அந்த கதாநாயகி

Maragatham (1)

‘கருங்குயில் குன்றத்துக்கொலை’ என்றால் பெரும்பாலானவர்களுக்கு நினைவுக்கு வராது. சிவாஜியும் பத்மினியும் நடித்த மரகதம் என்னும் சினிமா என்றால் நினைவுவரக்கூடும். அந்த சினிமாவின் முழுத்தலைப்பு மரகதம் அல்லது கருங்குயில்குன்றத்துக் கொலைதான். அக்காலத்தில் மிகப்பிரபலமான நாவல் அது. டி.எஸ்.துரைசாமி அவர்களால் எழுதப்பட்டது. அதை ஒட்டி திரைக்கதை எழுதியவர் எஸ்.பாலசந்தர். ‘குங்குமப்பூவே கொஞ்சும் புறாவே’ பாடல் இந்தப்படத்திலுள்ளதுதான்.

ஒரு நாவலை எப்படி சுவாரசியமான திரைக்கதையாக ஆக்கவேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாகச் சுட்டிக்காட்டவேண்டிய சினிமா மரகதம். பக்‌ஷிராஜா ஸ்டுடியோ சார்பில் ஸ்ரீராமுலு நாயுடு இயக்கிய இது அக்காலத்தில் ஒரு வெற்றிப்படம். அக்காலத்தில் தயாரிப்பாளரே இயக்குநர் என பெயர் போட்டுக்கொள்வதுண்டு, உண்மையான இயக்குநர் எஸ்.பாலசந்தர்தான்.

எஸ்.பாலசந்தர்தான் சிவாஜியை வைத்து அந்தநாள் என்னும் முக்கியமான படத்தை இயக்கியவர். பாடல்கள் இல்லாத படம் என்று அதை அடிக்கடி போட்டிக்கேள்விகளில் சொல்வார்கள். எம்டன் என்னும் நீர்மூழ்கிக்கப்பல் சென்னைமேல் குண்டு வீசிய ஒரு நாள் இரவில் நடந்த கொலையை மையமாக்கியது அந்த துப்பறியும் சினிமா. இன்றுகூட அத்தனை நேர்த்தியாக குற்றப்புலனாய்வுப்படங்கள் எடுக்கப்படுவதில்லை. எஸ்.பாலசந்தர் சினிமாவிலிருந்து ஒதுங்கி வீணைக்கலைஞராக ஆனார். வீணை எஸ் பாலசந்தர் என பின்னாளில் புகழ்பெற்றார்.

கதை நடப்பது கருங்குயில் குன்றம் என்னும் சிறிய ஜமீனில். அக்காலத்தைய சிற்றரசு. அந்த நாட்டின் மன்னனாக இருந்த அனந்தரன்  என்ற மாரமார்த்தாண்டபிரபுவுக்கும் அவன் தமையனுக்கும் ஒரு பூசல். ஜமீனை பிரித்துத் தராவிட்டால் கொன்றுவிடுவேன் என தம்பி அண்ணனை மிரட்டுகிறான். மறுநாள் காலையில் அண்ணன் இறந்துகிடக்க தம்பிமேல் கொலைப்பழி விழுகிறது.

பிரிட்டிஷாரிடம் சிறைப்பட்ட அவன் அங்கிருந்து தப்பி ஆப்ரிக்கா செல்கிறான். அங்கிருந்து மாறுவேடத்தில்  கருங்குயில்குன்றத்துக்கே திரும்பிவருகிறான். அங்கே  தன் மனைவி இன்னொருவனை மணக்கப்போவதாக அறிகிறான். மனம் உடைந்த அவன் அரண்மனைக்குள் புகுந்து தன் மகளை தன்னுடன் எடுத்துக்கொண்டு இலங்கைக்குச் சென்று அங்கே  ரகசிய வாழ்க்கை வாழ்கிறான். அவனது மகள்தான் அலமு, கதாநாயகி.

