சமஷ்டி

சமஷ்டி தத்துவம்

அன்புள்ள ஜெ,

நலமா? நான் நலம்.

எனது நூலான ‘சிறுகாட்டுச் சுனை’ என்ற கட்டுரைத் தொகுப்பை உங்களுக்கு அஞ்சலில் அனுப்பி இருந்தேன். கிடைத்திருக்கும் என நம்புகிறேன். இந்த வருடம் மார்ச் மாதம் சாரு நிவேதிதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வாசகர் வட்ட ஆண்டு விழா சிறப்பாக நடந்தேறியது. அதில் வெளியீடு கண்ட மூன்று நூல்களில் சிறுகாட்டுச் சுனையும் ஒன்று.

இந்த மின்னஞ்சலை நான் எழுதக் காரணம் இத்துடன் இணைத்துள்ள புகைப்படம். சிங்கப்பூரில் உள்ள ஒரு முருகன் ஆலயத்தின் மேற்கூரையில் இந்த ஓவியத்தைப் பார்த்தேன். பெண்களே உடலாக ஆன யானையின் மீது அம்மை அமர்ந்திருக்கும் இப்படத்தைப் பார்த்தவுடன் ஒருவித மனக்கிளர்ச்சி ஏற்பட்டது. படத்தின் கீழே ‘சமஷ்டி தத்துவம்’ என்று எழுதப்பட்டிருந்தது.

உங்கள் இணையப் பக்கத்தில் இந்த தத்துவத்தைப் பற்றி தேடினேன். என்னால் கண்டுபிடிக்க இயலவில்லை. இணையத்தில் இந்தப் பதிவு கண்ணில்பட்டது.

‘வேதாந்தப் பார்வையில், ‘சமஷ்டி, வியஷ்டி’ எனும் தத்துவங்களை அறிமுகப்படுத்திக் கொள்வோம். ஒரு தோப்பு சமஷ்டி என்றும், ஒரு தனி மரம் வியஷ்டி என்றும் உதாரணப்படுத்தலாம். சமஷ்டி என்றால் ‘ஒட்டுமொத்தமான அல்லது ஒருங்கிணைந்த நிலையில் உள்ள’ என்றும், வியஷ்டி என்றால் ‘தனியே அல்லது தனித்த நிலையில் உள்ள’ என்றும் பொருள் கொள்ளலாம். ஒவ்வொரு பூதத்தின் ஒவ்வொரு தனித்த அம்சமும் வியஷ்டி; எல்லா பூதங்களின், ஒரேவிதமான தனித்த அம்சங்களின் தொகுப்பு சமஷ்டி; எல்லா பூதங்களின் எல்லா அம்சங்களின் தொகுப்பும் சமஷ்டி.’

இந்த விளக்கத்தின் அடிப்படையில் அனைத்துப் பெண்களின் ஒருங்கிணைந்த நிலைதான் அம்மை என்பதைத்தான் இந்தப் படம் சொல்கிறதா? எனது புரிதல் சரிதானா?

உங்கள் பதிலுக்காக ஆவலோடு காத்திருக்கிறேன்.

அழகுநிலா

சிங்கப்பூர்

***

அன்புள்ள அழகுநிலா

சமஷ்டி,வியஷ்டி ஆகிய இருநிலைகள் வெவ்வேறு தத்துவ தரிசனங்களில் சின்னஞ்சிறு வேறுபாடுகளுடன் கையாளப்படுகின்றன. ஆகவே அதன் பொருள் இன்னது என ஒன்றைச் சொல்லமுடியாது. சமஷ்டி என்றால் அனைத்தும் ஒன்றான நிலை, வியஷ்டி என்றால் அனைத்துமான ஒன்று தன்னை தனியொன்றாகக் காட்டும் நிலை என்பது பொதுவான பொருள். அத்வைதத்தில் இந்த அர்த்தத்தில்தான் பயன்படுத்தப்படுகிறது இச்சொல்லெதிர்.

தனியாகத் தோற்றமளிக்கையில் அந்த முழுமையின் இயல்புகள் அதில் இருக்குமா, ஒன்றே என்று ஆகும்போது அத்தனி இயல்புகளின் ஒட்டுமொத்தமாக அது திகழுமா என்பதெல்லாம் தத்துவார்த்தமான வினாக்கள். அவற்றுக்கு ஒவ்வொரு தத்துவமரபிலும் ஒவ்வொரு பதில்கள். அத்வைதத்தைப் பொறுத்தவரை வியஷ்டி என்னும் நிலையில் பிரம்மம் வெளிப்படுத்தும் எவ்வியல்பும் சமஷ்டி நிலையில் பிரம்மத்திற்கு உரியன அல்ல.

சாக்த மரபில் சமஷ்டி நிலையில் அனைத்துமாகி நின்றிருக்கும் சக்தியின் அளவிறந்த தன்மை, கருணை, சீற்றம் ஆகிய குணங்கள் வியஷ்டி நிலையில் அன்னைத்தெய்வங்களாகவும் அன்னைகளாகவும் நின்றிருக்கையிலும் உண்டு. அன்னைவடிவுகள் அனைத்திலும் திகழும் அப்பண்புகளின் அளவிறந்த தன்மை, முழுமைநிலைதான் வியஷ்டிநிலையில் உள்ள பராசக்தி.

நீங்கள் சுட்டிய படம் மிக ஆர்வமூட்டுகிறது. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அந்த விளக்கம்தான் சாக்தத்தின் தரிசனம் என நினைக்கிறேன். எது பெண் என்றும் அன்னை என்றும் இங்கே கோடானுகோடியாக வெளிப்படுகிறதோ அதன் ஒட்டுமொத்தமுழுமை, அளவிலாத் தோற்றமே பராசக்தி

ஜெ

***

முந்தைய கட்டுரைஇலக்கிய வம்பர்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 41