ஆமிர்,நீர் -கடிதங்கள்

amir

 

ஆமீர்கான் -”நீரின்றி அமையாது உலகு” – அருண் மதுரா

அன்புள்ள ஜெ

 

முதலில் என் காலை வணக்கங்கள்.

 

நான் காலையில் எழுந்தவுடன் ஒரு நல்ல செய்தியை வாசித்து விட்டுதான் அன்றைய நாளை தொடங்க வேண்டும் என்று நினைப்பவள்.

 

இந்த கட்டுரையை படித்துக் கொண்டிருக்கும் போதே என் தொண்டை அடைத்து கொண்டது.

 

இந்த விழயத்தை படித்து நான் அறிந்து கொண்டது:

 

  • நல்ல மனிதர்கள் நம்முடன் இன்னும் இருக்கின்றார்கள் என்ற நம்பிக்கை.
  • மக்களுக்காக க்ருஷ்ணன் ஒரு விதத்தில் உதவி செய்து கொண்டே இருக்கிறார் என்பதை காட்டியது
  • மக்களிடையே இருந்து கொண்டு பேச மட்டும் செய்யாமல் ஆக்க பூர்வமாக எண்ணவும் செயல் படுத்த கூடிய நன் மக்களும் இருக்கின்றார்கள் என்பதை உணர்ந்தது.
  • மக்களின் எழுச்சி
  • உதவக் கூடிய அரசின் சில அமைப்புகளும் பிற அமைப்புகளும் இன்னும் இந்தியாவில் இருக்கின்றன என்னும் நம்பிக்கை
  • ஒவ்வொரு சாமான்யனுக்குள்ளும் இருக்கும் பொறுப்பும் மனிதமும்
  • அம்மாடி
  • சத்ய மேவ ஜெயதேயை கொண்டாடுவோம்
  • அமீர்கானும் அனையோரும் நல் வாழ்வும் வளமும் பெற்று இந்தியா மேலும் வளர க்ருஷ்ணன் மேலும் மேலும் அருளட்டும்

 

மனது மிகவும் நிறைவாக இருந்தது.

உங்களுக்கு மீண்டும் மீண்டும் நன்றி என் இந்நாள் இனிமையாக தொடங்க உதவியதற்காக.

 

அன்புடன்

மாலா

 

அன்புள்ள ஜெ

 

ஆமிர்கானின் நிகழ்ச்சி நான் விரும்பிப் பார்ப்பது. இன்றைய கசப்புநிறைந்த அரசியல்சூழலில் உண்மையாகவே மனம்நிறையச்செய்வதும் நம்பிக்கையூட்டுவதுமான ஒரு நிகழ்ச்சி அது. இத்தகைய நிகழ்ச்சிகள் எந்தவிதமான தொழில்நுட்பத்தேர்ச்சியுமில்லாமல் அரசாங்க ஆவணப்படம் போல எடுக்கப்படுவதே இங்கே வழக்கமாக உள்ளது. தரமான ஒளிப்பதிவு படத்தொகுப்பு பின்னணியிசையுடன் வரும் இந்நிகழ்ச்சி அதனால் மிக முக்கியமானது. எந்த ஒரு சமூகமும் அரசாங்கத்தை நம்பி இருக்கையில் அரசாங்கத்துக்கு அதிக பலத்தை அளிக்கிறது. அது அரசாங்கத்தைக் கையில் வைத்திருப்பவர்கள் என்னவேண்டுமென்றாலும் செய்யலாம் என்ற நிலையை உருவாக்குகிறது. அதுதான் ஊழலுக்கு அடிப்படை. மக்கள் அரசு சாராமல் தங்கள் பணிகளுக்கென தனித்தனியான அமைப்புகளையும் சர்க்யூட்களையும் உருவாக்கிக்கொள்ளும்போதுதான் மக்கள்பலம் கூடுகிறது. மேலைநாடுகளில் கன்ஸியூமர் சொசைட்டிகள், வெவ்வேறு சர்விஸ் சொசைட்டிகள் என்று சட்டபூர்வமான ஏராளமான அமைப்புகள் உள்ளன. மக்கள் தனியாட்களாக இல்லை. ஒரு சராசரி அமெரிக்கன் அப்படி இருபது அமைப்புகளிலாவது உறுப்பினராகச் செயல்படுபவன். அந்த அமைப்புகள் ஒன்றாகத்திரண்டு அரசாங்கத்தையே ஆட்டிப்படைக்கும் மக்கள் அதிகாரமாக ஆகின்றன. இந்தியாவில் அத்தகைய அமைப்புக்கள் இல்லை. தொழிற்சங்கங்கள் இருந்தன. அவை ஆற்றலிழந்து வருகின்றன  அமைப்புக்கள் இல்லாமலிருக்கையில்தான் அரசும் அரசியல்வாதிகளும் கட்சிகளும் பொதுவெளியை ஆக்ரமிக்கின்றன. மக்களை இஷ்டப்படி பயன்படுத்துகின்றன. தன்னார்வக்குழுஎன்றபேரில் ஃபண்டட் ஆக்டிவிசம் அவர்களுக்குத் தேவையான இடங்களில் நிகழ்கிறது. ஆக்கப்பூர்வமான அமைப்புசார்ந்த செயல்பாட்டே இதை வெல்வதற்கான வழி. அதைத்தான் ஆமீர் காட்டுகிறார். தலைவணங்கத்தக்க பணி

