ஆமீர்கான் – “நீரின்றி அமையாது உலகு” – அருண் மதுரா

amir

2012 ஆம் ஆண்டு, ஆமீர் கான், தூர்தர்ஷனில், தன் முதல் தொலைக்காட்சித் தொடரான, “சத்யமேவ ஜெயதே (வாய்மையே வெல்லும்)” வைத் துவங்கினார். இதில், சமூகத்தைப் பாதிக்கும் பிரச்சினைகள் பலவற்றையும் அலசினார். பிரச்சினைகளால் பாதிக்கப் பட்டவர்கள், அதைத் தீர்க்க முயலும் மனிதர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், அரசு அதிகாரிகள், அவற்றின் சமூகப் பரிமாணங்கள் எனப் பலதும் அலசப்பட்டன. சிறுவர் பாலியல் கொடுமை, பெண் சிசுக் கொலை, வறட்சி என பல தலைப்புகளில். இந்தத் தொலைக்காட்சித் தொடரின் முடிவில், ஆமீர்கானுக்கும், அவர் மனைவிக்கும், இத்தொடரை இயக்கிய சத்யஜித் பட்கலுக்கும், தொடரில் அலசப் பட்ட ஒரு முக்கியமான பிரச்சினையில், தங்களின் நேரடி பங்களிப்பு இருக்க வேண்டும் என்னும் யோசனை தோன்றியது.

ஆமீர்தான், தனது பிறந்த மண்ணான, மராத்தியத்தின் பிரச்சினையான, வறட்சியைப் போக்க விரும்பினார். மராத்வாடாவும், விதர்பாவும் இந்தியாவின் வறட்சியான பிரதேசங்களுள் ஒன்று. மழை மறைவுப் பிரதேசம் என்பது மிக முக்கிய காரணம். இந்தியாவில், உழவர்கள் தற்கொலைகள் அதிகம் நடக்கும் ஒரு பகுதி.

அதன் விளைவாக, பானி (நீர்) ஃபௌண்டெஷன் என்னும் நீர் மேலாண்மை அமைப்பு பிறந்தது.

கிட்டத்தட்ட ஒரு ஆண்டு, சத்யஜித் பட்கலும், கிரண் ராவும் அவர்களது குழுவும், இந்தப் பகுதியை ஆராய்ந்தார்கள். மராத்தியத்தில், இருக்கும் 350 தாலூக்காக்களில், 150 வறட்சிக்கு எளிதில் இலக்காகும் பகுதிகளாக இருந்தன. அவர்களது, பயணங்களில், வறட்சியான இந்தப் பகுதிகளிலும், சில ஊர்கள் பசுமையாக இருந்ததும், அங்கே நீர் இருந்ததும் அவர்களுக்கு வியப்பாக இருந்த்து.

அதன் காரணம், அந்த ஊர்களின், அரசின் நீர் சேகரிப்புத் திட்டங்கள் வெற்றிகரமாக நிகழ்ந்திருப்பதுதான் எனக் கண்டார்கள். எனவே, மழை நீர் சேகரிப்பு மற்றும் மேலாண்மையைப் பெரும் அளவில் செய்ய முடிவெடுத்தார்கள்.

மராத்தியத்தின் வறட்சிப் பிரதேசமான அஹமத் நகரில், 25 ஆண்டுகளுக்கும் மேலாக, நீர் மேலாண்மையில் பணியாற்றிவரும் Water Shed Management Trust என்னும் தொண்டு நிறுவனத்தை அணுகி, நீர் மேலாண்மை தொழில்நுட்ப உதவியை வேண்டினார்கள். இரு நிறுவனங்களும் இணைந்து செயல்பட முடிவெடுத்தன.

மராத்தியத்தின் வறட்சியை, 2019 க்குள் போக்கும் ஜல்யுக்த் ஷிவர் என்னும்ஒரு அரசு திட்டத்தை, ஃபட்னாவிஸ் தலைமையிலான அரசு உருவாக்கியிருந்த்து. அரசின் இந்தத் திட்டத்திலும் இணைந்து பணியாற்றத் திட்டமிட்டார்கள். சில இடங்களில், ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தையும் உபயோகித்துக் கொள்ள முடிவெடுத்தார்கள்.

