ராஜாஜியின் பொருளியல்கொள்கைகள்
ராஜாஜி பிரதமராகியிருக்கலாமா?
அன்புள்ள ஜெ,
இந்தக்கருத்தை உங்கள் மீதான மாற்றுக்கருத்தாக முன்வைக்கவில்லை. எனக்கு தமிழக அரசியலில் அந்த அளவுக்கு பழக்கம் இல்லை. நான் பிறந்ததே எண்பத்திரண்டில்தான். ஆனால் வழக்கமாக கேள்விப் படும் சில விஷயங்களை தெளிவுப் படுத்திக் கொள்ள விரும்புகிறேன். திராவிட இயக்கத்தவரின் மேடைகளில் சொல்லப் படும் கருத்துக்கள்தான்.
அதாவது தமிழகத்தின் எல்லைகளை பாதுகாப்பதில் ராஜாஜியும் காமராஜும் தோல்வியடைந்து விட்டார்கள். காமராஜ் கவனக் குறைவாக இருந்த காரணத்தால்தான் பீர்மேடு,தேவிகுளம் பகுதிகள் பறிபோயின. முல்லைப் பெரியாறு அணை தமிழகத்துக்கு கிடைக்கவில்லை. ராஜாஜி திருப்பதியை தமிழகத்தில் இருந்து பிரிக்க விட்டார். வட வேங்கடம் என்று சொல்லப் படும் தமிழக எல்லை இதனால் இல்லாமலாகியது. திராவிட இயக்கத் தலைவர்களான மபொசியும் பெரியாரும் சேர்ந்து போராடியதனால்தான் தமிழக எல்லைகள் இந்த அளவுக்காவது மீட்கப் பட்டன. இதெல்லாம் பரவலாகச் சொல்லப் படுகிறது.
அதேபோல ராஜாஜி பதவி வெறி கொண்டு தமிழகத்தில் கட்சிமாறல்களையும் ஊழலையும் அறிமுகம் செய்தார் என்கிறார்கள். ராஜாஜி தமிழகத்தில் குலக்கல்வி திட்டத்தைக் கொண்டுவந்து தகப்பனின் தொழிலையே மகனும் செய்தால் போதும் என்றார் என்கிறார்கள். ராஜாஜியின் ஆட்சி உண்மையில் அப்படிப்பட்டதா என்ன? உங்களுடைய கருத்து என்ன?
கெ.செல்வம்
அன்புள்ள செல்வம்
இதே கேள்விக்கு மூன்றாவது முறையாக பதில் அளிக்கிறேன் என நினைக்கிறேன். இந்த இணையதளத்திலேயே சுருக்கமான பதில்கள் உள்ளன. இன்னொரு நண்பருக்கு எழுதிய விரிவான கடிதத்தை உங்களுக்காக மீண்டும் அளிக்கிறேன். நீங்கள் சொல்லும் இந்த வரலாற்றுத்திரிபுகள் தொடர்ந்து பல்லாண்டுக்காலமாகச் சொல்லிச் சொல்லி நிலைநாட்டப்பட்டுள்ளன. அவற்றை எதிர்க்கும் அளவுக்கு காங்கிரஸ் தரப்புக்கு அக்கறையோ குரலோ இல்லை.
முதலில் ஒரு எளிய தகவல். மபொசி திராவிட இயக்கத்தவர் அல்ல.அவர் காங்கிரஸ்காரர். நாற்பதுகளில் திராவிட இயக்கத்தின் மேடைத் தமிழ்முழக்கத்துக்கு பதிலடியாக காங்கிரஸ் தரப்பில் உருவாக்கப்பட்டவர். திராவிட இயக்கத்தின் தேசிய-ஆன்மீக எதிர்ப்புக்கு மேடைமேடையாகப் பதிலடிகொடுத்தவர். அவரது தமிழரசுக்கழகம் காங்கிரஸால் உருவாக்கப்பட்டு அதன் மறைமுக ஆதரவுடன் நடத்தப்பட்டது.
சுதந்திரம் கிடைப்பதற்கு முன்னரே தமிழ்நாட்டில் தமிழ்ப்பெருமிதமும் தமிழ்த்தேசியம் பற்றிய ஆர்வமும் ஆரம்பமாகிவிட்டது. காங்கிரஸுக்குள்ளேயே அதற்கு ஆதரவிருந்தது. இளைஞர்களை அது கவர்ந்தும் வந்தது. ஆகவே காங்கிரஸ் தன்னுடைய தேசியப்பார்வையை கைவிடாமல் தமிழ்ப்பெருமிதத்தை கையாள நினைத்தது. தமிழ்த்தேசியத்தை இந்திய தேசியத்தின் ஒரு பகுதியாக முன்வைக்க நினைத்தது. இதன் பொருட்டே ம.பொ.சியின் தமிழரசுக்கழகம் 1946ல் தொடங்கப்பட்டது.
அதற்கு அரசியலதிகாரம் சார்ந்த ஒரு நோக்கும் உண்டு. அன்றைய அதாவது ஒருங்கிணைந்த சென்னைமாகாண [Madras Presidency] நிர்வாகத்தில் ஆந்திரர் ஆதிக்கம் அதிகமிருந்தது. கேரளர்களின் ஆதிக்கமும் இருந்தது. அதற்குக் காரணம் சென்னைமாகாணத்தின் அதிகமான நிலப்பரப்பு ஆந்திராவிலேயே கிடந்தது. மக்கள்தொகையும் அங்கேதான் அதிகம். வரிவசூலும் அங்கேதான் அதிகம். ஒரிசாவரைக்குமான கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகள் முழுக்க சென்னை மாகாணத்தைச் சேர்ந்தவை.
ஆகவே சுதந்திரத்தை ஒட்டி உருவாகிவந்த அரசியல் அதிகார ஆட்டத்தில் ஆந்திரர்களை வெல்லவேண்டிய தேவை காங்கிரஸ் அரசியல்வாதிகளுக்கு இருந்தது. அவர்கள் தேசியவாதிகளாகையால் நேரடியாக இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரான எதையும் பேச முடியாது. ஆகவே உருவாகி வந்த அமைப்புதான் ம.பொ.சியின் தமிழரசுக்கழகம்.