 

சுவாமி

 

ஜெ

 

வழக்கமாக எந்த ஒரு பொதுச்செயல்பாடும் ஒன்றுமே சரியாகாது என்று முடியும். சமீபத்தில்  கவிதா முரளிதரன் என்ற ஒரு பெண் இதழியலாளர் சேலம் எட்டு வழிச் சாலை பற்றிய ஃபேஸ்புக் குறிப்பில் இந்த நாடு நாசமாகப் போகட்டும் என்று முடித்திருந்ததை நண்பர் எனக்குப் பகிர்ந்திருந்தார். இப்படி எந்த மக்கள் போராட்டம் அல்லது எதிர்ப்பு உருவானாலும் இந்த ஃபேஸ்புக் ஆக்டிவிஸ்டுகள் இந்த நாடு உருப்படாது, இது நாசமாகப்போகவேண்டும் என்று எழுதுவதை .நாம் பார்க்கிறோம். இவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலுள்ள சிக்கல்கள் மனச்சோர்வுகளை கொண்டுவந்து இப்படி பொதுப்பிரச்சினைகளிலே கொட்டி கசப்பை வளர்க்கிறார்கள். அந்தப்பொதுப்பிரச்சினை எக்கேடு கெட்டாலும் இவர்களுக்கு ஒன்றுமில்லை. நாடு நாசமாகப்போகவேண்டும் என்பது மட்டும்தான் உண்மையான விருப்பம். நாடு என்று இவர்கள் உத்தேசிப்பது எதையாக இருந்தாலும் அர்த்தம் வருவது ஆயிரமாண்டுகளாக இங்கே வாழ்ந்துவரும் ஏழை எளிய மக்களைத்தான். அத்தகைய எதிர்மறை மனநிலைகளையும் கசப்புகளையும் பார்த்துவரும் நமக்கு ஆமிர்கானின் இந்நிகழ்ச்சி மிகப்பெரிய ஆற்றலை அளிக்கிறது. இதிலுள்ள கிரியேட்டிவிட்டியும் நம்பிக்கையும் இன்றைய தலைமுறையினருக்கு அவசியமான வழிகாட்டல்கள்

 

ராதாகிருஷ்ணன்

முந்தைய கட்டுரைஅம்மா வருகை – கடிதம்
அடுத்த கட்டுரைகோவை பயணம் ரத்து