இலங்கைக்கு அரசாங்கவிஷயமாக பயணம்செய்யும் ராஜகிரியின் இளம் ஜமீன்தார் அங்கே கொடுமை செய்துவரும்  விக்கிரமசிங்கன் என்ற கொள்ளைக்காரனால் பிணைக்கைதியாக பிடிக்கப்படுகிறார். அலமு முன்னர் விக்ரமசிங்கனுக்கு ஒரு பெரிய உதவிசெய்தவள். அப்போது நீ என்னகேட்டாலும் தருவேன் என விக்ரமசிங்கன் அவளுக்கு வாக்கு கொடுத்திருந்தான். அவனுக்கு அலமு மேல் ஒரு மையல்.  இளவரசன் மீது பரிதாபம் கொண்ட அலமு விக்ரமசிங்கனிடம் பேசி அவனை  காப்பாற்றுகிறாள்

கொள்ளையர்களால் காயமடைந்த ராஜகிரி ஜமீன்தாரை அலமு தன் இடத்தில் வைத்து மருத்துவம்  உடல்நலத்தை தேற்றுகிறாள்.இளம் ஜமீன்தார் அவளைப்போல துணிச்சலான திமிரான போர்க்கலை தெரிந்த பெண்ணை அதற்கு முன் பார்த்ததே இல்லை. அவன் அவள்மேல் மையல் கொள்கிறான். அவளும் அவனை விரும்புகிறாள். ஆனால் அதை அலமுவின் தந்தை அனந்தரன் கடுமையாக விலக்குகிறார். எக்காரணம்கொண்டும் அவனை மணக்கக்கூடாது என்கிறார்.

அலமு அதற்கு என்ன காரணம் என்று கேட்கிறாள். அனந்தரன் அப்போதுதான் தன் பழையகதையைச் சொல்கிறார். அலமு இளவரசனை மனக்கவிருப்பதை அறிந்த கொள்ளையனாகிய விக்ரமசிங்கன் அவர்களை தாக்கவே அவர்கள் அவனிடமிருந்து தப்பி  கொழும்புவுக்கு வந்துசேர்கிறார்கள். அங்கே அவள் தந்தையிடமிருந்து பிரிய நேர்கிறது

தந்தையின் பழியை நீக்க சபதம் எடுத்த அலமு கப்பலில் ஏறி இந்தியாவந்து தன் தாயின் ஊரான அருங்கிளிபுரத்துக்கு வருகிறாள். அங்கே அவளை எவரும் அடையாளம் கண்டுகொள்வதில்லை. அவள் அங்கிருந்து ஒரு சீமாட்டியாக வேடமிட்டு கருங்குயில்குன்றதுக்கு வருகிறாள். அங்கே தன் தாயிடமே பணிப்பெண்ணாகச் சேர்ந்து மெல்லமெல்ல துப்பறிந்து குற்றவாளிகளை கண்டுபிடிக்கிறாள்.

உண்மையில் அவள் அன்னைமறுமணம் செய்துகொள்ளவில்லை. அது அவள் தந்தைமேல் பழிசுமத்தி அவரை நாடுகடத்திவிட்டு அரசைக்கைப்பற்றிய வில்லன் செய்த சதி.காதலன் உதவியுடன் குற்றவாளிகளை தண்டித்தபின் அவள் அரசியாகிறாள். ராஜகிரி ஜமீன்தாராகிய காதலனையும் மணக்கிறாள். இதுவே இந்நாவலின் கதை.

கதைச்சுருக்கத்தை வாசிக்கும்போதே சுத்தமாக மண்மணமே இல்லை எனத்தெரியும். ஏனென்றால் இது ஆசிரியரின் சொந்தக்கற்பனை அல்ல, வால்டர் ஸ்காட்டின் நாவல் ஒன்றின் தழுவல். 1926ல் வெளியானது இந்நாவல். அன்று அங்கில நாவல்களை தமிழில் தழுவி எழுதுவது மிகப்பெரிய அலை. கல்கியின் பொன்னியின்செல்வன்கூட அலக்ஸாண்டர் டூமாவின் Three musketeers  மற்றும் Man in the iron mask , Prisoner of Zenda போன்ற நாவல்களின் தழுவல்தான்.

