இணைகோட்டு ஓவியம்

john 1

என் திரையுலக வாழ்க்கைக்கு தொடங்கி பதினான்கு ஆண்டுகளாகின்றன. திரையுலகில் பதினான்காண்டுகள் என்பது நீண்டகாலம். இத்தனை ஆண்டுகளில் வெவ்வேறு வகையான மனிதர்களை இங்கே சந்தித்திருக்கிறேன். எதிர்பார்ப்புகளே இல்லை என்பதனால் கசப்புகளும் இல்லை. இந்த நீண்ட ஆண்டுகளில் நான் சந்தித்த திரையுலக மனிதர்களில் வணக்கத்துடன் அன்றி எண்ணிக்கொள்ளாத தூய உள்ளம் கொண்ட சிலர் உண்டு, அதிலொருவர் திரைக்கதையாசிரியர் ஜான் பால்

சில ஆண்டுகளுக்கு முன்பு கோகுலம் சிட் ஃபண்ட்ஸ் நிறுவனத்தின் திரைநிறுவனமாகிய கோகுலம் சினிமாஸ் மலையாளத்தில் ஒரு படம் எடுக்க விரும்பினர். ஏற்கனவே பழசிராஜா என்ற பெருவெற்றிப் படத்தை எடுத்திருந்தனர். அவர்களின் புகழ்பெற்ற குருவாயூரப்பன் முதலிய தொலைத்தொடர்களின் இயக்குநரான மாதவன்குட்டி இயக்கத்தில் ஒரு படம் தயாரிக்க விரும்பினர். அது ஒரு வரலாற்றுப்படம். அதற்கு ஒரு திரைக்கதை வடிவம் முன்னரே இருந்தது. மேலும் பணியாற்றும்பொருட்டு என்னை அழைத்தனர்.

நான் அதில் சேர்ந்துகொண்டபோதுதான் முன்னரே அதன் ஒருவடிவை ஜான் பால் எழுதியிருப்பதை அறிந்தேன். ஆகவே தயங்கினேன். அவர் மலையாளத் திரையுலகின் ஒரு தொன்மமாக அறியப்படும் திரைக்கதையாசிரியர். ஆனால் மாதவன்குட்டி என்னை ஊக்கப்படுத்தி ஜான் பால் அவர்களைச் சந்திக்க எர்ணாகுளம் கூட்டிச்சென்றார். தயாரிப்பாளரின் கோகுலம் விடுதியில் எட்டாவது மாடியில் தங்கியிருந்தேன். மாதவன்குட்டி ஜான் பால் வந்துகொண்டிருப்பதாகச் சொன்னார். சற்றுநேரம் கழித்து ஜான் பால் வந்தார்.

முதல்பார்வையில் நான் திகைப்பை அடைந்தேன். நான் பார்த்ததிலேயே மிகப்பருமனான மனிதர் அவர். நடக்கமுடியாது. ஒரு நடைக்கூண்டின் உதவியுடன் ஒவ்வொரு அடியாக வைத்து மெல்ல முன்னகர்ந்து வந்தார். ஆனால் இனிய அழகிய முகம். நட்பார்ந்த சிரிப்பு. நான் அவரை வரவேற்றேன். என்னைத் தழுவிக்கொண்டு நான் எழுதிய ஒழிமுறி படத்தைப் பாராட்டிப் பேசத் தொடங்கினார். கிட்டத்தட்ட உச்சிமுகர்தல்.என் தயக்கத்தை சொன்னதும் “அதைப்பற்றி கவலையே படாதே. நாம் சேர்ந்து எழுதுவோம்” என்றார். அந்த சினிமா எடுக்கப்படவில்லை, பதிலுக்கு நான் எழுத மாதவன்குட்டி இயக்க இன்னொரு சினிமா வெளிவந்தது.

