பின்தொடரும் நிழலின் குரல், காந்தி

pin-thodarum-nilalin-kural-36851

பெருமதிப்பிற்குரிய ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். தங்களின் நலம் அறிய விழைகிறேன். சென்ற வருடத்தில் இருந்து உங்கள் தளத்தின் மற்றும்  புத்தகங்களின் தீவிர வாசகனாக உள்ளேன். நான் உங்களுக்கு சில கடிதங்கள் எழுதி இருக்கிறேன்.  கடைசியாக எழுதிய கடிதம் தளத்திற்கு ஒவ்வாத, irelevant  ஆன கடிதம் என்று நினைக்கிறேன். நீங்கள் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு இருந்ததை போல் அக வயமான ஒரு விஷயத்தை பற்றி நான் விளக்கம் கேட்டு இருக்கிறேன் என பின்னர் நான்  கொண்டேன். தவறுக்கு வருந்துகிறேன். உங்கள் தளத்தை கண்டடைந்ததில் இருந்து தொடர்ந்து உங்கள் தளத்தை வாசிப்பதுடன் உங்கள் புத்தகங்கள் பலவற்றையும் வாங்கி படித்து கொண்டு இருக்கிறேன். விஷ்ணுபுரம் முதல் வாசிப்பிற்கு பின் உங்களுக்கு ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறேன். காடு மற்றும் கன்னியாகுமாரி படித்த பின் எனது வலைப்பூவில் அதன் அனுபவங்கள் பற்றி சிறிய பத்திகள் எழுதி இருக்கிறேன். நீங்கள் எங்கள் ஊர் வருவது சற்று முன்னே தெரிந்து இருந்தால் (கும்பகோணம்) தங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்து இருக்கும்.  நிச்சயம் நான் உங்கள் ஊருக்கு வந்து தங்களை சந்திக்க வேண்டும் என  இருக்கிறேன்.

எனக்கு எதுவும்  எழுதும் பழக்கம் இல்லாது இருப்பினும், நீங்கள் முந்தைய ஒரு கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தது போல கொஞ்சம் எழுத தொடங்கி, நான் வாசிக்கின்ற புத்தகங்கள் பற்றி எழுதி கொண்டும் இருக்கிறேன். என்னை தவிர வேறு யாரும் படிக்கவில்லை  என்றாலும் எழுதுவது என்பது உண்மையில் பல நேரம் உற்சாகம் தருகிறது.

“பின் தொடரும் நிழலின் குரல்” பல வருடங்களுக்கு பின் இரண்டாவது முறையாக இப்பொழுது வாசித்தேன். இரண்டே தினங்களில் படித்து முடித்து விட்டேன். இரண்டாவது தடவை என்பதாலோ அல்லது உங்கள் நடை நன்கு பழகியதாலோ கொஞ்சம் விரைவாக முடித்தேன் என நினைக்கிறேன்.. முதல் முறை படித்தது 15-ஆண்டுகளுக்கு முன.  அருணாசலம், புகாரின் மற்றும் அருணாசலம்  மனைவி பற்றிய விஷயங்கள் தவிர ஏனைய விஷயங்கள் பெரிதாய் நினைவில் இல்லாததால் புதிதாய் படிப்பது போல் தான் இருந்தது.

sub

தொழிற்சங்க பணியில் இருப்பதால் மீண்டும் கவனமுடன் இந்த முறை வாசித்தேன். கதையில் கதாபாத்திரங்கள் ஊடாக பல கோணங்களில் இருந்து நீங்கள் கம்யூனிசம் மற்றும் ரஷிய புரட்சி, தொழிற்சங்க  நடைமுறைகள் அதன் அரசியல்கள்  பற்றி விவாதித்து இருந்தாலும், நீங்கள் அதில் எங்கு இருக்கிறீர்கள் என விளங்கி கொள்ள முடிந்தது என எண்ணுகிறேன். முன்பு படிக்கையில் உங்கள் நிலைப்பாடுகள் பற்றி எல்லாம் யோசிக்க வில்லை. தொழிற்சங்க செயல்பாடுகள் எவ்வளவு சிக்கல் உடையது என்பதை மட்டும் தான் விளங்கி கொண்டேன். ரஷ்ய கம்யூனிஸ்ட் அரச பரிசோதனையின்   எதிர்மறைகளை (படுகொலைகள் ) பற்றிய ஒரு கட்டுரை அப்போதே ஒரு செய்தித்தாளில் (the hindu magazine) படித்து விட்ட படியால் அது பெரிதாக அதிர்ச்சி கொடுக்க வில்லை. உங்கள் தளத்துடன் இப்போது தொடர்ந்து பயணிப்பதால், பின் தொடரும் நிழலின் குரலையே தளத்திற்கு முன்னோடி என நான் கூறுவேன். அதில் காணும் விவாதங்களை தளத்தின் மூலம் ஆக தொடர்ந்து கொண்டு இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.  உங்கள் வாசகர்களின் அதிர்ஷ்டம் (நான் உட்பட) பல்வேறு கோணங்களில் நீங்கள் செய்த/செய்யும் விவாதங்களை வாசிக்கும் வாய்ப்பு தொடர் பயணமாக உள்ளது .

