பாரதியின் ஆறுமதங்கள்

bharathiar1_thumb[21]

அன்புள்ள ஜெ.,

சமீபத்தில் சுப்பிரமணிய பாரதியின் கட்டுரைத்தொகுப்பை வாசிக்க நேர்ந்தது. ’பாரத தேசத்தில் ஒவ்வொருவனும் செய்வதற்குரிய தியானம்’ என்ற கட்டுரையில் ஆறு மதங்களாக அவர் சொல்வன:

  1. ஐந்திரம் – தேவர்களிலே இந்திரன் தலைவன் என்று சொல்லி பரமாத்மாவை இந்திரன் என்ற பெயரால் வழிபடுவது
  2. ஆக்னேயம் – அக்னியே முதற்கடவுள் என்பது
  3. காணபத்தியம் – பரமாத்மாவை கணபதி என்ற நாமத்தால் வழிபடுவது
  4. சைவம் – சிவனே தேவர்களில் உயர்ந்தவன் என்பது
  5. வைஷ்ணவம் – விஷ்ணுவே மேலான தெய்வம் என்பது
  6. சாக்தம் – சக்தியே முதல் தெய்வமென்பது

இந்த பகுப்பு நீங்கள் தொகுத்திருக்கும் வகைப்பாட்டிலிருந்து சிறிது வேறுபட்டிருக்கிறது. பாரதி தன் சிந்தனையை தொகுத்துக்கொள்வதற்கான தகவல்களை எங்கிருந்து பெற்றுக்கொண்டிருப்பார்,அப்புள்ளிகளிலிருந்து நீங்கள் எவ்விதம் வேறுபடுகிறீர்கள் அதற்கான காரணங்கள் என்ன என்று அறிய ஆர்வமாக இருக்கிறேன்.

நன்றி,

வேணு தயாநிதி

***

அன்புள்ள வேணு

பாரதி இந்த பட்டியலை எந்த நூலை அடிப்படையாகக் கொண்டு சொல்கிறார் என்று தெரியவில்லை. மதம் என்ற சொல் அக்காலகட்டத்தில் இந்திய மரபார்ந்த நூல்களில் ஒருவகையாகவும் மேலைச்சிந்தனைநூல்களில் வேறு ஒரு பொருளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்திய நூல்களில் அது ‘உறுதியான தரப்பு’ என்ற பொருளிலேயே கையாளப்படுகிறது. சங்கர மதம், ராமானுஜ மதம், மத்வ மதம் என்ற சொல்லாட்சிகளைச் சாதாரணமாகக் காணலாம். மேலைநூல்களில் religion என்று நாம் இன்று சொல்லும் பொருளில் பயன்படுத்துகிறார்கள்.

இந்தக்குழப்பம் காரணமாக பழைய நூல்களில் தரிசனங்களையும் மதங்கள் என்றே சொல்வது வழக்கம். சாங்கிய மதம், சார்வாக மதம் என்ற சொல்லாட்சிகள் நாராயணகுருவின் நூல்களில் உண்டு. தரிசனங்களும் வழிபாட்டுமுறைகளும் ஒன்றுடனொன்று குழம்பியமையால் பலவகையான மதங்களின் பெயர்கள் தொல்நூல்களில் உள்ளன. மதங்களின் உட்பிரிவுகளையும் மதங்களாகச் சொல்வார்கள். தார்க்கிக மதம், பாசுபத மதம் போன்ற சொற்களை காணலாம்.