இந்த ஃபவுண்டேஷனுக்கான நிதி உதவியை, ரட்டன்  டாட்டா ட்ரஸ்ட், ரிலையன்ஸ் குழும்ம், பஜாஜ், பிர்லா எனப் பல குழுமங்களிடம் இருந்து பெறுகிறார்கள்.

இந்த நிறுவனத்தின் மிக முக்கியச் செயல்பாடு என்னவெனில், இது,மக்களின் உடல் உழைப்பு முன்வைக்கிறது. கிரமாங்களில் உருவாக்கப்படும் நீர் சேகரிப்புக் கட்டமைப்புகளை, கிராம மக்களே இணைந்து, திட்டமிட்டு, வடிவமைத்து உருவாக்க வேண்டும் என்பதே இதன் அடிப்படை.

இதன் அடிப்படையில் பிறந்ததுதான் “Water Cup” என்னும் போட்டி. 2016 ஆம் ஆண்டில், ஒரு துவக்கமாக, மூன்று பகுதிகளில், (விதர்பா, மராத்வாடா, மேற்கு மஹராஷ்ட்ரா) உள்ள மூன்று தாலூக்காக்களில் இந்தப் போட்டி அறிவிக்கப் பட்ட்து.

இந்தப் போட்டியில் கலந்து கொள்ளும் கிராமங்கள், தஙக்ள் கிராம சபைகளின் ஒரு தீர்மானத்தோடு நுழைவு விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலிருந்து 3-5 நபர்களைத் தேர்ந்தெடுத்து (இதில் ஒரு பெண் கட்டாயம்), பானி அமைப்பின் நான்கு நாள் பயிற்சிக்கு அனுப்ப வேண்டும்.

இந்தப் பயிற்சியை நடத்துவது, தொழில் நுட்ப பங்குதாராரன WOTR. இந்தப் பயிற்சியில், மழை அளவை அளவிடுதல், நீர் சேகரிப்புத் தொழில் நுட்பங்கள், கட்டமைப்பை அமைக்கும் முறைகள் எனப் பலவும் கற்றுக் கொடுக்கப் படுகின்றன.

பின்னர் அவர்கள் தங்கள் கிராமங்களுக்குச் சென்று, நீர் சேகரிப்புக் கட்டமைப்புக்களுக்கான அரசு திட்டங்கள் ஏதேனும் இருந்தால், அரசு அமைப்புகளோடு தொடர்பு கொண்டு தேவையான உதவிகளைப் பெறுகிறார்கள். சில இடங்களில் தனியார் உதவியையும் பெறுகிறார்கள். திட்டங்களை முடிவு செய்த பின்,  water cup க்கான இரண்டாவது விண்ணப்பத்தை, அதாவது, தாங்கள் அமைக்கப் போகும் நீர் சேகரிப்பு கட்டமைப்பு விவரங்களைப் பூர்த்தி செய்து அனுப்பி வைக்கிறார்கள்.

இந்த முயற்சியில், தேவைப்படும் இயந்திரங்களை இலவசமாக, புனேவைச் சேர்ந்த பாரதிய ஜெயின் சங்கடன் என்னும் அமைப்பு வழங்குகிறது. துவக்கத்தில், உடல் உழைப்பு தரும் ஆர்வலர்களை மட்டுமே பெற்றுக் கொண்டிருந்த பானி ஃபௌண்டேஷன், கடந்த ஆண்டிலிருந்து நிதி உதவியையும் பெறத் துவங்கியிருக்கிறது. பெறப்படும் நிதி, இந்தத் திட்டங்களுக்குத் தேவையான இயந்திரங்களை வாடகைக்கு எடுக்க மட்டுமே செலவழிக்கப் படுகிறது.

