அவையில் மீண்டும் ஓசை அடங்கத் தொடங்கியிருந்தது. கதவை திறப்பதற்கு முன் உள்ளே ஓசைகொந்தளிக்கும் அவை இருப்பதாக எண்ணியிருந்தமையால் திறந்ததும் வந்தறைந்த ஓசையின்மை திகைப்பூட்டியது. சூழ நோக்கியபடி பூரிசிரவஸ் தன் இருக்கையில் வந்து அமர்ந்தான். அவன் விழிகள் திருதராஷ்டிரரை தேடின. திருதராஷ்டிரரும் சஞ்சயனும் யுயுத்ஸுவும் அங்கு இல்லை என்பதைக் கண்டதும் சற்று சலிப்பும் விந்தையானதோர் துயரும் அவனுக்கு ஏற்பட்டது. பீடத்தில் அமர்ந்து கைகளை கட்டிக்கொண்டு அவை மேடையை நோக்கத் தொடங்கினான்.
துரியோதனன் மணிமுடியையும் செங்கோலையும் தாலங்களில் வைத்துவிட்டு இயல்பாக அரியணையில் அமர நிமித்திகன் வெள்ளிக்கோலுடன் அறிவிப்பு மேடையில் ஏறினான். கொம்பொலி எழுந்தடங்கியது. வெள்ளிக்கோலை மும்முறை சுழற்றி உரத்த குரலில் “வெற்றி எழுக! புகழ் திகழ்க! மூதாதையர் அருள்க! குலதெய்வங்கள் கனிக! இத்தருணம் செல்வத்துக்கும் வெற்றிக்கும் உரிய அனைத்து தெய்வங்களாலும் ஆதரிக்கப்படுக! ஆம், அவ்வாறே ஆகுக!” என்றான். அனைவரும் அவன் சொற்களை விழிகளால் நோக்கிக் கொண்டிருந்தனர். அங்கு நிகழ்ந்த அந்த அங்கத நாடகம் அவர்கள் அனைவரையும் மகிழ்வூட்டியிருந்தது. அதிலிருந்த வேடிக்கையை உள்ளிருந்து எண்ணி எண்ணி எடுத்து தங்களுக்குள் உவகை கொண்டிருந்தனர். எவரும் ஓசையிட்டு நகைக்கவில்லை எனினும் மெல்லிய ரீங்காரமாகவே சிரிப்பு கேட்டுக்கொண்டிருந்தது.
நிமித்திகன் “அவையோரே, இப்போது பால்ஹிக மூதாதையால் முறையாக அளிக்கப்பட்ட அஸ்தினபுரியின் மணிமுடியை சூடியிருக்கும் தார்த்தராஷ்டிரராகிய துரியோதனர் அஸ்தினபுரியின் மீதும், இம்மணிமுடி மரபாக ஆண்டுவந்த அனைத்து நிலங்கள் மீதும், அதன் குடிகள் மீதும் முற்றுரிமை கொண்டிருக்கிறார். இதை மறுப்பதும் மாறாக விழைவதும் அரச வஞ்சமென்று கொள்ளப்படும். அவர்கள் எதிரிகளாக வகுக்கப்பட்டு படைகொண்டு வென்று முற்றழிக்கப்படுவர். அவ்வாறு இவ்வரசுக்கும் குடிக்கும் முடிக்கும் எதிராக படைகொண்டு உபப்பிலாவ்யத்தில் நின்றிருக்கும் அரசரின் உடன்குருதியினரும் பாண்டுவின் மைந்தருமான யுதிஷ்டிரரையும், அவருடைய தம்பியரையும், உடன் இணைந்துள்ள அரசர்களையும், குடித்தலைவர்களையும் உடனடியாக படைக்கலங்களை கைவிட்டு அணி குலைத்து ஆங்காங்குள்ள அரசப் பொறுப்பினரை அணுகி அடிபணியுமாறு அரசரின் பொருட்டு இந்த அவை ஆணையிடுகிறது. அது மீறப்படுமெனில் அவர்கள் கொல்லப்படுவார்கள் என்றும், அவர்களின் குடிகள் வாழும் உரிமையை இழக்கின்றன என்றும், கொடிவழிகள் வரை அரசப்பழி நீளுமென்றும் அறுதி உரைக்கப்படுகிறது” என்று சொல்லி மீண்டும் கோல் சுழற்றி தலைவணங்கி விலகினான்.
