மழைத்துளிகள் நடுவே நாகம்

போகன்
போகன்

நகுலனின் உலகம்

ஜெ

ஏழாண்டுகளுக்கு முன்னரே நான் உங்களிடம் கேட்டுக்கொண்டது உங்கள் தளத்தில் அரசியல், சண்டைகள் வேண்டாமே என்றுதான். ஏனென்றால் காலையில் எழுந்ததுமே படிப்பதற்குரியதாக உங்கள் இணையதளம் இருக்கிறது. காலையிலேயே அன்று முழுக்க கசப்படையச் செய்யும் எதையாவது வாசித்துவிட்டால் எதற்குடா வாசித்தோம் என்று இருக்கிறது. பெரும்பாலும் இவற்றால் எந்தப் பயனும் இல்லை. உடனடியாக விறுவிறுப்பாக எதையாவது வாசிக்க விரும்புபவர்களும், வேலைநேரத்துக்கு நடுவே வந்து நாலைந்து வரிகளை வாசித்துச்செல்பவர்களும் ஒருவேளை சண்டைச் சச்சரவுகளை விரும்பலாம். அவர்கள் அதேபோல ஏதாவது போர்ன் சைட்டையும் ஒரு விண்டோவாக திறந்து வைத்துக்கொண்டே வேலைசெய்பவர்கள். அவர்களுக்காக எழுதுவதென்பது எழுத்தாளனுக்கான வீண் உழைப்பு.

இப்போது உங்கள் தளம் மீண்டுவிட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ச்சியாக இலக்கியம். ஒவ்வொரு வாரமும் தீவிரமான இலக்கியவிவாதம் ஒன்று நடந்து முடிகிறது. சமீபத்தில் நாவல் வடிவம் பற்றி ஒரு நல்ல தொடர் விவாதம் நடந்தது உங்கள் தளத்திலேதான். அதேபோல கவிதை பற்றிய விவாதமும் சிறப்பாக இருந்தது. அது இன்னமும்கூச சூடுபிடித்திருக்கலாம். என்னுடைய சந்தேகம் ஒன்று. நான் கவிதைகளைப் படிப்பவன். ஆனால் அதிகமாக எழுதுவதில்லை[ புனைபெயரில் எழுதுவேன். முகநூலில். அதைப்பற்றி எனக்கு பெரிய மதிப்பில்லை] ஆனால் கவிதைபற்றிய பேச்சுக்களை விரும்புகிறேன். கண்டராதித்தன் விழாவிலே நீங்கள் பேசியதைக் கண்டேன். தொடர்ச்சியாகச் சிறப்பாக எப்படி வாசிக்கிறீர்கள் என்று அறிய ஆசை. முகநூலில் படைப்புக்கள் சிதறிப்பரவிக் கிடக்கின்றன. அவற்றைத் தேடிப்படிப்பது மிகவும் கடினமானது

கேள்விக்கு வருகிறேன். படிமம் என்பது கவிதையில் இருந்து அழியவே அழியாது என்று சொன்னீர்கள். அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. சமீபத்தில் சிறுநிகழ்ச்சிகளையோ, ஒரு காட்சியையோ, அல்லது ஒரு சின்ன கோணலான கருத்தையோகூட கவிதையாக எழுதிவிடுகிறார்கள். உண்மையில் நன்றாகவே இருக்கிறது. அவற்றை கவிதை அல்ல என்று சொல்லிவிடமுடியுமா என்ன? முன்பு ஒர் உரையில் மெட்டஃபர் [அதை கவியுருவகம் என்கிறீர்கள்] இனிமேல் கவிதையில் வருவது கடினம் என்று சொல்லியிருந்தீர்கள். அந்நிலையைப் படிமம் அடைந்துவிட்டது அல்லவா?

ராம் கண்ணன்

***

snake

அன்புள்ள ராம் கண்ணன்

உங்கள் மின்னஞ்சல் வழியாக உங்கள் கவிதைகளைச் சென்றடைய முடிந்தது. அந்த அளவுக்கு அவநம்பிக்கை கொள்ளவேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.