இந்தப் போட்டி, ஏப்ரல் 20 ஆம் தேதி துவங்கி, ஜூன் 5 ஆம் தேதி வரை (45 நாட்கள்) நடக்கிறது. 2016 ஆம் ஆண்டு, 116 கிராமங்கள் பங்கு பெற்றன. மெல்ல மெல்ல வெண்ணெய் திரண்டு வருவது போல ஒவ்வொரு ஆண்டும், கிராமங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. 2017 ஆம் ஆண்டில், முதன் முறையாக, நகரங்களில் வாழும் மக்களையும் இந்தச் சேவையில் இணைக்க, கிராமம் செல்வோம் என்னும் திட்டம் கொண்டு வரப்பட்டது. மே-1 ஆம் தேதி, அவர்கள் அனைவ்ரும், இந்த திட்டம் நிகழும் கிராமங்களுக்குச் சென்று உடல் உழைப்பில் ஈடுபட்டார்கள். அந்த ஆண்டு கிட்டத் தட்ட 25000 பேர் கலந்து கொண்டார்கள்

2018 ஆம் ஆண்டு, இத்திட்டம் 24 மாவட்டங்களில், 75 தாலுக்காக்களுக்கு விரிவுபடுத்தப்பட்டிருகிறது.  இது வறட்சி பாதித்த பகுதிகளில் 50% சதமாகும். இந்த முனைப்பின் முக்கிய அம்சங்கள் என்னவென்று காண்போம்.

  1. மக்களின் பங்களிப்பும் மேலாண்மையும்:

விடுதலை அடைந்த காலத்திற்கு சற்று முன்பாகவே, நீர் நிலை மேலாண்மையில், உள்ளூர் மக்களின் பங்களிப்பு அரசின் திட்டங்களாலும், அரசுத் துறையின் தலையீட்டாலும், குறையத் துவங்கியது. பின்னர் இது மேலும் வேகம் பெற்றுக் கிட்டத்தட்ட, உள்ளூர் மக்கள் நீர்நிலைகளில் இருந்து முற்றிலும் அந்நியப்பட்டுப் போனார்கள்.

இந்த இயக்கம், அந்தப் போக்கை மடை மாற்ற முயற்சிக்கிறது. பொதுமக்கள், கிராம சபை மூலமாக, அரசுத் துறையின் உதவியோடு, நீர் நிலைகளை உருவாக்கவும், மேம்படுத்தவும் தங்கள் உடல் உழைப்பைத் தரும் போது, அதன் மீதான மேலாண்மையும், உரிமை கோரலும் நிகழ்கிறது. இதன் பயன் ஒரு ஆண்டிலேயே தெரியும் போது, மக்கள் தங்கள் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை தாங்களே கண்டுகொள்ள முடியும் என்பது இதன் பெரும் பலன்.

  1. அரசுத் துறையின் ஆதரவு:

இத்திட்டத்தின் துவக்கத்தில்யே, மராத்திய அரசின், ஜல்யுக்த் ஷிவர் என்னும் நீராதார மேம்பாட்டு நிகழ்வுடன் கைகோர்த்துக் கொண்டது ஒரு அருமையான நேர்மறை யுக்தி. ஆமீர், மாநில முதல்வர் ஃபட்னாவிஸின் ஆதரவோடு இந்தத் திட்டத்தைத் துவக்கியது முக்கியமான ஒன்று. அரசின் அதிகார வர்க்கத்துக்கு அது சரியான செய்தியைக் கொண்டு சேர்ந்திருக்கும். ஆமீரின் நட்சத்திர மதிப்பும், கவர்ச்சியும், அதிகார இறுக்கத்தைக் குறைக்கும் வல்லமை கொண்டது. மராத்திய அரசு அதிகாரிகளின் உற்சாகமான பங்களிப்பு அதை உறுதி செய்கிறது.

  1. பொதுச் சமூகக் கவன ஈர்ப்பு:

தொலைக்காட்சித் தொடராக ஒளிபரப்பாகும், இத்திட்டம், ரியாலிட்டி ஷோக்கள் (பிக் பாஸ் போன்றவை) துறையில் ஒரு புதிய பாதையை உருவாக்கியிருக்கிறது. தொடரின் பெயர் – தூஃபான் ஆலயா (புயல் வந்திருச்சு!)

