பொற்றை

meduகுமரிமாவட்டத்தில் புழக்கத்திலுள்ள சொல் பொற்றை. மேடு, கரடு என்று மையநிலத்தமிழில் சொல்வதுதான். மேடான வெறும்நிலம் என்று பொருள். கேட்டாலே தெரியும், தமிழ்வேர் கொண்ட சொல்தான். மலையாளம் தவிர இன்றுள்ள வேறெந்த மொழியிலும் இச்சொல்லின் ஏதேனும் ஒலிவடிவம் இல்லை.

எஸ்.வையாபுரிப்பிள்ளையின் பேரகராதி சொற்பிறப்பியலைச் சுட்டுவதும்கூட. மிகையான உய்த்தல்களும் முன்முடிவுகள் கொண்ட தாவல்களும் இல்லாமல் நாமே கண்கூடாக சொற்பிறப்பை பார்க்க அதில் வாய்ப்புண்டு. ஒரு சொல்லின் முன்னும்பின்னும் உள்ள சொற்களின் நிரையைப் பார்த்தால் மட்டும் போதும். ஆனால் பொற்றையின் முன்னும் பின்னும்  உள்ள சொற்கள் அதனுடன் இணையவில்லை.

புணர்ச்சி இலக்கண அடிப்படையில் வேர்ச்சொல் எடுத்துப் பார்த்தால் பொள்ளல் என்பதிலிருந்தே பொற்றை வந்திருக்க வாய்ப்பு– சற்றே திரிபடைந்து. பொள்ளுதல் என்றால் மேலெழுதல், உப்புதல் என்று பொருள். மலையாளத்தில் அதுவும் புழக்கத்தில் உள்ள சொல்தான். ‘கரிமீன் பொள்ளிச்சது’ என்றால் தோசைத்தட்டில் வைத்து பொக்குளம் வர வேகவைத்த கரிமீன். பப்படம் பொள்ளுதல் என்பார்கள். தமிழில் சிற்பவியலில் மட்டும் அச்சொல் புழக்கத்திலுள்ளது. உள்ளீடற்ற உலோகச் சிற்பங்கள் வடிக்கும் முறைக்குப் பொள்ளல்முறை என்று பெயர். உள்ளீடற்ற தன்மையை பொள்ளையானது என்று சொல்வதும் இங்குண்டு.

கரிமீன் பொள்ளிச்சது
கரிமீன் பொள்ளிச்சது

இன்னொரு கோணத்தில் வந்தால் பொக்குதல் என்ற சொல்லில் இருந்து பொற்றை வந்திருக்கலாம். பொக்குதல் என்றால் மலையாளத்திலும் பழந்தமிழிலும் தூக்குதல், மேலே உயர்த்துதல். [எனக்கு பொக்கமில்லை, என்னை பொக்காதிருங்கள்- குஞ்ஞுண்ணி கவிதை] பொக்கன் என்ற பெயர் குமரிமாவட்டத்தில் உண்டு. பொக்கப்பட்டது பொக்கை ஆகி பொற்றை ஆகியிருக்கலாம். பொக்கை என்றால் தமிழில் உள்ளீடின்மை

பொள் என்னும் வேரிலிருந்து வந்தவையே மேலே காணும் இரு சொற்களும்.மேலும் சொற்களைத் தேடிச் சென்றால் பொக்கணம்,    பொகுட்டு, பொங்கல்,  பொச்சம், பொச்சு, பொச்சை போன்ற பல சொற்கள் இவ்வரியில் வரலாம். பொக்குள் என்றால் மலையாளத்தில் தொப்புள். அது ஒரு கொப்புளம்தானே? பொட்டல், பொந்தர் போன்ற சொற்கள் இதன் முளைகளாக இருக்கலாம். பொற்றுதல்,  பொன்றுதல்  இதிலிருந்து வந்திருக்கலாம்.

வேர்ச்சொல் தேடிச்செல்கையில் நாம் எப்போதும் மொழிக்கு முந்தைய பழங்குடி உள்ளத்தைச் சென்றடைகிறோம். அவர்களின் கற்பனையையும் அதற்குக் காரணமாக அமைந்த அழகிய அறியாமையையும்,  நுண்ணிய நோக்கையும் காண்கிறோம். பொற்றையை பொள்ளையானது என்று பார்த்திருப்பாரோ அந்த மூத்தபாட்டா? எந்த முதுமக்கள்தாழிக்குள் எங்கே உறங்குகின்றனவோ அவன் எலும்புகள். எங்கிருந்தாலும் அவனுக்கு வணக்கம்.

தடம் ஜூலை 2008 இதழில்

எஸ்.வையாபுரிப்பிள்ளை

முந்தைய கட்டுரைராஜ் கௌதமனைப் புரிந்துகொள்ளுதல்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 49