கம்யூனிசம் பற்றிய உங்கள் கருத்துக்கள் பல விதமாக குறிப்பிட்டு இருந்தாலும், ஒட்டு மொத்தமாக அதன் அழிவு தன்மையை நீங்கள் மீள மீள வலியுறுத்துகிறீர்கள் என எனக்கு தோன்றுகிறது. உங்கள் மேல் உள்ள இடது சாரி  தோழர்களின் காழ்ப்பு அதனால் தான் என புரிகிறது. எந்த ஒரு தத்துவமும் பைபிள் போன்று ஒரு புத்தகத்தை/பார்வையை  இறுக்கி கொள்வதால் நெகிழும் தன்மையை இழந்து போகும் என்பதும் அதன் காரணமாக வரும் அழிவுப் பாதையும் பற்றிய உங்கள் பார்வை சரி என்றே கருதுகிறேன்.  நீங்கள் உங்களை ஒரு வலது சாரி என சொல்லி கொண்டாலும் கம்யூனிசம் பற்றிய உங்கள் பார்வைகள் சரியான வரலாற்றுப் புரிதலோடும் நடு நிலையோடும் இருப்பதாகவே நான் அவதானிக்கிறேன். உங்கள் கருத்துக்கள் தவிர வேறு சில நூல்களையும் படித்து விட்டே இதை கூறுகிறேன்.  எந்த காலத்திற்கும் முழுமையாக பொருந்த கூடிய ஒரு தத்துவம் இருக்க முடியாது என்பதே பொதுவான அறிவியல் உண்மையாக இருக்க முடியும். மனித குல வரலாறும் இப்படி தான் பயணிக்கும் என வரையறுக்க முடியும் என தோன்ற வில்லை உலக பொருளாதாரத்தில் நடக்கின்ற விஷயங்களை எல்லாம் கார்ல் மார்க்ஸ் முன்பே கணித்து சொல்லி விட்டார் என சொல்லி விளக்கம் கொடுப்பது என்பது நாஸ்ட்ரடாமஸ் தனமாகவே இருக்கிறது என கருதுகிறேன்.

கதை ஒரு முழுமையான வடிவமைப்பை (a complete novel)கொண்டு இருப்பதால் கதை மாந்தர்களோடு தொடர் பயணம் செய்த உணர்வை கொடுத்தது.  நான் இது வரை படித்த சம கால புதினங்களில் முழுமையான தத்துவ விவாத வடிவம் கொண்டது இது தான். (விஷ்ணுபுரம் தவிர்த்து)  தத்துவங்களோடு கதையும் செல்வதால் கதை ஓட்டம்  புதிய புதிய பரிமாணம் எடுத்து செல்கிறது. அதன் காரணமாக வாசிப்பு அனுபவம் முற்றிலும் புதுமையாக இருந்தது.

தங்களின் இந்திய மரபு பற்றிய நூல்களும் காந்தி பற்றிய கட்டுரைகளும் தான் நான் உங்களோடு நெருக்கமாக உணர்வதற்கு முக்கிய காரணமாக இருப்பது என்றே சொல்வேன். தளத்தில் காந்தி பற்றிய உங்கள் கட்டுரைகள் அனைத்தையும் வாசித்து விட்டாலும் எனது மகன்களை படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக இன்றைய காந்தி நூலை வாங்கி வீட்டில் வைத்து இருக்கிறேன். காலேஜ் செல்லும் எனது மகன் படித்து கொண்டு இருக்கிறான். அநேகமாக அவன் படிக்கும் முதல் சீரியஸ் ஆன புக் என நினைக்கிறேன். படித்து விட்டு அவன் புரிதல்களை உங்களுக்கு எழுதுவதாக இருக்கிறேன்.

