பிச்சை
ஜெ
பிச்சை பதிவு படித்தேன். தங்கள் கருத்து மிகச்சரியானது. ஒவ்வொருவரும் அனாதையென கொஞ்ச நாளாவது வாழ்ந்து பழக வேண்டும் என்பது என் எண்ணம். தொப்புள் கொடி அறுந்ததுமே ஒவ்வொருவரும் அனாதைதான்.
சிலருக்கு தாய் தந்தை சொந்தம் நட்பு என எல்லாம் கிடைக்கிறது, வாழ்க்கை மீது விரக்தி வெறுப்பு ஏற்படுவதில்லை. பலர் தனித்து வாழ விரும்புவதே இல்லை. பிறரை மதிக்கும் குணமும் இல்லாதவர் அவர்கள்.
சிலருக்கு கல்வியால் அனுபவத்தால் போதுமென்ற மனம் ஏற்படுகிறது, உறவுகளிடமிருந்து தனித்து யோசிக்க/ வாழ முடிக்கிறது.
Bachelor வாழ்க்கை வாழ்பவர்களுக்கு குடும்பம் ஜாதி மத அடையாளம் தாண்டி மனிதனாக யோசிக்க வாழ வாய்ப்பு கிடைக்கிறது. அப்படி யோசித்தால் மட்டுமே பிச்சை எடுப்பவர்களைப்பற்றியும் அறிய தோன்றும்.
2002ல் நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் ஒரு கால் இழந்த வாலிபர் பிச்சை எடுத்த காசில் பல வேலைகளுக்கு விண்ணப்பித்து, ஒரு வேலையும் வாங்கிவிட்ட நியாபகம்.
இரண்டு கை இழந்த ஒருவரை ரயில் பயணத்தில் பார்த்தேன், பிச்சையெடுப்பவர்தான் செல்போன் வைத்திருந்தார், தன் குடும்பத்துக்கு பேசியதை கேட்டேன்.
மனிதர்களில் பல வகை, சில பயணங்களும், எழுத்தாளர்களும், படங்களும், பாடல்களும், அதை அடையாளம் காட்டுகின்றன, வாழ்வின் அர்த்தம் உணர உதவுகின்றன.
மெரினா, பசங்க ஆகிய இரு படங்களிலும் இயக்குனர் பாண்டிராஜ் பிச்சை பற்றி குறிப்பிட்டிருப்பார்.
மெரினாவில், மகன் மருமாகளோடு வாழப்பிடிக்காமல், வீம்புக்கு வீட்டைவிட்டு வந்து பிச்சையெடுக்கும் தாத்தா கதாபாத்திரம், கடைசியில் பிச்சையெடுக்கணும்னு நினைச்சுக்கூட பார்க்காதீங்கன்னு சொல்லுவார்.
நன்றி
அன்புடன்
பகவதி
***
அன்புள்ள ஜெ
பிச்சை பற்றி எழுதியிருந்தீர்கள். என் சின்ன வயசில் சாவடியில் வெளியூர்க்காரப் பிச்சைக்காரர்கள் தங்கியிருந்தால் அங்கே போய் கூப்பிட்டு வந்து சாப்பாடு போடுவார்கள். வீட்டுக்கு பிச்சை எடுக்க வருபவர்களை எக்காரணத்தாலும் விரட்டிவிட மாட்டார்கள். ஆனால் இன்றைக்குப் பிச்சைக்காரர்கள் மீதான பார்வையே மாறிவிட்டது. அவர்கள் சமூகத்தீங்குகள், களைகள் என நினைக்கிறார்கள். உழைத்துச்சாப்பிடவேண்டியதுதானே என்று பிச்சைக்காரர்களிடம் கேட்பது சாதாரணம். வீட்டுக்குவரும் பிச்சைக்காரரை விரட்டிவிட்டால் லக்ஷ்மி போய்விடுவாள் என்று நம்பிய காலம் போய்விட்டது
ஆனால் இப்படி விரட்டுபவர்களில் எத்தனைபேர் உழைத்துச் சாப்பிடுகிறார்கள்? கணிசமானவர்கள் ஏதேனும் வியாபாரமோ வியாபாரத்தில் ஒரு பங்கையோதானே செய்கிறார்கள்? இவர்களால் சமூகத்துக்கு என்ன நன்மை? எதையாது உண்டு பண்ணுகிறார்களா? பத்திரிகையில் சினிமா பற்றி எழுதுபவன், காமத்தை கலையாக்கி விற்பவன், அரசியல்வாதி இவனையெல்லாம் விடவா பிச்சைக்காரன் மோசமானவன்? பிச்சைக்காரன் கேட்பது ஒருவாய் சோறுதானே? அவனால் சமூகத்துக்குக் கெடுதல் இல்லை அல்லவா? இதை யோசிக்கமாட்டார்கள்
ரமேஷ்
***