1869 ல் கும்பகோணத்தில் பிறந்த டி.எஸ்.துரைசாமி அவர்கள் சிறிதுகாலம் ஆங்கில அரசின்கீழ் வேலைபார்த்துவிட்டு அதை உதறிவிட்டார். ஆங்கிலக் கல்விபெற்றவரானதனால் ஆங்கில புனைகதைகளை ஒட்டி தமிழில் புனைகதைகள் எழுதும் ஆர்வம் கொண்டார். ‘கருங்குயில் குன்றத்துக்கொலை’ யை அவர் 1912 ல்  பாண்டிச்சேரியிலிருந்து வெளிவந்த ‘சர்வவியாபி’ என்ற இதழில் வெளியிட்டார். 1926ல் இந்நாவல் நூலாக வெளிவந்தது. வந்ததுமே மாபெரும் வரவேற்பு. துரைசாமி பின்னர் வேலைக்கே செல்லவில்லை. இந்த நாவல் அளித்த வருமானத்தில் வாழ்ந்தார்!

ஸ்காட்லாந்துச் சிற்றரசர்களின் அதிகாரப்பூசல்களையே ஸ்காட் அதிகமும் நாவலாக எழுதினார். இந்நாவலும் அத்தகைய ஒரு சிற்றரசனின் கதையே. டி.எஸ்.துரைசாமி அவர்கள் கதையை தமிழகச் சூழலுக்குக் கொண்டுவரும்போது பொதுவான ஒரு பெயரை கற்பனைசெய்கிறார், கருங்குயில் குன்றம். நேரடியான வரலாற்றுடன் ஏன் கதையை தொடர்பு படுத்தவில்லை என்றால் தமிழகவரலாற்றில் இதிலுள்ள நிகழ்வுகள் நடக்கவே முடியாது என்பதனால்தான்.

இந்நாவல் வெற்றிபெற்றதற்குக் காரணம் அன்றிருந்த அலுப்பூட்டும் பண்டித நடைக்குப் பதிலாக ஆங்கிலத்தில் இருந்து நேரடியாகவே எடுத்தாளப்பட்ட நவீன மொழிநடை இந்நாவலில் இருந்ததுதான். தொடர்ச்சியாக அகத்தூண்டல் அளிக்கும் பல வரிகளை நாம் நாவலெங்கும் கண்டுகொண்டே செல்கிறோம். ”தன்னுடைய சகோதரனின் ரத்தம் பழிவாங்க ஓலமிடுகிறது என அவன் அறிவான்…” என்ற வரி ஆங்கிலம் தமிழில் உருவாக்கும் நல்விளைவுகளுக்கு உதாரணமாக அமையக்கூடியது. ”வசப்படுத்தும் அரசன் குரல் அலமுவின் காதில் தெளிவாகவே விழ வெகு சஞ்சலத்துக்குள்ளானாள்” அப்படியே ஆங்கிலச் சொற்றொடரின் நுண்ணிய உணர்த்துதிறன் கொண்டிருக்கிறது.
அக்கால ஜமீந்தார் முறை, அதன் நிர்வாக அமைப்பு, அதன் ஆட்சிச் சிக்கல்கள் எதுவுமே இந்நாவலில் இல்லை .ஆங்கில டியூக்குகளின் அதே அரசாட்சிமுறையையே இங்கும் கொண்டுவந்திருக்கிறார். முதலில் கருங்யில் குன்றம், அருங்கிளி புரம் போன்ற பெயர்கள் நம்முடைய ஜமீந்தாரி குறுநாடுகளுக்குப் பொருத்தமானவை அல்ல. அவை கற்பனையால் போடப்பட்டவை. அக்காலத்து தமிழக ஜமீன்தார்கள் பெரும்பாலும் தெலுங்கர்கள், மீதிப்பேர் தேவர் சாதியினர். அவர்களின் அமைச்சர்கள் பெரும்பாலும் பிராமணர்கள் அல்லது வேளாளர்கள். இந்நாவலில் ஆச்சரியமாக சாதி பற்றிய குறிப்பே இல்லை.

