எம்.எஸ். அலையும் நினைவுகள்-3

em eS

3. அன்னைப்பெருந்தெய்வம்

இளமைப்பருவம் கடக்கவிருக்கும் தருவாயில் உருவாகும் வெறுமை ஒன்றுண்டு. அதுவரை ஆட்கொண்டிருந்த மோகினிகள் நம்மைக் கைவிடுகின்றன. அவை இளைஞர்களை மட்டுமே நாடிச்செல்பவை, இளமை அகன்றதும் தாங்களும் அகல்பவை. அதன்பின் உருவாகும் வெறுமை அச்சமூட்டுவது. அந்தக் காலகட்டத்தில்தான் பெரும்பாலானவர்களை இருளுலக தெய்வங்கள் பிடித்துக்கொள்கின்றன. அவர்களை தங்கள் இடையில் தூக்கி வைத்துக்கொள்கின்றன. இறப்பின்போது இறுதிமூச்சைக் கண்டபின் விட்டுச்செல்கின்றன

அந்தப்பருவத்தில் அடுத்த தெய்வம் வந்து ஆட்கொள்ளநேர்வது ஒரு நல்லூழ். அது விட்டுச்செல்லாது. நம்மை இறுதிவரை பேணி ஊட்டி ஊக்கி உடனிருக்கும். அதற்கு நம் குருதியையும் கண்ணீரையும் கொடுக்கலாம். இலக்கியம் அவ்வாறு இரண்டாவது பெருந்தெய்வமாக வந்து ஆட்கொள்பவர்களே இலக்கியத்தை உண்மையில் அறியவும் அதில் வாழவும் முடியும். எம்.எஸுக்கு அது வாய்த்தது. அதன்பின் அவர் உலகில் சினிமாவும் முழுமையாகவே இல்லாமலாயிற்று. நான் சந்திக்கும்போது எம்.எஸ் சினிமாவையே மறந்துவிட்டிருந்தார். 2005 ல் நான் எழுதிய கஸ்தூரிமான் படம் வெளியானபோது அவரை கட்டாயப்படுத்திக் கூட்டிச்சென்றிருந்தேன். அவர் பதினாறாண்டுகளுக்குப்பின் சினிமா பார்ப்பதாகச் சொன்னார். அவருடைய உலகமே இலக்கியத்தால் சூழப்பட்டுவிட்டிருந்தது

krishnan_nambi

சுந்தர ராமசாமிக்கு எம்.எஸ். அறிமுகமான ஏறத்தாழ அதே காலகட்டத்தில்தான் சுந்தர ராமசாமிக்கு க.நா.சு அறிமுகமாகிறார். க,நா.சு நாக்ர்கோவிலுக்கு வந்து தங்கியிருந்த போது கிருஷ்ணன் நம்பியுடன் சென்று எம்.எஸ் அவரை சந்தித்தார். எம்.எஸ்ஸுக்கு கிருஷ்ணன் நம்பியுடனான உறவு அவ்வாறுதான் வலுப்பெற்றது. இலக்கியம் என்ற ஒன்று உள்ளது, அது முறைப்படி பயிலவேண்டியது என அவர் உணர்ந்தார். முதன்மையான சில இலக்கியங்கள் உருவாகி வந்துள்ளன,வழக்கமான வாசிப்பு முறைகளைக்கொண்டு அவற்றை புரிந்துகொள்ள முடியாது போன்ற புரிதல்களை அவர் மெல்ல கிருஷ்ணன் நம்பியிடமிருந்தும் சுந்தர ராமசாமியிடமிருந்தும் அறிந்துகொண்டார்.