துரியோதனன் எழுந்து “அவையீரே, பெருநெறிகள் புலரவேண்டுமென்பதற்காக இப்போர் இங்கு தொடரவிருக்கிறது. இதில் நாம் பெறும் முழுவெற்றி பாரதவர்ஷத்தின் மீது தளர்ந்து வரும் ஷத்ரியர்களின் ஆட்சியை நிலைநிறுத்தும். எவர் இந்த நாட்டை வகுத்து அமைத்தார்களோ, இதுகாறும் இதன் தலைமை கொண்டு ஆண்டார்களோ, வேள்வியும் தவமும் வேளாண்மையும் ஆசெழித்தலும் எவர் பொருட்டு இங்கு நிகழ்ந்தனவோ அவர்கள் தங்கள் நிலத்தின் மீது வேதங்களால் அளிக்கப்பட்ட முற்றுரிமையை மீண்டும் ஒருமுறை உறுதி செய்வார்கள். அருள்க தெய்வங்கள்! துணையமைக மூதாதையர்!” என்றான்.
அவையினர் கைகளையும் படைக்கலங்களையும் தூக்கி வாழ்த்துரைத்தனர். “வெற்றி வேல்! வீரவேல்! வெல்க படை! வெல்க ஷத்ரியக் குருதி! வெல்க தொல்லறம்! வெல்க தெய்வங்கள்!” என்று எழுந்த முழக்கங்களில் உவகையும் களியாட்டுமே இருந்தது. போர்வெற்றிக்குப் பின் எழும் உண்டாட்டின் ஓசைகள்போல. மீண்டும் கொம்போசை எழுந்தடங்க துரியோதனன் “இதுவே இறுதிப்போர். இப்போர் என்னில் தொடங்கவில்லை. அஸ்தினபுரியிலும் வேர்கொள்ளவில்லை. நெடுங்காலமாகவே இந்நிலத்தில் புகைந்துகொண்டிருந்தது. ஒவ்வொரு நாளுமென ஷத்ரியர் வீரம் இழிவுபட்டது. அவர்களின் நிலம் சுருங்கி வந்தது. அவர்களை ஆண்ட தொல்லறம் மறுக்கப்பட்டது. இனி ஓர் அடி பின்வைக்க இயலாதென்ற நிலை வந்துவிட்டது. யானைத்திரளை தவிர்க்க விழைந்த சிம்மம் சினம்கொண்டு நிலமறைந்து முழக்கமிடுகிறது. இனி ஒரே அறை. குருதிசிதற மத்தகங்கள் உடையும். காட்டின் அரசன் எவனென்று தெய்வங்கள் வகுத்ததோ அதுவே நிறுவப்படும். ஆம், இதுவே போர். போர்களுக்கெல்லாம் அன்னை!” என்றான்.
முதலில் உரைத்த போர்வஞ்சினத்தின் உணர்வுக்கொந்தளிப்பும் சொல்வீச்சும் அவ்வுரையில் இருக்கவில்லை. மாறாக ஒளிரும் சிறுகண்கள் அவையை சுழன்று வர, ஆணையிடும் குரலில், துரியோதனன் சொன்னான். “இங்கிருக்கும் அரசர்கள் அனைவரும் அறிந்த ஒன்று. பாரதவர்ஷத்தின் ஷத்ரிய ஆற்றலை முதன்மையாக அழித்தது எது? அயற்பகையா? தெய்வங்களின் வஞ்சமா? அல்ல, குடிப்பகை. மீளமீள ஷத்ரியர்களால் ஷத்ரியர்கள் தோற்கடிக்கப்பட்டிருக்கிறோம். தொல்மூதாதையர் அமைத்த பதினாறு ஜனபதங்களின் அரசர்களும் ஒருவரோடொருவர் போரிட்டு குருதி சிந்தாத ஆண்டு ஒன்று இந்நிலத்தில் கடந்து சென்றதில்லை. எரிபரந்தெடுத்தும் குடியழித்தும் அரண்மனைகளை புழுதிக்குவையாக்கியும் நம்மை நாம் அழிப்பதையே பெருமிதமென எண்ணித் தருக்கினோம். நம் கொலைவெறிகளை பரணி பாடி மொழியில் நிறுத்தினோம், சூதர் நாவில் அவற்றை மீளமீளக் கேட்டு மகிழ்ந்தோம். நம் குழவியருக்குச் சொல்லி வளர்த்தோம். அதன் விளைவுகளை இன்று அறிகிறோம்.”
