அரசப்பேரவை முன்னரே நிரம்பத் தொடங்கியிருந்தது. ஷத்ரிய அரசர்கள் இளைய கௌரவர்களாலும் சிற்றரசர்கள் உபகௌரவர்களாலும், சிற்றமைச்சர்களாலும் அவைமுகப்பில் தேரிறங்கும்போதே எதிர்கொண்டு வரவேற்கப்பட்டு அவைக்கு கொண்டுசென்று அமர்த்தப்பட்டனர். பூரிசிரவஸ் அவைமுகப்பில் நின்றுகொண்டு அங்கே அமர்ந்திருக்கும் அரசர்களை விழிதொட்டு நோக்கி சென்றான். வெளியிலிருந்து அவந்தியின் அரசர்கள் விந்தரும் அனுவிந்தரும் துர்மதனாலும் துச்சகனாலும் வரவேற்று கொண்டுசென்று அவையமர்த்தப்பட்டனர். பிறிதொரு வாயிலினூடாக கோசலமன்னன் பிருஹத்பலனை சுபாகு உள்ளே அழைத்துச் சென்றான்.
பூரிசிரவஸை அணுகிய சிற்றமைச்சர் மனோதரர் “பால்ஹிகரே, ஓர் உதவி. கலிங்கமன்னர் ஸ்ருதாயுஷ் வந்துகொண்டிருக்கிறார். அவருக்கு முதன்மை ஷத்ரிய அரசர்களுக்குரிய அவைமதிப்பை அளிக்கவியலாது. ஆனால் பெரும்படையுடன் வந்தவர். நீங்கள் அரசரின் தனிநண்பராக அறிமுகம் செய்துகொண்டு அவரை வரவேற்றால் நன்று. பிறர் அதை மறுத்துக் கேட்டால் நீங்கள் முதன்மை ஷத்ரியக்குடி அல்ல என்று சொல்லமுடியும்” என்றார். பூரிசிரவஸ் சிரித்தபடி “நன்று” என்று சொல்லி வெளியே சென்றான். அங்கே லக்ஷ்மணன் தம்பியர் தீர்க்கபாகுவும் தீர்க்கஸ்தம்பனும் துணைக்க நின்றிருந்தான். பூரிசிரவஸ் அருகே சென்று “கலிங்கரை நானும் சேர்ந்து வரவேற்கவேண்டும் என்பது ஆணை” என்றான்.
“நன்று, நான் பதற்றம் கொண்டிருந்தேன். கலிங்கரின் அமைச்சர்கள் வந்து எவர் வரவேற்பது என்று கேட்டுச்சென்றனர். மனோதரரிடம் சொன்னேன்” என்றான் லக்ஷ்மணன். சிறுகுடி மன்னர்களுக்கான மறுபக்க வாயிலின் வழியாக தட்சிண மாகிஷ்மதியின் நீலன் படைத்தலைவர் வக்ரதந்தரால் அழைத்துசெல்லப்பட்டதை கண்டான். மாளவ மன்னர் இந்திரசேனர் முந்தைய வாயிலில் இறங்க அவரை துச்சலனும் துர்முகனும் அழைத்துக்கொண்டு சென்றார்கள். பிரக்ஜ்யோதிஷத்தின் மறைந்த பேரரசர் பகதத்தரின் மைந்தர் பகதத்தன் அமைச்சர் குந்தரால் அழைத்துச்செல்லப்பட்டார்.
ஜராசந்தனின் மைந்தனும் மகதமன்னனுமான ஜயசேனன் பெருமுற்றத்தில் தேரிலிருந்து இறங்கியதும் சித்ரனும் உபசித்ரனும் அவனை வரவேற்று எதிர்கொண்டு முகமனுரைத்து இருபக்கமும் நின்று புன்னகையுடன் பேசி அவைக்கு கொண்டுசென்றனர். அந்தத் தேர் முற்றத்திலிருந்து அப்பால் செல்வதற்காக வெளியே சாலையில் கலிங்கனின் தேர் காத்து நின்றது. முகப்பில் மிகப் பெரிய கதிரவனின் சிற்பம் வெள்ளியில் பொறிக்கப்பட்டிருந்த தேர் உள்ளே நுழைந்ததும் ஏவலர்கள் அதை நோக்கி ஓடினர். கால் தொட்டிறங்க மரப்படிகள் அமைக்கப்பட்டன. அரச உடையில் சூரியபட மணிமுடி அணிந்த கலிங்க அரசர் ஸ்ருதாயுஷ் மைந்தர் ருதாயுவுடன் கைகூப்பியபடி இறங்கி நின்று இருபுறமும் பார்த்தார். லக்ஷ்மணனும் தம்பியரும் தன்னை நோக்கி வருவதைக் கண்டதும் அவர் முகம் சிறுப்பதை பூரிசிரவஸ் கண்டான். அவர்களின் முகம் பார்த்து பேசாமல் முன்னால் விரிந்திருந்த கூடத்தை நோக்குபவர்போல விழிதூக்கி உதடுகளால் மட்டும் முகமனுரைத்து நீரில் நடப்பவர்போல கால் நீட்டி வைத்து மெதுவாக ஸ்ருதாயுஷ் நடந்து வந்தார்.