ம.பொசி என்ற மனிதரும் அவரது இயக்கமும் தெலுங்கு ஆதிக்கத்துக்கு எதிராக சத்யமூர்த்தியாலும் பின்னர் ராஜாஜியாலும் முன்வைக்கப்பட்டவர்கள் என்பதே நானறிந்த வரலாறு. சுதந்திரம் கிடைத்த பின்னர் காங்கிரஸ் ஆட்சியமைத்தபோது எல்லைப்பிரச்சினைகளில் காங்கிரஸ் நேரடியாக தலையிடக்கூடாது என்பதற்காக தமிழகரசுக்கழகம் காங்கிரஸின் குரலாக ஒலித்தது. மத்திக்கு பதில்சொல்ல தேவையில்லாதவராக இருந்த ம.பொ.சி மொழிப்பிரச்சினையை மேடைகளில் உக்கிரமாக நிகழ்த்தினார்.அது காங்கிரஸின் அரசியல் ராஜதந்திரமும் கூட. அந்தக்குரல் திராவிட இயக்கத்தினரின் குரல்களைவிட ஓங்கி ஒலித்தது
ம.பொ.சிக்கு எப்போதுமே மக்கள் ஆதரவு இருந்ததில்லை. அவர் ஒரு மேடைக்குரல் மட்டுமே. அவரது ஆதரவு வட்டம் காங்கிரஸால் ஆனது. திருத்தணி-சென்னை ஆகியவற்றை ஆந்திரர்களிடமிருந்து பெற்று தமிழகத்துடன் இணைப்பதற்காக தமிழக காங்கிரஸ் நடத்திய பதிலிப் போரின் முக அடையாளம் அவர், அவ்வளவுதான். அவர் முன்னிறுத்தப்பட்டமைக்கு காரணம் அப்போது பக்கத்து மாநிலங்களிலும் காங்கிரஸே பதவியில் இருந்தது என்பதுதான்.
இதேபோல குமரியில் திருவிதாங்கூர் காங்கிரஸ் என்ற தனி அமைப்பு நேசமணி தலைமையில் உருவாக்கப்பட்டு ‘காங்கிரஸின் கட்டளையை மீறி’ கேரளகாங்கிரஸுடன் எல்லைக்காகப் போராடியது. அவர்கள் தமிழகக் காங்கிரஸால் வெளியேற்றப்பட்டார்கள். ஆனால் குமரிமாவட்டம் பிரிந்து வந்து தமிழகம் உருவானதும் பத்திரமாக அவர்களில் பெரும்பாலானவர்கள் காங்கிரஸில் வந்து காமராஜின்கீழே சேர்ந்துகொண்டனர். நேசமணி பின்னர் காங்கிரஸில் பல தலைமைப்பொறுப்புகளை வகித்தார். பாராளுமன்ற உறுப்பினரும் ஆனார்.
உண்மையில் தமிழகத்தின் இன்றைய எல்லையை உருவாக்கியவர்கள் ராஜாஜியும் காமராஜரும்தான். அதில் காமராஜரின் இந்த ‘பதிலிப்போர்’ பெரிய வெற்றி பெற்றது. அந்த தந்திரம் கேரளத்துக்கும் கர்நாடகத்துக்கும் தெரிந்திருக்கவில்லை. அப்போது கேரளம் திருவிதாங்கூர் -கொச்சி- மலபார் எனமூன்று பகுதிகளாக இருந்தது. ஒட்டுமொத்த கேரளத்திற்குமான தலைவர்களும் அரசியலும் இருக்கவுமில்லை. கேரளம் ஒருங்கிணைந்த கேரளமாக ஆகி, ஒரு மாநிலஅடையாளம் பெற்றதே 1956ல் வந்த மாநில மறுசீரமைப்புப் சட்டத்துக்குப் [ States Reorganization Act of 1956] பின்னர் தான்.
ஆகவே காமராஜ் கிட்டத்தட்ட ஒருதலைபட்சமான வெற்றிகளைப் பெற்றார் என்பதே உண்மை. வேறெந்த தலைவரும் வேறெந்த அரசியல் சூழலிலும் எல்லைப்பிரச்சினைகளில் காமராஜ் அடைந்த ராஜதந்திர வெற்றிகளைப் பெற்றிருக்க முடியாது. தமிழகத்தில் அதற்குப்பின் வந்த எந்த தலைவரும் பக்கத்துமநிலங்களிடம் பேச்சுவார்த்தைமூலம் எந்த வெற்றியும் பெற்றதாக வரலாறே இல்லை. இழந்தவை எண்ணற்றவை.
மொழிவாரி பிரிவினைக்கு அடிப்படையாக முன்வைக்கப்பட்ட அளவுகோல் என்பது ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் ஒரு குறிப்பிட்ட மொழி பேசும் மக்கள் அதிகமாக தொன்றுதொட்டு வாழ்ந்துவந்தார்கள் என்றால் அந்த நிலப்பகுதிகளை இணைத்து ஒரு மாநிலம் என்பதே. அந்த அளவுகோலின்படி சிக்கலாக அமைந்தவை தமிழ்-மலையாளம் இருமொழிகளும் ஏறத்தாழ சம அளவில் பேசப்பட்ட கன்யாகுமரி, செங்கோட்டை, பாலக்காடு, தேவிகுளம், பீர்மேடு பகுதிகள்.
பேச்சுவார்த்தையில் பாலக்காடு, தேவிகுளம், பீர்மேடு போன்றபகுதிகளை விட்டுக்கொடுத்துத்தான் கன்யாகுமரிமாவட்டத்தை ஒட்டுமொத்தமாகப் பெற்றார் காமராஜ். நான்கு பெரிய அணைகள், பதினெட்டு சிறிய அணைகள், மூன்று மீன்பிடித்துறைமுகங்கள் மூன்று மழைக்காலம், 60சதவீத நிலம் மழைக்காடுகள் கொண்ட மாவட்டம் இது. ஒட்டுமொத்த தமிழக நிதிவருவாயில் கிட்டத்தட்ட 20 சதவீதம் அளிக்கும் மாவட்டம்.