தொடரின் துடிப்பான அடையாளப் பாடலைப் படமாக்கியிருப்பவர், மராத்திய மண்ணின் இன்றைய பிரபலத் திரை இயக்குநர் நாகராஜ் மஞ்சுளே.

தொடரைத் தொகுத்து வழங்குபவர் ஜிதேந்திர ஜோஷி என்னும் மராத்தி நாடக/திரைக் கலைஞர். இவருடன் கீதாஞ்சலி என்னும் பெண் ஆங்கர் ஒருவரும் வருகிறார். ஜிதேன் போட்டி நடைபெறும் கிராமங்களை தன் புல்லட் பைக்கில் கவர் செய்ய, கீதாஞ்சலி, காரில் இன்னொரு புறம் சுற்றி வருகிறார். இடைஇடையே ஆமீரும், கிரண் ராவும் கிராமங்களுக்குச் சென்று உழைக்கவும், உரையாடவும் செய்கிறார்கள்

தன் நட்சத்திர வலிமையைப் ப்ரயோகித்து, சனிக்கிழமை இரவு 9:30 மணிக்கு, அனைத்து மராத்திச் சானல்களும் இத்தொடரை ஒளிபரப்பச் செய்திருக்கிறார்.. சனி இரவு 9:30 மணி என்பது, தொலைக்காட்சிகள் தங்கம் கொழிக்கும் நேரம். அந்நேரத்தில், மராத்தியத்தின் பெரும்பாலான மக்கள் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் ஒரு கட்டாயத்தை இது ஏற்படுத்துகிறது. இது தொலைக்காட்சிச் சேனல்களின் பங்களிப்பு.

நீர்க் கோப்பைப் போட்டியின் இறுதிக் கட்டத்தை பெரும் திரை விழா போல், முதலமைச்சர், பெரும் தொழில் அதிபர்கள், சமூகத்தின் முக்கியமானோர் எனப் முன்னிலையில் நடத்துகிறார். மொத்த சமூகத்திற்கும் முக்கியமான  தேவை எது என்பதை மிக வலிமையாக முன்வைக்கும் நிகழ்ச்சி.

இதன் இன்னொரு பகுதியாக, ’கிராமம் செல்வோம்” என்னும் ஒரு நிகழ்வையும் சென்ற ஆண்டிலிருந்து துவங்கியிருக்கிறார்கள். மே-1 ஆம் தேதி, மராத்திய மாநிலம் உருவான நாள். தொழிலாளர் தினம். அன்று, மும்பை, புனே, நாக்பூர், ஔரங்காபாத், நாசிக் போன்ற ஊர்களில் இருந்து, நகர மக்கள் கிளம்பி, இந்த வேலை நடக்கும் கிராமங்களில், தங்கள் உடல் உழைப்பை ஒரு நாள் தருகிறார்கள்.. 2017 ஆம் ஆண்டு, 25000 பேர் கலந்து கொண்டார்கள். இவ்வாண்டு, அது 130000 ஆகப் பெருகியிருக்கிறது.. அந்த நிகழ்வு ஒரு கொண்டாட்டமாக இருக்கிறது.. அங்கே பிறந்த நாள் கொண்டாடும் குழந்தைகள், பங்கேற்கும் திரை நட்சத்திரங்கள் என.

  1. நெகிழ் கணங்கள்:

சமூகத்திற்குத் தேவையான ஒரு முயற்சியை, ஒரு தலைவன் முன்னெடுத்து, அதை  சமூக பங்கேற்பு நிகழ்வாக மாற்றும் போது, மக்களிடையே நிகழும் பல விளைவுகள் நம் கண்களில் நீரை வரவழைப்பவை.