பூரிசிரவஸ் ஸ்ருதாயுஷை அணுகி பணிந்து “நான் பால்ஹிகனாகிய பூரிசிரவஸ். அஸ்தினபுரியின் அரசரின் போர் அணுக்கன்” என்றான். ஸ்ருதாயுஷ் முகம் மலர்ந்து “ஆம், நாம் முறைமையுடன் சந்தித்திருக்கிறோம்” என்றார். “அரசர் அவைக்குப் பின் தனியாக தங்களை சந்திக்க விழைகிறார். அவைநிகழ்வுகளைப் பற்றி மட்டுமல்ல, பிறர் அறியத்தேவையில்லாத சில செய்திகளையும் சொல்லவேண்டுமென எண்ணுகிறார். ஆகவே அவைக்குப் பின் தாங்கள் நேரம் ஒதுக்கவேண்டும்” என்றான். ஸ்ருதாயுஷ் முகம் மலர, ஆனால் செயற்கையான கடுமையுடன் “என்ன செய்தி தொடர்பாக?” என்றார். “அரசே, தீர்க்கதமஸின் கொடிவழியில் சிலர் எதிர்ப்பக்கம் சென்றுள்ளனர். அதோடு…” என குரல் தாழ்த்தி “அங்கரும் படையில் இல்லை” என்றான் பூரிசிரவஸ். “ஆம், அதை அறிந்தேன். அவன் படையில் இல்லாமலிருப்பதே நமக்கு ஆற்றலளிக்கும். நான் பேசிக்கொள்கிறேன்” என்று முன்னால் சென்றார்.
லக்ஷ்மணன் அவனை விழிகளால் நோக்கி புன்னகைக்க பூரிசிரவஸ் பிறர் அறியாமல் புன்னகைத்தபடி விலகினான். விவித்சு, விகடானனன் இருவரும் ஆனர்த்த நாட்டு கிருதவர்மனை வரவேற்று அழைத்துச்செல்வதை கண்டான். யாதவர்களுக்கு அரசவரவேற்பே ஊதியம், அதை அளிக்காமலிருக்க முடியாது. ஆனால் நூற்றுவரில் அறியப்படாத இருவரே முன்னிற்க முடியும். அவன் மனோதரரின் திட்டங்களை எண்ணி வியந்துகொண்டான். ஆடையை சீரமைத்தபடி துணைவாயிலினூடாக அவைக்குள் நுழைந்தான். விழிகளால் துழாவியபோது அரசர்கள் பெரும்பாலும் அவையமர்ந்திருப்பது தெரிந்தது. குலக்குழு அரசர்களின் நீண்ட நிரையின் இடப்பக்க ஓரமாக சலன் அருகே சோமதத்தருடன் அமர்ந்திருந்தான்.
பூரிசிரவஸ் செல்லும் வழியிலிருந்த அரசர்களை வணங்கி ஓரிரு சொற்களில் முகமனுரைத்தபடி சலனின் அருகே சென்றான். சலனின் அருகே அவனுக்கான பீடம் ஒழிந்திருந்தது. அதில் அமர்ந்து “சற்று பிந்திவிட்டேன், மூத்தவரே” என்றான். “நெடுநேரமாக இந்த அவையமர்தல் நடந்துகொண்டிருக்கிறது. இறுதியாக வரும் உரிமை பெருநில அரசர்களுக்குரியது போலும். நான் வந்து இரு நாழிகையாகிறது” என்று சலன் சொன்னான். பூரிசிரவஸ் “ஆயினும் இப்பெரிய அவையில் நாம் அமர்ந்திருக்கிறோம். நமக்கு அவ்வாய்ப்பு இந்தத் தலைமுறையில்தான் அமைந்தது” என்றான். “நாமும் குருகுலத்துக் குருதிதான்” என்றான் சலன். “அதை நாமே சொல்லிக்கொண்டால்தான்” என்றான் பூரிசிரவஸ்.
சலன் கைகளைக் கட்டியபடி சாய்ந்து “உண்மையில் இத்தகைய பெரிய அவைகள்தான் பாரதவர்ஷத்தில் ஒருபோதும் போர் முடிவடையாமல் செய்கின்றன. இங்கிருக்கும் மேல்கீழ் அடுக்கில் ஒருமுறை வந்தமர்ந்தவர் பின் ஒவ்வொரு கணமும் அடுத்த அடுக்குக்கு நகர்வதைப்பற்றியே எண்ணிக்கொண்டிருப்பார். அதன்பொருட்டு சூழ்ச்சி செய்வார், போர்புரிவார், மணக்கூட்டுகள் அமைப்பார். ஒருபோதும் தான் இருந்த இடத்தில் அமையமுடியாது அவரால்” என்றான். பின்னர் பூரிசிரவஸிடம் “இளையவனே, தெரிந்தோ தெரியாமலோ இப்பெருஞ்சுழற்சியில் எங்களை மாட்டிவிட்டிருக்கிறாய். இனி பால்ஹிகர்களால் தங்கள் மலைநகருக்குள் வாழ்வில் நிறைந்து இருக்க இயலாது. இனி வென்றாக வேண்டும், அடைந்தாக வேண்டும், முன்சென்றாக வேண்டும்” என்றான். பூரிசிரவஸ் “அவ்வாறுதான் இங்குள்ள அனைத்துப் பேரரசுகளும் உருவாகின்றன, மூத்தவரே” என்றான். “ஆம், ஐம்பத்தாறு அரசுகள் உருவாயின. அவற்றில் எட்டு அரசுகள் பேரரசுகளாயின. அதற்காக எஞ்சியவை அழிந்து மண்ணோடு ஒட்டிக்கிடக்கின்றன. ஐம்பத்தாறாயிரம் சிற்றரசுகள் முற்றாக அழிந்திருக்கும்” என்று சலன் சொன்னான். பூரிசிரவஸ் மறுமொழி எதுவும் சொல்லாமல் தலையை மட்டும் அசைத்தான்.