இதில் மலையாளம் பேசும் பெரும்பான்மையினரைக் கொண்ட பகுதிகள், அதாவது தர்க்கபூர்வமாக பார்த்தால் கேரளத்துக்குச் சொந்தமான பகுதிகள், 40 சதவீதம். இன்றைய விளவங்கோடு கல்குளம் வட்டங்கள். அப்பகுதிகளிலேயே அணைகள் அமைந்திருந்தன. அந்த அணைகளை தமிழகத்தில் இருந்து விட காமராஜ் விரும்பவில்லை. ஆகவே காமராஜ் அப்பகுதிகளுக்காகவும் போராடினார். பாலக்காட்டைச்சேர்ந்த இருமேனன்கள் அன்று மத்தியஅரசின் மையப்பொறுப்புகளில் இருந்தார்கள் .தங்கள் மாநிலம் கேரளத்தில் சேரவேண்டுமென்ற அவர்களின் தனிப்பட்ட ஆசையை காமராஜ் பயன்படுத்திக்கொண்டார்.
கேரளத்தில் இருந்து தமிழகம் செங்கோட்டையை பெற்றது. அதேபோல ஊட்டி மேற்குமலைச்சரிவை. இந்த நிலங்கள் மழைப்பிடிப்புபகுதிகள் என அன்று காமராஜுடன் இருந்தவர்கள் அறிந்திருந்தார்கள். இவ்விரு பகுதிகள் இங்கே வந்தமையால்தான் தாமிரவருணியின் அணைகளும், குந்தா போன்ற அணைகளும் நமக்குச் சாத்தியமாகின. முல்லைப்பெரியாறு அணைப்பகுதி ஏன் தமிழகத்துடன் வரமுடியாது என்றால் அந்த அணையின் நீர்ப்பிடிப்புபகுதி, நீர் வழியும்பகுதி முழுக்கமுழுக்க மலையாளிகள் வாழும் கேரளநிலத்தில் உள்ளது. அந்த பகுதியில் தமிழர் எண்ணிக்கை 05 சதவீதம் மட்டுமே. எந்த அடிப்படையில் அதைக்கோருவது?
எந்த நிலங்களை கேரளத்துக்கு விட்டுக்கொடுத்தார்களோ அந்நிலங்களை கேரளத்துடன் பேசி ஒப்பந்தம் மூலம் பெற்றுக்கொண்டு முற்றிலும் கேரளத்தில் பெய்யும் மழைநீரை அப்படியே தமிழகம் எடுத்துக் கொள்ளும் பரம்பிக்குளம் -ஆளியார் அணைக்கட்டுகளை உருவாக்கினார்கள் ஆர்வியும் சி. சுப்ரமணியமும். பரம்பிக்குளம் அணை கேரளத்தில் தமிழகத்தால் கட்டப்பட்டது. அதேபோல கேரள மன்னரிடம் பேசி முழுக்க முழுக்க கேரளநிலத்தில் ஓடும் நெய்யாற்றில் இருந்து குமரிக்கு நீர்கொண்டு வந்தார் காமராஜ். இதெல்லாம்தான் உண்மையான ராஜதந்திரம்.
எந்த ஒரு அரசியல்பேரத்திலும் விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும், இன்று காமராஜ் சில இடங்களை விட்டுக்கொடுத்ததை ஏதோ கையாலாகாத்தனம்போலவும், கிடைத்தவை முழுக்க இங்கே மீடியாவில் சத்தம்போட்ட சிலரின் தனிப்பட்ட சாதனைபோலவும் பேசும் ஒரு அரசியலை திராவிட இயக்கம் உருவாக்கிவருகிறது. இவையே நம் பொதுஅரசியல் வரலாறாக இன்று உள்ளது. பொய்களையே சொல்லி அதன்மேலேயே உருவாகி வந்த ஓர் இயக்கத்தின் சாதனை இந்த பிரச்சார வரலாறு
மீண்டும் ம.பொ.சி. ஆந்திர எல்லைப்பிரச்சினையின்போதுதான் ம.பொ.சியின் புகழ் உச்சத்தில் இருந்தது. அன்று தமிழக அரசியலில் இருந்த இரு மாபெரும் அரசியல் சூதாட்டக்காரர்களின் கையில் அப்பாவிக் காயாக கிடந்து அலைமோதினார் ம.பொ.சி. ஒருபக்கம் ராஜாஜி காமராஜுக்கு எதிராக ம.பொ.சியை கொண்டுவர திட்டமிட்டார். காமராஜ் நாடார். ம.பொ.சி நாடார்களுக்கு நிகரான கிராமணி சாதி. காமராஜ் எப்படி விடுவார்? ம.பொ.சியின் காற்று பிடுங்கப்பட்டது. 1954ல் காமராஜ் ஆட்சிக்கு வந்தபோது அவர் காங்கிரஸில் இருந்து விலகினார். 1967 தேர்தலில் திராவிட முன்னேற்றகழக ஆதரவுடன் அவர் சட்டச்சபைக்கு சென்றாலும் எஞ்சிய வாழ்நாள் முழுக்க அரசியல் அனாதையாக ஆனார். இதுவே வரலாறு
*
ராஜாஜி ஊழலாட்சி செய்தார் என குற்றம்சாட்டுவது யார்? திராவிட இயக்கமா? திராவிட இயக்கம் ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே ஊழல் ஆரம்பித்துவிட்டது என்பதல்லவா வரலாறு? சர்க்காரியா கமிஷன் முதல் ஸ்பெக்ட்ரம் வரையிலான அதன் வரலாற்றை மேலோட்டமாகவாவது அறிந்த எவர் இந்த வரிகளை நம்ப முடியும்?
இந்தியச் சுதந்திரப்போரில் ஈடுபட்டு சிறைசென்றவர் ராஜாஜி எனபதாவது தெரியுமா? இன்றைய சிறையல்ல, வெள்ளையனின் சிறை. அந்தச்சிறையில் அவர் எப்படி வாழ்ந்தார் என்பதை காண தி.செ.சௌ ராஜன், க.சந்தானம், சட்டநாதக்கரையாளர் என யாராவது ஒருவரின் சுயசரிதையை வாசிக்கலாம். பெரும்புகழும் பணமும் தந்தை தொழிலை உதறி காந்தியஆசிரமம் அமைத்து அதிலேயும் சிறைக்குச் சமானமான எளிய வாழ்க்கையைவாழ்ந்தவர் அவர்.