“நம்மை நாமே வெட்டி அழித்துக்கொண்டிருக்க நம்மைச் சுற்றி பெற்றுப் பெருகி, கடலோடி ஈட்டி, நகர் பெருக்கி, படை திரட்டி நின்றிருக்கின்றனர் அயலார். நிஷாதரும் அசுரரும் கிராதரும் அரக்கரும் வென்று செல்கின்றனர் நம்மை. ஷத்ரியர்களே, இது இறுதிக்கணம். இன்று நாம் முழுவிசையுடன் போர்புரிவோமென்றால் மட்டுமே வெல்ல முடியும். பிறிதொருமுறை அவர்கள் தலையெடுக்காது அழிக்க முடியும். இன்று தயங்கினோமெனில் இனி ஒருபோதும் நம்மால் வெல்ல முடியாது. நமது படைகள் ஒவ்வொரு நாளுமென ஆற்றல் குறைந்துவருகின்றன. நம் தந்தையருக்கிருந்த உளவிசை நமக்கில்லை. நமது மூதாதையருக்கிருந்த தயங்காமை இன்று எவருக்குமில்லை. நமக்கிருக்கும் நம்பிக்கை கூட நம் மைந்தரிடம் இல்லை. இன்று நாம் நம்மை நிறுத்தியாக வேண்டும். பாரதவர்ஷம் வாழ, வேதநெறி தழைக்க, தொல்லறம் நிலைகொள்ள ஷத்ரியர்களாகிய நாம் இங்கு நின்றாகவேண்டும்.”
“வேலி உடைந்து கிடக்கிறது, வீரர்களே! காட்டுவிலங்குகள் பசி கொண்டு சூழ்ந்துள்ளன. நம்மை எதிர்நோக்கி காத்திருக்கிறது வேதப்பயிர். நாம் வாளெடுத்திருப்பது இறுதிப்போர் ஒன்றுக்காக. இங்கு நீங்கள் கேட்கலாம் இப்போரும் உடன்குருதியினரின் பூசல் அல்லவா என்று. மெய், ஆனால் அங்கிருப்பவர்கள் என் உடன்குருதியினர் மட்டுமல்ல. திரண்டிருப்பவர்களில் பெரும்பகுதியினர் பாரதவர்ஷத்தை தங்களுடையதென்று எண்ணும் இழிகுலத்தோர். இங்கு முளைத்தெழுந்து பெருகிக்கொண்டிருக்கும் களைச்செடிகள். அவர்களுக்கு தலைமை தாங்கி நின்றிருப்பதனால்தான் என் உடன்குருதியினர் எனக்கு எதிரிகளாகிறார்கள். அவர்களுக்கு ஊக்கம் கொடுத்து, இந்நிலத்தை அவர்களுக்கு ஆளும் உரிமை உண்டு என்னும் கொள்கையை அளிப்பதனால்தான் இளைய யாதவர் என் முதன்மை எதிரியாகிறார்.”
“இப்போருடன் பாரதவர்ஷத்தில் குருதிப்பூசல் முற்றழியவேண்டும். குலநெறிக்கு எதிராக வாள்கொண்டு எழுவது பேரழிவை நோக்கி அடியெடுத்து வைப்பதென்பது நம் ஒவ்வொருவருக்கும் நாமே சொல்லிக்கொள்வதாக வேண்டும். ஓர் உயிரும் எஞ்சலாகாது அங்கு. எதிர்நின்று படைக்கலம் எடுத்த எவரும் இல்லம் திரும்பலாகாது. இன்னும் ஆயிரம் ஈராயிரம் ஆண்டுகள் பல்லாயிரம் ஆண்டுகள் இங்கு நிலவ வேண்டும் ஒரு சொல். அறிக அச்சொல்லை! அரசனென்பவன் வீரத்தால் நிலைநிறுத்தப்படுபவன், குலநெறிகளால் தேர்ந்தெடுக்கப்படுபவன், அறத்தால் நிலைகொள்பவன். அம்மூன்று முறைமைகளுக்கும் அப்பால் எழும் ஆற்றலென்று ஒன்று இருக்கலாகாது. அவற்றுக்கு எதிராக ஓர் எண்ணமும் எவ்வுள்ளத்திலும் எழலாகாது. அது நம் மைந்தராகுக, உடன்பிறந்தாராகுக, எவராயினும் நம் எதிரிகளே.”