சற்றுநேரம் கழித்து “பிதாமகர் எங்கிருக்கிறார்?” என்று சலன் கேட்டான். “யானைக்கொட்டடியில். அவர் வருகை இங்கு அறிவிக்கப்படும்போது அவையில் தோன்றுவார். அதற்கு சற்று முன்னர் அவரை அழைத்து வந்து அருகிருக்கும் அணியறையில் அமர்த்தி அரச ஆடைகள் புனைய ஆணையிட்டிருக்கிறேன். தன் மேல் அணிவிக்கப்படும் எதையும் அவர் அக்கணமே கழற்றிவிடுகிறார். அந்த இரும்புக்கவசமன்றி வேறெதுவும் அவருக்கு உவப்பதில்லை. கவச உடையில் அவையில் அவரை கொண்டுவருவது கேலிக்குரியது. அரச உடை அணிவித்த சில கணங்களிலேயே அவரை அவைக்குள் கொண்டுவருவது உகந்ததென்று தோன்றியது” என்றான். சலன் சிரித்து “பெரும் கேலிக்கூத்து. சூதர்கள்கூட இதற்கிணையான கேலிக்கூத்தை நிகழ்த்திவிட முடியாது” என்றான். பூரிசிரவஸ் நகைத்து “இதை அவைசூழ்தல் என்றும் போர் என்றும் சொல்கிறார்கள்” என்றான்.
பேரவை பெரும்பாலும் நிறைந்துவிட்டதென்பதை சற்றே உடல் தூக்கி தலை சுழற்றி நோக்கி பூரிசிரவஸ் புரிந்துகொண்டான். அவையின் முகப்பிலிருந்த சிறுவாயிலினூடாக கனகர் எட்டிப்பார்த்தார். பின்னர் அவரும் விதுரரும் கைகளை கூப்பியபடி அவைக்குள் நுழைந்தனர். விதுரர் நோயுற்று, மெலிந்து, அகவை மிக முதிர்ந்த தவமுனிவர் போலிருந்தார். கண்கள் குழிவிழுந்து உள்ளே செல்ல, வாய் வற்றியிருந்தமையால் பற்கள் உந்தி வெளிவந்திருக்க, கரிய சிற்றுடலுடன் அனைத்துப் பொலிவையும் இழந்து, அணிந்திருந்த அப்பட்டாடையும் அருங்கல் மணிமாலையும் இல்லையென்றால் எவரும் பட்டினியில் தவித்து அன்ன விடுதி நோக்கிவரும் எளிய சூதன் என்று எண்ணும்படி இருந்தார். நடக்கையில் சருகு காற்றிலென தத்தித் தத்தி எடையிலாது வந்தார். அவருக்கான பீடத்தில் அதன் கைப்பிடியைப் பற்றி மெல்ல நடுங்கியபடி குனிந்து அமர்ந்தார். இரு கைகளையும் நெஞ்சில் கூப்பி தலையைக் குனித்து தோள் தொய்ய அமர்ந்திருந்தார்.
கனகர் திரும்பிச் சென்று இணையமைச்சர்களிடமும் துணையமைச்சர்களிடமும் கைகளை வீசி ஆணைகளை விடுத்துக்கொண்டிருந்தார். தொலைவிலேயே தன் ஆணைகள் எதையுமே அவர் பின் தொடராததனால் அவையெதுவும் பொருட்படுத்தப்படவில்லையென்றும், அவர் பிற அமைச்சர்களால் ஒரு பெரிய தொல்லையென்றே பார்க்கப்படுகிறார் என்றும் தெரிந்தது. அவன் என்ணத்தை உணர்ந்ததுபோல் சலன் “நன்று, பாரதவர்ஷம் கண்ட பெரும்போருக்கு முதன்மை அமைச்சர் இப்படித்தான் இருக்க வேண்டும்” என்றான். சோமதத்தர் திரும்பி நோக்க சலன் “நான் நகையாடவில்லை. உச்சியிலிருப்பவன் எதையும் அறியாதவனாகவும் புரிந்துகொள்ள முடியாதவனாகவும் இருக்கையில் அவன் உள்ளம் நிலைபேறு கொண்டிருக்கிறது. புரிந்துகொள்ளத் தொடங்கினால் பேதலித்து அவனும் பித்தனாகிவிடுவான்” என்றான்.