பதவிப்பித்து பிடித்து ராஜாஜி என்ன செய்தார்? பிள்ளையை பதவியில் அமரச்செய்தாரா? வாரிசுகளை தொழிலதிபர்களாக, கோடீஸ்வரராக ஆக்கினாரா? இன்று தமிழ்நாட்டில் இருக்கும் பல அடிப்படைக் கட்டுமானங்களை ராஜாஜிதான் திட்டமிட்டு அமைத்தார். அதன் பலன்களையே இன்றும் தமிழகம் அனுபவிக்கிறது. ஓசூர் தொழிற்பேட்டை அவரது கனவு. சென்னை துறைமுகவிரிவாக்கம் அவரது சாதனை. இன்றுவரை அவரது தனிப்பட்ட நேர்மைமீது எந்த ஒருவரும் ஆதாரபூர்வமான சிறு குறையைக்கூட சுட்டிக்காட்டமுடிந்ததில்லை.
முக்கியமான வரலாற்றுத்திரிபு என்பது சென்னையை மீட்ட சாதனையை முழுக்கமுழுக்க ம.பொ.சிக்கு விட்டுக்கொடுத்து ராஜாஜியை வில்லனாக ஆக்குவது. ராஜாஜி இல்லையேல் சென்னை தமிழ்நாட்டுக்கு இல்லை என்பதே வரலாற்று உண்மை. இங்கே சில ஊர்களில் கோஷமிட்ட ம.பொ.சியைப்பார்த்து பயந்துபோய் ஆந்திரர்கள் சென்னையை விட்டுக்கொடுக்கவில்லை. அப்போது தமிழகத்தின் முதல்வராக ராஜாஜி இருந்தார். பேச்சுவார்த்தைகளில் இம்மிகூட அவர் விட்டுக்கொடுக்கவில்லை. 1953ல் ஆந்திரமாநிலம் உருவானபோது சென்னையையும் திருத்தணியையும் உள்ளிட்ட இன்றைய தமிழக எல்லைகளை அமைக்க காரணமாக அமைந்தவர் அன்றைய முதல்வரான ராஜாஜிதான்.
1952ல் ஆந்திர சுதந்திரப்போராட்ட வீரரான பொட்டி ஸ்ரீராமுலு மதராஸ்மனதே என்ற போராட்டத்தின் உச்சமாக சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார். ஆந்திராவே கொந்தளித்தது. அதற்கிணையான எந்த அலையும் இங்கே உருவாகவில்லை. மபொசியை காங்கிரஸ் கிளப்பிவிட்டும்கூட பெரிதாக ஒன்றும் நிகழவில்லை, சில கூட்டங்களைத்தவிர. நேரு ஆந்திர காங்கிரஸின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்தாகவேண்டிய நிலை. காரணம் ஆந்திராவுக்கு தேசிய அரசியலில் பங்கு மிக அதிகம். அது மாபெரும் மாநிலம்.
ஆனால் ராஜாஜி நேருவை உதாசீனம்செய்தார். பொட்டிஸ்ரீராமுலு உயிர்துறந்த டிசம்பர் 15 ஆம் தேதி நேரு பலமுறை கூப்பிட்டும் ராஜாஜி நேருவின் தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை. அவர் தொலைபேசியை எடுத்திருந்தால் சென்னை கைவிட்டுப்போயிருக்கும் என்று எம்.ஓ.மத்தாய் சொல்லியிருக்கிறார். விளைவாக ஆந்திரா எரிந்தது, ராஜாஜி பிடிவாதமாக இருந்தார். அந்த ஒருசெயலால்ராஜாஜி சென்னையை மீட்டார். அவரது அரசியல் வாழ்க்கையை நிரந்தரமாக அழித்தும் கொண்டார். பின்னர் சீனப்படையெடுப்பின்போது வலியச்சென்று நேருவுக்கு உதவ முன்வந்தார் ராஜாஜி. நேரு அப்போதும் அவரிடம் முகம்கொடுத்துப் பேச தயாராக இருக்கவில்லை.
ராஜாஜியின் கல்விக்கொள்கையை குலக்கல்வி என்று சொல்லிச் சொல்லி வரலாற்று நினைவாக ஆக்கிவிட்டார்கள். ஒரு திட்டத்தை அதன் எதிரிகள் எப்படி வசைபாடினார்களோ அந்த பெயரிலேயே வரலாற்றில் இடம்பெறச்செய்வதுபோல மாபெரும் அரசியல் மோசடி ஒன்றில்லை. ராஜாஜி அதை குலக்கல்வி என்று சொல்லவில்லை. அந்த திட்டத்தில் எங்கும் அப்பெயர் இல்லை. ஆனால் அதை நீங்கள் விக்கிபீடியாவில் தேடினால்கூட Hereditary Education Policy என்ற பேரிலேயே கிடைக்கும். அந்த திட்டத்தை இப்படி திரிக்காமல் இருந்தால் இன்றையதலைமுறைக்கு அதில் எந்த பிழையும் கண்ணுக்குப்படாது. அவதூறுசெய்தால் மட்டுமே அதை எதிர்க்கமுடிகிறதென்பதே அந்த திட்டத்தின் நேர்மைக்குச் சான்றாகும்
இணையத்திலேயே கிடைக்கும் ராஜாஜியின் பகுதிநேரக்கல்வித்திட்டத்தின் முன்வரைவை இன்று வாசிக்கும்போது வருத்தமாக இருக்கிறது. என்ன காரணத்தால் அது தோற்கடிக்கப்பட்டது என்பதே புரியவில்லை. அன்றைய சூழலை நாம் ஓரளவாவது கவனிக்கவேண்டும். இந்தியா மாபெரும் நிதி நெருக்கடியுடன் சுதந்திரம் பெற்றது. தேசப்பிரிவினையால் வட இந்தியா கிட்டத்தச்ச சின்னாபின்னமாகிக் கிடந்தது. அடிப்படைத்திட்டங்களுக்கே பணமில்லாத நிலை நிலவியது. 1951ல் பிகார், மத்தியபிரதேசத்தை மாபெரும் பஞ்சம் ஒன்று தாக்கியது. 1785 முதல் வட இந்தியாவை தாக்கி வந்த பெரும் பஞ்சங்களின் நீட்சி அது.