நான் ‘தேடித்தேடி’ வாசிப்பவன் அல்ல. அதற்கு எனக்கு நேரமில்லை. நான்  சராசரியாக இங்கே அலுவலக வேலைகள் செய்பவர்களைவிட அதிகமான நேரம் இலக்கியமல்லாத தொழிலுக்காக உழைப்பவன், ஆம் அவர்களை விட பலமடங்கு பொருளீட்டவும் செய்கிறேன். அதற்குமேல்தான் வெண்முரசும் பிற எழுத்துக்களும். நான் வாசிப்பவை இன்று பிறர் எனக்கு இணைப்பளிப்பவை, அனுப்பித்தருபவை. ஆனால் என்பொருட்டு வாசிக்கவும் பரிந்துரைக்கவும் பல்வேறு நண்பர்கள் இன்றுள்ளனர். ஆகவே நூறுக்கும்மேல் விழிகளும் செவிகளும் எனக்குள்ளன. பொருளியலில் இருந்து அறிவியல்வரை. படக்கதைகளில் இருந்து கவிதைவரை. நான் அவர்கள் பரிந்துரைப்பவற்றுக்கோ தெரிவுசெய்து அளிப்பவற்றுக்கோ அப்பால் செல்வது மிக அரிது. அது பிழையாக ஆவதுமில்லை என்பதே என் அனுபவம்.[சினிமாக்களை அனுப்பிக்கொண்டே இருக்கிறார்கள் ஒரு சாரார், நான் பார்ப்பதேயில்லை]

ஏன் கவியுருவகம் இனி கவிதையில் செல்லுபடியாகாது என்றேன் என்றால் [அது சுந்தர ராமசாமியின் கருத்து, நான் ஏற்றுக்கொண்டது] அதில் பார்வைக்கோணமும் சேர்த்தே பொறிக்கப்பட்டுள்ளது, வாசகனை அக்கோணத்தில் மட்டும் பார்க்கச் செய்கிறது என்பதனால்தான். ‘காலமெனும் பெருநதி’ என்ற கூற்றுக்கும் ‘அனைத்தையும் அள்ளிச்செல்லும் இப்பெருநதி’ என்ற கவிக்கூற்றுக்கும் நடுவே உள்ள வேறுபாடுதான். எழுபதுகளுக்குப் பின்பு கவிதையில் படிமங்கள் மிகுந்தன. ஒரு மூளைப்பயிற்சியாகவே அவை மாறின. படிமம் என்பது அர்த்தஉருவாக்க வாய்ப்புகளை அளித்து ஆசிரியனால் முன்வைக்கப்படும் ஒரு காட்சி. உணர்வுநிலைகளை அழகியல்கோணத்தை மட்டுமே ஆசிரியனிடமிருந்து பெற்றுக்கொண்டது. ஆகவே அனுபவமாக மட்டும் வாசகனை வந்தடைந்து அவன் உள்ளத்தில் அர்த்தங்களின் அந்தரங்கமான பாதைகளைத் திறப்பது.

ஆனால் காட்சியூடகமும் மொழியும் கைகோத்துக்கொண்ட தொழில்நுட்பச் சூழலில், ஊடகப்பெருக்கம் நிகழ்ந்து நவீனத் தொடர்புறுத்தலென்பதே அறிவை மலைக்கச்செய்து படிமங்கள் வழியாகவே கருத்தியலைக் கொண்டுசென்றுவிடுவது என்று ஆகிவிட்ட நிலையில், கவிதையில் படிமங்கள் அவற்றின் கூர்மையை இழந்துவிட்டன என்று தோன்றியது. நவீன ஊடகம் உருவாக்கும் படிமப்பெருக்கின் ஒரு பகுதியாக ஒரு மூலையில் கவிஞனும் படிமங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறானோ என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆகவேதான் கவிதை படிமங்களிலிருந்து மேலே சென்றது. நுண்சித்தரிப்புகள், மாற்று மொழிவெளிப்பாடுகள் வழியாகத் தன் கவிதையை நிகழ்த்தலாயிற்று. சென்ற இருபதாண்டுகளாக உலகக் கவிதையின் போக்கு இதுவே

ஆனால் இன்று கவிதைக்கு மிகச் சோதனைக்காலம். பெரிய ஊடகங்களும் விமர்சகர்களும் கவிதையை கவனிப்பதில்லை. கூடவே  இணையம் போன்ற ஊடகப்பெருக்கம் கவிதைகளை லட்சக்கணக்கில் பதிவுசெய்யவைக்கிறது. கட்டற்றுப் பெருகும் கவிதைத்திரளில் எவரேனும் சுட்டாமல் ஒரு கவிதை கவனிக்கப்படுவது அரிதாகிவிட்டது. கவிதையோ அடிக்கோடிடப்பட்டு கூர்ந்து படித்தாலொழிய பொருள்விரிவு கொள்ளாத இலக்கிய வடிவம். கவிதையின் ஆயுள் ஓரிருநாட்களுக்கே என்றாகிறது. விளைவாக கவிதை நகைச்சுவைத் துணுக்காகவோ அதிர்ச்சியளிப்பதாகவோ மாறி கவனம் ஈர்க்க முயல்கிறது. எவ்வண்ணமேனும் அரட்டையில் மேற்கோளாக ஆனால் மட்டுமே அதற்கு சிறிதேனும் வாழ்வு. அல்லது சமகால அரசியல் நிகழ்வுகளுடன் ஒட்டிக்கொண்டு அவைபெறும் கவனத்தில் சிறுபகுதியை தானும் பெற முயல்கிறது. ஆகவே அது அரசியல்சரிகளுடன் ஒத்துப்போய் தன் தனிப்பார்வையை இழக்கிறது. மைதானங்களில் நின்று கோஷமிடத் தொடங்குகிறது. இன்று உலகமெங்குமே அதிகமாக கவனிக்கப்பட்டு அதிகமாக மறக்கப்படுபவை அரசியல்சார்ந்து எழுதப்படும்  ‘குவார்ட்டர்பிரியாணி’  கவிதைகள்தான்