கௌரவ நூற்றுவர்களும் அவர்களின் ஆயிரம் மைந்தர்களும் வணங்கியபடி வந்து தங்கள் பீடங்களில் அமர்ந்தனர். அவையின் ஒருபகுதி முழுக்க அவர்களே இருப்பதை எண்ணி பூரிசிரவஸ் மீண்டும் புன்னகைத்துக்கொண்டான். சலன் அவன் உள்ளத்தை அணுக்கமாகத் தொடர்ந்து வந்து “அவர்களே ஒரு சிறு படை போலிருக்கிறார்கள். இருள் உருகி வழிவதுபோல் அவர்கள் அவை நுழைவதாக முன்பு ஒரு பாடலில் சூதனொருவன் பாடியிருந்தான். எத்தனை பொருத்தம் என்று தோன்றுகிறது” என்றான். பூரிசிரவஸ் அவையை மீண்டும் விழியோட்டிப் பார்த்தான். காம்போஜத்தின் அரசன் சுதக்ஷிணன் சால்வருடன் குனிந்து ஏதோ பேசிக்கொண்டிருந்தான். “வத்ஸம் நமது பக்கம் சேரவில்லையா?” என்றான் சலன். “வத்ஸர்களும் மத்ஸ்யர்களும் பாண்டவர்களுடன் சென்றுவிட்டனர். இறுதிக்கணம் வரை முயன்றோம்” என்றான் பூரிசிரவஸ். “தராதர்களும் சகர்களும் யவனர்களும் பாண்டவர்களையே ஆதரிக்கிறார்கள்.” சோமதத்தர் “ஆம், அவர்கள் நிஷாதர்கள்” என்றார். பூரிசிரவஸ் “காம்போஜர்கள் அவர்களின் குலம் அல்லவா? சுதக்ஷிணர் பெரும்படையுடன் இங்கு வந்துள்ளாரே?” என்றான். சலன் நகைத்து “இளையோனே, ஷத்ரியநிலை என்பது பிற ஷத்ரியர்களால் வழங்கப்படுவது” என்றான்.
வெளியே பெருஞ்சங்கங்கள் முழங்கின. மங்கல இசை எழுந்து அலைகொண்டது. வாழ்த்தொலிகள் சூழ துரோணரும் கிருபரும் கைகளைக் கூப்பியபடி வந்து தங்கள் பீடத்தில் அமர்ந்தனர். சலன் அவனிடம் திரும்பி “இம்முறை குழப்பம் ஏதுமின்றி பிதாமகர் பீஷ்மரையே முதன்மை படைத்தலைவராக அமைத்துவிடப்போகிறார்கள் என்று கேள்விப்பட்டேன். ஆனால் அஸ்தினபுரியின் அவையில் சொற்பூசலின்றி எதுவும் நிறைவுறாதென்பது வரலாறு” என்றான். பூரிசிரவஸ் “ஆம், அவ்வாறு நிறைவேற வேண்டுமென்றால் பெரும்பூசலொன்று அதற்கு முன்னரே முடிந்திருக்கவேண்டும்” என்றான். “என்ன பூசல்?” என்று சலன் கேட்டான்.
பூரிசிரவஸ் ஒருகணம் தயங்கியபின் “மூத்தவரே, முதன்மை படைத்தலைவராக இருப்பதற்கு முதற்தகுதி கொண்டவர் அங்க நாட்டரசர் கர்ணன். அவர் கீழ் தாங்கள் படைகொள்ள மாட்டோம் என்று ஷத்ரியர்கள் அறிவித்துவிட்டமையால்தான் அவருக்கு நிகராக பீஷ்மரை நிறுத்துகிறார்கள். பிறிதெவரை நிறுத்தினாலும் அவர் கர்ணனுக்கு நிகரல்ல என்ற பேச்சு எழுந்துவிடும். பிதாமகரைக் குறித்துகூட அவ்வாறு ஒரு எண்ணம் பலருக்கு இருந்தாலும் முதியவர் என்பதனாலும் பிதாமகர் என்பதனாலும் அவையில் எவரும் அதை சொல்லப்போவதில்லை” என்றான். சலன் வெறுமனே பேசவிரும்புகிறான் என்று அவனுக்கு தோன்றியது.
“அதைவிடப் பெரியது அவர்களின் திட்டம், இளையோனே” என்றான் சலன். “அர்ஜுனன் தன் எதிரே பீஷ்மரை கண்டால் கைதளர்ந்து காண்டீபத்தை நழுவ விடுவார்.” பூரிசிரவஸும் பேச விரும்பினான். “அவர் இன்றிருக்கும் நிலை வேறு என்றனர். இளைய யாதவரின் கொள்கைக்கு முழுதளித்து உள்ளம் உறுதிகொண்டிருக்கிறார்” என்றான் பூரிசிரவஸ். “அவ்வண்ணமென்றால் அவர் பிதாமகரை கொல்லவேண்டும். அது அஸ்தினபுரியின் குடிகள் அனைவரையுமே அவர்கள்மேல் சினம்கொள்ளச் செய்யும். இந்நிலத்தை அவர்கள் ஒருபோதும் முழுதாளமுடியாது” என்றான் சலன். “களத்தில் எதிரே பிதாமகரை பார்ப்பதே பாண்டவப்படைகளை தளரச் செய்யும்” என்று அவன் தொடர பூரிசிரவஸ் “களத்தில் அவர்கள் பாஞ்சாலர்களையோ விராடர்களையோதான் முதனிலையில் அமைப்பார்கள்” என்றான்.