1873 பஞ்சத்தில் பிகாரில் லட்சக்கணக்கானவர்கள் செத்தார்கள். ஆனால் 1951ல் நேருவின் அரசு உலகமெங்கும் பிச்சை எடுத்து பிகாரில் பட்டினிச்சாவு இல்லாமல் பார்த்துக்கொண்டது. [அதில் அமெரிக்கா அளித்த பங்கு மிக முக்கியமானது, அது சோவியத் ஆதரவு அரசியலால் பின்னர் மறக்கப்பட்டுவிட்டது] இப்பஞ்சத்தில் பிகாரில் மாபெரும் கஞ்சித்தொட்டி இயக்கத்தை ஆரம்பித்த ஜெயப்பிரகாஷ் நாராயணன் இன்றும் அம்மக்களால் காந்திக்கு நிகராக கொண்டாடப்படுகிறார்.
இச்சூழலில் ராஜாஜி தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தார். தமிழகத்தின் நிதிச்சுமையை அவரால் சமாளிக்க இயலவில்லை. கிராமப்பொருளாதாரம் குடிப்பழக்கத்தால் அழிந்துகொண்டிருப்பதை அவர் உணர்ந்தமையால் மதுவிலக்கை கறாராக அமல்படுத்தினார். தமிழக அரசின் முக்கியமான வரவினமே மதுமீதான வரி என்பதனால் அவர் கடுமையான பொருளியல் நடவடிக்கைகளை எடுக்க நேர்ந்தது
ராஜாஜியின் தரப்பு ஒருவகையான ஆழ்ந்த நேர்மை கொண்டது. வட இந்தியா பஞ்சத்தில் சாகும்போது தென்னிந்தியா உதவித்தான் ஆகவேண்டும் என்று அவர் நம்பினார். ஆகவே செலவினங்களை குறைத்தார். அவரது கடுமையான நடவடிக்கைகளை மக்கள் எந்த அளவுக்கு புரிந்துகொள்வார்கள் என அவர் எண்ணவேயில்லை.
அவருக்கு நேர் மாறாக அன்று திராவிட இயக்கம், சி. என் அண்ணாத்துரை தலைமையில் ‘வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது’ என்று பிரச்சாரம் செய்தது. தமிழகத்தில் நிலவிய தானியத்தட்டுப்பாட்டுக்குக் காரணமே வடக்கு தெற்கை சுரண்டி கொழுப்பதுதான் என்றது. ‘தமிழகத்தில் தட்டினால் தங்கம் வெட்டினால் வெள்ளி. அத்தனையும் கொணர்ந்து மக்களின் வாட்டத்தை போக்குவோம்’என்றார்கள். காங்கிரஸ் அரசு அன்று சந்தித்த பொருளியல் சிக்கல்களை அறியாத அன்றைய எளிய மக்கள் அந்த போலியுரைகளை நம்பினார்கள்.
பொருளியல் சிக்கல்களில் இருந்து உருவானதே ராஜாஜியின் கல்விச்சீர்த்திருத்த முறை. பள்ளிகளின் அளவை அதிகரிக்க முடியாத நிலை இருந்தது. ஆசிரியர்களையும் உடனடியாக அதிகரிக்கமுடியாது. அன்றைய கல்வி எப்படி இருந்தது என அவர் ஆராய்ந்தபோது பெரும்பாலான கல்விநிலையங்கள் ஓர் ஆசிரியரை மட்டும் கொண்டவையாக, அத்தனை பிள்ளைகளையும் கூட்டமாக ஒரே இடத்தில் அமரச்செய்பவையாக இருந்தன. தினம் ஒருமணிநேரம்கூட பிள்ளைகள் கற்கவில்லை – இன்றும் தமிழகத்தில் கணிசமான மலைக்கிராமப் பள்ளிகள் அப்படித்தான் உள்ளன
பிள்ளைகளை அதிகளவில் பள்ளியில் சேர்க்க வேண்டும், ஆனால் பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களின் அளவை அதிகரிக்கமுடியாது என்பதனால் ராஜாஜி கல்வியை நேரம் பிரித்த்தார். அதாவது சாதாரணமான ஷிஃப்ட் முறை. அவ்வளவுதான் அவர் செய்த சீர்திருத்தம். அதுவும் நிதிநிலை சரியாகும் வரை. ஒரேபள்ளியில் காலையில் ஒருவகுப்பு. மதியம் ஒருவகுப்பு. ஆரம்பப்பள்ளிகளுக்கு 3 மணி நேரம் மட்டும் கல்வி. ஆனால் ஆசிரியர் முழுநேரமும் கல்வி கற்பிக்கவேண்டும். பாடத்திட்டத்தில் எந்த மாறுதலும் இல்லை.
மூன்று மணிநேரக் கல்வி தவிர மிச்சநேரம் பிள்ளைகள் என்ன செய்யும் என்ற கேள்விக்கு சாதாரணமான ஒரு பேட்டியில் ‘அவர்கள் பெற்றோருக்கு வேலையில் உதவலாம்’ என்று சொல்லப்பட்டது. மதியத்துக்கு மேலே பிள்ளைகள் இன்ன வேலைதான் செய்ய வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் கல்விகக்ழகத்தால் முன்வைக்கப்படவில்லை. சாதியம் சார்ந்த எந்த குறிப்பும் எங்கும் இல்லை.
பிள்ளைகள் பெற்றோருக்கு உதவலாமே என்ற ஒருவரியை சமத்காரமாக பிடித்துக்கொண்டு குலக்கல்வி என்று சொல்ல ஆரம்பித்தார்கள் திராவிட இயக்கத்தவர். அண்ணாத்துரை அந்த அவதூறை ஆரம்பித்தார். திராவிட இயக்கத்தின் உச்சகட்ட பரப்புரைக்கு பதில்சொல்லும் திராணி காங்கிரஸுக்கு இருக்கவில்லை. இந்த விஷயத்தில் விஷயம் தெரிந்த கம்யூனிஸ்டுகள் மௌனம் சாதித்தார்கள். காமராஜ் ராஜாஜிக்கு எதிரி என்பதனால் அன்றைய காங்கிரசும் அவருக்கு உதவவில்லை. அந்த திட்டத்தைப் பயன்படுத்தி தன் அரசியலெதிரியான ராஜாஜியை வீழ்த்தினார் காமராஜ். அடுத்த முதல்வராக ஆனார்.
ராஜாஜியின் திட்டத்துக்கு அன்று உருவான எதிர்ப்புக்கும் ஆசிரியர்களின் பங்கு மிக அதிகம். இன்று எண்பது வயதான ஆசிரியர் ஒருவரே அதை சொல்லி நான் கேட்டிருக்கிறேன். அந்த திட்டம் ஆசிரியர்களின் பணிநேரத்தையும் சுமையையும் அதிகரித்தது. அவர்கள் ஒருநாளில் 5 மணி நேரத்திற்குப் பதில் 6 மணி நேரம் கற்பிக்க வேண்டியிருந்தது. ஐந்துநாள் வேலை ஆறுநாள் வேலையாக அதிகரிக்கப்பட்டது.