வெறிகொண்ட வஞ்சினத்தைவிட அந்த ஆழ்ந்து உள்ளூடுருவும் பேச்சு அவர்களை கிளரச் செய்தது. பூரிசிரவஸ் தன் கைகளே நடுங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்தான். அருகிருந்த வேசரநாட்டரசன் கைகளைக் கூப்பி முகத்தில் அழுத்தி கழுத்துத் தசைகள் அதிர நடுங்கிக்கொண்டிருந்தான். அவையெங்கும் விம்மல்கள் என மூச்சொலிகள் எழுந்தன. அக்கணம் மிகச் சரியாக துரியோதனனின் குரல் பற்றிக்கொண்டு பரந்தெழுந்தது. உரக்க வெறிகொண்டவனாக அவன் கூவினான். “எழுக, அரசர்களே! நம்மை அரசர்களென்றாக்கிய நெறிகளின் பொருட்டு! நம் மூதாதையர் காத்து வளர்த்த அறத்தின் பொருட்டு! நம்மை அரசரென்று அரியணையிட்டு அமர்த்திய அந்தணரின் பொருட்டு! குலமூதாதையரின் பொருட்டு! நமக்கென வாள்கொண்டெழும் நம் இளையோரின் பொருட்டு! நம் குருதியில் விதையென கலந்திருக்கும் கொடிவழியினரின் பொருட்டு! நாம் வென்றேயாகவேண்டும். மறு எண்ணமே இல்லை. முற்றழிவதற்கு மாற்றாக ஒன்றே உள்ளது, முழுவெற்றி! நாம் வெல்வோம், நாம் வென்றாக வேண்டுமென்பது தெய்வங்களின் ஆணை என்பதனால்! நாம் வெல்வோம், அறம் வென்றேயாக வேண்டுமென்பது மனுக்குலத்தை படைத்த விசைகளின் நெறியென்பதனால்! நாம் வெல்வோம், எதனால் இங்கு ஷத்ரியக்குடி உருவானதோ அந்த ஆணை இன்னும் எஞ்சியிருப்பதனால்! வெல்க நமது கூட்டு! வெல்க குலநெறிகள்! வெல்க நம் போர்த்தெய்வங்கள்! வெற்றிவேல்! வீரவேல்!”
அவை எழுந்து ஒற்றைப் பெருங்குரலில் “வெற்றிவேல்! வீரவேல்!” என்று முழக்கமிட்டது. அலையலையென பெருகிப் பெருகி, மீண்டும் மீண்டுமென வெறி மூண்டு எழுந்துகொண்டிருந்தது போர்க்குரல். “வெல்க துரியோதனர்! வெல்க அஸ்தினபுரி! வெற்றிவேல்! வீரவேல்! எழுக குருதி! எழுக பேரனல்! எழுக அலைப்பெருவெள்ளம்! எழுக படைக்கலப்பெருக்கு! வெல்வோம்! வென்று நிற்போம்! எரிசாம்பல் மீது நின்றாடுவோம்! குருதிகொண்டு கூத்தாடுவோம்! எஞ்சாது அழிக எம் பகைவர்!” என்ற முழக்கம் தன் உடலை நிறைத்து தன்னிலிருந்து எழுந்து பெருகுவதாக பூரிசிரவஸ் உணர்ந்தான். “மாமன்னர் துரியோதனர் வெல்க! குருகுலத்தோன் வெல்க! யயாதியின் குடிவந்தோர் வெல்க! ஷத்ரியப் பெருங்குலம் வெல்க!”