முரசொலிகளும் கொம்பொலிகளும் எழ விஸ்வசேனர் தொடர பீஷ்மர் கைகூப்பியபடி அவைக்குள் வந்து தன்னுடைய பீடத்தில் அமர்ந்தார். வழக்கம்போல மரவுரி ஆடையும் கழுத்தில் ஒற்றைச் சங்குமணியும் அணிந்திருந்தார். நீண்ட நரைத்த கூந்தலை தோல்பட்டையால் கட்டி முதுகில் தொங்கவிட்டிருந்தார். பெரும்பாலும் மயிர் உதிர்ந்து முதிய கொக்கின் சிறகு போலாகியிருந்த தாடி மார்பில் திரிகளாக விழுந்துகிடந்தது. நீண்ட மெலிந்த உடலை பீடத்தில் சரித்து மடித்தமர்ந்து இடக்காலைத் தூக்கி பீடத்தின்மேல் வைத்து தன் கால் விரல்களை கையால் நீவிவிடத் தொடங்கினார். சலன் “இந்த அவைக்கு அங்கர் வர வாய்ப்புண்டா?” என்றான். “இல்லை” என்றான் பூரிசிரவஸ். “வேள்வி முடிந்த சில நாட்களிலேயே கிளம்பி அங்க நாட்டுக்கு சென்றார். நேற்று தன் வேட்டைக்குழுவுடன் காட்டுக்குள் சென்றுவிட்டதாகவும் மறுமுறை அவரிடமிருந்து செய்தி வரும்வரை எங்கிருக்கிறார் என்பதையே கூறமுடியதென்றும் ஓலை வந்துள்ளது.” சலன் வெறுமனே தலையசைத்தான்.
மீண்டும் மங்கல இசை முழங்கியது. கொம்புகளும் முரசுகளும் பிளிறி ஆர்த்தன. வெள்ளிக்கோல் ஏந்திய நிமித்திகன் அவைக்குள் நுழைந்து அதை மும்முறை சுழற்றி தலைமேல் அசைத்தான். வாழ்த்தொலிகள் வெளியே முழங்கின. “அஸ்தினபுரியை ஆளும் அரசர், தார்த்தராஷ்டிரர், யயாதியின் கொடிவழி வந்தவர், பாரதவர்ஷத்தின் பேரரசர் துரியோதனர் அவை நுழைவு!” என்று நிமித்திகன் அறிவித்தான். அவையிலிருந்த மன்னர்களும் சிற்றரசர்களும் தங்கள் கைக்கோல்களைத் தூக்கி “அவை முதல்வர் வெல்க! அஸ்தினபுரியின் அரசர் வெல்க! வெற்றி சூழ்க!” என்று வாழ்த்தினர்.
மங்கலத் தாலங்களுடன் அணிச்சேடியரும் அவர்களுக்குப் பின்னால் ஐந்திசைக் கலங்களை முழக்கியபடி அவைச்சூதரும் இரண்டு நிரைகளாக உள்ளே நுழைந்து பிரிந்து அவையில் பரவினர். அஸ்தினபுரியின் அமுதகலக்கொடியுடன் முழுக்கவச உடையணிந்த படைவீரன் ஒருவன் உள்ளே நுழைந்து அதை அவை முன் பொருத்தியபின் தலைவணங்கி பின்நகர்ந்தான். துரியோதனன் அரச தோற்றத்தில் கைகளைக் கூப்பியபடி நடந்து வர அவனுக்கு வலப்பக்கம் துச்சாதனன் உடைவாள் ஏந்தி நடந்து வந்தான். பின்னால் இருந்து வெண்கொற்றக்குடை எழுந்து அவன் மேல் கவிழ்ந்து உலைய, அதன் முத்துச்சரங்கள் குலுங்கின. தொடர்ந்து வந்த படைத்தலைவர்களும் வாளேந்தியிருந்தனர்.
அவைக்குள் நுழைந்து பிதாமகரையும் ஆசிரியரையும் அவையையும் வணங்கி துரியோதனன் அரியணையில் சென்று அமர்ந்தான். அது அரசுசூழ் மேடையென்பதனால் இணையாக அரசிக்கு அரியணை போடப்பட்டிருக்கவில்லை. அவையின் வலப்பக்கம் பட்டுத்திரைக்கு அப்பால் அரசி பானுமதியும் துணையரசியர்களும் வந்தமர்வதை நிழலசைவென காணமுடிந்தது. பாற்கடலில் தெரியும் பாவைகள்போல என்று அத்தருணத்திற்கு முற்றிலும் பொருத்தமில்லாத ஓர் ஒப்புமை பூரிசிரவஸின் உள்ளத்தில் எழுந்தது. தன் உள்ளம் ஏன் அத்தனை எளிதாக அனைத்தையும் புன்னகை மட்டுமே கொண்டு பார்ப்பதாக மாறிவிட்டிருக்கிறதென்று அவனே வியந்துகொண்டான்.
மீண்டும் மங்கல இசையெழ துரியோதனன் அரியணையிலிருந்து எழுந்து கைகூப்பியபடி நின்றான். அஸ்தினபுரியின் அமுதகலக்கொடியுடன் ஒரு வீரன் முன்னால் வர சஞ்சயனும் யுயுத்ஸுவும் இருபுறத்திலும் தொடர திருதராஷ்டிரர் கைகூப்பியபடி அவைக்குள் நுழைந்தார். அவருக்குப் பின்னால் அவர் அணுக்கச்சேவகன் சங்குலன் தன் பேருடலுடன் நடந்து வந்தான். சலன் “இவன்தான் அந்த மாமல்லன் அல்லவா? பேருடலன், இவனைவிடப் பெரியவர் பால்ஹிகப் பிதாமகர் மட்டுமே” என்றான். யுயுத்ஸுவின் தோளைப் பற்றியபடி திருதராஷ்டிரர் தன் பீடத்தில் அமர்ந்தார். முனகலுடன் உடலை விரித்து கைகளை மார்மேல் கட்டிக்கொண்டு தலைகவிழ்ந்தார். அவருடைய தாடை இறுகி அசைவதையும் தோள்தசைகள் இழுபட்டு இழுபட்டு நெகிழ்வதையும் தொலைவிலேயே காண முடிந்தது, அவருடைய கரிய தோலுடல் ஒரு கூடாரமென, அதற்குள் ஒரு மல்லர் கூட்டம் போரிடுவதுபோல. இன்றென்ன ஒவ்வொரு எண்ணமும் விந்தையாக இருக்கிறதே என்று அதை புன்னகையுடன் தானே திரும்பி பார்த்துக்கொண்டான்.
