நிலமும் நதியும்- கடிதங்கள்

பழைய நிலங்கள்

என்றுமுள்ள நதி

அன்புள்ள ஜெ.

வணக்கம், நலம். நலம்தானே.

பழைய நிலங்கள் வாசித்தேன். கடைசி வரிகளுடன் உங்கள் படத்தையும் கண்டு திடுமென கண்கலங்கினேன். மிகப்பொருத்தமான இடத்தில் அப்படம். இப்படம் இனி எப்போதும் என் கண்ணை விட்டு அகலாது. கருவடிவமும் பருவடிவமுமாய் மாறிமாறிநிற்கும் வாழ்க்கையில் மூதாதைகளின் வழிவழியாய் வந்த உளத்துயரும் உள எழுச்சியும் ஒருங்கே அமைந்திருந்த அக்கணம்.

நன்றி. நலம்வாழ இயற்கையை வேண்டுகிறேன்.

பணிவன்புடன்

எம்.கே.குமார்

***

அன்புள்ள எம்.கே.குமார்

நலம்தானே? நானும் நலம். பழைய நிலங்கள் போன்ற கட்டுரைகள் ஒருவகையில் காலம் கடந்துசெல்வதன் உணர்வுகள். ஒருவகையான சுய கணக்கெடுப்பும்கூட.

ஜெ

***

அன்புள்ள ஜெ

பழையநிலங்கள், என்றுமுள்ள நதி இரண்டு கட்டுரைகளும் ஒன்றையொன்று நிரப்புவதுபோல உள்ளன. பழையநிலங்கள் அங்கே எங்கோ சென்றுவிடுகின்றன.நதி என்றும் ஓடிக்கொண்டிருக்கும்

செல்வா

***

அன்புள்ள செல்வா

ஆம், அந்த இரு கட்டுரைகளும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. நானும் இப்போதுதான் கவனித்தேன்

ஜெ

***

 

அன்புள்ள ஜெ

என்றுமுள்ளநதி கட்டுரை வாசித்தேன். உண்மையில் அதே உணர்வை நானும் அடைந்தேன். நான் உங்கள் தளத்தை வாசிக்க ஆரம்பித்து பத்தாண்டுகளாகின்றன. எனக்குக் கல்யாணமான ஆண்டு. இப்போது என் பையனுக்கு எட்டு வயது. எவ்வளவோ பயணங்களில் உங்களுடன் மானசீகமாக வந்திருக்கிறேன். இமையமலையில். வடகிழக்கில். ஏராளமான இடங்களில் அலைந்திருக்கிரேன். உங்கள் வாழ்க்கையில் ஒருபகுதியாகவே என்னை உணர்ந்திருக்கிறேன். இப்போது அவ்வப்போது பழைய கட்டுரைகளை வாசிக்கையில் எனக்கே பெரிய நஸ்டால்ஜியா உருவாகிறது. குறிப்பாக முதல் இந்தியப்பயணம். அதைத்தான் நான் ஒவ்வொருநாளும் தேடித்தேடி வாசித்துக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு நாளும் அந்தக்கனவிலேயே வாழ்ந்தேன்

நண்பர்கள் பிரிந்துசெல்வது தவிர்க்கவே முடியாது. கல்லூரி நண்பர்களில் நம்முடன் எத்தனைபேர் இருக்கிறார்கள்? நண்பர்களுக்கு நாம் எவ்வளவு முக்கியம் என்பது நமக்கு இப்படி அவர்கள் பிரிந்துசெல்லும்போதுதான் தெரிகிறது. நண்பர்கள் ஒரு சின்ன விஷயத்துக்காக நட்பை முறித்துக்கொள்ளும்போது அந்தச்சின்ன விஷயத்தைவிட சின்னதுதான் நமது மதிப்பு என்று தோன்றுகிறது. அது மிகப்பெரிய ஒரு சோர்வை அளிக்கும். ஆனால் அது தெரியவந்ததே நல்லதுதானே என்றுதான் நினைக்கவேண்டும்

இதெல்லாம் உங்களுக்கு தெரியாதது அல்ல. நான் உணர்ந்ததைச் சொன்னேன். நீங்கள் ஒரு இன்ஸ்பிரேஷனாக இருந்துகொண்டிருக்கிறீர்கள். அது உங்களுக்கு எவ்வளவு தெரியும் என்று புரியவில்லை. ஆகவேதான் இதை எழுதினேன்

ராமச்சந்திரன்

***

அன்புள்ள ராமச்சந்திரன்

நலம்தானே?

தெரிந்தவைதான். ஆனால் சொல்லிப்பார்க்கையில் ஒரு சின்ன சீண்டும் இனிமை. முள்முனையின் வருடல்போல

ஜெ

***

அன்புள்ள ஜெ

என்றுமுள்ள நதி கட்டுரையில் நண்பர்களைப் பற்றிச் சொன்னீர்கள். அரசியல், தனிப்பட்ட அகங்காரம் போன்றவற்றால் நண்பர்கள் விலகிச்செல்வதுண்டு. அதைவிடமுக்கியமானது வயதாவது. இளமையில் நமக்கிருக்கும் தீவிரம் நம்மை நோக்கி நண்பர்களை ஈர்க்கிறது. நீங்கள் அதே வேகத்துடன் இருக்கிறீர்கள். அவர்களுக்கெல்லாம் லௌகீக ஆசைகள் கட்டாயங்கள். வயசாகிறது. அந்த வேகம் இல்லை. அப்படியெ விலகிச்சென்று அவர்களுக்கு ஏற்ற சூழலை அவர்கள் உண்டுபண்ணிக்கொள்கிறார்கள். இது இயல்பான விஷயம்தான் என நினைக்கிறேன். அந்த இடத்தில் புதியவர்கள் வருகிறார்கள். அவர்க்ள் வருவதே நீங்கள் உங்கள் வேகத்துடன் இருப்பதற்கான ஆதாரம் இல்லையா?

ஆ.அருணாச்சலம்

***

அன்புள்ள அருணாச்சலம்

உண்மைதான். பலசமயம் பழைய நண்பர்கள் நாம் உயிர்ப்போடிருக்கிறோம் என்பதற்கான சான்றுகளாகத் தெரிகிறார்கள்

ஜெ

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 32
அடுத்த கட்டுரைஇல்லுமினாட்டி – கடிதங்கள்