பூரிசிரவஸ் நெடுநேரம் கழித்தே தானும் வெறிகொண்டு கைவீசி கூச்சலிட்டு ஆர்த்து துள்ளிக்கொண்டிருப்பதை அறிந்தான். கனகர் கைகாட்ட கொம்புகள் மும்முறை ஒலித்தடங்கியதும் மெல்ல சூழ்ந்திருந்த போர் வெறிக்கூச்சல் அலைசுருண்டு அமைந்தது. மீண்டும் எஞ்சிய விசை திரட்டி திரைகொண்டு பெருகி எழுந்தது. “கொன்று குவிப்போம்! தலைவெட்டி சிதறடிப்போம்! நெஞ்சு பிளந்து குருதியிலாடுவோம்! வெற்றிவேல்! வீரவேல்!” என்று எவரோ எழுந்து கூவி துள்ளினர். அவை மீண்டும் ஆர்ப்பரித்தெழுந்தது. போர்க்கூச்சல்களுடன் படைக்கலங்கள் காற்றிலெழுந்து சுழன்று சுழன்றமைந்தன. அக்கூச்சலை அவை நாவுகளென எழுப்புவதுபோல தோன்றியது. மீண்டும் கொம்புகள் மும்முறை முழங்க அவை மெல்ல அடங்கியது. மறுகணமே மீண்டும் “குருதி! கொழுங்குருதி! குருதியிலாடுவோம்! குருதியருந்துவோம்! எழுக கொற்றவை! எழுக பதினாறு உருத்திரர்கள்! எழுக காலபைரவர்! எழுக வீரபத்ரர்! எழுக காளி! எழுக நீலி!” என அவை ஆர்ப்பரித்தெழுந்தது.
மீண்டும் மீண்டும் முரசுகளும் கொம்புகளும் முழங்கி அவையை அடங்கச்செய்தன. பூரிசிரவஸ் பீடத்தில் அமர்ந்தபோது தன் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துகொண்டிருப்பதை உணர்ந்தான். இரு கால்களும் நடுங்கிக்கொண்டிருந்தன. பீடத்தில் அவனால் அமர இயலவில்லை. அமர்ந்து கைகளால் இரு கைப்பிடிகளையும் பற்றிக்கொண்டான். அக்கணம் மீண்டும் எங்கோ “வெல்க மூதாதையர்! வெல்க போர்த்தெய்வங்கள்! அருள்க தெய்வங்களே!” என்றொரு முதிய வெறிக்குரல் வெடித்தெழ அவை பொங்கி எழுந்து மீண்டும் குரலெழுப்பத் தொடங்கியது. மீண்டுமொருமுறை கொம்புகள் ஒலித்து அவையை அடங்கச்செய்தபோது ஒவ்வொருவரும் உடல் தளர்ந்திருந்தனர்.
பூரிசிரவஸ் திரும்பி நோக்கியபோது அத்தனை அரசர்களும் விழிநீர் வார்த்துக்கொண்டிருந்தனர். அனைவருமே நடுங்கியமையால் அந்த அவைக்குள் குளிர்காற்று சுழன்றடிப்பதுபோல் தோன்றியது. விசும்பல்கள், விம்மல்கள், சினமோ பெருவலியோ கொண்டவை போன்ற உறுமல்கள். அறியாத் தெய்வங்கள் விண்ணிலிருந்து இறங்கி ஒவ்வொரு உடலிலும் கூடியவைபோல் அத்தனை பேரும் வெறியாட்டு கொண்டெழுவதை பூரிசிரவஸ் அதற்கு முன் பார்த்திருக்கவில்லை. போரென்பது ஒற்றைப்பெருந்திரளென மானுடப்பெருக்கே கொள்ளும் வெறியாட்டு. விடாய்கொண்ட தெய்வமொன்று பல்லாயிரம் பலலட்சம் தலையும் கையும் வாயும் கொண்டு தன்னைத்தான் கொன்று தின்று களித்தாடும் குருதிக்கூத்து.