அதன்பின்னர்தான் மறுபக்க வாயிலினூடாக சகுனியும் கணிகரும் வந்து அவையமர்ந்துவிட்டிருப்பதை பூரிசிரவஸ் கண்டான். சலனிடம் “அவர்கள் முன்னரே வந்துவிட்டார்களா?” என்றான். “ஆம், அரசர் அவையமர்ந்தபோதே அவர்கள் உள்ளே நுழைந்தனர்” என்று சலன் சொன்னான். பின்னர் “ஓசையின்றி, நரிகளைப்போல” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான். பூரிசிரவஸ் சினத்துடன் “சூதர்களின் பாடல்களை அரசர்கள் உளம் தொடரலாகாது, மூத்தவரே. இப்போரின் முதன்மை களஞ்சூழ்வோர் அவர்களே. மெய்யில், இப்போரென்பது அவர்கள் தங்கள் நாற்களத்தில் நிகழ்த்தும் காய் நகர்வன்றி பிறிதல்ல” என்றான். “அதைத்தான் நானும் சொன்னேன்” என்று சலன் திரும்பிப்பார்க்காமலேயே சொன்னான்.
பூரிசிரவஸ் சகுனியை பார்த்தான். அவர் உடலில் மெல்லிய நடுக்கு ஒன்றிருப்பதுபோல் தொலைவிலிருந்து பார்த்தபோது தோன்றியது. வாயில் எதையோ போட்டு மென்று கொண்டிருப்பதுபோல இருபுரியாகப் பிரிந்த மென்தாடி அசைந்தது. ஆனால் உதடுகளை பார்த்தபோது அவர் எதையும் மெல்வது போலவும் தெரியவில்லை. அவன் அங்கிருந்து கணிகரை பார்க்க முயன்றான். நிலத்தில் இடப்பட்ட மெத்தையில் ஒசிந்து படுத்திருந்த அவருடைய குடுமியின் ஒரு பகுதி மட்டுமே தெரிந்தது. பூரிசிரவஸ் சலனிடம் “இப்போரில் ஒவ்வொருவருக்கும் ஒரு கொள்பொருள் உள்ளது. சென்றடைய ஓர் இலக்கு, வென்று கொள்ள சில. எதன்பொருட்டுமன்றி போரின் பொருட்டே இப்போரில் இருப்பவர் கணிகர் ஒருவரே. தன் இயல்பாலேயே அவர் இப்போரை வழிநடத்துகிறார்” என்றான்.
வியப்புடன் மூச்செறிந்தபடி நிமிர்ந்து அமர்ந்து “இதுவரை எனக்கு இது தோன்றவில்லை. இந்த அவையில் அமர்ந்து அவரை நோக்கிக்கொண்டிருக்கையில் நெடுங்காலமாக ஒவ்வொரு சொல்லாக அவர் இப்போரை நோக்கி அனைவரையும் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார் என்று தோன்றுகிறது” என்றான். “அவரை முதலில் கண்டு, அவர் சொன்ன முதற்சொல்லை செவிகொண்டபோதே நான் அதை உணர்ந்தேன்” என்று சலன் சொன்னான். பூரிசிரவஸ் திரும்பி அவனை பார்த்துவிட்டு அது மெய்யென்று உணர்ந்தான். தன்னையும் ஓர் அரசுசூழ்கையாளனாக எண்ணிக்கொண்டிருப்பதனால் தன்னால் பலவற்றை உணரமுடியாமல் போயிருக்கிறது. இவை அனைத்தையும் தன்னால் மாற்றி அமைத்துவிட முடியும் என்ற எண்ணத்தால் கணிகரை குறைத்து மதிப்பிட்டிருக்கலாம். ஒருகணம் அங்கிருப்பவர்களில் முற்றிலும் அறிவற்றவன் தான்தானோ என்ற எண்ணம் அவனுக்கு ஏற்பட்டது. ஆனால் அது மீண்டும் மெல்லிய புன்னகையைத்தான் உருவாக்கியது.
அரசமுறைச் சடங்குகள் நிகழ்ந்துகொண்டிருந்தன. வைதிகர் மேடையேறி கங்கை நீர் தெளித்து அரிமலர் தூவி வேதமோதி துரியோதனனை வாழ்த்தினர். தொடர்ந்து அஸ்தினபுரியின் மூத்த குடிகள் மேடையிலேறி யயாதியின் மணிமுடியை அவனுக்கு சூட்டினர். உடைவாளையும் செங்கோலையும் அளித்தனர். அரச அணிக்கோலத்தில் அவன் வீற்றிருந்தபோது மங்கல இசையும் முழவுகளும் முரசுகளும் முழங்கின. அவை அவனை வாழ்த்தி குரலெழுப்பியது. அவையிலிருந்து அரிமலர் எழுந்து அவன் மேல் பொழிந்தது. கைகூப்பி அவ்வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்ட பின் அவன் செங்கோலையும் மணிமுடியையும் உடைவாளையும் மறுபக்கம் நின்றிருந்த அணிச்சேவகனிடம் அளித்தான். இயல்பாக கால்களை நீட்டி கைகளை கைப்பிடியில் வைத்து அரியணையில் நிமிர்ந்தமர்ந்தான்.