இந்த நீர் கோப்பை துவக்கத்தில், ஒரு நாள், ஒரு கிராமம் முழுதும், தங்கள் வீடுகளை விட்டு, மலை உச்சியில் இருக்கும் கோவிலில் குழுமியிருக்கிறார்கள்.. இந்த ஆண்டுக்கான நீராதாரக் கட்டமைப்பை, உடல் உழைப்பால் உருவாக்கப் போகும் குழு, மலை உச்சியில் இருக்கும் கோவிலிலேயே தங்கியிருந்து, அதைச் செய்வார்கள்.. கோவிலில் பூஜை செய்து, ஆரத்தி காட்டி, அந்தக் கிராமத்தின் திட்டத்தைத் துவக்கி வைக்கிறார் ஆமீர் கான்.

இன்னொரு கிராமத்தில், ஏதோ ஒரு பூசலில், சாதி இந்துக்களும், தாழ்த்தப்பட்டவர்களும் பேசிக் கொள்வதில்லை. இந்தப் பூசலை முடித்து, நீர்க் கோப்பைப் போட்டிக்கான வேலையைத் துவக்க, சாதி இந்துப் பெண்கள், தாழ்த்தப்பட்டவர்களின் வீடுகளுக்குச் சென்று, வயதான பாட்டிகளின் கால்களைக் கழுவி,  நீர்க் கோப்பைத் தேர்வுக்கான வேலைகளில் பங்கேற்க அழைக்கிறார்கள். கல் மனங்கள் கரையும் நேரம்.

இன்னொரு கிராமத்தில், ஒரு சாவு நடக்கிறது.. பிணத்தைத் தூக்கி வருபவர்கள் அனைவரும் பெண்கள்.. என்னவென்று ஜிதேந்திர ஜோஷி அருகில் சென்று விசாரிக்க, இறந்தது, “வறட்சி”.. அதைப் பாடையில் வைத்து, நீர் சேகரிப்புக் கால்வாய் வரப்பில் புதைத்து விடுகிறார்கள்.

விழியிழந்தோர் கிரிக்கெட் குழு ஒன்று, நகரத்தில் இருந்து, தம் பங்களிப்பாக, கிராமத்தில் தங்கிப் பணிசெய்கிறார்கள்..  குடிக்கு அடிமையானவர் ஒருவர், குடியை விட்டு, அந்தப் பணத்தில் ஊருக்கு,  மண் வெட்டி/ கோடரி போன்றவற்றை வாங்கிப் பரிசளிக்கிறார்.. இன்னொரு மாற்றுத் திறனாளி, வேலையை விட்டு விட்டு, இந்தப் பணியில் இணைந்து கொள்கிறார்.

கண்டாலா என்னும் கிராமத்தில் இருந்து, ஒரு நடுத்தர வயது இஸ்லாமியப் பெண், டி.வியில், ஆமீர் கானைப் பார்த்து, “ஹே.. க்யா போல்த்தி தூ? ஆத்தி க்யா கண்டாலா” (ஏய்.. என்ன சொல்ற? கண்டாலா வர்றியா?) என்னும் ஆமீரின் புகழ் பெற்ற திரைப்பாடலைப் பாடுகிறார்.

மே-1 ஆம் தேதி, மகா ஷ்ரம்தான் (பெரும் உடல் உழைப்பு) நிகழ்வில் கலந்து கொள்ளும் பலரும், சில மணி நேரத்தில் கைகள் கொப்பளிக்க, நேரில், ஒரு கிராம வாழ்க்கையின் நிதர்சனத்தை உணர்ந்து நெகிழ்கிறார்கள்.

பணம் என்னும் கரன்சி மறைந்து, மனிதம் என்னும்  கரன்சி எட்டிப் பார்க்கும் இப்படிப் பல கணங்களை, புயல் வந்திருச்சி நிகழ்ச்சி ஆங்காங்கே காட்டிக் கொண்டேயிருக்கிறது.