பூரிசிரவஸ் கண்களை மூடி குருதிக்குமிழிகள் பறப்பதை கண்டான். மதங்கொண்டு எழுந்த யானையிடம் ஆணையிடும் பாகனின் விழிகளுடன் துரியோதனன் உரைத்த வஞ்சினம் மீண்டும் தன்னுள் ஓடக் கேட்டான். ஒவ்வொரு வரிக்கும் அவன் உடல் மெய்ப்பு கொண்டது. துரியோதனன் புதிதாக எதையும் கூறவில்லை. ஆனால் அங்கிருந்தோர் எண்ணி எண்ணி சொல்லி பெருக்கிக்கொண்ட அனைத்தும் அச்சொற்களில் கூர்மை கொண்டிருந்தன.
நிமித்திகன் அறிவிப்பு மேடைமேல் ஏறிவந்து “அவையோரே, வென்று அன்றி அமையாத பெருந்திறலோரின் போர் வஞ்சினம் இங்கிருந்து நம் எதிரிகளை சென்றடைந்திருக்கும் இப்போது. அவர்களின் கனவுகளில் அது பாதாள தெய்வங்களின் வஞ்சக்குரலென ஒலிக்கட்டும். அவர்களின் போர் முரசுகள்மேல் பெருமழையென பெய்து ஓசையவியச் செய்யட்டும். அவர்களின் படைக்கலங்களின் மீது உப்பென படிந்து துருப்பிடிக்க வைக்கட்டும். சிம்மம் தன் குரலாலேயே காட்டை ஆள்கிறது. இவ்வஞ்சினத்தால் ஆயிரமாண்டு பாரதவர்ஷம் நம்மால் ஆளப்படும். ஆம், அவ்வாறே ஆகுக!” என்றான். “ஆம்! ஆம்!” என்று அவையினர் கோல்களையும் வாள்களையும் தூக்கி பேரொலி எழுப்பினர்.
நிமித்திகன் தலைவணங்கி பின்னகர கனகர் அவை மேடைமேல் ஏறி “அரசர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! இங்கு நம் முதன்மைப் படைத்தலைவரையும் பிற படைத்தலைவர்களையும் தெரிவுசெய்யும் நிலையில் இருக்கிறோம். அனைவரும் அறிந்திருப்பீர்கள், முன்னரே அரசரும் முதன்மை அமைச்சர்களும் கூடியமர்ந்து படைத்தலைமைக்கான திறலோரை தெரிவுசெய்துவிட்டிருக்கிறோம். அவர்களின் பெயர்களை இந்த அவையில் முறையாக அறிவிப்பதொன்றே எஞ்சியுள்ளது. அவ்வறிவிப்பை அஸ்தினபுரியின் அரசர், இப்பெரும்படைகளின் தலைவர், தார்த்தராஷ்டிரராகிய துரியோதனர் அறிவிப்பார்” என்று சொல்லி தலைவணங்கினார்.
துரியோதனன் எழுந்தபோது அவை அமைதிகொண்டிருந்தது. பூரிசிரவஸ் பீஷ்மரை பார்த்தான். அவர் முற்றிலும் அங்கில்லை என்பது தெரிந்தது. துயில்கொண்டிருக்கிறாரா என்ற எண்ணம் அவனுக்கு ஏற்பட்டது. இப்பேரவையில் ஒருவர் துயில முடியுமா? ஆனால் விழிகள் மூடியிருக்க வாய் சற்று திறந்திருக்க மடியில் கோத்த மெலிந்து நீண்ட விரல்களுடன் மரவுரியிட்ட பீடத்தில் சற்றே கோணலாக அமர்ந்த முதியவர் துயில்பவர் போலத்தான் தோன்றினார். அவன் எண்ணத்தை உணர்ந்தவனாக சலன் “மெய்யாகவே துயில்கிறார். நான் நெடுநேரமாக அவரை பார்த்துக்கொண்டிருக்கிறேன்” என்றான். பூரிசிரவஸ் வியப்புடன் நோக்க “முதியவர்களின் இயல்பு அது. எங்கும் அவர்களை மீறி சித்தத்தின்மீது கவியும் மென்துயிலே அவர்களை மீண்டும் புத்துயிர்கொண்டு எழச் செய்கிறது” என்றான். “இங்கு நிகழ்ந்ததை அவர் அறிவாரா?” என்றான் பூரிசிரவஸ். சலன் சிரித்து “விழித்திருக்கையிலேயே முழுதறிகிறாரா என்பது ஐயத்திற்குரியது. துயிலில் அவருக்குள் ஒலிகள் நுழையும். அவற்றை ஆழத்தில் விழித்திருப்பது வாங்கி அடுக்கி பிறிதொரு உலகை படைத்தளிக்கும். அது இந்த அவையின் இவ்வடிவாக இருக்க வாய்ப்பில்லை” என்றான். பின்னர் புன்னகையுடன் “ஒருவேளை இந்த அவையின் மெய்மையை அந்த ஆழுளான் அங்கிருந்து உணர்ந்துகொண்டும் இருக்கலாம்” என்றான்.