இவ்வாறு அடிப்படையையே கற்பனையாக வைத்துக் கொண்டபின்னர் பெயர்கள் உட்பட எதிலுமே ஆசிரியர் இந்தியத்தன்மைக்காக முயலவில்லை. மாரமார்த்தாண்ட பூபதி , அலமு, கற்பகவல்லி என்ற பெயர்களெல்லாம் பொதுவானவையாகவே இருக்கின்றன.இளவரசிக்கு அலமு என்று பெயர் இருக்காது என்பதுகூட ஆசிரியருக்கு தெரிந்திருக்கவில்லை..கருங்குயில் குன்றத்தின் அரண்மனை பற்றிய வர்ணனைகூட இந்திய அரண்மனைகளைப்போல இல்லை.

அதைவிட கதைமாந்தரின் குணச்சித்திரத்தின் இயல்புகள் அன்றைய சமூகச்சூழலுக்கு இயைந்ததாக இல்லை. முக்கியமாக அலமுவின் குணச்சித்திரம். அவள் ஒர் ஆங்கில இளவரசி போலவே வளர்கிறாள். இசை கற்றுக் கொள்கிறாள். சுதந்திரமாக எங்கும் உலவுகிறாள். காட்டுக்குக் கூட செல்கிறாள்.  அன்னிய ஆடவர்களை தன் அறைக்குக் கொண்டுவந்து சிகிழ்ச்சை செய்கிறாள். தன் தகப்பனின் மீது விழுந்த பழியை  உணர்ந்ததும் பழிவாங்க அறைகூவல் விடுத்து தன்னந்தனியாக இந்தியா வருகிறாள்.

அலமு இந்தியாவந்து கருங்குயில்குன்றத்தில் தனியாக ஒரு வாடகைவிடுதியில் தங்கி வேலை தேடுகிறாள். அக்காலத்தில் சென்னையிலேயேகூட தங்கும் விடுதிகள் அனேகமாக இல்லை. த்டனக்கு வேலைவேண்டும் என்று பத்திரிகையில் விளம்பரம் கொடுக்கிறாள். சம்பளம் கொடுத்து சேடியையும் அமர்த்திக் கொள்கிறாள். தன் தாய்க்கே தோழியாக சென்று அமர்கிறாள்.

இப்படி சேடிகளை அமர்த்திக்கொள்ளும் வழக்கம் இந்தியாவில் இருந்ததில்லை. இங்கே தாசி என்பது ஒரு சாதி. சேடி என்பதும் சாதியே. மேலைநாட்டில் பிரபுகுலப்பிறப்புக்கும் சாமானியப்பிறப்புக்கும் இடையே மிகமிகப்பெரிய வேறுபாடு உண்டு. இந்திய சாதியமைப்பை விடபெரிய அகழி அது. ஒரு பிரபுகுலப்பெண் தோற்றத்திலேயே அதை வெளிக்காட்டுபவளாக இருப்பாள். ஆகவே அவளால் இன்னொரு மன்னர் அல்லது பிரபுக் குடும்பத்திற்குள் எளிதாக நுழைந்துவிட முடியும். இந்திய, தமிழ்ச் சூழலில் அது கிட்டத்தட்ட சாத்தியமே இல்லை.

அரண்மனை விருந்துக்கு எழுத்து வடிவில் அழைப்பு வருகிறது. விருந்தில் ஆண்களும் பெண்களும் சரிசமானமாகக் கலந்துகொள்கிறார்கள். விருந்துக்குப் பின் கதாநாயகியும் அவள் காதலனும் அரண்மனை தோட்டத்தில் இரவில் சாதாரணமாக உலாச்சென்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். கருங்குயில்குன்றத்தின் அரசன் கற்பகவல்லியின் ‘கைகளை முத்தமிட்டு’ காதல் பேசுகிறான் ”கற்பகவல்லி இதுதான் என் பெயரில் கிருபை கூர்ந்து நீ காட்டிய முதல் அபிமானம். அனேக வருடங்களாக நான் உன்னை ஒரு தெய்வமாகக் கொண்டாடிக்கொண்டிருந்தேன்…” பெண்ணிடம் ஆண் இவ்வகை உபச்சாரப்பேச்சுகளை இங்கே பேசுவதேயில்லை என்பதை நாம் அறிவோம்.