கனகர் முரசுத்தாளத்தை வழிநடத்துபவர்போல கைகளை வீசி வீசி ஆணையிட்டுக் கொண்டிருக்க நிமித்திகன் விழிகளால் அவரை சந்தித்து ஆணை பெற்று தன் வெள்ளிக்கோலுடன் அறிவிப்பு மேடைமேல் ஏறினான். கொம்பு மும்முறை பிளிறி அமைந்ததும் அவை அமைதியடைந்தது. நிமித்திகன் தன் கோலை இருமுறை வீசி தலைக்கு மேல் தூக்கி “வெற்றி நிகழ்க! வளம் நிறைக! அறம் வெல்க! மூதாதையர் அருள்க! தெய்வங்கள் கனிக! ஆம், அவ்வாறே ஆகுக!” என்று உரத்த குரலில் கூவினான். பின்னர் அவையைச் சூழ்ந்த மணிக்குரலில் அஸ்தினபுரியின் குடிவரிசையை சொன்னான்.
“விஷ்ணுவிலிருந்து பிறந்த குலத்தை வாழ்த்துக! பிரம்மன் அத்ரியில் பெற்ற சந்திர குலத்தை வாழ்த்துக! புதன், புரூரவஸ், ஆயுஸ், நகுஷன், யயாதி, புரு, ஜனமேஜயன், பிராசீனவான், பிரவீரன், நமஸ்யூ, வீதபயன், சுண்டு, பஹுவிதன், ஸம்யாதி, ரஹோவாதி, ரௌத்ராஸ்வன், மதிநாரன், சந்துரோதன், துஷ்யந்தன், பரதன், சுஹோத்ரன், சுஹோதா, கலன், கர்த்தன், சுகேது, பிருஹத்ஷத்ரன், ஹஸ்தி, அஜமீடன், ருக்ஷன், சம்வரணன், குரு என நீளும் பெருமைமிக்க கொடிவழியை வாழ்த்துக! குருகுலத்தோன் துரியோதனன் புகழ் வெல்க! குலமூதாதை குருவின் குருதியில் எழுந்த ஜஹ்னு, சுரதன், விடூரதன், சார்வபௌமன், ஜயத்சேனன், ரவ்யயன், பாவுகன், சக்ரோத்ததன், தேவாதிதி, ருக்ஷன், பீமன், பிரதீபன், சந்தனு என தொடரும் குருதிவழியில் வந்த விசித்திரவீரியனை, அவர் பெற்ற திருதராஷ்டிரரை வணங்குவோம்.” பூரிசிரவஸ் திருதராஷ்டிரர் தலையை அசைத்தபடி எழப்போவதுபோல ஓர் அசைவை கொண்டதை கண்டான். பின்னர் அவர் கண்களை தன் கைகளால் பொத்தி விழிநீரை ஒற்றலானார்.
“அவையோரே, இங்கு அவையமர்ந்திருக்கும் அஸ்தினபுரியின் அரசர் தார்த்தராஷ்டிரரான துரியோதனர். குருவின் முடிசூடி ஹஸ்தியின் தோள்கொண்டு அரியணை கொண்டவர். பாரதவர்ஷத்தை மும்முடி சூடி முழுதாளவிருக்கும் பேரரசர் துரியோதனரின் ஆணையின்படி அவரை வாழ்த்தி இங்கமர்ந்திருக்கும் பிதாமகர் பீஷ்மருக்கும், அவருக்கு அருளுரை கூறி ஆற்றுப்படுத்தும் ஆசிரியர்களுக்கும், அவருக்கு படைத்துணையென திரண்டிருக்கும் அரசர்களுக்கும், அவருடைய பெருகிய நூறு தோள்களென செறிந்திருக்கும் உடன்பிறந்தோர்க்கும் இந்த அவையின் வணக்கம் தெரிவிக்கப்படுகிறது” என்று நிமித்திகன் சொன்னான்.
“இந்த அவை அஸ்தினபுரியின்மீது நம் அரசருக்கு இருக்கும் குலமுறை உரிமையும் கோலுரிமையும் கொடிக்கோள் உரிமையும் வாளுரிமையும் வழுவாது நிலைகொள்ளவேண்டும் என்று வலியுறுத்தும்பொருட்டு அமைந்தது. அவ்வுரிமையை மறுத்து குலநெறி மீறியும் அறநெறி மீறியும் ஷத்ரிய குடிக்குரிய வாள்நெறி மீறியும் உரிமை கொண்டாடும் பாண்டுவின் மைந்தர்களுக்கெதிராக இங்கே போர் அறிவிப்பு நிகழவிருக்கிறது. முதன்மை படைத்தலைவர்களும் பிற படைகளின் தலைவர்களும் முறையாக அறிவிக்கப்படுவார்கள். அறிவிக்கப்பட்ட அக்கணத்திலிருந்து இறுதி வெற்றி வரைக்கும் ஒருகணமும் ஓயாத போர் தொடங்குகிறது. நம்முள் வாழ சொல்மகளும் நம்மை காக்க கொற்றவையும் நமக்கு அருள திருமகளும் காத்திருக்கின்றனர்.”
