இல்லுமினாட்டி – கடிதங்கள்

header

 

வணக்கம் சார்,

நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். செந்நாவேங்கை 21 படித்து விட்டு உங்களுக்கு எழுதவேண்டும் என்று நினைத்தேன். அதற்க்கு நடுவே இலுமினாட்டிகளின் பிரச்சாரகன் படித்தேன். நீண்ட கடிதம். படித்து கொண்டு இருக்கும் போதே நீங்கள் எங்கே எல்லாம் அவர் தவறாக புரிந்து கொண்டார் என்று சுட்டி காட்டுவீர்கள் என மனம் தானாக நினைத்து கொண்டது (ஒரு வேளை இதே போல் முந்தைய பல கடிதங்களை படித்த அனுபவமாக இருக்கலாம்), ஆனால் கடைசியில் அந்த இரண்டு வரி பதிலை கண்டதும் வெடித்து சிரித்து விட்டேன்.

அதன் அர்த்தத்தை புரிந்து கொண்டாலும், என்னவோ அந்த எழுத்து வடிவமே நகைச்சுவையாக உள்ளது போல் தெரிந்தது. மீண்டும் மீண்டும் அந்த வரிகளையே படித்து சிரித்து கொண்டிருந்தேன். பின்னர் புரிந்தது இந்த மாதிரி மனிதர்களுக்கு வேறு எப்படி தான் பதில் சொல்லி புரியவைக்க முடியும் ?

மகிழ்ச்சியாக போன இந்த நாளுக்கு நன்றி சொல்லத்தான் இந்த கடிதம். நன்றி சார்.

அன்புடன்,

ரஜினிகாந்த் ஜெயராமன்.

***

gow

அன்புள்ள ஜெ

இல்லுமினாட்டிகளின் பிரச்சாரகன் என்ற கடிதம் படித்தேன். எனக்கு அதைப்படித்தபோது சில எண்ணங்கள் தோன்றின. இந்த இலுமினாட்டி பேச்சுக்கு அடிப்படையாக இருப்பது மார்க்ஸிஸ்டுகள் நெடுங்காலமாகச் சொல்லிவந்த ஏகாதிபத்திய பூச்சாண்ட்டதானே? இப்போது எல்லாருமே கார்ப்பரேட் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறர்கள். ஆனால் அத்தனைபேரும் பயன்படுத்துவது கூகிள் முதல் ஆப்பிள் வரை கோக் முதல் கோல்கேட் வரை கார்ப்பரேட் பொருட்களை. ஆனால் எந்த ஒரு தீமைக்கும் கார்ப்பரேட்டுகள்தான் காரணம் என்று கவிதை எழுதி கட்டுரை படித்துவிடுவார்கள்

சமீபத்தில் எனக்கு ஒன்று தோன்றியது. நம் சிறுபத்திரிகை எழுத்தாளர்கள், கவிஞர்களின் பொது அறிவு மிகமிகக் கம்மி. அறிவியலறிவு அறவே இல்லை. அரசியல் என்றால் அன்றாடக் கட்சியரசியல்தான். பொதுவான வாசிப்பே கிடையாது. அவர்கள் எழுதும் ஃபேஸ்புக் பதிவுகளே சாட்சி. அவர்கள் பொதுவிஷயங்களில்  ‘களமாட’ ஆரம்பிக்கும்போது என்ன நிகழ்கிறதென்றால் இதே இலுமினாட்டி எதிர்ப்பு மனநிலைதான். இங்கே அவர்களை ஃபண்டட் ஆக்டிவிஸம் செய்யும் தன்னார்வக்குழுக்கள் மட்டுமே கண்டுகொள்கின்றன. இவர்களும் அவற்றின் கருவிகளாகத் தங்களை ஒப்புக்கொடுக்கிறார்கள்.  இவர்களின் அரசியல் எப்போதுமே முதிர்ச்சியற்ற கொந்தளிப்புஆக மட்டுமே உள்ளது என்பது இதனால்தான்.

அருண் ராஜ்

***

அன்புள்ள ஜெ

இலுமினாட்டி மாதிரியான பூச்சாண்டி காட்டல்கள் நமக்கு எப்படித்தேவைப்படுகின்றன? ஏதேனும் ஒரு பூச்சாண்டி காட்டாத அரசியல்வாதிகள் யாராவது நமக்கு உள்ளனரா? இஸ்லாமியப்பூச்சாண்டி, இந்துத்துவப் பூச்சாண்டி,முற்போக்குப் பூச்சாண்டி, தமிழ்த்தேசியப்பூச்சாண்டி… இது ஏன் என்றால் மக்களுக்கு பிரச்சினைகளின் சிக்கல்கள் புரிவதில்லை. அவர்களிடம் இப்படி பூச்சாண்டிகாட்டினால்தான் எடுபடும். பூச்சாண்டியை பெரிசாக ஆக்கத்தான் சொல்பவனுக்கு இடம் பெரிதாகும். பெரிய ஹீரோவுக்குப் பெரிய வில்லன் வேண்டும்தானே? இதுக்கு ஜேம்ஸ்பாண்டின் வில்லன்கள்தான் முன்னுதாரணம் என நினைக்கிறேன்

ஜெயராமன்

***

அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

ஆய்வாளர் திரு. ஜெயராமன் மகாலிங்கம் அவர்களின் இலுமிநாட்டியம் குறித்த ஆராய்ச்சியில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளேன்.  பண்டிகைக் காலத்தில் கிறிஸ்துவ வீடுகளில் இலுமிநாட்டிய குறியீடான நட்சத்திரங்களை ஏன் தொங்க விடுகிறார்கள்? இரண்டாயிரம் ஆண்டுகள் அவ்வழக்கம் இருந்ததா? இலுமிநாட்டியம் கிறிஸ்துவத்தை கைப்பற்றி விட்டதா? இதுபற்றியும் மற்றும் பிற மதங்கள் மீதான இடையறா இலுமிநாட்டிய முறைகளைப் பற்றியும் அவர் தனியாக தளம் ஒன்று துவங்கி விரிவாக எழுதுவார் என்றால் மகிழ்வேன்.

நானும் இதுபற்றி ஒரு பெரிய கட்டுரை எழுத எண்ணி உள்ளேன்.  போதிய தரவுகளும் தேவையான அளவு கரவுகளும் சேர்ந்த பின்னர் எழுதுவேன்.

தயவு செய்து எனக்கு ஸ்க்ரூ கழன்று விட்டது என்று எண்ண வேண்டாம், வேண்டுமானால் மறை கழன்று விட்டது என்று எண்ணவும்.

அன்புடன்

விக்ரம்

கோவை

***

அன்புள்ள ஜெ

அழிவுகொள்ளைத்தீமைக் கழகமும் [அகொதீக] வும் இலுமினாட்டியும் வேறுவேறா?

முருகேஷ்

***

முந்தைய கட்டுரைநிலமும் நதியும்- கடிதங்கள்
அடுத்த கட்டுரையூ.ஜி.கிருஷ்ணமூர்த்தியின் பயன்