அன்று திருப்பதிசாரத்தில் இளைஞர் அவைகளில் இலக்கியமும்  அரசியலும் பேசப்பட்டுக்கொண்டிருந்த்து. ஆனால் பெரும்பகுதி தகழி, பஷீர் ,கேசவ்தேவ் பொன்குன்னம் வர்க்கி போன்ற இடதுசாரி எழுத்தாளர்களின் படைப்புகள்.மலையாள இலக்கியம் குமரிமாவட்டத்தைச் சேர்ந்த அனைவருக்குமே பெரிய ஊக்கமூட்டியாக இருந்தது. மாற்றாக அவர்களுக்குத் தமிழில் வாசிக்கக்கிடைத்தது கல்கியும் தேவனும்தான். எம்.எஸ். நெடுங்காலம் மலையாள இலக்கியத்தின் அடிமையாக இருந்திருக்கிறார். வெட்டூர் ராமன்நாயரையும், கே.சுரேந்திரனையும் தேடிச்சென்று சந்தித்திருக்கிறார். பி.கே.பாலகிருஷ்ணனை கௌமுதி அலுவலகத்திற்கே சென்று சந்தித்திருக்கிறார். அதன்பின் அவரை வாழ்நாளெல்லாம் நவீன மலையாள இலக்கியம் ஆட்கொண்டிருந்தது.

எம்.எஸுக்கு எப்போதுமே. க,.நா.சு ஒரு தூண்டுதலாக இருந்தார். எம்.எஸ் க.நாசுவை சிற்றுண்டி அருந்துவதற்காக பறக்கையில் ஒரு கடைக்கு அழைத்துச்செல்வதுண்டு. க.நா.சு தன் இலக்கிய நம்பிக்கைகளை எம்.எசுக்கு சொல்லிக்கொண்டே இருப்பார். எம்.எஸுக்கு க.நா.சுவிடமிருந்தே இலக்கிய அறிமுகம் அமைந்தது.  “ஆனா க.நா.சு இலக்கியத்தை ரொம்ப குறுக்கிட்டார். அவர் பெரிய கிராண்ட் நாவல்கள் எதையும் படிச்சதில்லை” என்று எம்.எஸ் ஒருமுறை சொன்னார்.

லா.சா.ராமாமிர்தம்  தென்காசியில் வங்கி அதிகாரியாக வேலை பார்த்தபோது நாகர்கோவில் வந்து சுந்தர ராமசாமியின் இல்லத்தில் தங்கியிருந்தார். அப்போதுதான் அவர் அபிதாவின் ஒரு வடிவத்தை எழுதினார். அபிதாவைப்பற்றி லா.ச.ராமாமிருதம் சொன்னதற்கும் எழுதியதற்கும் பெரிய சம்மந்தமில்லை என்பதே எம்.எஸ்ஸின் கருத்து அவர் உள்ளத்தில் பல அடுக்குகளாக விரியச்சாத்தியமான ஒரு பெரிய கதை இருந்தது. ஆனால் அதற்குரிய மொழிக்காக அவர் முயன்றதில் சற்று சூம்பிப்போன ஒரு சிறிய கதையே வெளியே வந்தது. அபிதாவின் உருவகத்தை லா.ச.ரா உருவாக்கி எடுத்த போது இருந்த எழுச்சி மிக விரைவிலேயே அடங்கி கதையை முடிப்பதற்காக அவளைக்கொன்றுவிட்டார் என்பது எம்.எஸ்ஸின் கருத்து. அந்தப்பிரதியை எம்.எஸ் சற்று மேம்படுத்தியிருக்கிறார். ஆனால் ஒரு எழுத்தாளனுடைய படைப்பெழுச்சி அவிந்தபிறகு அதை எந்த வகையிலும் எழுதி மேம்படுத்த முடியாது, அது அவ்வளவுதான் என்பது அவருடைய எண்ணம்.

ஜானகிராமன் படைப்புகள் சிலவற்றை எம்.எஸ் படித்து தனது கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். அவருடைய பங்களிப்பு முக்கியமாக இருந்தது நீலபத்மநாபன் ஆக்கங்களில்தான் .அன்று இவ்வாறு ஒரு படைப்பு மேம்படுத்தப்படுவதைப் பற்றிய புரிதல் தமிழ் எழுத்தாளர்களிடம் இல்லை. அது வெளியே தெரியாமல் செய்யவேண்டிய செயல் என்று அவர்கள் நம்பினார்கள். நட்பு அடிப்படையில் ஒருவர் பார்த்துச் சொல்வது என்று மட்டுமே அதை கருதினார்கள். எம்.எஸ்ஸும் அந்த அளவிலேயே அதை எடுத்துக்கொண்டார். அவருக்கேகூட தான் செய்துகொண்டிருப்பதன் இலக்கிய மதிப்பு தெரியவில்லை என்றுதான் நினைக்கிறேன்.

காலச்சுவடு வெளிவரத்தொடங்கியபோது அதிலிருந்த கதைகளையும் கட்டுரைகளையும் எம்.எஸ். மேம்படுத்தியதை நான் அருகிலிருந்து கண்டேன். ஒருபோதும் அதிரடி முடிவெடுக்க மாட்டார் என்றாலும் கூட வலுவான கருத்துக்களை எழுத்தாளர்களிடம் சொல்வார். எழுத்தாளன் ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் அப்படியே விட்டுவிடுவார்.  புதிய எழுத்தாளர்களின் படைப்புகளை மேம்படுத்துவது அவ்வளவு எளிதல்ல. தான் ஒரு புதிய மொழியுடன் வந்திருப்பதாக அவன் எண்ணுவான். தன்னுடைய படைப்பு மிக அந்தரங்கமானது என்பதனால் ஒருவர் அதில் கைவைப்பதை விரும்பவும் மாட்டான். படைப்பினுடைய தொழில்நுட்பம் வேறு, அதன் உள்ளடக்கமான கலை வேறு என்று எழுத்தாளன் கண்டுகொள்வதற்கு மேலும் பல ஆண்டுகள் ஆகும் .அதைக் கண்டுகொண்ட எழுத்தாளன் அந்த கலையென்னும் ஆன்மிக அம்சத்தை நோக்கி படைப்பை எத்தனை முறை வேண்டுமானாலும் செம்மைப்படுத்தி, கூர்மைப்படுத்தி செலுத்திக்கொண்டே இருக்கலாம் என்பதை கண்டுகொள்வான்.

இளம் எழுத்தாளர்களின் படைப்புகளை மேம்படுத்துவதற்கு எம்.எஸ் போன்ற புதுமை நாட்டமும் பொறுமையும் ஓரிரு தலைமுறை அனுபவம் கொண்ட ஒருவர் தேவை. ஒர் ஆசிரியனின், தந்தையின் இடத்தில் இருந்துகொண்டு எம்.எஸ்ஸால் அதைச் செய்ய முடியும். எழுத்தாளனின் இயல்பான ஆணவத்தால் அவர் புண்படுவதில்லை என்பது மட்டுமல்ல, ஓர் எல்லை வரை எழுத்தாளனின் ஆணவத்தை அவர் முழுமையாக அங்கீகரிக்கவும் செய்வார்.  “என்னதான் இருந்தாலும் அவர் ரைட்டர் இல்லையா?” என்ற வரியை பலமுறை அவரிடமிருந்து கேட்டிருக்கிறேன். ஒருகுறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் எழுத்தாளனுடைய அந்தரங்கத்துக்குள் பிரதிமேம்படுத்துநர் நுழையக்கூடாது என்ற எண்ணம் எம்.எஸ்ஸுக்கு இருந்தது.

விஷ்ணுபுரம் எழுதிய போது அதனுடைய கட்டற்று பரவும் வடிவம் எனக்கு அச்சத்தையே அளித்தது. ஆகவே அதை எம்.எஸ்ஸுக்கு அனுப்பி அதன் மொழியை செம்மைப்படுத்தி தரமுடியுமா என்று கேட்டேன். முதலில் அந்நாவலை முழுமையாக படித்தபிறகே அவர் கருத்து சொன்னார். “ஒரு தனியான புனைவுமொழிக்காக முயற்சிசெய்துகொண்டிருக்கிறீர்கள். தரப்படுத்தப்பட்ட மொழியை கொண்டு அதை நான் அடித்துவிடக்கூடாது” என்று அவர் சொன்னார். அது முக்கியமான ஒரு கருத்து என்றே நினைக்கிறேன் அவரைப்போன்ற மொழி வல்லுநர்களால் அதை சொல்லமுடியும். தன்முனைப்போ தன் தொழில்மெல் மிதமிஞ்சிய நம்பிக்கையோ கொண்ட ஒரு பிரதிமேம்படுத்துநர் அந்த நாவலின் கட்டற்ற மொழியை இதழியல் நடையாக நீவிச்சரிபண்ணியிருக்கக்கூடும்.

இன்று பரவலாக ஒர் எண்ணமிருக்கிறது உரைநடை என்பது தரப்படுத்த பட்ட ஒரு வடிவம், அனைத்து உரைநடைகளையும் அந்த சராசரித் தளம் நோக்கி நோக்கி நெறிப்படுத்துவதே மொழிமேம்படுத்துபவன் செய்யவேண்டியது என்று. அது நேற்று வரை இருந்த எழுத்தாளர்களும் நேற்றுவரை வாசித்தவர்களும் சேர்ந்து உருவாக்கிய ஒரு சராசரி மொழி. நாளிதழ்களில், அரசு அலுவல்களில், செய்திகளில் புழங்குவது. பொதுக்கருத்துகளுக்கு அது உகந்தது. தெளிவாகப் புரிவது, ஐயங்களற்றது. ஆனால் புனைவுமொழி தெளிவினமையை, பொருள்மயக்கத்தை, மீறலை தன் இயல்பாகக் கொண்டது. எல்லைகடத்தலே அதன் இலக்கு. சொல்வதல்ல உணர்த்துவது, தேவையென்றால் குழப்புவது. இது நூறாண்டுகளுக்கு முன்னரே வில்லியம் எம்ப்ஸன் போன்றவர்களால் சொல்லப்பட்டுவிட்ட ஒன்று. எம்.எஸ் ‘அந்த ஆம்பிகுட்டி போயிரப்பிடாது” என்று சொல்லியே மொழியை மேம்படுத்துவதைக் கவனித்திருக்கிறேன்.

ka.na.su

சுந்தர ராமசாமிக்கும் எம்.எஸ்ஸுக்குமான உறவு மிக ஆர்வமூட்டும் ஒன்று. ஒருவகையில் அது நாம் கண்டு நினைவில் பதிய மறந்து விட்ட சென்ற காலம் ஒன்றின் கடைசிக் காட்சி. எனது தந்தை அவருடைய ஐந்து வயதில் அவருடைய உயிர்த்தோழராகிய நாராயணன் போற்றியை கண்டுகொண்டார். அதன்பிறகு அவர் இறப்பது வரை அனேகமாக ஒவ்வொரு நாளும் அவர்கள் சந்தித்துக்கொண்டார்கள். அவர் இறந்த சில நாட்களுக்குள் நாராயணன் போற்றியும் இறக்க விரும்புவதாக தன் மனைவியிடம் சொன்னார். தொடர்ந்து அந்த மனநிலையிலேயே இருந்தார் ஆறுமாதங்களுக்குள் தானும் உயிர் துறந்தார். அத்தகைய நட்புகள் இண்று பெரும்பாலும் சாத்தியமல்ல ஏனெனில் ஒரே ஊரில் வாழ்வதென்பதே அரிதாகிவிட்டது. ஒரு வாழ்நாளுக்குள் குறைந்தது மூன்று நான்கு இடமாற்றங்கள் ஒரு வாழ்க்கையில் நிகழ்கின்றன. தொழில், தனிப்பட்ட நட்புகள் போன்றவை முற்றிலும் வேறு வேறு தளங்களில் நிகழ்கின்றன.

க.நா.சுவை சந்தித்த நெடுங்காலம் கழிந்துதான் எம்.எஸ்  கநாசுவின் அறிவுத்தளத்திற்கே வந்து சேர்ந்தார். நவீன இலக்கியத்தின் சாராம்சமான பகுதியை அவர் மிக விரைவிலேயே வாசித்து முடித்துவிட்டார். அன்றைய நவீன இலக்கியம் தொடக்கநிலையில் தான் இருந்தது என்றாலும் அதன் மதிப்பீடுகள் தெளிவாக உருவாகிவிட்டிருந்தன. எம்.எஸ்ஸை திருநெல்வேலி ஏ.வி.சுப்ரமணிய அய்யர் எழுதிய இலக்கிய விமர்சன நூல் மிகவும் பாதித்தது அதிலிருந்துதான் கறாரான இலக்கிய மதிப்புகளை அவர் உருவாக்கிக்கொண்டார். ஆனால் தன்னுடைய இயல்புக்கேற்ப ஒருபோதும் தன்னுடைய மதிப்பீடுகளை முன்வைக்கவோ பேசவோ இல்லை

சுந்தர ராமசாமியுடனான உறவைப்பற்றி எம்.எஸ் ஒருபோதும் தானாகவே என்னிடம் பேசியதில்லை அதை ஒர் அந்தரங்கமாக அவர் நினைத்தார் அதைப்பற்றி பேச நாணினார் என்றே தோன்றுகிறது எப்போதாவது நான் அவ்வுறவைப்பற்றி கேலியாகவோ நக்கலாகவோ சொல்லும்போது சிரித்துக்கொள்வார்.சுந்தர ராமசாமியின் நினைவைப் பற்றி சுரா நினைவின் நதியில் என்ற நூலை நான் எழுதியிருந்தேன். அதில் எம்.எஸுக்கு சுராவுக்குமான உறவைப்பற்றி ஒரு சித்திரம் வரும். காலை எட்டுமணியிலிருந்தே எம்.எஸ் எங்கே காணோம் என்று சுந்தர ராமசாமி கேட்டுக்கொண்டிருப்பார் எம்.எஸ் வரும்போது ஏதோ தீவிரமான விவாதம் நடக்கப்போகிற்தென்று நான் நினைப்பேன் ஆனால் வந்த பிறகு இருவரும் கண்களால் கூட பார்த்துக்கொள்ளமாட்டார்கள்

எம்.எஸ் ஓசையில்லாமல் நுழைவார். பையை தூணருகே வைப்பார். சு.ரா வீட்டில் இருக்கும் ஒரு மூங்கில் தொட்டியிலிருந்து இந்து நாளிதழ் எடுத்துக்கொண்டு எம்.எஸ் பக்கத்து அறைக்கு போய் உட்கார்ந்து படிக்க ஆரம்பித்துவிடுவார் அங்கிருக்கும் ஊழியர்களிடம் பேசுவார். வேலை பார்ப்பார். பேசிக்கொண்டிருப்பவர் எங்கே என்று தேடும்படியாக திடீரென்று பையைத்தூக்கிக்கொண்டு கிளம்பிவிடுவார். நாட்கணக்கில் வாரக்கணக்கில் மாதக்கணக்கில் எம்.எஸ்ஸும் சுராவும் பேசிக்கொள்வதேயில்லை.

எம் எஸ், ராஜ மார்த்தாண்டன் நீலபத்மநாபன் நான்

அதைப்பற்றி நான் சு.ராவிடம் கேட்டபோது பேச வேண்டியதெல்லாம் முன்னரே பேசிவிட்டோம் என்றார்.  “பிறகு ஏன் தேடினீர்கள்?” என்றேன்  “அவர் இங்கு இருந்தால் நல்லதுதானே?” என்றார். அன்று அது வேடிக்கையாக தோன்றினாலும் இத்தனை ஆண்டுகளுக்குப்பிறகு அதைப் புரிந்துகொள்ள முடிகிற்து அணுக்கமான நண்பரின் இருப்பென்பது நமக்கு மிக தேவையானது. நமக்கு அது ஒர் உறுதிப்பாட்டை அளிக்கிறது.

எம்.எஸ் சுந்தர ராமசாமியின் படைப்புகளைப்பற்றி என்ன எண்ணினார் ?அதை அறிந்துகொள்ள பலவாறாக நான் முயன்றிருக்கிறேன் சம்பந்தமில்லாத ஒர் உரையாடல் நடுவில் ஓரளவு தெளிவாக அந்த மதிப்பீடுகளைச் சொன்னார். அவரைப்பொறுத்த அளவு இலக்கியத்திற்கு வெளியே இருக்கும் மிகப்பெரிய ஒன்றை நோக்கிச் செல்லும்போதுதான் அந்த இலக்கியத்தின் மதிப்பு உருவாகிறது. பாரதி அவ்வாறு சென்ற ஒரு கலைஞன் .அதன் பிறகு புதுமைப்பித்தன் அதை நோக்கிச் சென்றவர்.  மௌனியை விடவும், தி.ஜானகிராமனைவிடவும், அழகிரிசாமியையும் கி.ராஜநாராயணனையும் விடவும்  சு.ரா அந்தப் பயணத்தில் முன்சென்றவர் என எம்.எஸ் எண்ணினார். அது நட்பினால் உருவான மிகையெண்ணம் அல்ல. அந்த எண்ணமிருந்ததனால் நீடித்த நட்பு அது.

தி.ஜானகிராமன் காமம் போன்ற அன்றாட விஷயங்களால் தன்னை திசை திருப்பிக்கொண்டவர்.  அறத்தை ஒழுக்கமாகப் புரிந்துகொண்டவர். ஆகவே பெரிய விஷயங்கள் நிகழாமல் அவருடைய எழுத்து நின்றுவிட்டது என்பது எம்.எஸின் கணிப்பு. லா.ச.ரா லௌகீகமான உணர்ச்சிகளைக்கொண்டு மெய்யியலை அளக்கமுயன்றவர். தனக்கு அப்பாற்பட்ட ஒன்றை நோக்கிச் செல்லாமல் முழுக்கமுழுக்க லௌகீகமாகவே எழுதியவர் என்பதனால் அசோகமித்திரன் அவருடைய அனைத்து நுட்பங்களுடனும் மிகச்சாதாரணமான எழுத்தாளர்தான் என்றார் எம்.எஸ்.  “இவரு கிட்ட ஒரு ஹையர் எதிக்ஸ் இருக்கு. ஒரு பெரிய காஸ்மிக் எதிக்ஸுக்கான தேடல் இருந்துட்டே இருக்கு” என்று எம்.எஸ். சுந்தர ராமசாமி பற்றி சொன்னார். “ஸ்பிரிச்சுவாலிட்டிய இந்த காலத்திலே எதிக்கலா மட்டும்தான் அணுகமுடியும்னு நெனைக்கறேன்” மொத்தமே சுந்தர ராமசாமி பற்றி எட்டு வரிதான் சொல்லியிருக்கிறார் எம்.எஸ். ஆனால் அது நிறைய யோசித்துச் சென்றடைந்த இடம். அதை அவர் விவாதிக்க விரும்பவில்லை. நாம் மறுக்கலாம், எம்.எஸ். புன்னகை மட்டுமே புரிவார்.

எம்.எஸுக்கு செயலூக்கம் இருந்தது. அவர் மெய்ப்புநோக்காத, பிரதிமேம்படுத்தாத, வாசிக்காத ஒருநாள் இல்லை. கர்நாடக இசையில் ஆர்வம் உண்டு, நாளும் ஒருமணிநேரத்துக்குக் குறையாமல் கேட்பார். நல்ல ஒலிநாடா சேகரிப்பு வைத்திருந்தார். ஆனால் எழுதி முன்னிற்கும் தன்முனைப்பு இல்லை. ஆகவே அவர் நெடுங்காலம் தன்பெயரில் என எதையுமே செய்யவில்லை. நூல்களில் அவர் பெயர் நன்றியறிவிப்பாகக்கூட குறிப்பிடப்படவில்லை.

எம் எஸ் நூல் வெளியீட்டுவிழா

சொல்புதிது மும்மாத இதழை நான் நண்பர்களுடன் இணைந்து ஆரம்பித்தபோது எம்.எஸை நிறைய எழுதச்செய்தேன். நானே கதைகளைத் தெரிவுசெய்து கொடுத்து மொழியாக்கம் செய்யச்சொன்னேன். எல்லா இதழுக்கும் அவர் மொழியாக்கம் செய்தளித்தார். ஆங்கிலம் வழியாக மொழியாக்கம் செய்யப்பட்ட கதைகளும் சகரியாவின் மலையாளக் கதைகளுமாக அவை என் முன்னுரையுடன் இரு தொகுதிகளாக [அமைதியான மாலைப்பொழுதில், யாருக்குத்தெரியும் சகரியா கதைகள்] தமிழினி வசந்தகுமாரால் வெளியிடப்பட்டன. அவரை ஒரு மொழிபெயர்ப்பாளராக முன்னிலைப்படுத்தியவை. ஓருவர் தன் முதிய வயதில் முதல்நூல்களை வெளியிடுவதென்பது ஒருவகையான கிளர்ச்சியை உருவாக்கவேண்டும். எம்.எஸுக்கு அப்படி எந்த உணர்ச்சியும் உருவாகவில்லை. “சூப்பர் புக்ஸ் சார்…நல்லா டிசைன் பண்ணியிருக்காங்க” என்று அருண்மொழி சொன்னபோது அதே அரைப்புன்னகைதான்.

அந்நூல்களுக்கு நானும் அருண்மொழியும் நாகர்கோயிலில் ஒரு வெளியீட்டுவிழா ஏற்பாடு செய்திருந்தோம்.  2003 மார்ச் ஒன்பதாம் தேதி அவ்விழா நாகர்கோயில் டிவிடி பள்ளியில் நடைபெற்றது. குமரிமைந்தன், பொன்னீலன்,நீல பத்மநாபன், வேதசகாயகுமார் ஆகியோர் பேசினார்கள். அவர் மிகுந்த கூச்சத்துடன் அதில் ஏற்புரை வழங்கினார்.அருண்மொழிக்காகவும் எனக்காகவும் மட்டுமே அவ்விழாவில் பங்கெடுப்பதாகச் சொன்னபோது மைக் முன்னால் நின்று அவர் வெட்கத்துடன் சிரித்ததை நினைவுகூர்கிறேன்

ஆனால் எவருமறியாத இலக்கியப்பணிகள் பல உண்டு எம்.எஸின் கணக்கில். அவர் திருக்குறளுக்கும் பகவத்கீதைக்கும் உரை எழுதியிருக்கிறார். தமிழ் ஆங்கில அகராதி ஒன்று தயாரித்திருக்கிறார். விவேகானந்தரின் பொன்மொழிகளைத் தொகுத்திருக்கிறார். கன்யாகுமரி சுசீந்திரம் ஆலயங்களைப்பற்றி இரு நூல்களை எழுதியிருக்கிறார். இவை அவருடைய கன்யாகுமரி நண்பரின் கடையில் விற்பதற்காக அவரால் செய்யப்பட்டவை. பெயரில்லாமல் வெளிவந்தன.

எம்.எஸுக்கு நாமறியும் வகையிலான மதநம்பிக்கை இல்லை. அவர் ஆலயங்களுக்குச் செல்வது அரிதினும் அரிது. எப்போதாவது அழைத்தால்கூட தவிர்த்துவிடுவார். இருமுறை எங்களுடன் சுசீந்திரம் வந்தவர் நாங்கள் கோயிலுக்குள் சென்றபோது சிற்பியான தன் நண்பரைச் சந்திக்க சென்றுவிட்டார். அவர் ஏதேனும் வேண்டுதலோ வழிபாடோ செய்து நான் அறிந்ததில்லை. இலக்கியத்துக்கு அப்பால் அவருக்கு தீவிரமான ஈடுபாடுகள் ஏதுமில்லை

பெயர், புகழ், பணம் ஏதுமில்லாமல் இலக்கியத்தில் செயல்பட முடியுமா? இலக்கியம் தன்னளவில் மனநிறைவையும் மகிழ்ச்சியையும் அளிக்குமா? வாழ்க்கையின் அனைத்துச்சிக்கல்களையும் இலக்கியத்தை மட்டுமே கொண்டு கடக்கமுடியுமா? இலக்கியம் எல்லா வாழ்வலைகளிலும் நம்மைக் காப்பாற்றுமா? இலக்கியம் நம்மை மேம்பட்ட மானுடராக ஆக்குமா?  ஓர் உபாசனா மூர்த்தியாக இலக்கியத்தை வழிபட்டு வீடுபேறடைய முடியுமா? ஆம் என்பதற்கான சான்று எம்.எஸ். அன்னைப்பெருந்தெய்வமாக இலக்கியம் அவருடன் என்றுமிருந்தது.

எம்.சிவசுப்ரமணியம் விக்கி பக்கம்

அஞ்சலி: எம்.எஸ்

எம்.எஸ் – பாராட்டுவிழா. 2003

எம்.எஸ். அஞ்சலி -ஆர் அபிலாஷ்

எம்.எஸ். அஞ்சலி – கே.என்.செந்தில்

முந்தைய கட்டுரைகாட்டில் அலைதல்
அடுத்த கட்டுரைபோகனுக்கு ஆத்மாநாம் விருது