கவிப்பெருக்கச் சூழல் என்ன செய்கிறதென்றால் மெய்யான கவிஞர்கள் நிகழ்த்தும் கவிதைகளை நகலெடுத்து பலமடங்காக்குகிறது. நுட்பம் கொஞ்சம் குறைவாக இருந்தாலும் கூர்வாசகன் அல்லாதவனுக்கு இதுவும் அதுவே. ஒரு சமகாலப் பரபரப்பு அரசியல் கவிதையை வாசித்துவிட்டு உணர்ச்சிவசப்பட்டு ‘அப்டிப்போடு தலைவா’ என எதிர்வினையாற்றும் கூட்டமும், ஒரு சிறு முகநூல் குழுவில் கவிஞனின் ‘வெடிப்புறுபேச்சுகளை’ ரசிக்கும் கூட்டமும் அவனை அழிக்கின்றன. ஆனால் தமிழைவிட இப்போக்கு மலையாளத்தில்தான் மிகுதி. என்னிடம் ஓர் இதழாசிரியர் சொன்னார். ஆசிஃபா பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட கொடுஞ்செய்தி தொலைக்காட்சியில் முதல்முறையாக வந்த அன்றே, வெறும் நான்கே மணிநேரத்திற்குள் அவருடைய மின்னஞ்சலில் இருபது முக்கியமான கவிஞர்களின் கவிதைகள் வந்து சேர்ந்தன என்று. ஏனென்றால் அக்கவிதை அட்டையில் படத்துடன் பிரசுரமாகும். ஓர் நுட்பமான அழகியல் வெளிப்பாட்டுக்கு அந்த ஊடகக் கவனம் அமைவதில்லை.

இச்சூழலில் நுண்சித்தரிப்புகளும், மொழிச்சுழற்சிகளும் படிமங்களை விட விரைவாகப் பொருளிழக்கின்றன. ஒரு நுண்சித்தரிப்பு ஓரிருநாட்களுக்கு அப்பால் நினைவில் நிற்பதில்லை. நினைவில் நிற்பவை எவை என்று பார்த்தால் அவை உருமாற்றம் செய்யப்பட்ட படிமங்கள், வேறு ஒருவகையில் சொல்லப்பட்ட படிமங்கள். அல்லது நம்மால் படிமமாக ஆக்கிக் கொள்ளப்பட்ட கவிதைகள். ஏனென்றால் படிமத்துக்கான அர்த்தம் நாம் அளிப்பது. நாம் அவற்றினூடாக நெடுந்தொலைவு சென்றிருப்போம்.ஆகவே நாம் அவற்றை மறப்பதில்லை. கவிதையின் அடிப்படை அலகென்பது படிமம்தானோ என்ற எண்ணத்தையே மீண்டும் சென்றடைகிறேன்.

சமீபத்தில் வாசித்த போகன் சங்கரின் கவிதை

உறங்கும் மழைத்துளிகளை
எழுப்பாமல்
புல்வெளியைக் கடந்து செல்கிறது
பிரியத்தின் சர்ப்பம்.

இலக்கணப்படி இது கவியுருவகம். பிரியத்தின் என்ற விளக்கம் கவிதையை ஒரு கோணத்தில் மட்டுமே வாசிக்கக் கட்டாயப்படுத்துகிறது  ‘உறங்கும் மழைத்துளிகளை எழுப்பாமல் புல்வெளியைக் கடந்து செல்கிறது ஒளிரும் சர்ப்பம்’ என்ற வரியையே படிமம் எனச் சொல்லமுடியும். ஆனால் இந்த கவியுருவகத்தை எளிதாக படிமமாக நாம் மாற்றிச் சமைத்துக்கொள்ள முடிகிறது. மழைமுடிந்த துளிகளின் வான்வெளிச்சத்திற்கும் ஒழுகும் சர்ப்பத்தின் உடலின் ஈரமினுப்புக்கும் ஒரு காட்சித்தன்மையை நானே அளித்துக்கொள்ள முடிகிறது.மழைத்துளிகள் நடுவே நெளிந்தொழுகும் அந்த நாகம் ஒரு நீரோடை. அல்லது நீரோடை கொண்ட நாகத்தோற்றம்.