இன்றைய தினம் மிகக் கடுமையாக விமர்சிக்கப் படும் காந்தி அவர்களின் பரிசோதனை பற்றிய உங்களின் விளக்கங்கள் அதை பற்றிய தெளிவை உருவாக்குகிறது. நீங்களும் காந்தியோடு நெருக்கமாக உணர்வதாக இருந்தாலும் மிக கறார் தன்மையுடனும் நடு நிலையோடும் உங்கள் விளக்கங்கள் இருக்கிறது. அந்த புத்தகத்தில் மிக முக்கியமான பகுதியாக நான் நினைப்பது காந்தி மற்றும் அம்பேத்கார் பற்றிய கருத்துக்கள். இன்றைய தலித் அரசியலில் மீள மீள  விவாதிக்க படும் பூனா ஒப்பந்தம் பற்றி விரிவாக கூறி உள்ளீர்கள். முதல் முறையாக காந்தியின் பார்வையில்,ஏன் தலித் தனி வாக்கு உரிமையை அன்று எதிர்த்தார் என்பது சொல்ல பட்டு இருந்ததாக நினைக்கிறேன். சமீபத்தில் ஆங்கில ஹிந்துவில் ஒரு கட்டுரையில் அமெரிக்கா வாழ் இந்திய துணை கண்டத்தை சேர்ந்த ப்ரொபசர் ஒருவர், பூனா ஒப்பந்தத்தால் தான் முஸ்லிம்களுக்கு காந்தி மீதும் காங்கிரஸ் மீதும் நம்பிக்கை குறைந்து போய் பாகிஸ்தான் அமைவதற்கு காரணமாகி விட்டது என குற்றம் சாட்டி இருந்தார். மிக துல்லியமாக வரலாற்றை சொல்வதை போல் எழுதப் பட்டு இருந்த அந்த கட்டுரையை, இன்றைய காந்திக்கு முன் நான் படித்து இருந்தால் சற்றே குழம்ப நேர்ந்திருக்கும். இரட்டை வாக்குரிமையை தலித்துகளும் பெற்று இருந்தால், அன்றைய தினம் 48 சத பெரிய வோட் வங்கியாக அவர்கள் மாறி இருப்பார்கள். அவர்கள் இருவரும் இணைந்து ஒன்று பட்ட இந்தியாவை ஆண்டு கொண்டு இருந்திருப்பார்கள் என்ற முறையில் அவர் கருத்துகளை கூறி இருந்தார்.

அம்பேத்கார் பற்றிய உங்கள் கருத்துக்கள், இன்றைய தினம் அவர் ஒரு icon ஆக முன் வைக்கப் படும் சூழலில், கொஞ்சம் தைரியமாக அவரின்  எல்லா பரிணாமங்களையும் அரசியல் நிலைப்பாடுகளையும் விளக்கி இருக்கிறீர்கள். காந்தியோடு அவர் எங்கெல்லாம் முரண் படுகிறார், அதற்கு என்னென்ன காரணங்கள் இருக்க முடியும், காந்தி எப்படி அம்பேத்காரால் ஒரு கட்டத்தில் வார்த்து எடுக்க பட்டார் அம்பேத்கார் எங்கே காந்தியோடு ஒன்று பட்டு இருக்கிறார் என்பதான விளக்கங்கள் நன்கு விளக்கப் பட்டு இருந்தது. அரசியல் காரணங்களால் எல்லா தரப்பும் அம்பேத்கார் மீது உரிமை கொண்டாட முற்படும் போது, காந்தியத்தின் எதிரியாக அம்பேத்கார் இருக்க முடியாது என்பதை உங்கள் கட்டுரைகள் நிலை நாட்டி உள்ளதாக நான் கருதுகிறேன். பூனா ஒப்பந்தம் பற்றிய கட்டுரை பத்திகளை எனது நண்பர்களோடு நான் பகிர்ந்து கொண்டு இருக்கிறேன்.

இன்றைய காந்தி வாசித்த பின் அம்பேத்கர் பற்றிய உங்கள் விவரணையில் இருந்து நான் புரிந்து கொண்டது, அருண் ஷோரி போன்றவர்கள் கூறுவது போல அவரை ஒரு தலித் தலைவர்/அறிவு ஜீவியாக மட்டும் நிறுவ முயற்சிக்கிறீர்களோ என்று தோன்றியது.இதை குற்ற சாட்டாக சொல்ல வில்லை. உங்கள் intention அப்படி இருக்க வாய்ப்பு இல்லை என நான் முழுமையாக நம்பினாலும் புத்தகம் வாசித்தவுடன் எனக்கு அப்படி தோன்றியதால் சொல்கிறேன்.

