இலுமினாட்டி -கடிதங்கள்

vi.ra

அன்புள்ள ஜெ
இலுமினாட்டிகளின் இலக்கணம் அறிய நிறைய படித்தேன்.ஆனால் எனது தலையில் இருக்கும் ஸ்க்ருக்கள் துரு பிடித்து போய்விட்டது என நினைக்கிறேன். அதனால் ஒன்றை கூட கழட்ட முடியாததால் இலுமினாட்டிகளின் அடிப்படை எனக்குப் புரியவில்லை. பின்பு யூடியுபில் இலுமினாட்டி பிரச்சாரகர் ஒருவரின் பேட்டியை காண நேர்ந்தது. அதில்  ஆளுமை உள்ள தலைவர்களாய் மூன்று பேரை அவர் குறிப்பிட்டார். ஒருவர் பிரபாகரன், இரண்டாவதுபெயர் காமராசர் மூன்றாவதாக அவர் குறிப்பிட்டது பழனி பாபா.இதை கேட்டதும்  ஒரு கணம் தலை சுற்றியது. இனிமேல் இந்த இலுமினாட்டி தொடர்பாக எதையும் அறிந்து கொள்ளத் தேவையில்லை என்று நினைத்தேன். உங்கள் தளத்தில் வந்ததால் ஆர்வத்தின் காரணமாக இந்த கடிதத்தைப் படித்தேன். அந்த கடிதத்திற்கு நீங்கள் அளித்திருக்கும் பதில்  பக்கம் பக்கமாக  எழுதினாலும் உணர முடியாததை ரத்தின சுருக்கமாக உணர்த்தியது. இனிமேல் இலுமினாட்டிகள் குறித்து உங்கள் தளத்தில் வந்தால் கூட படிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்..
வி.ரங்கநாதன்

அன்புள்ள ரங்கநாதன் அவர்களுக்கு,

 

பொதுவாகச் சதிக்கோட்பாடுகளைப் பேசுபவர்கள் ஒப்புநோக்க கூடுதலாகப் படிப்பவர்கள். படிப்பனவற்றை ஆக்கபூர்வமாக தொகுத்துக்கொண்டு வாழ்க்கைத் தரிசனங்களையோ சிந்தனைகளையோ உருவாக்கத் தெரியாதவர்கள்.காரணம், அவர்கள் எதிர்மனநிலை கொண்டவர்கள். எதிர்மனநிலைகொண்டவர்கள் கொஞ்சம் வாசிக்க ஆரம்பித்தால் ஏதேனும் ஒரு சதிக்கொள்கையைச் சென்று சேர்வதை, அது ஒரு மெய்யான பதற்றமாகவே அவர்களிடம் ஆவதை நாம் காணலாம். இலுமினாட்டி என்பது அந்த உளக்கோணலின்  உச்சநிலை. ஆனால் இந்த உளச்சிக்கல் சிறிய அளவிலேனும் சூழலில் புழங்கும் பெரும்பாலானவர்களிடம் உள்ளது

 

ஜெ

 

அன்புள்ள ஜெ

 

இந்த இலுமினாட்டி வகை சதிகளைப்பற்றிப் பேசுபவர்களைக் கவனித்திருக்கிறேன். அவர்களுக்கு ஓர் ஐடியா கிடைத்துவிட்டால் கையில் கிடைக்கும் அனைத்தையும் அதில்கொண்டு சேர்த்துக்கொண்டே இருப்பார்கள். ஒரு கட்டத்தில் அந்த எதிரி பெரிய பூதம்போல ஆகிவிடும். நாம் அவர்களின் நினைவுச்சக்தியை பார்த்துப்பிரமிப்போம். ஏனென்றால் அவர்கள் தகவல்களை ஒரு கதையாக ஆக்கி வைத்திருப்பதனால் அந்தத் தகவல்களை அவர்கள் மறப்பதே இல்லை. தொடர்ச்சியாகப்பேசிக்கொண்டே இருப்பதனால் ஞாபகத்தில் வைத்திருக்கிறார்கள். எந்த விவாதத்திலும் இந்த இலுமினாட்டி வகைச் சதிக்கொள்கையை ஒருவர் சொல்ல ஆரம்பித்தால்போதும் அப்படியே சாதாரணமானவர்களை வாய்பிளக்கச் செய்துவிடுவார்கள். இந்த ஸ்டேடஸ்தான் அவர்களுக்குக் கிடைக்கும் ரிவார்ட். இவர்களை நம்மால் பேசி மடக்கவே முடியாது. ஏனென்றால் எல்லா கோணங்களிலும் பேசி சரியான ஒரு தர்க்கத்தை உருவாக்கி வைத்திருப்பார்கள். நீங்கள் சொல்லிய அந்த ஒற்றைவரிதான் நச் பதில்

 

செல்வக்குமார்

Quaker_star-T.svg
குவாகக்ர் அமைப்பின் சின்னம்

 

திரு ஜெ

 

நீங்கள் கேலிபேசி கடந்து செல்லலாம். ஆனால் உண்மைகளை எவரும் மறைக்கமுடியாது. ஜெர்மனியில் கேஸ் சேம்பர்கள் எரிந்தபோது அதை அங்கிருந்து வந்தவர்கள் ஜுடாயா மக்களிடம் சொல்கிறார்கள். அது அவ்வளவு பெரியதாக இருந்ததனாலேயே எவரும் நம்பவில்லை. உலகையே ஒரு கொள்கை ஆள்கிறதென்றால் அது பெரிதாகவே இருக்கும். அதைச் சொல்லப்போனால் கட்டுக்கதை மாதிரித்தான் இருக்கும். ஆனால் அதுவே உண்மை.

 

நீங்கள் எழுதி நிலைநிறுத்திய அத்தனைபேருக்கும் மேசன்களிடம் தொடர்பிருப்பது தற்செயலா என்ன? அந்தக் கடிதத்திலே நான் விட்டுப்போனது ஒன்று உண்டு. அதை நான் எழுதியபிறகுதான் வாசித்தேன். நீங்கள் லாரிபேக்கர் பற்றி எழுதினீர்கள். லாரி பேக்கர் யார்? அவர்  Quakers என்ற அமைப்பைச் சேர்ந்தவர். அவர்கள் கிறித்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் ஓர் உலகளாவியக் குழு.  “the light within” என்றும்  “that of God in every one” என்றும் சொல்பவர்கள். அந்தவரிகளுக்கும் கிறிஸ்தவத்துக்கும் சம்பந்தமில்லை. கிறிஸ்து ஒவ்வொருவருக்குள்ளும் இல்லை. அவர் விண்ணிலிருக்கிறார் என்பதே கிறிஸ்தவநம்பிக்கை. கிறிஸ்தவத்திற்குள் அந்த மூலக்கொள்கைகளைச் சீரழிக்கும் ஒரு கும்பல்தான் குவாக்கர்கள். அவர்கள் உலகம் முழுக்க எந்த சர்ச்சையும் சாராமல் வளர்ந்திருக்கிறார்கள். மேசன்கள் போல இன்னொரு அமைப்பு. அதில்தான் லாரி பேக்கர் பணியாற்றினார். அந்தப் பணிக்காவே இந்தியா வந்தார். அதை அவரே தன் வாழ்க்கைவரலாற்றிலே சொல்லியிருக்கிறார்.அவர்களின் அடையாளமும் இலுமினாட்டி அடையாளம்தான். ஆராயப்போனால் இப்படி நிறையக் கிடைக்கும்

 

ஜெயராமன் மகாலிங்கம்