அன்று முதல் ஜான் பால் எனக்கு ஓர் ஆதர்ச பிம்பம். முப்பதாண்டுக்காலம் மலையாள சினிமாவின் ஒரு பகுதியாகத் திகழ்ந்தவர். ஆனால் முழுக்கமுழுக்க நேர்நிலை மனம் மட்டுமே கொண்டவர். எவர் மேலும் எவ்வகையிலும் புகார்கள் இல்லாதவர். ஒரு சொல்கூட எவரையும் பழித்துரைக்காதவர். எப்போதும் சிரிப்பு, இனிய கிண்டல்கள், பழையகாலங்களின் அரிய நினைவுகள். ஜான் பால் எப்போதுமே அப்படித்தான் என்று பழைய நடிகர் ஒருவர் சொன்னார். “அவருடைய அறைக்குச் செல்வது ஒரு குளியல் போடுவதுபோல. மனதிலுள்ள அழுக்குகள் எல்லாம் கரைந்து புதிதாகப் பிறந்தெழுவோம். அவர் அறை சிரிப்பும் கும்மாளமும் மட்டும் நிறைந்த ஒரு தேவாலயம்போல”

bharathan2

ஜான் பால் புதுச்சேரி புகழ்பெற்ற கிறித்தவ இறையியலாளரான புதுச்சேரி பௌலோஸச்சனின் மைந்தர். அவருடைய தந்தையின் நூல்களே இன்றும் கத்தோலிக்க இறையியல்பள்ளிகளில் பாடமாக உள்ளன. 1950 அக்டோபரில் எர்ணாகுளத்தில் பிறந்த ஜான் பால் இதழியலாளராகவும் சிறுகதையாசிரியராகவும் கல்லூரிக்காலத்திலேயே புகழ்பெற்றிருந்தார். பின்னர் 1972ல் கனரா வங்கியின் ஊழியரானார்.  1982 வரை அங்கே பணியாற்றினார். கல்லூரி மாணவராக இருக்கும்போதே அன்று அடூர் கோபாலகிருஷ்ணன், சூரியா கிருஷ்ணமூர்த்தி போன்றவர்களால் முன்னெடுக்கப்பட்ட திரைப்படச்சங்க இயக்கத்துடன் தொடர்புகொண்டிருந்தார். அவ்வியக்கத்திற்காக மாற்று சினிமாக்களைப்பற்றி நிறைய எழுதினார். அவ்வாறுதான் பின்னாளில் திரை இயக்குநர்களாக ஆன பரதன், மோகன் ஆகியோருடன் அவருக்குத் தொடர்பு உருவாகியது. அவர்களில் ஜான் பாலுக்கு அணுக்கமானவர் பரதன்.

பரதன் ஜான் பாலை விட நான்காண்டு மூத்தவர். திரிச்சூர் அருகே வடக்காஞ்சேரியைச் சேர்ந்தவர்.  திரிச்சூர் கவின்கலைக் கல்லூரியில் ஓவியம் பயின்றபின் சென்னை சென்றார். அவருடைய தாய்மாமன் பி.என்.மேனன் அன்று சென்னையில் திரைப்படங்களுக்கு கலை இயக்குநராகப் பணியாற்றினார். பி.என்.மேனன் ’ரோஸி’, ’ஓளவும் தீரமும்’ போன்ற படங்களையும் இயக்கியிருக்கிறார். பி.என்.மேனன் இயக்கிய செம்பருத்தி படத்திற்கு கலை இயக்குநராக பரதன் பணியாற்றினார். தனியாக வாய்ப்பு தேடிய பரதன் 1972ல் ஏ.வின்செண்ட் இயக்கிய கந்தர்வக்ஷேத்ரம் என்ற படத்திற்கு கலை இயக்குநராக பணியாற்ற வாய்ப்பு பெற்றார். அது எம்.குஞ்சாக்கோ நடத்திய உதயா ஸ்டுடியோவால் தயாரிக்கப்பட்ட படம். உதயா ஸ்டுடியோ கேரளத்தில் ஆலப்புழா அருகே அமைந்திருந்தது. பரதன் அந்தப் படத்துக்காக ஆலப்புழாவிலும் எர்ணாகுளத்திலும் தங்கியிருந்தபோதுதான் கல்லூரி ஒல்லியான, உயரமான கல்லூரி மாணவராக இருந்த ஜான் பால் அவரைச் சந்தித்தார்.