அவை வாள்களையும் கைக்கோல்களையும் தூக்கி “வெற்றிவேல்! வீரவேல்! வெல்க குருகுலம்! வெல்க ஷத்ரியப் பெருங்குலம்! போர்! எழுக போர்!” என்று முழங்கியது. மீண்டும் கொம்பொலி எழுந்து அவை அடங்கியதும் நிமித்திகன் “இந்த அவை குலநெறி சார்ந்ததென்பதற்கு சான்று இங்கே குருகுலத்துக் குருதியின் மூத்தவரான பீஷ்ம பிதாமகர் அமர்ந்திருப்பதே. அவரே தன் கைகளால் அஸ்தினபுரியின் அரசருக்கு மணிமுடி சூட்டியவருமாவார். ஆனால் பெரும்பாலானோர் அறிந்திருக்காத ஒன்றுண்டு. அஸ்தினபுரியின் அரசக் குருதியில் இன்றிருப்பவர்களில் மூத்தவர் பிறிதொருவர்” என்றான்.
அவையில் வியப்பொலி எழுந்தது. அது அடங்க காத்திருந்த நிமித்திகன் சொன்னான். “பிரதீபருக்கு சிபிநாட்டரசி சுனந்தையில் பிறந்த மைந்தரும், தேவாபிக்கும் சந்தனுவுக்கும் இளையவருமான பால்ஹிகர் இன்றும் உயிருடன் இருக்கிறார். அவருடைய மூத்தவர் தேவாபி துறவு பூண்டு விண்புகுந்தார். சந்துனு நாடாண்டு நிறைவடைந்தார். சந்துனுவின் கொடிவழியில் விசித்திரவீரியரும் திருதராஷ்டிரரும் தோன்றினர். நமது அரசர் அலைகடலில் கதிரவனென எழுந்து இங்கு அரியணை அமர்ந்திருக்கிறார். அரசகுடியினரே, அன்று தன் தமையன் காடேகிய பின்னர் தான் பிறந்த சிபிநாட்டுக்குச் சென்ற பால்ஹிகர் அங்கிருந்து பால்ஹிகபுரிக்கும் பிறகு அங்கிருந்து கந்தர்வர்களும் கின்னரரும் வாழும் வெண்மலைமுடிகளுக்கும் சென்றார். அங்கு காலமிலாவெளியில் நூறாண்டு வாழ்ந்தார். இப்போது அவருக்கு நூற்றெழுபத்திரண்டு அகவை ஆகிறது. தன் கொடிவழிவந்த மைந்தனின் முடியுரிமையை வலியுறுத்தும்பொருட்டு மீண்டும் நிலமிறங்கி வந்திருக்கிறார். அவர் இந்த அவை புகுந்து அரசரை வாழ்த்துவார். இங்கிருக்கும் அனைவருக்கும் தந்தையென அமர்ந்து அருள்புரிவார்.”
“அவையோர் அறிக, அஸ்தினபுரியின் அரியணை எவருக்குரியதென்பதற்கு இனி மறுசொல்லொன்று தேவையில்லை. குலநெறிப்படியும்கூட வாழ்பவரில் மூத்தவர் எவரோ அவருக்கே மணிமுடி உரிமைப்பட்டது. தேவாபியும் பின்னர் சந்துனுவும் மறைந்த பின்னர் உயிருடன் வாழும் பால்ஹிகரே அந்த மணிமுடிக்குரியவர். சந்தனுவின் இறப்புக்குப் பின் இயல்பாகவே அது பால்ஹிகருக்கே சென்றடையவேண்டும். அவர் இங்கில்லாததனால் அவர் அதை விட்டுக்கொடுத்தார் என்றுதான் குலநெறி பொருள்கொள்ளும். அவரிடமிருந்து விசித்திரவீரியருக்கும் திருதராஷ்டிரருக்கும் பின்னர் பாண்டுவுக்கும் கையளிக்கப்பட்டு இன்று நம் அரசரால் சூடப்பட்டுள்ள அம்மணிமுடிக்கு மெய்யான உரிமையாளர் பால்ஹிகரே. அவரே இன்று இந்த அவைக்கு வந்து தன் சிறுமைந்தர் சூடியிருக்கும் மணிமுடியை குருகுலத்தின் குலநெறிப்படியும் ஷத்ரிய மரபின்படியும் வேதம் வகுத்த முறைமையின்படியும் உறுதி செய்வார். அரசரின் பொருட்டு தான் வாளேந்தி துணை நிற்பதாக சொல்லளிப்பார். தெய்வம் விண்ணிறங்கி வந்து தன் சொல்லை நேரடியாக அளிப்பதற்கு நிகர் அது. அருள்க தெய்வங்கள்!”
அவை தங்கள் கைக்கோல்களையும் படைக்கலங்களையும் தூக்கி வாழ்த்து கூவியது. அலையலையென எழுந்து எழுந்து அடங்கிக்கொண்டிருந்த அந்த வாழ்த்தொலியை தலைதிருப்பி நோக்கிக்கொண்டு திகைத்து அமர்ந்திருந்தான் பூரிசிரவஸ். சலன் அவனைத் தொட்டு “பிதாமகரை அவை புகச்சொல்” என்றான். “ஆம், ஆம்” என்று அவன் எழுந்து பீடங்களின் நிரையில் குனிந்து விரைந்து அவையின் விளிம்பை அடைந்து சிறுவாயிலினூடாக வெளியே சென்றான்.