துரியோதனன் “அவையீரே, இந்தப் போர்சூழ்கையை வகுக்கையில் நமது முன் இருந்த வினா ஒன்றுண்டு. முதல்நாள் இப்பெரும்படையை தலைமை தாங்கி நடத்தப்போவது யார்? அங்க நாட்டரசர் கர்ணன் நடத்த வேண்டுமென்பது என் எண்ணம். ஆனால் பிதாமகர் பீஷ்மரும் துரோணரும் சல்யரும் அவ்வெண்ணத்திற்கெதிர் நின்றனர். இங்குள்ள அரசர்களும் அது நன்றல்ல என்றனர். ஏனெனில் நாம் ஷத்ரியக் குடியுரிமைக்காகவும் தொல்நெறிகளுக்காகவும் போரிடுகிறோம். நாம் போரிடுவது எதற்காக என்பது நம் படைவகுப்பிலேயே தெரிந்தாகவேண்டும். நமக்கும் நம் எதிரிகளுக்கும் படைத்தலைமையினூடாகவே வேறுபாடு துலங்கவேண்டும். படைத்தலைவர் என்பவர் ஒரு கொடி, ஓர் அடையாளம். நாம் குலநெறியின் பொருட்டே போரிடுகிறோம் என்பதை குலத்தலைவர் ஒருவர் படைநடத்தி வருகையிலேயே நிறுவுகிறோம்” என்றான்.
துரோணர் பீஷ்மரை மெல்ல தொட்டு உசுப்ப அவர் விழித்துக்கொண்டு உடலை அசைத்து அமர்ந்து வாயை துடைத்த பின் ஆடையை சீரமைத்துக்கொள்வதை பூரிசிரவஸ் கண்டான். துரியோதனன் “நம் படைக்கு முதல்படைத்தலைவராக பிதாமகர் பீஷ்மர் எழுகையில் பாரதவர்ஷத்தில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் ஐயம் திரிபற நாம் உரைப்பதொன்று துலங்கும். இப்போர் குருகுலத்து மூதாதைக்கும் அவருடைய ஆணையை மீறியெழும் அவருடைய பெயர்மைந்தருக்குமான போர். நாம் பீஷ்மரின் தரப்பினர். பிதாமகர் முடிதுறந்திருக்கலாம். ஆனால் குலநெறியை துறக்கவில்லை. அந்நெறியின் பொருட்டு அவர் போர்முனைக்கு வந்து நிற்கையில் அந்நெறியை ஏற்காது யாதவன் சொல்கொண்டு நிற்பவர்கள்தான் பாண்டவர்கள்” என்றான்.
“அரசர்களே, பாண்டவப் படையிலிருப்பவர்களும் குருகுலத்து அரசர்களால் ஆளப்பட்டவர்களே. இங்கிருந்த பெருங்குடி ஷத்ரியர்களிலும் ஒரு சாரார் அங்கிருக்கிறார்கள். பிதாமகர் படைக்கலம் ஏந்தி களம் வந்து நிற்கையில் அவர்கள் காணட்டும், ஆயிரமாண்டு முடிசூடி அவர்களை ஆண்ட குருதியின் மூத்தோருக்கு எதிராக நின்றிருக்கிறார்கள் என்று. அவர்களின் குடிமூதாதையரும் குலதெய்வங்களும் அதை ஏற்பார்களா என்று. அதன் பொருட்டு அவர்கள் தங்களின் கொடிவழியினருக்கு மறுமொழி சொல்லவேண்டும் என்று. அங்கேயே நாம் முதல்வெற்றி அடைந்துவிடுகிறோம்” என்றான் துரியோதனன்.