பரதனுக்கு அன்று சினிமா மீது பெரிய மோகம் இருக்கவில்லை. அவருடைய கனவு பாரீஸ் சென்று ஓவியராக உலகப்புகழ் பெறுவது. அவர் அதிகமாக நல்ல படங்கள் பார்த்திருக்கவுமில்லை. ஜான் பால் செயல்பட்ட திரைப்படச்சங்கம் பரதனுக்கு உலகசினிமாக்களை அறிமுகம் செய்தது. ஃபெல்லினி, சத்யஜித் ரே போன்றபர்களால் பரதன் ஆட்கொள்ளப்பட்டார். உதயா ஸ்டுடியோ எடுப்பவை எல்லாம் சினிமாக்களே அல்ல என்று ஜான் பால் பரதனுக்குச் சொன்னார்.

அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் 1972ல் வெளிவந்த ’சுயம்வரம்’ என்னும் திரைப்படம் மலையாளத்தில் கலைப்பட இயக்கத்தை தொடங்கிவைத்தது. ஜான் பால் அதைப்போன்ற மென்மையான, நுட்பமான கலைப்படங்களை எடுக்கவேண்டும் என்ற கனவுகொண்டிருந்தார். தானே இயக்கவேண்டும் என்ற எண்ணமும் இருந்தது. அன்று அவர் பல சிறிய நாடகங்களையும், இருபது நிமிடப் படங்களையும் எழுதியிருந்தார். வேலைகிடைத்து பாலக்காட்டுக்கு சென்றபின்னரும்கூட சினிமாவுக்காகவே பொழுதைச் செலவிட்டார்.

bharathan
பரதன் பழைய படம்

1975ல் பரதன் தன் முதல் திரைப்படத்தை எடுத்தார். பரதனின் நண்பரும் சிறுகதையாசிரியருமான பி.பத்மராஜன் எழுதிய ’பிரயாணம்’. எம்.பி.சீனிவாசன் இசையமைக்க பரதனே தயாரித்த அச்சிறிய கறுப்புவெள்ளைப் படத்திற்கு பாலு மகேந்திரா ஒளிப்பதிவு செய்திருந்தார். பாலு மகேந்திரா அப்போது உதயா ஸ்டுடியோவின் படங்களுக்கு ஒளிப்பதிவுசெய்தபடி ஆலப்புழாவிலும் எர்ணாகுளத்திலும் தங்கியிருந்தார். பரதன், பத்மராஜன், பாலு மகேந்திரா, மோகன், ஜான் பால் ஆகியோர் ஒரு குழுவாக வாழ்க்கையைக் கொண்டாடி சினிமாவைக் கனவுகண்டிருந்த காலம் அது. அந்தப்படத்துக்காக பாலு மகேந்திரா சிறந்த ஒளிப்பதிவாளருக்கான கேரள அரசு விருதுபெற்றார்.

பிரயாணம் கலைப்படமாகக் கணிக்கப்பட்டாலும் வணிகவெற்றி பெறவில்லை. பரதன் தொடர்ந்து கலை இயக்குநராகவே பணியாற்றினார்.1977ல் மஞ்ஞிலாஸ் நிறுவனத்துக்காக எம்.ஓ.ஜோசப் தயாரித்த ’குருவாயூர் கேசவன்’ என்ற படத்தை இயக்கினார். ஒரு சராசரி மலையாளப் படம் அது. குருவாயூரில் இருந்த கேசவன் என்ற யானையைப்பற்றிய அந்தப்படம் ஓரளவு வணிகவெற்றி பெற்றது. ஆனால் அந்தப்படத்தால் பரதன் நிறைவின்மையை அடைந்தார். தான் எடுக்கவேண்டிய படமல்ல அது என்னும் எண்ணம் அவருக்கு எழுந்தது.

வணிகவெற்றியால் மட்டுமே காலூன்றிக்கொள்ளமுடியும் என்று எண்ணி திட்டமிட்டு அவர் எடுத்தபடம் ’ரதிநிர்வேதம்’. பத்மராஜனின் நாவலுக்கு அவரே திரைக்கதை எழுதினார். 1978 ல் ஐ.வி.சசியின் அவளுடே ராவுகள் என்னும் படம் வெளிவந்து பெருவெற்றி பெற்றிருந்தது. இந்தியாவெங்கும் ஒரு பாலியல்கிளர்ச்சிப் படமாக அது ஓடி பணம் ஈட்டினாலும் மலையாளப் படங்களில் யதார்த்த வாதத்தை ஆரம்பித்துவைத்த முன்னோடிப் படமாகவும் கருதப்படுகிறது. இன்றும் சினிமாக்கலை வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது. அந்த அலைமேல் ஏறிக்கொள்ள பரதன் முடிவெடுத்து ’ரதிநிர்வேதம்’ படத்தை இயக்கினார். ஹரிபோத்தன் தயாரித்த அப்படத்தில்தான் பரதனுக்கு உவப்பான ஒளிப்பதிவாளராகிய ராமச்சந்திரபாபு அமைந்தார். மிகப்பெரிய வணிக வெற்றியை ஈட்டியது ரதிநிர்வேதம்