முடிவு:

ஊரகப் பொருளாதாரத்தின் உயிர் நாடி வேளாண்மைதான். அது நீடித்து நிற்க வேண்டுமெனில், அதள் மிக முக்கிய இடு பொருட்களான, சூரிய ஒளியும், மழையும் வயல்களிலேயே சேமிக்கப் பட்டு, அவை தானியமாகவும், குடி நீராகவும் மாறுவதுதான் ஒரே வழி.  பெரும் அணைகளைக் கட்டி, நீராதாரத்தைப் பெருக்கிய பசுமைப் புரட்சியின் அடுத்த முக்கியமான நகர்வு இது. நீடித்து நிலைக்கும் வேளாண்மையின் முக்கியமான படி என, வேளாண் அறிஞர்கள் பலரும் இதை ஆதரிக்கிறார்கள்.

ராஜஸ்தான் வறட்சிப் பகுதிகளில், நீர்ப் பற்றாக்குறையைப் போக்க,  திரு.ராஜேந்திர சிங், மழை நீர் ஓடும் வழியில் கட்டிய தடுப்பணைகள், 6 ஆறுகளை, இன்று வற்றாத ஜீவ நதிகளாக மாற்றியிருப்பதே இதற்கு சாட்சி. அந்த நதிகளின் கரைகளில் இன்று இரண்டு போகம் வேளாண்மை துவங்கியிருக்கிறது. தில்லி போன்ற பெரு நகருங்களுக்கு, வயிற்றுப் பாட்டுக்காக இடம் பெயர்ந்த அந்த ஊர்  ஏழைகள், மீண்டும் கிராமங்களுக்குத் திரும்பியிருக்கிறார்கள்.. ( http://tarunbharatsangh.in/ )

தூஃபான் ஆலயா நிகழ்ச்சியின் துவக்கத்தில், மும்பை நகரில் பாலத்திற்கடியில் அகதிகளாய் வாழும் குடிமக்களைப் பற்றிப் பேசுகிறது. அவர்களில் பெரும்பாலோனோர், விதர்பா மற்றும் மராத்வாடா பகுதிகளில் இருந்து, வேளாண்மை பொய்த்துப் போய், பஞ்சம் பிழைக்க வந்தவர்கள்.. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாலத்திற்கடியில் வாழ்க்கை. பொது வெளியில் குளியல், சமையல் என அவர்களின் வாழ்க்கையின் அவலம் கண்ணிலறைகிறது. (https://www.youtube.com/watch?v=-CuI9_vpQkY&t=22 )

வறட்சியைப் போக்கும் இந்த நீர் சேகரிப்பு முறைகள் வெற்றி பெற்றால், தெருவில், விலங்கினும் இழிவான வாழ்க்கையை வாழும் அவர்கள், தங்கள் சுயமரியாதை மீட்கப் பட்டு, ஒரு நல்ல வாழ்க்கையை மேற்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம்.

தமிழகத்திற்கும் இதில் செய்தி உள்ளது.

ஆமீரின் இந்த முயற்சி, துவங்கிய மூன்றாவது ஆண்டில், மராத்தியத்தின் வறட்சிப் பிராந்தியங்களில் 50% தாலூக்காக்களில், 20% கிராமங்களைத் தொட்டிருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில், மராத்தியத்தில் வறட்சி என்பது இல்லாமல் போக வாய்ப்புகள் உண்டு.

சுதந்திரப் போராட்ட வீரரும், பெரிதும் போற்றப்படும் மத்திய கல்வி மந்திரியுமான மறைந்த அபுல் கலாம் ஆஸாத்தின் வம்சாவளியில் வந்திருக்கும் ஆமீர் கான் என்னும் பாரதரத்தினம் ஒளிவிட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது

 அருண் மதுரா

https://www.paanifoundation.in/about-us/mission/

http://www.thehindu.com/society/aamir-khans-paani-foundations-water-conservation-efforts/article23696288.ece

https://en.wikipedia.org/wiki/Satyamev_Jayate_(TV_series)

https://www.wotr.org/

http://www.nrega.nic.in/netnrega/mgnrega_new/Nrega_home.aspx

http://mrsac.maharashtra.gov.in/jalyukt/

https://www.youtube.com/watch?v=o79i5BwkHA8

முந்தைய கட்டுரைசிறுபான்மையினர் மலர்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 29