அவை ரீங்கரித்துக்கொண்டிருந்தது. துரியோதனன் திரும்பி பீஷ்மரை நோக்கி கைகுவித்து தலைவணங்கி “ஆகவே இப்படையை முதல்நாள் பிதாமகர் பீஷ்மரே வழிநடத்தித் தரவேண்டுமென்று முடிவெடுத்தோம். இவ்வவையின் சார்பில் அதை அவரிடம் கோருகிறோம்” என்றான். பேரவையிலிருந்து “ஆம்! ஆம்!” என்ற முழக்கம் எழுந்தது. ஜராசந்தனின் மைந்தனும் மகதமன்னனுமான ஜயசேனன் “ஆம், அவையின் கோரிக்கை அதுவே” என்றான். “ஆம்! ஆம்!” என அவையினர் கோல்களைத் தூக்கி அதை வழிமொழிந்தனர்.
முன்நிரையில் அமர்ந்திருந்த சல்யர் எழுந்து “பிறிதொரு எண்ணமே எழவேண்டியதில்லை. பிறிதெவருக்கும் அத்தகுதியும் இல்லை. தன் குலத்தின் நெறிக்கும் தன் குடியின் முடிக்குமாக பிதாமகர் எழட்டும் போருக்கு. பிதாமகரை வெல்லும் பெருவீரர் எவரும் இந்நிலத்தில் இன்றில்லை. அவரை முன்வைப்பதன் வழியாகவே வெல்லப்பட முடியாதவர்கள் நாம் என்பதை அவர்களுக்கு அறிவிப்போம். உண்மையில் வில்லேந்தி படைமுகம் கொண்டு பிதாமகர் நிற்கையிலேயே போர் முடிந்துவிடுகிறது. பிதாமகர் பீஷ்மர் இப்பொறுப்பை ஏற்றருளவேண்டும்” என்றார்.
ஜயத்ரதன் எழுந்து “ஆம், இங்கு கூடியிருக்கும் அனைத்து அரசர்களின் சார்பிலும் மைந்தனாக அடிபணிந்து பிதாமகரிடம் இதை கோருகிறேன்” என்றான். கலிங்க அரசர் ஸ்ருதாயுஷ் எழுந்து “இங்கிருக்கும் அனைவரின் குரலும் அதுவே. பிதாமகரின் கீழ் படைக்கலம் கொண்டு செல்வது இந்திரனை தேவர்கள் தொடர்வதுபோல” என்றார். அவையிலிருக்கும் அரசர்கள் அனைவருமே வெவ்வேறு ஒலிகளில் அதை ஆதரித்து குரலெழுப்ப மாளவ மன்னர் இந்திரசேனர் “ஆம், எங்கள் கோரிக்கை அது! எங்களுக்கு அருள்க என்று பிதாமகரை வேண்டுகிறோம்!” என்றார்.
“பிதாமகர் பீஷ்மர் இப்போரில் வென்று தன் தொல்நெறியை நிலைநாட்டும் பொறுப்பு கொண்டவர், அதை அவர் தவிர்க்கமாட்டார்” என்று தமகோஷர் சொன்னார். “ஆம், அப்பொறுப்பை அவர் ஒருபோதும் துறக்க மாட்டார்” என்று தட்சிணமாகிஷ்மதியின் நீலன் சொன்னார். அனைத்து விழிகளும் பீஷ்மரை நோக்கியிருந்தன. அரசமேடையில் துரியோதனன் இரு கைகளும் செயலற்றவைபோல் கிடக்க கூர்விழிகளால் பீஷ்மரை நோக்கிக்கொண்டு நின்றான். பீஷ்மர் அச்சொற்களை உள்வாங்கியவர்போல தோன்றவில்லை. அவருடைய கண்கள் அவைமேல் அலைபாய்ந்தன. உதடுகளை நடுங்கும் விரல்களால் வருடியபடி வெறுமனே அமர்ந்திருந்தார். ஒருகணம் அவரும் பால்ஹிகர்போல் உளமழிந்துவிட்டார் என்ற எண்ணத்தை பூரிசிரவஸ் அடைந்தான். அங்கு நிகழ்ந்தன எதுவும் பொருள்கொள்ளா உயரத்திலிருந்து அவர் அனைத்தையும் நோக்கிக்கொண்டிருப்பதுபோல தோன்றியது.