chama

மஞ்ஞிலாஸுக்காக ‘அணியறா’ என்ற இன்னொரு படத்தையும் பரதன் இயக்கினார். பழம்பெரும் எழுத்தாளர் உறூப் எழுதிய பழையபாணி குடும்பப்படம் அது. பரதன் சொந்தமாக திரைக்கதை எழுதி அமீர் என்ற நண்பரின் பண உதவியுடன் தயாரித்து  ‘ஆரவம்’ என்ற படத்தை இயக்கினார். ஒரு சிற்றூருக்கு சர்க்கஸ் நிறுவனம் ஒன்று வருவதைப் பற்றியது இப்படம்- சார்லி சாப்ளினின் சர்க்கஸ் படத்தின் பாதிப்பு கொண்டது. பிரதாப் போத்தன் இதில் கதாநாயகனாக அறிமுகமானார். கொக்கரா என்ற கதாபாத்திரம் அவருக்கு நன்றாகப் பொருந்தியது. அசோக்குமாரின் அழகிய ஒளிப்பதிவு. ஆனால் பலவீனமான திரைக்கதை காரணமாக படம் வெறும் சுவாரசியத்தை மட்டுமே அளித்தது.

வணிகவெற்றியை குறிவைத்து பரதன் மீண்டும் ஒரு படம் எடுத்தார். பத்மராஜன் எழுத அவர் இயக்கிய மென்காமக் கிளர்ச்சிப் படமான ’தகரா’ பெருவெற்றிபெற்றது. தமிழில் ’ஆவாரம்பூ’ என்ற பெயரில் அதை மீண்டும் எடுத்தார். அதைத் தொடர்ந்து அதேபாணியிலான லாரி, சாவித்ரி ஆகிய படங்களை இயக்கினார்.  பரதன் பத்மராஜன் இணைவு மலையாளத்தில் காலம்கடந்து நிற்கும் படங்களை உருவாக்கியது. வன்முறையும் காமமும் அழகியல்ரீதியாக வெளிப்பட்ட படங்கள் அவை என்று விமர்சகர்களால் கருதப்படுகின்றன. பரதன் வணிகவெற்றியை இலக்காகக் கொண்டாலும் அவருள் உள்ள ஓவியரும், யதார்த்தவாத அழகியல் கொண்ட இயக்குநரும் வெளிப்படும் அழகிய படங்கள் அவை

ஆனால் பரதன் வேறொருவகை படங்களை இயக்கவேண்டுமென ஏங்கிக்கொண்டிருந்தார். மென்மையான உளநாடகங்கள் கொண்ட, மிக யதார்த்தமான, சொல்லப்போனால் பெரிதாக எதுவுமே நிகழாத ஒருவகை படங்கள். 1972 லேயே ஜான்பால் அவரிடம் சொன்ன ஒரு சிறுகதையை படமாக்க விரும்பினார். தொடர் வணிகவெற்றிகளால் அவருக்கு தயாரிப்பாளர்கள் அமைந்திருந்தனர். ஒரு சினிமாவுக்குரிய அளவில் அந்தக்கதையை விரிவாக்கியபோது பாலகிருஷ்ணன் மங்காடு எழுதிய ஒரு நாவலின் உரிமையையும் வாங்கி அதன் சில தருணங்களையும் சேர்த்துக்கொண்டனர். 1980   ஜான்பால் எழுத பரதன் இயக்க ’சாமரம்’ வெளிவந்தது.