மழைத்துளிகள் நலுங்காமல் செல்லும் சர்ப்பம் பிரியம் என்பதையும் கடந்து என்னில் விரிய முடிகிறது.மழைத்துளிகளையே நூற்றுக்கணக்கான பாம்புகளின் விழிகளாக, அவற்றின் மணிகளுக்குள் பாவை விழ நாகம் செல்லும் நெளிவை பார்க்கமுடிவதுபோல என் கனவுகள் நீண்டுச் செல்கின்றன.படிமமாக உருமாறி தன்னைச் சிறந்த கவிதையாக ஆக்கிக்கொள்கிறது இவ்வுருவகம். பேரன்பு எதையும் நலுங்கச் செய்வதில்லை, வானத்தைச் சூடிநின்றிருக்கும் மழைத்துளிகளின் தவம் அன்பினால் கலைவதில்லை என நானே விரித்துக்கொள்ள முடிவதனால் இது சிறந்த கவிதையாகிறது.

போகனின் இன்னொரு கவிதை

என்னை அதிகமாக
குற்றம் சாட்டுகிறார்கள்
என்றான் இபிலிஸ்.
“மனிதர்கள் பறக்கமுடியும்.
ஆனால் நிர்வாணமாகத்தான்’
என்று மட்டுமே நான் சொன்னேன்”

இது ஒருவகை சொல்முறையால் கவிதையாகும் வரி. இபிலிஸ் [சாத்தான்]  மானுடருக்கு நிர்வாணம் பாவமென்று கற்பித்தது. ஆடையணியச் செய்தது. கடவுளில் இருந்து மனிதனைப் பிரித்தது. ஆனால் பறக்கவேண்டுமென்றால் நிர்வாணமாக வேண்டும் என்று விடுதலையை அவர்களுக்குக் கற்பிக்கிறது அது. ஏனென்றால் மனிதன் முன்பு கடவுளாக இருந்தான் என்று அதற்குத்தெரியும்.  ‘நிர்வாண’த்தைப்பற்றி அதனால் சொல்லமுடியும். இவ்வாறு சிந்தனைகளை எழுப்பும் மொழிமுடிச்சாக இது இருக்கையிலேயே இது ஒரு படிமம்தான். இபிலீஸ் என்னும் பறக்கும் நாகமும் ஆடையணிந்து நின்றிருக்கும் மானுடரும் ஒரே கணம் காட்சியாக எழுவதனால்,அனைத்துக்கும் மேலாக நெளியும் பாம்பின் உடலே நிர்வாணத்தின் மிகச்சிறந்த குறியீடு என்பதனால்,இபிலீஸ் அதை ஒரு தன்விளக்கமாக பிதாவிடம் சொல்லும் காட்சியாவதனால். அந்தப் படிமத்தன்மை வழியாகவே இது கவிதையாகிறது. [என்வரையில் இரு கவிதைகளையும் இணைத்துக்கொண்டேன். அன்பின் அழகிய நாகம். விடுதலையின் அறிவார்ந்த நாகம் என]

ஆக, திரும்பவும் நாம் படிமங்களையே கவிதையாகக் கொள்கிறோம். நம் கனவுகளைச் சீண்ட காட்சிகளால்தான் இயல்கிறது. காட்சிகளே முதல், மொழி பின்னால் செல்வதே. கவிதை மொழிக்கும் சற்று முந்தையது. இன்று அனைத்து ஊடகங்களாலும் மொழி நம்மைச்சுற்றி பலநூறுமடங்காக பெருகி அலையடிக்கையில் கவிதை நம்மை மீண்டும் கனவுக்கும் ஊழ்கத்துக்கும் கொண்டுசெல்லவேண்டியிருக்கிறது

ஜெ

================================================================================================

என் உரைகள்-ஸ்ருதிடிவி இணைப்புக்கள்

அலைகளில் அமைவது

போகன் கவிதைகள் பற்றி சுயாந்தன்

1. பூ – போகன்

போகன்

கண்டராதித்தன் விருது விழா -முத்து

குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருதுவிழா -கடிதங்கள்

குமரகுருபரன் விருதுவிழா

குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா

விருதுவிழாவும் நாவல்விவாதமும்

முந்தைய கட்டுரைகே.எஸ்.ராஜா -கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 30