அன்றைய சூழலில் ஆசிரியர்கள் பெரும்பாலும் தொலைதூர கிராமங்களுக்கு நடந்து செல்ல வேண்டியிருந்தது. சிறு கிராமங்களில் தங்கும் வசதி இருப்பதில்லை. அதைவிட பிறசாதியினர் நடுவே தங்குவது அன்று எவராலும் விரும்பப்படவில்லை. என்னிடம் பேசியவர் கோயில்பட்டியில் இருந்து இருபத்த்தைந்து கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் சென்று ஓர் இடைய கிராமத்தில் எழுபது பிள்ளைகளுக்கு ஒரேயாளாக பாடம் நடத்தினார். அவர் வேளாளர். இடையர் கிராமத்தில் அவர் தண்ணீர்கூட குடிப்பதில்லை.அவர் அங்கே சென்று சேர பத்து மணி ஆகிவிடும். மதியமே திரும்பி விடுவார்.
இந்த நிலையை ராஜாஜியின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. பெரும்பாலான பள்ளிகளில் ஓராசிரியர்கள் பெருந்திரளான மாணவர்களுக்கு சில மணி நேரம் மட்டுமே கல்வி கற்பிக்கிறார்கள், அதனால் எந்த பயனும் இல்லை என அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. கல்விக்காகச்செலவிடப்படும் பணம் பெரும்பாலும் வீணாகிறது என்கிறது. ஆகவே அது ஆசிரியர்கள்மேல் சவுக்கை சுழற்றுகிறது. அவர்கள் எட்டு மணிக்கே பள்ளியில் இருந்தாகவேண்டும். மாலை ஐந்துக்கு கிளம்பவேண்டும். ஆசிரியர்கள் கொந்தளித்தது இயல்பே. அந்த கசப்பை ஈவேராவும் அண்ணாத்துரையும் அவர்களின் இயக்கமும் வெற்றிகரமாக பயன்படுத்திக்கொண்டனர்.அது வெறும் அரசியல். உங்கள் அரசியல் அதுவாக இருந்தால் சொல்லிக்கொண்டிருக்கலாம் – வரலாறு அது அல்ல
ராஜாஜியின் இந்த திட்டம் ஏற்கனவே 1949-50 காலகட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த பி.எஸ்.குமாரசாமி ராஜாவின் காலகட்டத்தில் பல பகுதிகளில் சிறப்பாக அமல்படுத்தப்பட்டு விளைவுகளை காட்டிய ஒன்றே. அதை விரிவாக தமிழகம் முழுக்க கொண்டுவர முயன்றதே ராஜாஜியின் திட்டம். அவரது சாதியை இதில் பிணைப்பதற்காகத்தான் தந்திரமாக இது அவரே உருவாக்கிய திட்டம் என்று சொல்கிறார்கள்.
அத்துடன் இந்தத் திட்டமே கூட அன்று உலகில் பல நாடுகளில் நடைமுறையில் இருந்ததை ‘காப்பி’ அடித்து உருவாக்கப்பட்டதுதான். உலகமெங்கும் குடும்பத்தொழிலை பிள்ளைகள் செய்வது நடைமுறையில் இருந்த காலம். பிள்ளைகளை அப்படி சட்டென்று கல்விக்காக வெளியே எடுக்கமுடியாது. ஆகவே அவர்கள் பாதிநாள் கற்றால்போதும் என்னும் நிலை அன்று இருந்தது. மூன்றுமணிநேரம் சரியானபடி கற்பித்தாலே போதும் என ராஜாஜி வாதாடினார். நூற்றுக்கணக்கான மாணவர்களை ஆசிரியர் நாளெல்லாம் கூட்டி வைப்பதற்குப்பதில் பாதிப்பாதியாக மூன்றுமணி நேரம் கற்பிப்பதுதான் அவரது திட்டம்.
ராஜாஜியின் பள்ளித்திட்டத்தில் எங்காவது தகப்பன் தொழிலை மகன் செய்தாகவேண்டும் என்று உள்ளதா என்ன? ஒருவரி? அப்படியானால் கல்வியே தேவை இல்லையே. பள்ளிக்கூடமே திறக்கவேண்டாமே. ஏற்கனவே பிள்ளைகள் அதைத்தானே செய்துகொண்டிருந்தார்கள்? அவர் அடித்தட்டு மக்கள் பிள்ளைகளை கவர்ந்து பள்ளிக்கு கொண்டுவரவே அதைச் சொன்னார். உங்களுக்கு பிள்ளைகள் சம்பாதித்துக்கொடுப்பார்கள், மிச்சநேரத்தில் அவர்கள் பள்ளிக்கு வரட்டும் என்றுத தந்தையரிடம் சொன்னார். அரை நூறாண்டு கழித்து இன்றும் கூட, இத்தனை கல்வி வளர்ச்சிக்குப் பின்னரும்கூட, இது தமிழ்நாட்டுக்கு பொருத்தமான ஒரு உத்தியே.
இன்றும் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புங்கள் வேலைக்கனுப்பாதீர் என்று கோடிக்கணக்கில் செலவிட்டு பிரச்சாரம்செய்கிறது தமிழக அரசு. இன்றும் கூட கால்வாசிப்பிள்ளைகள் படிப்பு நிறுத்தப்பட்டு குலத்தொழிலுக்கு அனுப்பப்படுகிறார்கள். தமிழ்நாட்டின் அன்றாட யதார்த்ததில் இருந்து உருவான திட்டம் அது. இங்கே 90 சதவீதம்பேர் குலத்தொழில் செய்பவர்கள் அன்று. அவர்களின் தொழிலில் பிள்ளைகள் ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறார்கள். அவர்களை வேலையைவிட்டு நிறுத்தி பள்ளிக்கனுப்புவது என்பது அக்குடும்பங்களுக்கு பெரும் நிதிச்சுமை. ஆகவேதான் அவர்கள் வேலையைச்செய்துகொண்டே படிக்கலாம் என்றார் ராஜாஜி. அந்தத் திட்டம் நீடித்திருந்தால் தமிழகக் கல்வியில் இன்னும் பெரிய பாய்ச்சல் நிகழ்ந்திருக்கும் என்றே நான் நினைக்கிறேன்.