ஆசிரியைக்கும் மாணவனுக்குமான காதலைப் பற்றிப் பேசியது சாமரம். பிரதாப் போத்தன் துடுக்கான மாணவனாகவும் ஸரினா வகாப் உள்ளடங்கிய குணம்கொண்ட ஆசிரியையாகவும் நடித்தனர். மென்மையான தருணங்களால் பெரும்பாலும் மனதுக்குள் நிகழும் மோதல்கள் வழியாகச் சென்றது திரைக்கதை. காட்சியழகுக்காகவே கொண்டாடப்பட்ட சாமரம் மலையாள சினிமாவின் ‘புதியஅலை’யை தொடங்கிவைத்த படம் எனப்படுகிறது. மலையாள சினிமாவில் பின்னர் உருவாகிவந்த இயக்குநர்கள் பெரும்பாலானவர்களால் சாமரம் அவர்களின் ஆதர்சப் படமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது– சாமரம் வெளிவந்து பத்தாண்டுகளுக்குப்பின் பிறந்தவர்களால்கூட.

ஜான் பால் அதற்கு முன்னர் 1978 ல் வெளிவந்த ’ஞான் ஞான் மாத்ரம்’ போன்ற படங்களுக்கு திரைக்கதை- வசனம் எழுதியிருந்தார். ஞான் ஞான் மாத்ரம் ஐ.வி.சசி இயக்கிய படம். பரதன் அதற்கு கலை இயக்குநர்.  ஜான் பால் தனது முதல்படமாக சாமரத்தையே சொல்வது வழக்கம். அவர் எண்ணிய திரைக்கதை வடிவம் அதில்தான் அமைந்தது. நாடகம் முற்றாகத் தவிர்க்கப்பட்டதும் சிறிய நிகழ்வுகளால் ஆனதுமான கதையொழுக்கையே ஜான் பால் எப்போதும் முயன்றுவந்தார்.

பரதனுடன் ஜான் பால் அதன்பின்னர் கிட்டத்தட்ட இருபதாண்டுக்காலம் தொடர்ந்து பணியாற்றியிருக்கிறார். சாமரத்தைத் தொடர்ந்து 1981ல் ஒரே ஆண்டில் பரதனுடன் இணைந்து மூன்றுபடங்கள். மர்மரம், ஓர்மைக்காய், பாளங்கள். மூன்றுமே இன்றும் மலையாள சினிமா நினைவில் கொண்டாடும் படங்கள். கலைப்படங்களுக்கும் வணிகப்படங்களுக்கும் நடுவே ஒரு பாதையைத் திறந்தவை இவை. நாடகமற்ற உணர்ச்சித்தருணங்களும் இயல்பான யதார்த்தமும் மிகையற்ற வாழ்க்கைநோக்கும் கொண்டவை.

1983 ல் சந்த்ய மயங்கும் நேரம், 1984ல் இத்திரிப்பூவே சுவந்நபூவே ,1985ல் காதோடு காதோரம், 1987ல் ஒரு மின்னாமினுங்கின்றே நுறுங்குவெட்டம், அதே ஆண்டில் நீலக்குறிஞ்சிகள் பூத்தப்போள், 1989ல் ஒரு சாயந்தனத்தின்றே ஸ்வப்னம், 1991ல் கேளி, மாளூட்டி, 1993ல் சமயம், 1997ல் மஞ்சீரத்வனி என மொத்தம் பதினான்கு படங்கள். பரதனின் இறுதிப்படமான மஞ்சீரத்வனிதான் ஜான் பால் எழுதிய கடைசிப்படம் எனலாம். அதன்பின் சில படங்களுடன் அவர் இணைந்து பணியாற்றியிருக்கிறார். அவருடைய கதை படமாகியிருக்கிறது [வெள்ளத்தூவல்] ஆனால் மானசீகமாக சினிமாவிலிருந்து ஜான் பால் ஒதுங்கிவிட்டார் என்றே சொல்லவேண்டும்.