கற்பகவல்லி கொலைக்குற்றத்தில் சிக்கிய கனவனை விவாகரத்து செய்து கொள்வதும், அவன் இறந்தான் என்று அறிந்தபின்னும் சுமங்கலி போலவே இருப்பதும்,  கருங்குயில்குன்றத்து அரசன் அவளை மணம் முடிப்பதற்காக ஏங்கிக் காத்திருப்பதும் எல்லாமே மேலைநாட்டு பண்பாட்டுச் சூழலையே காட்டுகின்றன. தமிழ்நாட்டு ஆளும் சாதிகளில் தேவர்களில் மட்டுமே விதவை மறுமணம் அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தேவர்களில் உள்ள பெருந்தாலி கிளையே  அதிகமும் ஜமீன்பொறுப்புகளில் இருந்தார்கள், அவர்களுக்கு விதவை மறுமணம் அனுமதிக்கப்படவில்லை. அதாவது தமிழ்நாட்டு அரசர்குலம் எதிலுமே மறுமண வழக்கம் இல்லை.

அலமு அறை எடுத்து தனியாக தங்கும் விடுதி எப்படி இருக்கிறது? ”அலமுவும் அவள் தோழியும் உள்ளே சென்றார்கள். சத்திரக்காரன் இவர்களை உள்ளே கூட்டிச்சென்று நன்றாக கூட்டி சுத்தம்செய்யப்பட்ட ஓர் அறையைக் காட்டினான். அவ்வறைக்கு இருபக்கமும் சன்னல்கள் வைக்கப்பட்டிருந்தன. ஒன்றின் வழியாக ஊர் ராஜபாட்டையையும் இன்னொன்றின் வழியாக கடற்கரையையும் பார்க்கக்கூடியதாக இருந்தது. அவ்வறை அலமுவுக்கு திருப்திகரமாக இருந்தபடியால் தன் பெட்டிகளை அங்கே கொண்டுவரும்படி உத்தரவிட்டாள்…” சென்ற நூற்றாண்டில் நம் சம்ஸ்தானங்கள் எங்கும் இத்தகைய விடுதிகள் – இந்தியர்கள் தங்கும்படியாக – இல்லை என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

அப்படியென்றால் இந்நாவலின் சமூகப்பங்களிப்புதான் என்ன? இதில் உள்ள பெண்ணின் சித்திரம்தான். அந்தக்காலத்தில் எந்த இந்தியப்பெண்ணும் இந்நாவலின் கதாநாயகி போல வாழமுடியாது. சாதாரணப்பெண்கள் அஞ்சி அஞ்சி வாழ்ந்தார்கள். அவர்களுக்குக் கல்வி கிடையாது. ஆண்களுடன் பழகும் வாய்ப்பு கிடையாது. பொதுநாகரீகமும் நல்லமொழியும் பழக்கமில்லை.  அரசகுலப்பெண்கள் அரண்மனைக்குள்ளேயே வாழ்ந்தார்கள்.

அன்றைய ஆண்களுக்கு இளவயதிலேயே திருமணம் ஆகிவிடுவது வழக்கம். அவர்களின் மனைவிகளுக்கு எந்தவகையிலும் வெளியுலகமோ நாகரீகமோ தெரியாது. ஆகவே ஆணும்பெண்ணும் பேசிக்கொள்ளவே ஏதுமில்லை. இந்த நாவலில் உள்ள கதாநாயகியை காணும்போது அன்றைய படித்த இளைஞனுக்க் பெரும் பரவசம் ஏற்பட்டிருக்கும். அவன் ஆங்கிலத்தில் இதேபோன்ற பெண்களை வாசித்திருப்பான். ஆனால் அவர்கள் வெள்ளைக்காரிகள். வெள்ளைக்காரியைப்போல ஒரு இந்தியப்பெண் அலமு.  அன்று சராசரி இந்திய இளைஞன் கனவு கண்டது அவளைத்தான்!