சரி, காமராஜ் எப்படி முழுமையான ஆரம்பக்கல்வியை அளிக்க ஆரம்பித்தார்? 1954ல் அவர் ஆட்சிக்கு வந்தபின்னர் தமிழக அரசின் நிதிநிலை பலபடிகள் முன்னேறியிருந்தது. [ அதற்குக் காரணமும் ராஜாஜிதான். அவரது மறைமுக வரிகள் ] அரசு நிதியை அதிகம் செலவிடாமல் பெரும்பாலும் தனியார்நிதிகளைக்கொண்டே பள்ளிகளை நடத்தும் புதுமையான திட்டம் நெ.து.சுந்தரவடிவேலுவால் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
இன்று திரிபுகளுக்கு அளவே இல்லை. 6000 பள்ளிகளை மூடும்படி ராஜாஜி உத்தரவிட்டார் என்று தி.க பிரசுரங்களில் பார்த்தேன். நண்பர்கள் மூலம் முறையாக விசாரித்தேன். ’அதெப்படி சுதந்திர இந்தியாவில் அப்படி ஒரு சட்டம்போட முடியும் உங்களுக்கென்ன பைத்தியமா?’ என்றார்கள். இன்றும்கூட அப்படி பள்ளிகள் மூடப்பட்டமைக்கான அரசாணையை எவராவது ஆதாரம் காட்டவேண்டுமென நான் எதிர்பார்க்கிறேன்..
ராஜாஜி முதல்முறை பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் சென்னை மாகாண முதல்வராக இருந்தபோது, 1937ல், சென்னைமாகாணம் கடுமையான நிதிச்சுமையை சந்தித்தது. இரண்டாம் உலகப்போருக்கு முந்தைய கட்டம். பிரிட்டிஷ் அரசு வரிச்சுமையால் இந்தியாவை கசக்கிக்கொண்டிருந்த நிலை. பிரிட்டிஷ் அரசின் மைய நிதி ஆதாரம் குடிவணிகம். ராஜாஜி மதுவிலக்கை கொண்டுவந்தார். பிரிட்ட்ஷாருக்கு கட்டவேண்டிய வரியை ஒன்றும் செய்யமுடியாது. ஆகவே பல துறைகளில் அவர் சிக்கன நடவடிக்கையை கொண்டுவந்தார்
அன்று தமிழகம் மற்றும் ஆந்திரத்தில் குடிப்பள்ளிக்கூடம் போன்ற கிராமிய அமைப்புகளுக்கு அரசு நிதி அளிக்கும் வழக்கம் இருந்தது. இந்த நிதி பெரும்பாலும் முறைகேடாக, பயனற்று செலவாகிறது என ராஜாஜி கருதினார். அவற்றை முறைப்படுத்த ஆணை பிறப்பித்தார். இந்த ஆணைமூலம் ஆந்திராவில் பல குடிப்பள்ளிகளை மூடவேண்டியிருக்கும் என ஜஸ்டிஸ் கட்சி எதிர்த்தது. அதை பிரதிபலித்து ஈவேரா அவர்கள் தமிழகத்திலும் 6000 பள்ளிகள் மூட நேரலாம் என்று சொன்னார். இந்த வரியைத்தான் இன்று வரை ஆதாரமாகச் சுட்டிக்காட்டுகிறார்கள். இதை வைத்து ராஜாஜி 1952லும் 6000 பள்ளிகளை மூடினார் என்கிறார்கள்.
அதீதமான காழ்ப்புடன் எதிர்கொள்ளப்பட்ட மனிதர் ராஜாஜி. அவர்மேல் இன்று, இத்தனை காழ்ப்பிருந்தபோதும்கூட இம்மாதிரி பொய்களையும் சில்லறைக்குற்றச்சாட்டுகளையும் மட்டுமே சொல்லமுடிகிறது என்பதே ராஜாஜி யார் என்பதைக் காட்ட போதுமான ஆதாரம்
*
ஆனால் ராஜாஜி என் உதாரணமனிதர் அல்ல. அவரில் நான் பல குறைகளை காண்கிறேன். ஒன்று, அவர் ஜனநாயகத்தில் உறுதியான நம்பிக்கை கொண்டவர் அல்ல. பேச்சுவன்மை அற்றவர். அதிகாரம் மூலம் பலவற்றைச் செய்யலாமென நினைத்தார்.ஆகவே பலவிஷயங்களில் மக்களின் உள்ளுணர்வை அவரால் கணிக்கமுடியவில்லை. அவர் பழையகால டாக்டர்களைப்போல. நோயாளிக்கு என்ன தெரியும்,நான் கொடுப்பதே மருந்து என நம்பியவர் அவர். இந்த அம்சமே அவரை மக்களிடமிருந்து அன்னியமாக்கியது. மெல்ல மெல்ல அரசியல்சூழ்ச்சியாளராக ஆக்கியது.
ஜனநாயக நம்பிக்கை இல்லாதவராதலால் ராஜாஜி ஒரு நவீன ஜனநாயக அரசை வெற்றிகரமாக நடத்த முடியவில்லை. அரசு என்பது ஒரு தொட்ர்சமரசம் என்பதை அவர் புரிந்துகொள்ளவில்லை. பல்வேறுவகையான மனிதர்களை இணைத்துக்கொண்டுசெல்ல அவரால் இயலவில்லை. அவரது தனிப்பட்ட ஆணவமும் முசுட்டுக்குணமும் அவரிடமிருந்து திறமையானவர்களை பிரித்தன. ஒருகட்டத்தில் அரசியலில் அவருக்கு நண்பர்களே இருக்கவில்லை.
ராஜாஜி கட்சிக்குள் மக்கள் செல்வாக்கினால் நிலைநிற்கவில்லை. அதிகார விளையாட்டுகள் மூலமே நிலைநின்றார். அன்று மக்கள்செல்வாக்கு காமராஜுக்கே இருந்தது. கடைசியாக, தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மைய அரசியல் பெருவெள்ளம் போல் உருவாகி வந்தபோது அந்த அரசியலுக்கு எதிராக நின்ற கடைசித் தடை ராஜாஜி.ஆகவே அவர் அவதூறுகள், திரிபுகள், வசைகள் மூலமே ஒழித்துக்கட்டப்பட்டார்.