ஜான் பால் நூறு படங்கள் எழுதியிருக்கிறர். பரதனைத் தவிர்த்தால் மோகன்[ நான்கு படங்கள்] ஐ.வி.சசி [ஐந்துபடங்கள்] ஆகியோருக்காக நிறையபடங்கள் எழுதினார். பி.ஜி.விஸ்வம்பரன் போன்ற வணிக இயக்குநர்களுக்காக  சாதாரணமான குடும்பப் படங்களும் எழுதியிருக்கிறார். ஆனால் அவர் முதன்மையாக பரதனின் எழுத்தாளர் என்றே அறியப்படுகிறார். அவர் பரதனுக்காக எழுதிய படங்களில் சாமரம், மர்மரம், ஓர்மைக்காய், பாளங்கள், சந்த்ய மயங்கும் நேரம், காதோடு காதோரம், ஒரு மின்னாமினுங்கின்றே நுறுங்குவெட்டம் ஆகிய எட்டு படங்களும் மலையாளத்தின் கிளாஸிக்குகளாகக் கருதப்படுபவை

katho

ஜான் பால் அவருடைய திரைவாழ்க்கையின் உச்சத்தில் பெரும்சவாலை தனிவாழ்க்கையில் சந்தித்தார். அவருடைய மனைவி புரிந்துகொள்ளமுடியாத நோயால் பாதிக்கப்பட்டார். ரத்தப்புற்றுநோய் என அது கருதப்பட்டது. வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அது வயிற்றுநோய்தான் என உறுதிசெய்யப்பட்டது. ஏறத்தாழ நான்காண்டுக்காலம் மனைவிக்காக வெவ்வேறு மருத்துவமனைகளில் ஜான் பால் வாழ்ந்தார். அவருடைய புகழ்பெற்ற திரைக்கதைகள் பல மருத்துவமனை வராந்தாக்களில் அமர்ந்து எழுதப்பட்டவை. அப்போதைய உள அழுத்தம் தைராய்டு சிக்கலை உருவாக்க உடல்பெருக்கலாயிற்று. கட்டின்றி பெருத்த உடலைச் சமன் செய்ய செய்துகொண்ட அறுவைசிகிழ்ச்சைகளால் அவர் நடுவே திரையுலகை விட்டு அவ்வப்போது விலகவேண்டியிருந்தது. பணத்துக்காக எழுதவேண்டியிருந்தது. அதன்நடுவே அவர் பதினெட்டாண்டுகளில் நூறுபடங்களை எழுதினார் என்பது சாதனைதான்.

ஜான் பால் பரதனுடனான உறவை ஒரு ஆழ்ந்த நட்பாகக் கருதுகிறார். ஒரே மூச்சில் முழுத் திரைக்கதையையும் எழுதிவிடுவது அவருடைய வழக்கம். கதையின் கருவை மட்டும் முன்னதாக பரதனிடம் சுருக்கமாகச் சொல்வார். உதாரணமாக புகழ்பெற்ற ’காதோடு காதோரம்’ படத்தின் கரு உருவானதை அவர் என்னிடம் சொன்னார். 1985ல் கேரளத்தின் மலையோரத்து கிறித்தவக் கிராமம் ஒன்றில் நடந்த ஒரு நிகழ்ச்சி நாளிதழ்களில் செய்தியானது. குடிகாரனான கணவனால் கைவிடப்பட்ட மனைவி இன்னொருவரை விரும்பி ஏற்றுக்கொண்டாள். அக்கணவன் மணவிலக்கு கொள்ள மறுத்தான். அவள் காதலனுடன் வாழ்ந்தாள். அதைக் கண்டித்த திருச்சபை தேவாலயப் படிகளில் வைத்து அந்தப்பெண்ணின் கூந்தலை வெட்டி மொட்டையடித்து மதநீக்கம் செய்தது. அதையொட்டி ஒரு கதை எழுதும்படி பரதன் ஜான் பாலிடம் சொன்னார். ஜான் பால் முழுத்திரைக்கதையையும் ஒரே வேகத்தில் எழுதி பரதனுக்கு அளித்தார். பரதனுடன் அமர்ந்து ஒவ்வொரு காட்சியாக வாசித்து விரிவுபடுத்தினார். சொற்களால் ஜான் பால் உருவாக்கிய யதார்த்தத்தை பரதன் அப்போதே கோட்டோவியங்களாக உருமாற்றினார். அவை பின்னர் மம்மூட்டியும் சரிதாவும் நடிக்க, மலையோரக் கிராமத்தின் அழகை எஸ்.ஸி.பாடி ஒளிப்பதிவு செய்ய, ஒரு மலையாள கிளாஸிக்காக மாறியது.

