அம்மா வருகை – கடிதம்

thija

அன்புள்ள ஜெமோ சார் அவர்களுக்கு வணக்கம்.

 

 

நேற்றிரவு நெடு நேரம் தூக்கம் வராமல் புரண்டுகொண்டிருந்தேன்.காரணம் ’அம்மா வந்தாள்’.முப்பது ஆண்டுகளுக்கு முன் என் முப்பதாவது வயதில் தி.ஜாவை வாசிக்கத்தொடங்கியிருப்பேன்.அவரது அனைத்து நாவல்கள் மற்றும் சிறுகதைத் தொகுப்புகளையும் வாசித்தேன்.ஆனால் அப்போதெல்லாம்  நாவல் வாசிப்பென்பது வெறுமனே கதையோட்டத்திற்கான ரசனையோடு மட்டுமே நின்று விட்டதற்காகவும் வாசிப்பைக் கூர்மைப் படுத்திக்கொள்ள தற்போதைய காலகட்டத்திலுள்ளதைப் போன்ற வசதிகளும் வாய்ப்பும் இல்லாமல் போய் விட்டதே என்கிற ஒரு அங்கலாய்ப்பும்,சிறுமையுணர்வும் ஏற்படுவதைத் தவிர்க்க முடிவதில்லை.

 

தற்போது தங்கள் தளத்தில் ’அம்மா வந்தாள்’ பற்றிய பதிவுகளை வாசித்த பிறகு அதை மீள் வாசிப்பு செய்ய நேர்ந்தது.தற்போது முன்போல் ஒரே மூச்சாக வாசித்துப்போக முடியவில்லை.காரணம் தங்கள் எழுத்தையும்,தளத்தையும் தொடர்ந்து வாசித்து வருவதினாலோ என்னமோ வாசிப்பனுபவம் பட்டை தீட்டிக்கொண்டு விட்டதாக உணர்கிறேன்.அதனால் நாவலை இரண்டு,மூன்று அத்தியாயங்களாக மட்டுமே படிக்கமுடிந்தது.படித்ததை அசை போட்டு அசை போட்டு, அனுபவித்து அனுபவித்து சுவைத்தேன். நேற்றுதான் படித்து முடித்தேன்.தூக்கம் வராததற்கு அதுவே காரணம். உள்ளுக்குள் ஒரு புயலுக்கான அத்தனை அம்சங்களும் முட்டி மோதி அலைகழித்துக் கொண்டிருந்தன.( ஒரு வேளை  வெண்முரசின் மழைப்பாடலில் தாங்கள் எழுதியிருந்ததைப்போல் நானும்  பேரரசி சத்தியவதியைப்போல இரவில் விழிப்புவந்தால் மீண்டும் துயில் வரும் காலத்தைக் கடந்துவிட்டேனோ? என்னமோ?) இரவு முழுக்க நனவிலும் கனவிலும் அலங்காரத்தம்மாளும்,அப்புவும்,தண்டபாணியும், பவானியம்மாளும்,இந்துவுமாக மாறி மாறி வந்து போனார்கள்.அவரவர் தரப்பு நியாயங்களை என்னிடம் கூறி முறையிட்டுக் கொண்டேயிருந்தார்கள்.

 

இந்த அவஸ்தையை யாரிடமாவது பகிர்ந்து கொள்ளாமல் தீராது என்று தோன்றியது.சரி காலையில் உங்களிடமே கொட்டித் தீர்த்துக்கொள்வது என்று முடிவெடுத்த பின்னர்தான் தூங்கவே முடிந்தது.இந்த அனுபவத்தை அவஸ்தை என்ற ஒற்றை வார்த்தையில் சுருக்கினால் அது சரியாகப் படவில்லை.அது ஒரு சுகானுபவம்,ஒரு புதிய திறப்பு என்றுதான் கொள்ள வேண்டும்.இந்த மாதிரியான இலக்கியம் சார்ந்த சுகானுபவங்களை பெற காரணமாய் அமைந்த தங்களுக்கும்,தங்கள் தளத்தின் வழியாக கட்டுரைகளை எழுதிவரும் தேர்ந்த வாசக எழுத்தாளர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்ளவே இக்கடிதம்.

 

நன்றி.

 

அன்புடன்,

 

R.விஜயன்

 

புதுவை.

அம்மா வந்தாள் – கடிதங்கள்

அம்மா வந்தாள் -கேசவமணி

அம்மா வந்தாள்: மூன்றாவது முறை…

வேட்கை கொண்டபெண் -கடிதங்கள்

வேட்கைகொண்ட பெண்

ஆழமும் அலைகளும்

சல்லாபமும் இலக்கியமும்

பகற்கனவின் பாதை- கடிதம்

 

வலசைப்பறவை 6 : பகற்கனவின் பாதையில்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 31
அடுத்த கட்டுரைஆமிர்,நீர் -கடிதங்கள்