கஸ்தூரி மணம்

இணையத்தின் அபார வசதிகளில் ஒன்று நினைவுகளில் மூழ்க அது அளிக்கும் வசதி. நேற்று எனக்குப் பிரியமான பழைய மலையாள மெல்லிசைகளை கேட்டுக்கொண்டிருந்தேன். யூ டியூபில் பல படங்களின் பாடல்காட்சிகள் உள்ளன. சட்டென்று இந்தப்பாடலைக் கண்டேன். 1975ல் நானும் என் நண்பன் ராதாகிருஷ்ணனும் குழித்துறை திரையரங்கில் இந்த படத்தை பார்த்தோம். பிக்னிக் என்ற பாடாவதி படம். அப்போதே படம் எங்களுக்கு கேனத்தனமாக இருப்பதாகப் பட்டது. நசீர் ஒரு காட்டிலாகா அதிகாரி. காட்டில் ஒரு விடுதியில் தங்கியிருக்கிறார். ஆதிவாசிப்பெண் லட்சுமியை காதலிக்கிறார்.

அது ஏதோ இந்திப்படத்தின் தழுவல். அதில் லம்பாடிப்பெண்ணை வெளியாள் காதலிப்பான். லம்பாடிகளை பழங்குடிகள் என்று சொல்லமுடியாது, அவர்கள் நாடோடிக்குடிகள். ஏதோ ஈரானி பின்புலம் கொண்டவர்கள். ஆதலால் பெரும்பாலும் அழகானவர்கள். பெண்கள் அழகிகள். அதற்கேற்ப வண்ண வண்ண ஆடைகளை அவர்களே தயார்செய்துகொள்வார்கள். கண்ணாடி பதித்த ஆடைகள் அவர்களின் சிறப்பு. இப்போது அது சர்வதேச மோஸ்தராக ஆகிவிட்டது.

லம்பாடிகள் குலத்தூய்மையை கறாராக பேணக்கூடியவர்கள். குலம்விட்டு காதலிக்கும் பெண்ணையும் காதலிப்பவனையும் விட்டுவைக்க மாட்டார்கள். அவர்களின் குல அடையாளம் இன்றும் நீடிப்பதற்கான காரணம் அதுவே. ஆனால் கேரள பழங்குடிகள் மிக எளீய உடை அணிந்த காட்டு மக்கள். நீக்ரிட் உடலடையாளம் கொண்ட்வர்கள். இந்த பழங்குடிப்பெண் எங்கே இருக்கிறாள் என்று அன்று கிண்டல் செய்துகொண்டோம்.

ஆனால் அந்தபப்டத்தின் பாடல்கள் எங்களை மயக்கின. அதிலும் ’கஸ்தூரி மணக்குந்நல்லோ காற்றே நீ வரும்போள்’ என்ற பாடல். ஜேசுதாஸின் குரல் அந்தமெட்டு வழியாக உருகி வழிவதுபோல. பலநாள் அந்தப்பாடலை நெஞ்சுக்குள் முனகியலைந்திருப்போம். ஆனால் அன்று அதை மீண்டும் கேட்க வாய்ப்பே இல்லை. எங்கள் கிராமத்தில் மொத்தமே நாலைந்து ரேடியோக்கள்தான் அன்று. பாட்டுக்காக ஏங்கி தவிக்கையில் ஒருநாள் ராதாகிருஷ்ணன் மூச்சிரைக்க ஓடிவந்து என்னை அழைத்தான். ஓடிப்போய் பாதிப்பாடலை கேட்டோம். தேன்கடலின் துளி நாக்கில் பட்ட அனுபவம்

அந்தப்பாடலுக்காக காதுகள் தாகமாகவே இருந்தன. பின்பொருநாள் சாலையில் நடந்துசெல்லும்போது திருமணம் ஒன்றில் கிளாரினெட் வாசித்தவர் அதை அற்புதமாக வாசித்தார். மெய்மறந்து சாலையில் நின்றோம். அவரை பின்னால் தொடர்ந்துசென்று மீண்டும் வாசிக்கச்செய்து கேட்டோம்.

எழுபதுகளில் மெல்லிசைக்குழுக்கள் மிகவும் பிரபலம். ஊரில் எல்லா சாஸ்தாகோயில் அம்மன்கோயில்களிலும் பங்குனி சித்திரை மாதங்களில் திருவிழாக்கள். எல்லாவற்றிலும் ’கானமேளா’ உண்டு. அவற்றில் கண்டிப்பாக பாடியாக வேண்டிய பாடல்களில் ஒன்று இது. மஞ்சாலுமூட்டில் ஒருவரை கூட்டம் இருமுறை பாடச்செய்தது.

இன்று மீண்டும் இந்த ஒலிக்காட்சியைப் பார்க்கையில் அது பழசாகிவிட்டிருப்பதனால் அந்த விலக்கம் வரவில்லை. பிரேம் நஸீரின் முகமளவுக்கு மனதுக்குப் பிடித்தமான எந்த பழையநடிகர் முகமும் இன்றில்லை. அதற்கு நான் சினிமாவுக்கு வந்தபின் அவரைப்பற்றி கேள்விப்பட்ட செய்திகளும் காரணம். களங்கமே இல்லாத, மனிதர்கள் அனைவர் மேலும் பேரன்பு கொண்ட ஒரு மனிதர் அவர் என்றார்கள் பலர். இன்று அவர் அப்பாடலை பாடக்காண்கையில் மனம் இனிய நிறைவொன்றை அடைந்தது.

எம்.கெ.அர்ஜுனன் மலையாளத்தின் முதல்நிலை இசையமைப்பாளர்களில் ஒருவரல்ல. ஆனால் இந்தப்படத்தில் அவரது படைப்பூக்கம் உச்சத்தில் இருந்திருக்கிறது. பாடல் ஸ்ரீகுமாரன் தம்பி

கஸ்தூரி மணக்குந்நல்லோ காற்றே நீ வரும்போள்
கண்மணியே கண்டுவோ நீ? கவிளிண தழுகியோ நீ

வெள்ளிமணி கிலுங்ங்குந்நல்லோ காற்றே நீ வரும்போள்
கள்ளி அவள் களி பறஞ்ஞோ? காமுகன்றே கத பறஞ்ஞோ?

பிறபாடல்கள்

வார்கண்ணெழுதி வனபுஷ்பம் சூடி
வைசாக ராத்ரி ஒருங்கி

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=9qBopWwSwxE

சந்த்ரக்கல மானத்து சந்தனமிழி தாழத்து

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=x0MT8HrDyxs#t=11s

ஓடிப்போகும் வசந்த காலமே

http://www.youtube.com/watch?v=MgrQ-Jowb5Y&feature=player_detailpage

முந்தைய கட்டுரைஜனவரி 3
அடுத்த கட்டுரைஉண்டாட்டு – நாஞ்சில் விழா