1952ல் ராஜாஜி கட்சித்தாவலை உருவாக்கி ஆட்சிக்கு வந்தது அறமில்லாத செயல் என்றே எண்ணுகிறேன். ஆனால் ராஜாஜிக்கு அதற்கான நோக்கங்கள் இருந்தன. சுதந்திரம் கிடைத்த உடனே ஆட்சி கைவிட்டுச்செல்வதை அவர் விரும்பவில்லை.அவர் கனவுகண்ட நிர்மாணத்திட்டங்கள் பலவற்றை தொடங்க விரும்பினார். பலவற்றை வெற்றிகரமாக நிகழ்த்தியும் காட்டினார். ஆனால் என்ன விளக்கம் கொடுத்தாலும் அது சரியானது அல்ல.
அவரது அரசை கவிழ்க்க காமராஜ் செய்த உள்வேலையும் கௌரவமானது அல்ல. அதன் விளைவாக உருவான கசப்புகளே தமிழகத்தில் காங்கிரஸ் செய்த எல்லா சாதனைகளையும் மீறி அதை அழித்தது. காமராஜ் மீது கொண்டகசப்பால் திராவிடமுன்னேற்றகழகத்தை ஆதரித்து பதவிக்குக் கொண்டுவர ராஜாஜி முன்வந்தது மாபெரும் அரசியல் தவறு. ஒருபோதும் அதற்காக அவருக்கு மன்னிப்பு இல்லை.
அதேபோல் ராஜாஜியின் இலக்கிய ஆர்வம் நேர்மையானதென்றாலும் இலக்கிய நோக்கு பழமையானது. நீதி சொல்வதே இலக்கியம் என நம்பினார். அவ்வகை இலக்கியத்தையே அவர் வளர்த்தெடுத்தார். மாறான நவீன இலக்கியத்தை அவர் பொருட்படுத்தவில்லை.ஆகவே தமிழில் நல்ல இலக்கியம் உருவாக அவரது அதிகாரம் தடையாக ஆகியது.
அவரது பொருளியல் கொள்கைகள் அன்று பெரும் கசப்பை உருவாக்கின. நாடே சோஷலிச மோகத்தில் திளைத்தபோது சுதந்திரச் சந்தையையும் போட்டிமுதலாளித்துவத்தையும் ஒரேவழியாக அவர் கண்டார். ‘சோஷலிசம் மனிதனின் இலட்சியவாதத்தை நம்பி ஒரு பொருளியல் கட்டுமானத்தை உருவாக்குவதாகும். மனிதன் அப்படி இலட்சியங்களால் ஆனவன் அல்ல. அவன் சுயநலத்தால் ஆனவன்.
லாபநோக்கமும் நுகர்வுமே பொருளியலின் அடிப்படைகளாக இருக்க முடியும்.மனிதனின் இலட்சியவாதத்தை நம்பி சோஷலிசத்தை நோக்கி சென்றால் ஊழல்தான் பெருகும். லாபநோக்குகளுக்குள் போட்டியை உருவாக்கும் முதலாளித்துவமே சிறந்தது’ என்பது ராஜாஜியின் எண்ணம்.
மகாலானோபிஸுக்கு எழுதிய கடிதத்தில் ராஜாஜி சோஷலிசப் பொருளியல் அரசாங்கத்தின் அதிகாரத்தை அதிகரிக்கும் என்கிறார். இந்திய அரசு அமைப்பு முழுக்கமுழுக்க பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்டது. இந்திய சுதந்திரபோருக்கு எதிராக அது இருப்பதற்காக அதற்கு ஊழல்செய்ய சுதந்திரம் அளித்திருந்தார்கள். அதே அதிகார அமைப்பை வைத்துக்கொண்டு சோஷலிசத்தை கொண்டுவந்தால் ஊழலே பெருகும் என்கிறார் ராஜாஜி. நேரு மனிதனை நம்பினார். ராஜாஜி மனிதனை நம்பவில்லை. நேரு இலட்சியவாதி, ராஜாஜி யதார்த்தவாதி.ராஜாஜிதான் சரியாகச் சொன்னார் என்று ஐம்பதாண்டுக்கால அரசியல் நிரூபித்தது!
சமீபத்தில் ராகச்சந்திர குகாவின் காந்திக்குப்பின் இந்திய அரசியல் என்ற நூலை வாசித்துவிட்டு என்னிடம் ஒரு நண்பர் பேசினார். ‘சார் அப்ப ராஜாஜி ரொம்ப தெளிவாத்தானே பேசியிருக்கார்? வரிப்பணத்தைக் கொட்டி பொதுத்துறைய வளத்தா அது தனியார்த்துறையிலே திறமையின்மையை உருவாக்கும். ஊழலை வளர்க்கும்னு சரியா சொல்லியிருக்காரே. இன்னிக்கு எல்லாருமே அதைத்தானே சொல்றாங்க’ என்றார். ‘அதைச்சொன்னதுக்காக அன்னைக்கு அவரை கழுவேத்த துடிச்சாங்க’ என்றேன்.
அன்று சோஷலிசக்கனவு இருந்தது. பொதுத்துறைகளை ஒருவகை மினி சோஷலிசமாக கண்டார் நேரு. தனியார்துறை என்பது முதலாளித்துவ மாயை என்று நினைத்தார்கள். ‘அப்டி இல்லை சார். பொதுத்துறையிலே காதும் காதும் வச்சதுமாதிரி ஊழல் செய்யலாம் அது மட்டும்தான் காரணம். ராஜாஜி நேர்மையாச் சொல்லியிருக்கார்’ என்றார் இளம் நண்பர். ஆச்சரியமாக இருந்தது.
ஜெ
https://en.wikipedia.org/wiki/Modified_Scheme_of_Elementary_education_1953
http://www.education.nic.in/cd50years/g/12/28/12280V01.htm
http://www.education.nic.in/cd50years/g/12/28/12281301.htm
http://en.wikipedia.org/wiki/Hereditary_education_policy
=====================
மறுபிரசுரம் முதற்பிரசுரம் Dec 27, 2010
ராஜாஜி, ஈவேரா-கடிதங்கள்
குலக்கல்வி,கலைகள்-கடிதம்
ராஜாஜி,மபொசி_ கடிதங்கள்