உங்களின்  தொடர்ந்த திரைப்பட வெற்றிகள் மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது. மேலும் பல வெற்றிகள் தங்களை வந்து அடைய உங்களின் ஒரு வாசகனாக விரும்புகிறேன்…

நன்றி கலந்த அன்புடன்,

சுப்ரமணியம்.

800px-Gandhi_spinning-ED

அன்புள்ள சுப்ரமணியம் அவர்களுக்கு,

நான் எழுதுவன அந்த நாவல்களத்திற்குள் எழுதியெழுதிக் கண்டடைந்தவை. நிறுவப்பட்ட கோட்பாடுகள் மீதான நம்பிக்கை என்பது எந்த அழிவையும் நியாயப்படுத்தும் ஆணவத்தையும் அறியாமையையுமே அளிக்கும் என்பது அன்று என் சொந்த அனுபவங்கள் வழியாகவும், ருஷ்யப்பேரரசின் வீழ்ச்சியின் வழியாகவும் கண்டடைந்தேன். அவற்றை எழுதி கண்டடைந்து தெளிவுபடுத்திக்கொண்டேன். அதிலிருந்தே மேலும் முன்னகர்ந்தேன்.

பொதுவாக பின்தொடரும் நிழலின் குரல் போன்ற நாவல்களை அவற்றுடன் ஒர் உரையாடலைத் தொடர்ந்து நிகழ்த்தும் வாசகர்களே முழுமையாக உள்வாங்கமுடியும். நீங்கள் முதலில் வாசித்தபோது கதையாகக் கடந்துசென்றிருப்பீர்கள் என நினைக்கிறேன். அடுத்தமுறை விவாதிக்கத் தொடங்கியிருப்பீர்கள்.

காந்தி குறித்த கட்டுரைகளுக்கும் நோக்கம் காந்தியை நிறுவுவது அல்ல, கண்டடைவது மட்டுமே. எவ்வகையிலும் காந்தியை நிறுவ வேண்டிய அவசியம் எனக்கில்லை. ஆகவேதான் அந்தச் சுதந்திரம். அது அம்பேத்கர் விஷயத்திலும். இன்று இந்தியச்சூழலில் உருவாக்கப்பட்டுள்ள எந்த கருத்துக்கெடுபிடியும் எனக்கு ஒரு பொருட்டு அல்ல. எதை எண்ணவும் நான் தயங்கப்போவதுமில்லை. அம்பேத்கர் மீதான மதிப்பு என்பது அவருடைய மேதமையினால் உருவானதே ஒழிய சூழல் உருவாக்கும் அழுத்தத்தாலோ அரசியல்கொள்கைகளினாலோ சூடிக்கொண்டது அல்ல. ஆகவே அவர்மேல் விமர்சனங்களை முன்வைக்கவும் தயங்கமாட்டேன்.நீங்கள் சொல்வது உண்மை, அம்பேத்கரை ஒரு தலித் அரசியல்வாதியாகக் குறுக்கும் சூழலே இன்றுள்ளது. அவருடைய ஜனநாயக நம்பிக்கைகள் சார்ந்து மேலே யோசிக்கவும் மையப்படுத்தல்மேல் அவருக்கிருந்த நம்பிக்கை சார்ந்த விமர்சனங்களை முன்வைக்கவும் இப்போது சூழலில் வாய்ப்பே இல்லை . சிந்தனையாளர்கள் சிறு சூழலிலேனும் இந்த அரசியல்சரிநிலைகளைக் கடந்துசென்றாகவேண்டும்

இவ்வாறு   நான் நான் என எண்ணுவது ஒவ்வொரு தருணத்திலும் விரிந்து செல்லும் என் எண்ணங்களை ஓர் ஆளுமையாகத் தொகுத்துக்கொள்ளும்பொருட்டே. அவ்வப்போது இப்படி வரும் ஆழ்ந்த வாசகர்கடிதங்கள் அதற்கான வாய்ப்பை அளிக்கின்றன.

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 30
அடுத்த கட்டுரைவாழும் சிற்பங்கள்