலம் தன் அடித்தளத்தைக் கண்டு கொள்கிறார்.

மிளா தன் கால் அச்சு கல்வெர்ட்டில் பதிவதை அறியாது, விரும்பாது. நீலியின் வாழ்வு போல. எந்த விலங்கும் பதிவை விரும்புவதில்லை. ஒவ்வொரு முறை மலை மழையால் கழுவிவிடப்படும்போதும் காட்டின் உயிர்க்குலம் யாரும் படிக்கமுடியாத கற்படிவங்களில் பதிந்து விடுகிறது.

பெரிய விலங்குகள் தொலைவில் சுட்டப் படுகின்றன. கீரிக்காதன் மரணம் ஒரு வரியில் முடிகிறது. வளர்த்து வளர்த்து பிரமிக்க வைத்த நீலியின் வாழ்வு  ஒரு பத்தியில் முடிகிறது. அமைதியாக ஒழுகிவரும் நீரோடை திடீரென பெரும் பள்ளத்தில் ஆர்ப்பரித்து கொட்டுவது போல, கதை பெரும் வீழ்ச்சியில் ஒவ்வொருவராக முடித்துக் கொண்டு வந்து ஒரு தொலைதூரக் கனவாக நிற்கிறது.

காடு நகரத்தின் அழுக்கை புன்னகையுடன் பார்க்கும் தாய் என்பதை உணரமுடிகிறது

அழகியலை, உளவியலை சிறு குச்சியால் தொட்டு பெருநெருப்பாக விரித்துள்ளீர்கள். இதைவிட பெரிய காடு உங்கள் ஆன்மாவில் உறைகிறது. அதன் ஒரு துளியே இது  .

இருத்தல் மட்டுமே புனிதமாகிறது. காட்டின் பிரம்மாண்டங்கள் காலத்தின் அலைகளில் நிலையாமையில் அசைந்து நினைவுகளில் Standing Waves களாக நிற்கின்றன.

வாசிப்பின் முடிவில், காட்டின் முழுப்பரிமாணத்தை வாங்கிக் கொள்ள முடியாத ஏக்கம் உண்டாகிறது. வேங்கை மலர் தாங்கிய மத்தகத்துடன் யானைகள் எங்கோ பெயர்தெரியாத காட்டில் அலைந்துகொண்டிருக்கும் வரை காடு நாவல் பேசப்படும். மனித நாகரிகம் தன்னை அழித்துக்கொண்டபின்  பெருவெள்ளத்தின் முடிவில் ஒரு விதையிலிருந்து பெருங்காடு மீண்டும் வளர்ந்தெழும்போதும்  நீலியும் கீரக்காதனும் சந்தனக்காடும் மீண்டும் துலங்கி வருவார்கள். மனிதனின் அழுக்கு நகரங்களைத் தாண்டி மிக உச்சியில். பட்டன்சாமி புகுந்துவிடாத மலைக்குகைகளைச்சுற்றி.

அன்புடன்

ஆர் ராகவேந்திரன்

காடு -கடிதம்

காடும் குறிஞ்சியும்

காடு- ஒரு கடிதம்

காடு– ஒரு கடிதம்

காடு – பிரசன்னா

காடு -ஒரு பார்வை

காடு என்னும் மீட்பு

காடு வாசிப்பனுபவம்

அகக்காடு- கடிதம்

காடு- கடிதம்

காடு- கடிதம்

காடு வாசிப்பனுபவம்

காடு- கே.ஜே.அசோக் குமார்

காமமும் காடும்

காடு – ஒழுக்கத்துக்கு அப்பால்…

காடு-கேசவ மணி

முந்தைய கட்டுரைஇமையத்தில் ஒருவன்
அடுத்த கட்டுரைஎம்.எஸ். அலையும் நினைவுகள்-3