புதிய எழுத்துக்கள்

maxresdefault

இலக்கியத்துறையில் மாற்றங்கள்- உரை

அன்புள்ள ஜெ

19-ஜுன்-18  ‘இலக்கியத் துறையில் மாற்றங்கள்’ விழா அருமையாக இருந்தது. விஜயா வேலாயுதம் அவர்கள் இன்றும் தன்னைப்பற்றி பேச மறுக்கிறார், இலக்கியத்தையும் வாசிப்பையும் மட்டுமே முன்வைக்கிறார். அவருக்கு வணக்கங்கள். விழாவை நடத்தி அவரை கவுரவித்த கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தினரும் நன்றிக்குரியவர்கள்.

உங்கள் உரை வழக்கம்போல ஒரு tour de force. ஒரு விமர்சகராக ஒவ்வொரு முறையும் புதிய திறப்பு ஒன்றை அளிக்கிறீர்கள். நீங்கள் இம்முறை சுட்டிக்காட்டிய வேறுபாடு – அதாவது ‘நவீன இலக்கியத்தில் சமூக மாற்ற நோக்கங்கள் இருக்கும், மரபிலக்கியத்தில் இருக்காது’ என்பது – நீங்களே முன்னர் சொன்னதில்லை என்று நினைக்கிறேன், நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் நூலில் கூட இப்படி கூர்மையாக வெளிப்படவில்லை.

என்னைப் பொறுத்தவரையில் இன்னொரு புதிய அம்சம் என்பது, உங்கள் நூல்களை இவ்வளவு தெளிவாக தமிழ் இலக்கிய பின்புலத்தில் வைத்துபார்க்கும் அணுகுமுறை ஒன்றை நேரடியாக பேசியதில்லை. உங்கள் கட்டுரைகள் பலவும் மற்ற எழுத்தாளர்களின் வடிவம் உள்ளடக்கம் போன்றவற்றை அலசியுள்ளன, ஆனால் உங்கள் எழுத்துக்களை வகுக்கும் பணியை மற்றவர்களுக்கே விட்டுள்ளன. இம்முறை சற்று துல்லியமாக கோடுகள் போட்டிருக்கிறீர்கள். (இதில் போஸ்ட் மாடர்னிசம் என்ற சொல் இடம்பெறாததையும் சேர்த்துக்கொள்ளலாம்)

இந்த உரை தமிழ்ச்சூழலில் ஒரு தொடர்விவதத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கலாம். இப்போதைக்கு உங்களிடமே மூன்று கேள்விகள்:

௧) உங்கள் உரையில் ‘கடந்த இருபது வருடங்களில்’ என்று பேசிய அம்சங்கள் பெரும்பாலும் உங்கள் எழுத்துக்களை மட்டுமே பிரதிபலிப்பது போல இருந்தது. எஸ்ரா கோணங்கி தவிர வேறு யாரெல்லாம் இந்த அலையின் முன்னணியில் இருப்பவர்கள் என்று கருதுகிறீர்கள் ?

௧) இன்றைய தமிழ் இலக்கியத்துறையில் இந்த விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும் விமர்சகர்கள் வேறு யார் ?

௨) இந்திய அளவில் இவற்றைப் பேசும் விமர்சகர்கள் யார் ?

நன்றி

மதுசூதனன் சம்பத்

***

அன்புள்ள மது

மிக எளிதாக அடுத்ததாக ஒரு இலக்கியப் பட்டியலுக்குச் சென்றிருக்க முடியும். அது உரையின் ஒருமையைப் பாதிக்கும். ஆகவே பொதுப்போக்கைப் புரிந்து கொள்வதற்கான முன்வரைவை மட்டுமே அளித்துவிட்டு நின்றுவிட்டேன். அதை வாசகர்களே சென்றடையலாம், மதிப்பிடலாம் என்று

நான் சொன்ன அந்தப் பொதுக்கூறுகள் தமிழில் நான் எழுதும் படைப்புகளில் மட்டும் அல்ல. கோணங்கி தானியங்கி எழுத்துமுறையில் மாற்றுவரலாறு, உன்னதம் என்றே முயல்கிறார். எஸ்.ராமகிருஷ்ணன் நெடுங்குருதி, யாமம் முதலியவற்றில் எழுதியது மாற்றுவரலாறையே. சாரு நிவேதிதா தன்வரலாற்றுக்கும் புனைவுக்கும் நடுவே உருவாக்கும் ஊடாட்டம் ஓர் உதாரணம். ஒன்றுக்குள் ஒன்றென கதைகளைப் புகுதி யுவன் சந்திரசேகர், பா.வெங்கடேசன் எழுதுவதும் சரி, இரா முருகன் எழுதும் மாயமும் பகடியும் கலந்த நுண்வரலாற்றுச் சித்தரிப்பும்சரி இந்த வகையான எழுத்துக்களே.