எழுத்து என்பது சினிமா அல்ல என்ற தெளிவு கொண்டவர் ஜான் பால். தன் திரைப்படங்களை எப்போதுமே முதன்மையாக பரதன்படங்கள் என்றே அவர் சொல்வது வழக்கம். இயக்குநரே படங்களின் ஆசிரியர் என்று அவர் என்னிடம் சொன்னார். ஆனால் இயக்குநருக்கு படத்தில் தன் இடம் என்ன என்று தெரிவதைப்போலவே எல்லை என்ன என்றும் தெரிந்திருக்கவேண்டும் என்றார். படத்தின் கட்டமைப்பு, ஓட்டம் இரண்டும் அதன் எழுத்தாளராலேயே உருவாக்கப்படுகின்றன. அதை இயக்குநர் மாற்றியமைத்தால் படத்தை அவர் கீழிறக்குகிறார். ஆனால் படம் என்பது காட்சிச்சட்டகம், தருணங்களின் உணர்ச்சிகரம், காட்சிகளின் நீளம் ஆகியவற்றால்தான் தொடர்புறுத்துகிறது. அதை கோப்பவர் இயக்குநர்.  “காதோடு காதோரம் படத்தில் சரிதாவின் கூந்தலை எப்படியெல்லாம் இயக்குநர் காட்டியிருக்கிறார் என்றுபார்த்தால் அந்தப்படத்தின் கவிதை அவருடையது என்று தெரியும்” என்றார்

அந்தப் புரிதல் இருந்தமையால் அவர்களின் உறவு இறுதிவரை படைப்பூக்கத்துடன் நீடித்தது. தேர்ந்த பாடகர்கள் போல ஒருவரை ஒருவர் நிரப்பி தங்கள் படங்களை முன்னெடுத்தனர். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் அவர்களுடைய படங்களில் ஒவ்வொருமுறையும் வென்றவற்றை அப்படியே துறந்து புதியவற்றை நோக்கிச் சென்றார்கள் என்பதே. சாமரம் எடுத்தவர்கள்தான் காதோடு காதோரம் எடுத்தார்களா என்ற ஐயம் பார்வையாளர்களுக்கு எழுமளவுக்கு முற்றிலும் வேறு படங்கள் அவை. ஒரே ஆண்டில் வெளிவந்த மூன்று படங்கள் மூன்று கதைக்கருக்களும் மூன்றுவகை காட்சியமைப்புக்களும் கொண்டவை.

இந்திய பிரபலத் திரைக்களத்தில் ஜான் பால் –பரதன் கூட்டு மிக அரிய ஒன்று. பரதன் கட்டற்றவர். பலவகையான போதைகளால் அலைக்கழிக்கப்பட்டவர். இசையிலும் ஓவியத்திலும் தோய்ந்தவர். அணுகுவதற்குக் கடினமானவர். நண்பர்கள் குறைவானவர். ஜான் பால் கிட்டத்தட்ட ஒரு கிறிஸ்தவ மதபோதகர். தனிப்பட்ட துயரங்கள் வழியாகக் கனிந்தவர். அனைவருக்கும் வேண்டியவர். இசையோ ஓவியமோ அவருக்கு அணுக்கம் அல்ல. இலக்கியமும் கிறித்தவ இறையியலும் கேரள வரலாறும்தான் அவருடைய ஆர்வத்துறைகள். தீவிர சினிமாச் செயல்பாடுகளின்போதே இலக்கியக் கூட்டங்களை ஒருங்கிணைப்பது உட்பட அக்களத்திலும் செயல்பட்டவர். ஒருவரின் எல்லைகளை பிறிதொருவர் நிரப்பினர். ஒருவரின் நிறைகளை ஒருவர் பெற்றுக்கொண்டனர்.

சினிமா என்பது கூட்டுக்கலை. முழுமையாக கொடுத்துப் பெற்றுக்கொள்கையில்தான் அதன் படைப்பாளர் முழுமை பெறுகிறார்கள். ஆனால் உலகசினிமாவில்கூட மிக அரிதாகவே மிகச்சிறந்த கூட்டுக்கள் நிகழ்கின்றன. ஜான் பால் –பரதன் கூட்டு அத்தகைய ஒன்று.

[அயல்சினிமா இதழில் வெளிவந்த கட்டுரை]

முந்தைய கட்டுரைதொல்வெளி இசை
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 53