 ‘ந ஸ்த்ரீ ஸ்வாதந்த்ரியம் அர்ஹதி ‘ [ பெண்ணுக்கு சுதந்திரத்துக்கான தகுதி இல்லை ] என்ற மனுமுறைக்கு நேர் மாறாக அலமு தன் வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் தானே முடிவுசெய்கிறாள். அவற்றை தன் மதிவன்மையால் வெல்கிறாள். உண்மையில் அக்காலத்தில் ‘கருங்குயில் குன்றத்துக்கொலை’ பெற்ற பெருவெற்றிக்கு அதன் மையக்கதாபாத்திரம் பெண்ணாக இருந்ததுதான் முக்கியக் காரணம்

இந்தப்பெண் கதாபாத்திரம் பின்னர் நம் இலக்கியத்திலும் சினிமாவிலும் எப்படியெல்லாம் விரிவடைந்தது என்பதை பார்த்தால் நாம் பெண்ணைப்பற்றி கொண்டிருந்த எண்ணத்தை இவை எப்படிஎல்லாம் மாற்றியமைத்தன என்று தெரியும். இந்தப்பெண் கதாபாத்திரம்தான் கல்கியின் தியாகபூமி நாவலில் வரும் சாவித்ரி. தன்னை நிராகரித்த கொடுமைக்கார கணவனை உதறி சுதந்திரமாக வாழ்க்கையை எதிர்கொண்டு வெற்றிபெறுபவள் சாவித்ரி. தேசத்திற்கும் சேவை செய்கிறாள். அவளிடம் மீண்டும் சேர விரும்பும் கணவனை நிராகரித்து அவன் விரும்பினால் அவனுக்கு ஜீவனாம்சம் அளிப்பதாகச் சொல்கிறாள்.

அத்தனை சினிமாக்களிலும்  பானுமதி நடித்த கதாபாத்திரமும் இதே போன்றதுதான் . தன்னம்பிக்கையான சுதந்திரமான பெண். ’ஏய் மிஸ்டர்’ என்று கதாநாயகனை அழைக்கிறாள். சுதந்திரமாக சிரித்துப்பேசி நடனமிடுகிறாள். பானுமதி ஒரு பெரிய குறியீடாகவே அன்று பார்க்கப்பட்டார். அவர் சாயலில் இருந்தமையால்தான் ஜெயலலிதா வெற்றிபெற்றார் என்று படுகிறது.

உண்மையில் அத்தகைய பெண் நம் சமூகச்சூழலில் உருவாகிவருவதற்கு மேலும் ஒரு தலைமுறை ஆகியது. ஆனால் வணிகஇலக்கியம் சினிம வழியாக அந்த விடுதலைப்பெண் நம் மனதில் ஆழமாக பதிந்தாள். இந்த நாவல்களுக்கும் சினிமாக்களுக்கும் இலக்கிய ரீதியாக பெரிய இடம் இல்லை. இவை அனைத்துமே தழுவி எடுக்கப்பட்டவைதான். ஆனால் நம் பண்பாட்டை இவை மாற்றியமைத்தன.

சென்ற நூறாண்டுகளில் நம் சமூக மனதில் பெண்களைப்பற்றிய சித்திரங்களையும், பெண்கள் மனதில் தங்களைப்பற்றியச் சித்திரங்களையும் உருவாக்கியதில் வணிக எழுத்துக்கும் வணிகசினிமாவுக்கும் பெரும்பங்குண்டு. வணிக இலக்கியத்தையும் வணிகசினிமாவையும் பாதித்தவை என்ற அளவிலேயே தீவிர இலக்கியங்கள் பங்களிப்பாற்றுகின்றன. மரகதத்தின் பத்மினி முதல் இன்றைய நயனதாரா வரை நம் பெண்களின் மாதிரிவடிவங்களாக எத்தனை நாயகிகள். டி.எஸ்.துரைசாமி முதல் பாலகுமாரன் வரை நம் பெண்களை வழிநடத்திய எத்தனை கதாபாத்திரங்கள். ஒரு சமூக ஆய்வாளன் நீண்ட பட்டியலையே போடமுடியும்.

தமிழ்நாவலின் முதல்படிகளில் ஒன்று…

முந்தைய கட்டுரைதற்கொலை -கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 27