மலையாளத்தில் டி.டி.ராமகிருஷ்ணன், மனோஜ் குறூர், சுபாஷ் சந்திரன் போன்றவர்கள் மாற்று வரலாற்று எழுத்தின் வெவ்வேறு பாணிகளை முயல்பவர்கள். ஆர்.உண்ணி, கே.ஆர்.மீரா என நுண்ணிய அளவில் பன்முகம் கொண்ட எழுத்துக்களை உருவாக்குபவர்களின் ஒரு பட்டியல் உண்டு அங்கே.

கன்னடத்தில் தேவனூரு மகாதேவா இவ்வாறான ஒரு புதிய அலை எழுத்தின் தொடக்கம். தலித் இலக்கியம் என்றால் யதார்த்தவாதம் என்பதை கடந்தவர். தலித்துக்களின் தனிமொழி, தனி வரலாறு ஆகியவற்றை இலக்கியத்துக்குள் கொண்டுவந்தவர். அவர் மரபை முன்னெடுக்கும் சில படைப்பாளிகள் மலையாளம் வழியாக அறியப்பட்டுள்ளனர்.

இந்தி, வங்கம் போன்ற மொழிகளிலும் இவ்வாறு ஒரு பட்டியலை நம்மால் போடமுடியும். என்ன பிரச்சினை என்றால் அந்த மொழிகளில் உண்மையிலேயே எழுதுபவர்கள் ஆங்கிலம் வழியாக அறியப்படுவதில்லை. ஆங்கிலம் வழியாக அறியப்படுபவர்கள் பெரும்பாலும் மேலோட்டமான ‘சமூகமுற்போக்கு’ எழுத்தாளர்கள். மராட்டி மொழியில் சமீபத்தில் மிகமுக்கியமான முயற்சிகள் நிகழ்வதாக அறிந்தேன். ஆனால் நமக்கு வாசல்கள் மூடப்பட்டுள்ளன. நம்மையும் அவர்கள் அறியமுடியாது. பெருமாள்முருகன் வழியாகவே அவர்கள் நம்மை மதிப்பிடுவார்கள்

இந்திய அளவில் ஆங்கிலத்தில்  பேசியவர்களே நாம் அறிந்தவர்கள். உதாரணமாக மலையாளத்தில் அறிந்த பெயர் கே.சச்சிதானந்தன். அவருக்கு அங்குள்ள சூழலில் பெரிய இடம் இல்லை. கல்பற்றா நாராயணனோ, டி.பி.ராஜீவனோ உருவாக்கும் செல்வாக்கு இல்லை. இதையே நாம் மற்றமொழிகளுக்கும் போட்டுப் பார்க்கவேண்டும். பொதுவாக கன்னடத்தில் மறைந்த டி.ஆர். நாகராஜ், குஜராத்தியில் ஜி.என்.டெவி, இந்தியில் மகரந்த் பரஞ்பே  போன்ற சிலபெயர்கள் நினைவிலெழுகின்றன. ஆனால் அவர்களெல்லாம் சச்சிதானந்தன்களே. இந்தியாவில் ஆங்கிலம் காட்டும் இலக்கியச் சித்திரம் முற்றிலும் இன்னொன்று. ஆர்ப்பாட்டமானது, போலி முற்போக்குத்தன்மை கொண்டது, செயற்கையானது, மேலோட்டமானது.

ஜெ

இலக்கியத்தில் மாற்றங்கள் – கடிதம்

இலக்கியத்தில் மாற்றங்கள் -கடிதம்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 27
அடுத்த கட்டுரைஅலைதலும் எழுத்தும்- அனோஜன் பாலகிருஷ்ணன்