மௌனியும் ஜெயகாந்தனும்

அன்புள்ள ஜெ.,

ஜெயகாந்தன் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு “தமிழ் ஹிந்து” வில் ஒரு பேட்டியில் தனக்குப்பிடித்த எழுத்தாளராக மௌனியைக் கூறியிருந்தார். கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்கு முன் ஒரு பேட்டியிலும் அதையே கூறியிருந்தார். இது எதைக்குறிக்கிறது? அவர் மிகக்குறைவாக படிப்பவர் என்று நீங்கள் ஏற்கனவே சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் இலக்கிய முன்னோடிகள் வரிசையிலும் மௌனியை “ஒளிவட்ட”ங்களை விலக்கி எழுதியிருப்பீர்கள்.

அசோகமித்திரன் கூட ஒரு எழுத்தாளரை விமர்சனம் செய்ய குறைந்தது ஐம்பது ஆண்டுகளாவது காத்திருக்கவேண்டும் (அப்படித்தான் நினைக்கிறேன்) என்பது போல் சொல்லியிருக்கிறார். நீங்கள் இலக்கியவரிசை எழுதியே பதினைந்து ஆண்டுகள் கழிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இப்போது நீங்கள் அந்த நூலை எழுதினால் மாற்றம் ஏதும் இருக்குமா? அதாவது வரிசை மாறுவதோ அல்லது விமர்சனங்கள் கூர் கொள்வதோ அல்லது மழுங்குவதோ.

அன்புள்ள,

கிருஷ்ணன் சங்கரன்

***

அன்புள்ள கிருஷ்ணன்

மௌனியைப்பற்றிய என் எண்ணங்களை விரிவாகவே எழுதியிருக்கிறேன். அக எழுச்சியின் ஒரு தருணம் மட்டுமே அவர் எழுத எண்ணியது. அது ஆங்கில கற்பனாவாதக் கவிதைகளின் உலகைச் சேர்ந்தது. அதை மரபுப்பயிற்சியற்ற தமிழில் சொல்லமுயன்றதன் போதாமைகள், அந்த அக எழுச்சியின் எல்லையின்மை உருவாக்கிய தவிப்புகள் இணைந்து உருவானவை அவருடைய கதைகள். அந்த மைய உளஎழுச்சியின் தவிப்பு பதிவானவை நல்ல கதைகள். அவை ஒருசிலவே. ஜெயகாந்தனுக்கு அவற்றில் ஒருகதை பிடித்திருந்தது என்றும் அவ்வப்போது வாசிப்பதுண்டு என்றும் சொல்லியிருக்கிறார். மொழிசார்ந்த ஒரு தொடக்கத்துக்காக அவ்வாறு சிலர் சில படைப்புக்களை வாசிப்பதுண்டு. நான் அதிகமும் கவிதைகளை. பெரும்பாலும் கம்பன்

நான் ஒளிவட்டங்களை அளிப்பதில்லை. ஆகவே விலக்குவதுமில்லை. முடிந்தவரை சரியாகச் சொல்லவெண்டும் என்று மட்டுமே முயல்கிறேன். என் அளவுகோல்கள் பேரிலக்கியங்களிலிருந்தும் என் ஆன்மிக, அழகியல் தேடுதல்களிலிருந்தும் மரபுப் பயிற்சியில் இருந்தும் உருவானவை

அசோகமித்திரன் கூற்றை அவருடைய மனநிலையைப் புரிந்து கொள்வதற்கு மட்டுமே பயன்படுத்தவேண்டும். மற்றபடி அதற்குப் பொருளேதுமில்லை. அதை சரி எனக்கொண்டால் உலகில் இலக்கியவிமர்சனமே இருக்கமுடியாது

ஜெ

***

மௌனி எனும் தொன்மம்

மௌனியும் எம். வி.வி.யும் – எம்.வி வெங்கட்ராம்

*

மௌனியின் இலக்கிய இடம் 1

மௌனியின் இலக்கிய இடம்- 2

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 43
அடுத்த கட்டுரைகுருதிக்குமிழிகள்