இன்று மதம், துணைமதம், தரிசனம் ஆகியவற்றை வேறுபடுத்திக்கொண்டாகவேண்டும். மதம் என்றால் ஒரு மையத்தரிசனம், அதையொட்டிய தத்துவவிளக்கம், அதிலிருந்து எழும் அனுஷ்டானங்கள் ஆகியவற்றைக் கொண்டதாக இருக்கவேண்டும். மையத்தரிசனம் ஒரு கடவுளாகவும், தத்துவ விளக்கம் மெய்யியலாகவும், அனுஷ்டானங்கள் வழிபாட்டுமுறைகளாகவும் இருக்கலாம். அவ்வாறன்றி மையத்தரிசனம் ஒரு முழுமைநோக்காகவும் அதன் தர்க்கவிளக்கமாக தத்துவமும் அதன் அனுஷ்டானங்களாக துறவு முதலியவையும் இருக்கலாம். ஆனால் இந்த மூன்று அடுக்கு இருந்தால்தான் அது மதம். முதல் வகைக்கு சைவத்தையும் இரண்டாம் வகைக்கு பௌத்தத்தையும் உதாரணமாகச் சொல்லலாம்

துணைமதம் என்பது ஒரு மதத்தில் உட்கூறாகச் செயல்படுவது. சைவமதத்திற்குள் பாசுபதம், காபாலிகம், காளாமுகம், வாமம், மாவிரதம், பைரவம் போன்றவை உள்ளன. தரிசனம் என்பவை ஒரு பிரபஞ்ச தரிசனம் கொண்டவை, அதற்குரிய தர்க்க அமைப்பும் உருவானவை, ஆனால் அனுஷ்டானங்கள் அல்லது வழிபாட்டுமுறைகள் உருவாகாதவை. சாங்கியம், வைசேஷிகம்,நியாயம், யோகம் போன்றவை அவ்வாறானவை. ஒரு மதத்தின் கூறாக இருக்கும் தரிசனங்களை அனுஷ்டானங்களையும் வழிபாட்டு முறையையும் தவிர்த்து தரிசனமாகப் பார்ப்பதுமுண்டு, பூர்வமீமாம்சம், உத்தர மீமாம்சம் போல

ஆறுமதங்கள் முன்பு எவ்வாறு கருதப்பட்டாலும் நாம் இன்று கணிக்கும் ஆறுமதங்கள் சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், காணபத்தியம், சௌரம். இவை ஆறையும் ஒன்றாக்கியவர் சங்கரர். ஷன்மத சங்கிரகம் என அவர் ஆறையும் ஒருங்கிணைத்தது சொல்லப்படுகிறது. அத்வைத மரபிலும் சரி பின்னர் வந்த நூல்களிலும் சரி இந்த ஆறுமே ‘மதங்கள்’ என்று சொல்லப்படுகின்றன. சாங்கியம்,யோகம்,வைசேஷிகம்,நியாயம், உத்தரமீமாம்சம், பூர்வமீமாம்சம் ஆகியவை ஆறுதரிசனங்கள் [ஷட்தர்சனங்கள்]என்று சொல்லப்படுகின்றன

பாரதியாரின் ஆறுமதக் கணிப்பில் ஐந்திரம் ஆக்னேயம் ஆகிய இரண்டும் தொல்வேதமரபின் இரு பிரிவுகள். இந்திரனை மையமாகக் கொண்ட வேதமரபு ஐந்திரம். அக்னியை மையமாகக் கொண்ட வேதமரபு ஆக்னேயம். அவை இரண்டுமே பூர்வமீமாம்சம் என்னும் தரிசனத்திற்குள் அடக்கம். பாரதி சைவம் வைணவம் உட்பட்ட இந்து மையமதங்களில் இருந்து வேறான ஒன்றாக வேள்விமரபை கருதுவது இப்பட்டியலில் தெரிகிறது. ஆகவே இந்தப்பிரிவினை தொன்மையான ஏதேனும் நூலில் இருந்து எடுக்கப்பட்டிருக்கலாம். பத்தாம்நூற்றாண்டின் பக்தி இயக்கத்திற்குப்பின் சைவ வைணவ மையமரபுகளின் ஒரு பகுதியாகவே வேள்விமரபு கலந்துவிட்டது. அதை தனிமதமாகப் பார்க்கும் வழக்கமில்லை.

ஜெ

***

முந்தைய கட்டுரைஅவர்கள் சூழ்ந்திருக்கிறார்கள்!
அடுத்த கட்டுரைதென்னிந்தியக் கோயில்கள்