கே.எஸ்.ராஜா -கடிதங்கள்

imageproxy

இலங்கை வானொலி- கே.எஸ்.ராஜா

அன்புள்ள ஜெ

 

கே எஸ் ராஜா ரசிகன் என்ற முறையில்  அவர் குறித்த கடிதமும் உங்கள் பதிலும மகிழ்ச்சி அளித்தன..  எனககெல்லாம் அவர் குரல் ஏதோ போன ஜென்மத்து நினைவு போல மனதின் வெகு ஆழத்தில் உள்ளது.

 

.கடிதம் எழுதிய நண்பர் கிருஷ்ணன் , கேஎஸ் ராஜா இனக்கலவரத்தில் கொல்லப்பட்டதாக எழுதியிருந்தார்..  உண்மையில் அவர் கொல்லப்பட்டது இன யுத்தத்தில் அல்ல  சகோதர யுத்தத்தில்..

 

அவரைப்பிடித்து வைத்திருந்த அவரது எதிர்தரப்பு போராளி குழு ( அநேகமாக விடுதலைப்புலிகள் ) அவர் சார்ந்த குழு சரணடைய வேண்டும் என அவர் அந்த குழுவின் வானொலியில் பேச வேண்டும் என வற்புறுததி சித்திரவதை செய்தது…   அவரது புகழ் பெற்ற குரல் கடைசியாக ஒரு மரண வாசலில் எதிரகளின் வானொலியில் தான் பேச விரும்பாத ஒன்றை பேசி  ஒலிக்க நேர்ந்தது வரலாற்று அபத்தங்களில் ஒன்று..   அவரை கொன்றது புலிகள்தான் என அப்போது பேசப்பட்டது…   ஆனால் சக இயக்கமே கொன்றது   சொந்த பிரச்சனைகளால் கொல்லப்பட்டார் வலுவற்ற பிற இயக்கங்களால் கொல்லப்பட்டார் என்றெல்லாம் வரலாறு திரிக்கப்பட்டு கடைசியில் சிங்களர்களால் கொல்லப்பட்டார் என்பது வரை வரலாறு குழப்பப்பட்டு விட்டது
உண்மை ஒருபோதும் தெரியப்போவதில்லை…  வரலாறு என்பது ஒரு குப்பை என ஹென்றி ஃபோர்டு சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது

 

ராஜாஜி குலக்கல்வியைக் கொண்டுவந்தார், ஆரம்பப் பள்ளிகளை மூடினார் என்பது போன்ற அப்பட்டமான பொய்கள் இன்றுகிட்டத்தட்ட ஒரு வரலாறாகவே நிலைபெற்று இருக்கின்றன

 

உங்களுக்கு சமூக ஊடகங்களின் மீது நம்பிக்கை கிடையாது.. ஆனால் இன்றைய சூழலில் இப்படி எல்லாம் திரித்தல் வேலைகள் செய்ய முடியாதல்லவா.   சமூக ஊடகங்களில் சில திரித்தல்கள் நடந்தாலும் உண்மையின் குரலும் பதிவாக வாய்ப்பு கிடைக்கிறது அல்லவா.

 

அன்புடன்

பிச்சைக்காரன

அன்புள்ள ஜெ

கே எஸ்.ராஜா பற்றிய குறிப்பு உள்ளத்தைத் தொடும்படி அமைந்திருந்தது. நீங்கள் சொன்னதுதான் அது ஒரு பொற்காலம். ஒவ்வொரு கலையும் ஒரு குறிப்பிட்ட ஃபேக்கல்டியை முன்னிறுத்துகிறது. வானொலி குரலை முன்னிறுத்தியது. அதற்கு முன்பு எழுத்துக்கள் மட்டும்தான் தொடர்புறுத்துவதற்கானவை. குரல் தனிப்பட்டமுறையில் சிலர் கேட்பதற்குரியது. ஒலிப்பெருக்கி வந்த போதுதான் குரல் முக்கியமானதாக ஆகியது. ஆனால் வானொலி முழுக்கமுழுக்க குரலுக்கான ஊடகம். டிவி எண்பதுகளில் வந்தது. அதன்பின் காட்சி முக்கியமாகியது. இன்றைக்கு குரல் காட்சிக்கு ஒரு தேவையற்ற சேர்ப்பு மட்டும்தான். ஐம்பதுகள் முதல் இருபத்தைந்தாண்டுகள்தான் குரலின் பொற்காலம் உலகம் முழுக்கவே பெரிய வானொலி அறிவிப்பாளர்கள் உருவாகி வந்தனர் Graham McNamee, Del Moore போன்ற பலர் உலகையே கைக்குள் வைத்திருந்த காலம் உண்டு. இன்றைக்கு அது இல்லை. குரலின் பொற்காலம் இல்லாமலாகிவிட்டது. ராஜா அந்த பொற்காலத்தைச் சேர்ந்தவர். தமிழின் குரலின் பொற்காலத்தில் அவர்தான் ராஜா

சத்யமூர்த்தி

முந்தைய கட்டுரைஇலுமினாட்டி -கடிதங்கள்
அடுத்த கட்டுரைமழைத்துளிகள் நடுவே நாகம்