தற்கொலை -கடிதங்கள்

IMG-20180608-WA0005

அபிராமானந்தரின் கங்கை

அன்புள்ள ஜெ

சுவாமி அபிராமனந்தரின் மரணம் பதிவு வாசித்தேன். கூடவே தற்கொலை, தூக்கு தொடர்பான தங்கள் பிற பதிவுகளையும் வாசித்தேன். “பின் தொடரும் நிழலின் குரல்” ஏசுவின் வரிகளையும் படித்தேன். வடக்கிருத்தல் போன்ற சில நம்பிக்கைகளை அவரவர் இனக்குழு, மத அடிப்படையில் அங்கீகரித்தால், தீர்ப்பு வழங்கும் நீதிபதிகள் தேசத்தின் எல்லா இனக்குழு பற்றியும் அவர்தம் நம்பிக்கை பற்றியும் கொஞ்சமாவது தெரிந்து இருந்தால் மட்டுமே தர்மத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்க முடியும்.

தற்கொலையில் இன்னொரு சிக்கல் சுற்றியஇருப்பவர்களுக்கு தெளிவுபடுத்தாமல் மரணிப்பது. இது உறவுகளுக்குள்ளயே சந்தேகத்தை கிளப்பும் , சிலர் தேவையற்ற வழக்கு தொடுப்பார்கள். வதந்திகள் பரவும்.

“யார் இல்லாவிட்டாலும் இந்த உலகம் இயங்கும், எல்லோரும் முக்கியமானவர்களே” என்ற விவேகானந்தரின் வரிகளை யோசித்தால், நான் இல்லாவிட்டாலும் எல்லாம் நிகழும் ஆனால் எப்படி நிகழும் என்பதை கேள்விக்குறிதான்.

Sublimation குறித்து 2014 லேயே பேசியிருக்கிறீர்கள் என்பதை படிக்கமுடிந்தது.

ஒருவர் எல்லா பற்றுகளையும் துறந்து விட்டார் தன்னை சார்ந்து யாரும் இல்லை, தன் மீதும் யாருக்கும் பற்றில்லை, தனக்கான உலகின் தேவை பூர்த்தியாகி விட்டதேனில் மரணிப்பது மிக நியாயமானதே.

பதிவுக்கு நன்றி

அன்புடன்

பகவதி

***

அன்புள்ள பகவதி

சுற்றியிருப்பவர்களுக்குத் தெளிவுபடுத்தவேண்டும் என நினைப்பதேகூட சுற்றியிருப்பவர்கள் மேல் அக்கறை எஞ்சியிருப்பதைக் காட்டுவது, அது பற்றுதான். அதுவும் இல்லாத நிலை உருவாகலாமே.

ஜெ

***

தய்யில் ஜான் செரியன், இதயநோய் நிபுணர்
தய்யில் ஜான் செரியன், இதயநோய் நிபுணர்

அன்புள்ள ஜெ

தற்கொலை குறித்து நீங்கள் எழுதியிருந்த குறிப்புகளை வாசித்தேன். தொடர்ச்சியாக இக்கருத்துக்களைச் சொல்லி வந்திருக்கிறீர்கள். பற்றிலாத நிலையில் உடலை நீத்தல் ஒரு சரியான விஷயம் என்றுதான் எனக்கும் இப்போது தோன்றுகிறது. பற்று என்பதில் கடைசியாக எஞ்சும் பற்று இரண்டு. ஒன்று உடல்மேல் கொள்ளும் பற்று. இன்னொன்று, நற்பெயர் மீது கொள்ளும் பற்று. நாம் சென்றபின்னர் நம்மைப்பற்றி இப்படியெல்லாம் பேசவேண்டும் என்று நினைத்துக்கொள்வது. இவ்விரண்டையும் வெல்லவேண்டும். தடமில்லாமல் பறவைகளைப்போலச் சென்றுவிடவேண்டும் என்று நினைப்பவர்களால்தான் அப்படி தானாகவேசெ ல்ல முடியும். துறவில் அது உச்சமான துறவுதான்

இருதயநோய் நிபுணரான செரியன் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டார். ஆளாளுக்கு ஒன்று பேசினார்கள். என்ன பிரச்சினை என்றாலும் அவர் நின்று சந்தித்திருக்கவேண்டும் என்றார்கள். எந்தப்பிரச்சினையும் அவருக்கு இல்லை. முதுமை வந்துவிட்டது. அவருடைய தொழிலிலும் சேவையிலும் சாதனை புரிந்து மனநிறைவு அடைந்துவிட்டார். அவர் செய்ய ஒன்றுமே இல்லை. மருத்துவர் ஆதலினால் வருவது அவருக்குத்தெரியும். ஆகவே தற்கொலை செய்துகொண்டார். வாழ்ந்து கