எம்.எஸ். அலையும் நினைவுகள்-1

எம்.எஸ். [நன்றி மின்னம்பலம்]
எம்.எஸ். [நன்றி மின்னம்பலம்]
  1. தேவையில்லாத பொன்

நாகர்கோயிலில் ஒரு சவரக் கடையில் கிரிகரி பெக்கின் பழைய படம் இருந்தது. நான் முடிவெட்டுபவரிடம் அதைப்பற்றிக் கேட்டேன். “எங்க அப்பாவோட படம் சார். அவரு கிரிகோரி பெக்கோட பெரிய ரசிகர். மெக்கன்னாஸ் கோல்ட், கன்ஸ் ஆஃப் நவரோன்லாம் எங்க போட்டாலும் அத எடுக்கற வரைக்கும் பாத்துட்டே இருப்பார். படம்பாக்க திருவனந்தபுரம் திருநெல்வேலி எல்லாம் போவார். மருதைக்குக்கூட போயிருக்கார்” ஆச்சரியமாக இருந்தது. சிற்றூரில் தன் குலத்தொழிலில் கட்டுண்டு வாழ்ந்த ஒருவருக்கு கிரிகரி பெக் எப்படிப் பொருள் அளிக்கிறார்?

எம்.எஸ் கிரிகரி பெக்கின் ரசிகர். எம்.எஸ்  3-12-2017 அன்று மறைந்தபோது நான் கிரிகரி பெக்கைத்தான் நினைத்துக்கொண்டிருந்தேன். 2003 கிரிகரி பெக் மறைந்தபோது எம்.எஸ் என் வீட்டுக்கு வந்திருந்தார்.ஜூன் மாத மழைநாள். “ சார் உங்காள் போய்ட்டாரே” என்றேன். எம்.எஸ் சிரித்துக்கொண்டு”அவன் சினிமாலே இருந்து போய் ரொம்பநாளாச்சு. நெஜத்திலே போனா என்ன போகாட்டி என்ன?” என்றார். “அவரோட படம் ஏதாவது பாப்பமா?” என்றேன். “வேண்டாம். மனசிலே இருக்கிற படம் கலைஞ்சிரும்” என்றார். சுந்தர ராமசாமியுடன் சேர்ந்து “கன்ஸ் ஆஃப் நவரோன்” பார்த்ததை நினைவுகூர்ந்து சொல்லத் தொடங்கினார்.

சுந்தர ராமசாமிக்கு எம்.எஸ் கிட்டத்தட்ட நாற்பதாண்டுகளுக்கு முன்பாகவே அறிமுகமானவர். கிருஷ்ணன் நம்பி வழியாகத்தான் எம்.எஸ்ஸை சுந்தர ராமசாமி அறிமுகம் செய்துகொண்டிருக்கிறார். கிருஷ்ணன் நம்பிக்கு எம்.எஸ் எப்படி அறிமுகம் என்பது சுந்தர ராமசாமிக்குத் தெரியாது .கிருஷ்ணன் நம்பி பூதப்பாண்டிக்காரர். எம்.எஸுக்கு பூதப்பாண்டியில் நிறைய உறவினர்கள் உண்டு. இருவருக்கும் பொதுவாக அன்றிருந்தது ஆங்கிலத் திரைப்படங்கள். அந்த ஆர்வம் அவரையும் சுந்தர ராமசாமியையும் இணைத்தது

ஆங்கில திரைப்படங்களை பார்ப்பதென்பது அன்று ஒரு கேளிக்கை மட்டும் அல்ல. அது ஒரு வகை விடுதலை. அது ஐரோப்பாவுடனும், நவீனநாகரிகத்துடனும், ஏன் உலகத்துடனும் தொடர்பு கொள்வதற்கான வழியாக படித்த இளைஞர்களால் பார்க்கப்பட்டது. ஆங்கிலப்படங்கள் நாகர்கோவிலில் வருவது அரிதினும் அரிது. எம்.எஸ் வாரத்திற்கு ஒருமுறை கிளம்பிச் சென்று திருவனந்தபுரம் திரையரங்குகளில் ஆங்கிலப்படங்களை பார்த்துவிட்டு வருவார். நிறைய தருணங்களில் கிருஷ்ணன் நம்பியும் சுந்தர ராமசாமியும் இணைந்துகொண்டிருக்கிறார்கள்.பின்னர் அவருக்கு திருவனந்தபுரத்திலேயே கொஞ்சநாள் வேலை அமைந்தது.

giri

கிரிகரி பெக்

அன்று இங்கு வரும் ஆங்கிலப்படங்கள் இன்று நாம் பேசும் புகழ்பெற்ற படங்கள் எவையும் அல்ல. பெருவாரியான ரசிகர்களுக்குரிய படங்கள். அனேகமாகக் கௌபாய் படங்கள், போர்ச்சாகச படங்கள். மிக அரிதாகவே ரோமன் ஹாலிடே போன்ற இனிய மென்மையான திரைப்படம் பார்க்க கிடைக்கும். அன்றிருந்த தமிழ்த்திரைப்படச்சூழலுக்கு அவையெல்லாம் செவ்வியல்படைப்புக்கள். காஸாபிளாங்கா என்ற ஹென்றி பொகார்ட் நடித்த படத்தை பார்த்துவிட்டு எம்.எஸ். முகம் மலர பரவரசத்துடன் நெஞ்சில் இருகைகளையும் சேர்த்தபடி திருவனந்தபுரம் திரையரங்குக்கு வெளியே ஆலயத்திற்கு முன்னால் பக்தன்போல நின்றிருந்ததை சுந்தர ராமசாமிஒருமுறை எழுந்து நடித்து காட்டினார். நான் சிரித்து சோபாவில் உருண்டுவிட்டேன்.

அன்றைய இளைஞனுக்கு எட்டுத் திசையும் மூடிய சிமிழென இந்தியா தோன்றியிருக்க வாய்ப்பிருக்கிறது. புத்தகங்கள் கூட மிக அரிதாகக் கிடைக்கும் காலம். உலகம் என்னவாக இருக்கிறது என்பதை ஆங்கில நாளிதழ்களின் சிறிய செய்திக்குறிப்புகளினூடாக மட்டுமே அறிந்துகொள்ளவேண்டியிருந்தது. அவை அனைத்துமே மொழிவழிப் பதிவுகள். அவற்றை காட்சிகளாக ஆக்கவேண்டுமென்றால் கொஞ்சமேனும் காட்சிப்பதிவு தேவை. அந்த ஆங்கிலப்படங்களைப் பார்த்திருக்காவிட்டால் ஹெமிங்வேயையோ சார்ல்ஸ் டிக்கன்ஸையோ உள்வாங்கிக் கொண்டிருக்கமுடியாது என எம்.எஸ். சொல்லியிருக்கிறார்.அவர்களுக்குத் தேவையாக இருந்தவை நிலக்காட்சிகள், நகரங்களின் சித்தரிப்புகள், கடற்பயணங்கள். ஒரு சினிமாக்காட்சியில் தேவாலய மணிக்கூண்டைப் பார்த்தபோதுதான் ஒரு மின்னலாக விக்தர் யூகோவின் நாஸ்தர்தாம் கூனன் நாவலை புதிதாகக் கண்டடைந்தேன் என்றார்

ஸ்பான் போன்ற இதழ்களில் வரும் புகைப்படங்களையே மணிக்கணக்காக மீண்டும் மீண்டும் பார்ப்பதுண்டு என்றார் எம்.எஸ். ஸ்பான், நேஷனல் ஜ்யோக்ராஃபிக் போன்ற இதழ்களை எம்.எஸ் கட்டுக்கட்டாகச் சேர்த்து வைத்திருந்தார், படங்களுக்காக. காலம் மாறி அந்தப்படங்கள் இணையத்தில் வெள்ளமெனக் கொட்டும் சூழல் வந்தபின்னரும் அவற்றை கைவிட அவருக்கு மனம் வரவில்லை. பின்னர் ஒரு சிறுநெருக்கடியால் சொந்தவீட்டை விட்டு விட்டு வாடகைவீட்டுக்குப் பெயர்ந்தபோது அவற்றை எடுத்துப்பார்த்தால் பெரும்பாலானவை மட்கி அழிந்திருந்தன. வேறுவடியே இல்லாமல் தூக்கி போடவேண்டியிருந்தது.

ஒருமுறை சுந்தர ராமசாமி அமெரிக்க பயணத்துக்குப்பின் புகைப்படங்களை எனக்குக் காட்டிக்கொண்டிருந்தார். கிராண்ட் கேன்யனின் பொன்னாக மின்னும் மண்கோபுரங்களின் படங்களை பார்த்துக்கொண்டிருந்தபோது அவர் பெரும் பரவசத்துடன் இளமையில் மெக்கனாஸ் கோல்ட் படத்தில் அவற்றை பார்த்ததை, அப்போது எழுந்த கனவெழுச்சியை, தொடர்ந்து அவை நினைவிலும் கனவிலுமாக வந்து கொண்டிருந்ததை சொன்னார். அந்தப்படத்தில் ஒரு பெண் ஆடையை விலக்கி நிர்வாணமாக ஓடிச் சென்று நீரில் பாய்வாள். [சரேல்னு உறையிலே இருந்து வாளை உருவி அப்டியே குத்தி எறக்குறதுபோல- சு.ரா]அன்றெல்லாம் ஆங்கிலப்படங்களுக்கு இறுக்கமான சென்சார் வழக்கம் இல்லை என்பதனால் அதை திரையரங்குகளில் அனுமதித்திருந்தார்கள். மெக்கனாஸ் கோல்டை பார்க்க வரும் இந்திய இளம்பார்வையாளர்களுக்கு அது ஒரு அதிர்ச்சியூட்டும் காட்சிதான். ஏனெனில் அன்று தமிழ்ப் படங்களில் ஆணும் பெண்ணும் முகத்தை அருகருகே கொண்டு வருவது கூட அனுமதிக்கப்பட்டதில்லை. முந்தானை விலகுவது கூட கவர்ச்சியாக கருதப்பட்டது.

sun

ஆனால் மெக்கனாஸ் கோல்டின் ரசிகர்களுக்கு அதைவிட கவர்ச்சியானதாக இருந்தது பின்னணியில் சென்று கொண்டிருந்த கிராண்ட் கேன்யன் தான். பொன்னைத்தேடிச் செல்லும் கொலைகாரர்களுக்கு பொன் வெவ்வேறு அர்த்தம் கொடுக்கிறது. பொன்னை அல்ல வாழ்க்கையின் சாராம்சத்தைத் தேடிச்செல்கிறார்கள். ஆகவேதான் சாகவும் துணிகிறார்கள்.. ஒரு கௌபாய் படத்தில் அத்தகைய ஒரு கவித்துவமான அம்சம் இருப்பது அத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் தன்னை வியப்பிலாழ்த்துவதாக எம்.எஸ் குறிப்பிட்டார். அவர்களுக்கு ஆங்கிலப்படம் என்ன அளித்தது என இன்று கற்பனையை ஓட்டித்தான் புரிந்துகொள்ளமுடியும். “ஓல்டு டர்க்கி பஸ்ஸர்ட்! ஃப்ளையிங் ஹை!” என்ற பாடல் 20 ஆண்டுகளுக்கு மேலாக தன்னை பரவசத்தில் ஆழ்த்தியிருக்கிறது என்று எம்.எஸ் சொன்னார். அவர் சொன்ன அன்று நான் அதை இணையத்தில் ஓடவிட்டேன். ஒரு தொன்மையான பிரார்த்தனைப் பாடலைக் கேட்பவர்போல உருகும் முகத்துடன் மடியில் கைகளைக் கோத்தபடி அமர்ந்து எம்.எஸ் அதைக்கேட்டார். ”கோல்ட் கோல்ட் கோல்ட்!” என்று சிரித்துக்கொண்டே சொன்னார். “ஒரு பிரம்மாதமான உலககவிதை அளவுக்கே அந்த வரிகள் அன்னைக்கு எங்கள மேலே தூக்கியிருக்கு” என்றார்.

“கோல்ட் கோல்ட்னு பாட்டு போகுது. தங்கமலையா மலைகள் சூரிய வெளிச்சத்திலே தெரியுது, ஜனங்கள் உலோகத்தங்கத்துகாக கீழே சுட்டுட்டுச் சாகிறாங்க. அதான் நாங்க அடைஞ்ச ஞானம். தங்கத்தவிட பெரிசான சிலதுக்காக வாழணும்னு ஒரு நெனைப்பு….”  எம்.எஸுக்கு அந்த பாடலே நினைவிலிருந்தது. “Gold, Gold, Gold, just forget about that gold.Gold, Gold, Gold, you can live without that gold!” என்று முணுமுணுத்தார். நான் அவரிடம் “அங்கெல்லாம் போகணும்னு தோணலையா சார்?” என்று கேட்டேன். “போகமுடியும்ங்கிற நெனைப்பே இல்லியே. ஏதோ சந்திரன், மார்ஸ் மாதிரி… எங்களுக்கு அதெல்லாம் வேற அர்த்தம். குறியீடுகள் மாதிரி எடுத்துக்கிட்டோம். போகமுடியும்னு தோணியிருந்தா அந்த அர்த்தம் வந்திருக்குமான்னு தெரியலை” . நான் பின்னர் கிராண்ட் கான்யன் சென்றேன். அந்த தங்கமலைகளின் விளிம்பில் நின்று “Gold, Gold, Gold, just forget about that gold!” என்று எனக்குள் பாடிக்கொண்டேன். திரும்பி வந்ததும் எம்.எஸை அழைத்து “சார் நான் அந்த செம்பருந்தைப்பார்த்தேன்” என்று சொன்னேன்.

ஆங்கில படங்களினூடாகவே இலக்கியத்திற்கு எம்.எஸ் வந்து சேர்ந்தார். ஏற்கனவே அவருடைய ஊரில் அருமையான நூலகம் இருந்தது. திருவெண்பரிசாரம் எனப்படும் திருப்பதிசாரம்  குமரி மாவட்டத்தின் அக்காலத்துப் பண்பாட்டு மையங்களில் ஒன்று. இந்தியச் சுதந்திரப்போராட்டத்தை ஒட்டி  1910 வாக்கில் அங்கு உருவான நூலகம் அவ்வூர் இளைஞர்களுக்கு தேசிய உணர்ச்சியையும் நவீனஉலகம் பற்றிய கனவையும் உருவாக்குவதாக இருந்தது. நான் எம்.எஸ்ஸை அறிமுகம் செய்துகொண்ட காலகட்டத்தில் அந்நூலகம் கைவிடப்பட்டு அழிந்திருந்தது.  திருவிதாங்கூர் வரலாற்றில் நலம்நாடும் அரசி என புகழ்பெற்ற சேதுலட்சுமிபாய் 1924ல் திருவிதாங்கூர் முழுக்கவே நூலகங்கள் அமைப்பதற்கான உதவிகளைச் செய்யத்தொடங்கினார். அரண்மனையிலிருந்து நிதி வரத்தொடங்கியதும் பல ஊர்களில் நூலகங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அவ்வாறு விரிவடைந்தது திருப்பதிச்சாரம் நூலகம். மருங்கூர் நூலகம் இன்னொரு புகழ் பெற்ற நிறுவனம்.

திருப்பதிச்சாரம் ஆலயம்

சுந்தர ராமசாமி வீட்டில் ப.ராமசாமி மொழி பெயர்த்த ஹிட்லரின் எனது போராட்டம் எனும் நூல் இருந்தது. மிக நேர்த்தியான முறையில் உயர்தரக் காகிதத்தில் அச்சிடப்பட்ட அந்த நூல் 1925 வாக்கில் மொழிபெயர்க்கப்பட்டு கோலாலம்பூரில் வெளியானது. ஹிட்லரை ஒரு நவஉலக நாயகன் என்று அதன் முன்னுரையில் ப.ராமசாமி போற்றியிருந்தார். ஏனெனில் அன்றைய இளைஞனுக்கு பிரிட்டிஷாருக்கு எதிராக ஒரு சக்தி எழ முடியும் என்ற நம்பிக்கையே இருந்ததில்லை. பிரிட்டிஷாரின் கண்களில் விரலை விட்டு ஆட்டும் வல்லமை கொண்ட ஒரு தலைவன் உருவாகிவிட்டான், அவனுக்குப்பின்னால் அணிதிரள்வோம் என்பதே பா.ராமசாமியின் அறைகூவல். எப்படியெல்லாம் ஒரு நவீனநாடாக ஜெர்மனியை ஹிட்லர் உருவாக்கி எடுத்திருக்கிறார் என்பது சுதந்திரத்துக்குப்பிறகு இந்தியாவைக் கட்டமைப்பதற்கான ஒரு வழிகாட்டுதலாகவே அன்று பா.ராமசாமி அவர்களால் கொள்ளப்பட்டது. அந்நூல் திருப்பதிச்சாரத்தின் நூலக முத்திரை கொண்டிருந்தது.

அந்த புத்தகம் திருப்பதிசாரம் நூலகத்திற்கு எப்படி வந்தது என்று நான் எம்.எஸ்ஸிடம் கேட்டேன். “அன்று ஹிட்லர் பெரிய கதாநாயகன்தானே?” என்றார். ஆச்சரியமாக இருந்தது.  “உங்களுக்குமா?” என்றேன். “ஆமா, எனக்கும்கூடத்தான் .பதினஞ்சு வயசிலே ஹிட்லரோட மெயின்காம்ப் புத்தகத்தை படிச்சுட்டு தெருக்களிலே பித்துபிடிச்சவன் மாதிரி அலைஞ்சிருக்கேன். வரலாற்றிலே எனக்கொரு வாய்ப்பு கிடைச்சா ஹிட்லரை மாதிரி பெரிய ஆற்றலோட எழுந்துவந்து இந்தியாவையே மாத்திக்காட்டணும்னு நினைச்சிருக்கேன். அதெல்லாம்தான் அன்னிக்கு என்னை உசிரோட வச்சிருந்தது” அந்த நூலகத்தில் இரண்டு பிரதிகள் ஹிட்லரின் மெயின் காம்ப் இருந்தன. திருப்பதிசாரத்தில் அன்றைய இளைஞர்களில் அதை வாசிக்காதவர்களே மிகவும் குறைவு அந்நூலை முன்பதிவு செய்து வைத்து காத்திருந்து வாசிப்போம் என்றார் எம்.எஸ்.

அன்றைய திருவிதாங்கூர் பிரிட்டிஷாருக்கு கப்பம் கட்டும் தனிநாடாக இருந்ததனால்தான் நூலகத்தில் ஹிட்லர் நூலை வைக்க முடிந்தது .ஆகவே திருநெல்வேலியிலிருந்தும் பிறபகுதிகளிலிருந்தும் அந்நூலை வாங்கி படிப்பதற்காக திருப்பதிசாரத்திற்கு அன்றைய அரசியல்செயல்பாட்டாளர்கள் வருவதுண்டு. கம்யூனிஸ்ட் வானமாமலை அவ்வாறு திருப்பதிசாரத்திற்கு வந்து அந்நூலை வாங்கி அங்கிருந்தே இரண்டு நாளில் படித்து முடித்துவிட்டு திருப்பிக்கொடுத்துவிட்டு போன அனுபவத்தை தான் நினைவு கூர்வதாக எம்.எஸ் சொன்னார். ஹிட்லரை வழிபட்ட எம்.எஸ்ஸை கற்பனை செய்வதே கடினமாக இருந்தது. நாம் காண்பவர் நம் காலத்திற்கு ஏற்ப தன்னை வடிவமைத்துக்கொண்ட இன்னொருவர் என நினைத்துக்கொண்டேன்.

எம்.எஸின் ஆரம்பகால ஆர்வங்கள் அனைத்தும் ஒரு பூஞ்சையான வேளாள இளைஞனுக்குரிய மிதமிஞ்சிய பகற்கனவுகளாகவே இருந்திருக்கின்றன. ஒரு ஹிட்லராகிவிடுவது. ஹிட்லரின் ராணுவத்திற்குள் புகுந்து போருக்குச் செல்வது .சீருடைகள் அணிந்து கொள்வது .கனத்த சப்பாத்துகள் அணிந்துகொண்டு சீர்நடைபோடுவது. கனரக எந்திர வாகனங்கள், அதிவேக விமானங்கள். ஆம் வெள்ளைக்கார பெண்கள்! ஒருமுறை சுந்தர ராமசாமி சொன்னார் எம்.எஸ், கிருஷ்ணன் நம்பி உட்பட நண்பர்கள் ஒர் அறையில் இருந்தபோது தங்களுடைய ஒரே ஒரு ரகசியக் கனவை ஒரு காகிதத்தில் எழுதி ஒரு கவருக்குள் போடும்படி அனைவரிடமும் கேட்டுக்கொண்டார் ஒருவர். அந்தவிளையாட்டில் இறுதியில் காகிதச்சுருள்களைப் பிரித்து பார்த்தபோது ஒன்பது பேரில் ஏழு பேர் வாழ்நாளில் ஒரு வெள்ளைகாரப் பெண்ணை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்பதைத்தான் குறிப்பிட்டிருந்தார்கள்!

திருப்பதிச்சாரம் தெரு

அக்காலத்தைய போர்ப் படங்கள் மேல் அவர்கள் அனைவருக்கும் ஈடுபாடு இருந்திருக்கிறது. குறிப்பாகப் போர்க்களக் காட்சிகளில் சீருடை அணிந்த மிகப்பெரிய ராணுவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட மிகப்பெரிய எந்திரங்களைப்போல கால்கள் கைகளைத் தூக்கி வைத்துச் செல்லும் காட்சிகள் பெருமனக்கிளர்ச்சியை அளித்திருக்கின்றன. மனிதன் ஒரு பெருந்திரளாக, மானுட இயந்திரமாக ஆவதென்பது இன்று சர்வசாதாரணமாகிவிட்டது. ஒவ்வாமையைக்கூட அது உருவாக்குகிறது. ஆனால் 1930-40களில் ஒரு சராசரி இந்தியக்குடிமகனுக்கு மிக அரிய காட்சி அது. அதற்கிணையான ஒன்றை எங்குமே அவர்கள் அடைந்திருக்க முடியாது. அன்று திருவிழாக்கள் இருந்தன என்பது உண்மை. அதில் திரளாக ஆகும் பரவசம் இருக்கத்தான் செய்தது ஆனால் அது கட்டுப்பாடற்றது, தன்னிச்சையானது. சாதாரணமான திரளில் மனிதன் முழுமையாக கரைவதில்லை. ஒருபகுதி கரைந்து கொண்டாடும்போது ஒரு பகுதி எச்சரிக்கை அடைந்து தன்னை தக்கவைத்துக்கொண்டே இருக்கிறது. ராணுவம் அப்படியல்ல, கைகளும் கால்களும் ஒத்திசைந்த அசைவொன்றில் பொருந்தும்போது முற்றிலுமாகவே மனிதன் அந்த மாபெரும் எந்திரத்தின் பகுதியாக ஆகிவிடுகிறான் அது ஒர் எளிய மனிதன் விராடரூபம் கொண்டு எழுந்துவிடுவதுதான்.

அப்படி பேருருவம் கொண்டு எழுந்துவிட வேண்டுமென்ற கனவு அன்றைய இளைஞனுக்கு இருந்ததனால்தான் ராணுவம் சார்ந்த படங்கள் ஒவ்வொன்றும் பெரும் எழுச்சியைக் கொடுத்திருக்கின்றன. மேலும் அன்று உலகப்போர் நடந்து கொண்டிருந்தது உலகத்தில் மாபெரும் வீரதீர சாகசங்கள் நடந்துகொண்டிருக்கின்றன என்ற செய்தி வந்தபடியே இருந்தது. அர்ஜுனனும் அபிமன்யுவும் அஸ்வத்தாமனும் வெவ்வேறு உருவங்களில் உலகெங்கும் எழுந்துவிட்டார்கள் நாம் மட்டும் இங்கே மயக்கிய மரச்சீனிக்கிழங்கை சாப்பிட்டுக்கொண்டு வாழ்கிறோம் என்ற எண்ணம் அவர்களைப் படுத்தி எடுத்தது ஓடிப்போய் ராணுவத்தில் சேர்ந்துவிடவேண்டும் என்ற கனவுதான் இளமையில் எம்.எஸ்ஸை இயக்கியிருக்கிறது. ஆனால் ஒருபோதும் அவரால் அது முடியாது என்று அவருக்குத் தெரிந்தது எப்போதுமே மிக உள்வாங்கிய ஒரு தனியனாக,எங்கும் பொருந்துபவராக, எந்நிலையிலும் உறுத்தாதவராக, அதாவது ஒரு ’முன்னுதாரண’ வேளாள இளைஞனாகவே அவர் இருந்திருக்கிறார். ஒருபக்கம் அவருள் எழுந்த கனவுக்கும் மறுபக்கம் அவருக்கு வாய்க்க கிடைத்த புறவாழ்க்கைக்குமான ஒரு தொடர் சமரசம் என்று எம்.எஸ் அவர்களின் ஆளுமையைச் சொல்லலாம்.

அந்தக் கனவுகளை பங்கிட வந்தவர் என்பதனால் தான் சுந்தர ராமசாமி உடனடியாக எம்.எஸ்ஸுக்கு அணுக்கமானவராக ஆனார். வேறொரு வகையில் சுந்தர ராமசாமி எம்.எஸ்ஸை போன்றவர்தான். உடல் நலிவுற்றவர், அன்று ஒருகிலோ மீட்டர் நடப்பதெல்லாம் மிகப்பெரிய கனவு அவருக்கு. பெண்களைக் கவரும்படியான தோற்றம் தனக்கில்லை என்ற எண்ணமும் ராமசாமிக்கு இருந்தது. திரும்ப திரும்ப தன் குடும்பமும் ஜாதியும் வகுத்திருந்த எல்லைக்குள்ளேயே வாழப்போகிறோம் என்று உள்ளூர தெரிந்திருந்ததன் சலிப்பு. அந்த விதிக்கு எதிராக அவர்களுக்குள்ளிருந்த இளைஞன் கனவு கண்டுகொண்டிருந்தான். போர்க்களங்களை, துப்பாக்கிகளை,மரணத்தை, புகழை. சுந்தர ராமசாமியின் கனவுகளில் ஸ்டாலின் குடிகொண்டிருந்த காலம். பதக்கங்களும், சீருடையும் தொப்பியும், கூர்மையான மீசையும், கடுமையான கண்களும் கொண்ட ஸ்டாலின் ஒரு போர்க்கடவுள் போல இளைஞர்களை அன்று ஆட்கொண்டிருந்தார். சுந்தர ராமசாமி ஒருமுறை சொன்னார். ’கம்யூனிசத்தால் அல்ல, ஸ்டாலினிசத்தால்தான் நாங்கள் கவரப்பட்டோம்’ என்று. ஸ்டாலினிசத்தில் இருந்த ’ஆண்மை’ அவர்களை நூறுகைகளால் கவர்ந்திழுத்தது

இன்று யோசிக்கும்போது அந்த உணர்வுகளின் வரலாற்றுப்புலத்தை புரிந்துகொள்ள முடிகிறது. அன்று இருநூறாண்டுகளுக்கு மேலாக இந்தியா அடிமைப்பட்டுக்கிடந்தது. போர்கள் நிகழ்ந்துகொண்டிருந்த காலம் முழுமையாகவே முடிவுக்கு வந்து இந்தியா முழுக்க ஒருவகையான புறவய அமைதியை பிரிட்டிஷ் அரசு உருவாக்கிவிட்டிருந்தது. ஒவ்வொரு ஜாதியும் அதனுடைய மாறாத வாழ்க்கைச் சக்கரத்தில் சிக்கிக் கொண்டிருந்தது. ஒன்றும் நிகழாத வாழ்வு. புதுமைப்பித்தன் சொல்வது போல சீலைப்பேன் வாழ்வு. அந்த வாழ்விலிருந்து மீண்டெழ வேண்டுமென்று ஒவ்வொரு இளைஞனும் துடித்து அந்த வாழ்விலேயே திரும்ப விழுந்து அமைவதுதான் அன்றைய யதார்த்தம்.

மீறி எழவேண்டுமென்ற அந்தக்கனவு ஸ்டாலினையும் ஹிட்லரையும் கண்டு கொண்டது என்று புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. தன் உச்சகட்டம் வெளிப்படும் ஒரு தளத்தை கண்டடைகிறது அவ்வுள்ளம். தான் யார் ,தன்னுடைய அளவென்ன என்று தெரியாத வயதில் தான் என்பது அனைத்துச் சாத்தியங்க்ளும் கொண்ட ஒன்று. எந்த எல்லைக்கும் செல்லக்கூடியது. கடற்பயணங்களில் ஈடுபடலாம். நீர்மூழ்கிக்கப்பல்களில் பயணம் செய்யலாம். இமையமலைமுடிகளில் ஏறலாம். பகற்கனவுகளுக்கு எல்லையே இல்லை. அந்த மீறலின் கனவுகளை இருவரும் பகிர்ந்துகொண்டார்கள்.. ஸ்டாலினும் ஹிட்லரும் கைகோர்த்துக்கொண்டனர்.

திருப்பதிசாரம் குளம்

ஆகவேதான் எம்.எஸுக்கு மட்டுமல்ல சுந்தர ராமசாமிக்கும் அக்காலகட்டத்தில் போர்ப் படங்களும் சாகசப்படங்களும் கிளர்ச்சியூட்டியிருக்கின்றன. அவர்களின் அந்தக்காலகட்டத்தை கொண்டாட்டமாக ஆக்கியவை அவை. கன்ஸ் ஆஃப் நவரோன், ஃபைவ் மென் ஆர்மி, லாங்கஸ்ட் டே, பிரிட்ஜ் ஆன் ரிவர் க்வாய். அவை அவர்களுக்கு சூழலும் வாழ்க்கையும் விதித்த எல்லைகளைக் கற்பனையால் கடப்பதற்கான சாதனங்கள். சாகசங்கள் எல்லாம் ஒருவர் தன்னைத்தானே கடப்பதற்கானவைதான். அப்போது எம்.எஸுக்கு திருவனந்தபுரத்தில் திருவிதாங்கூர் பத்திரப்பதிவுத்துறையில் பணி கிடைத்துவிட்டிருந்தது. பின்னர் தமிழக அரசின் ஊழியராக ஆனார். நாகர்கோயிலுக்கு வந்தார். சுந்தர ராமசாமியுடனான உறவு அதன்பின்னரே வலுவாயிற்று.

அறுபதுகளுக்குப்பிறகுதான் எம்.எஸ்ஸின் ரசனையில் இலக்கியம் அழுத்தமான செல்வாக்கைச் செலுத்த ஆரம்பித்தது. அதற்குள் சுந்தர ராமசாமி இலக்கிய உலகில் எரிவிண்மீன் என எழுந்துவிட்டிருந்தார். அவ்வுலகில் எம்.எஸ் இல்லை. சு.ராவுக்கென வேறொரு நட்புலகம் உருவாகிவிட்டிருந்தது. இடதுசாரிகள், நவீனப்படைப்பாளிகள். அவர்களை எம்.எஸ் சந்தித்ததே இல்லை. உலகப்போர் பற்றிய செய்திகள் அடங்கியபின் போர்வழிபாடு மெல்ல குறைந்தது. இடதுசாரி இயக்கம் எழுந்து அரசுவன்முறையால் அது ஒடுக்கப்பட்டு அன்றைய இளைஞர்களின் மிதமிஞ்சிய கனவுகள் கட்டுக்குள் வந்தன. அத்துடன் ஒவ்வொருவருக்கும் தாங்கள் எதுவரை செல்ல முடியும் என்று தெரியத் தொடங்கியது.

எம்.எஸ் மென்மையான காதல்கதைகளுக்கு திரும்பிய காலம். ஆட்ரி ஹெப்பர்ன் மேல் காதல் கொண்டு மீண்டும் மீண்டும் ரோமன் ஹாலிடேயை பார்க்க ஆரம்பித்த திசை மாற்றம் . முழுமையாகவே அரசியலில் இருந்து அவருடைய உள்ளம் திசைமாறியது. நான் சந்தித்த எம்.எஸுக்கு தோராயமாக ஓர் அரசியல் ஈடுபாடு இருந்ததே ஒழிய பெரிய அளவிலான அறிதலோ உணர்வுகளோ இல்லை. இத்தனைக்கும் இளமையிலிருந்து நாள்தோறும் நாலைந்து தினசரிகளை வரிவரியாக வாசித்து முடிக்கும் வழக்கம் கொண்டவர். அரசியலால் ஆவதொன்றில்லை என்று கண்டுகொண்டிருக்கலாம்.ஆனால் வானில் பறக்கமுடியாதென்று தெரிந்தாலும் சேவல் தினந்தோறும் காலையில் ஒருமுறை கூரைமேல் ஏறி சிறகடித்துக் கொக்கரித்துக் கொள்வதுண்டு.

[ மேலும்] 

முந்தைய கட்டுரைபிச்சை -கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 35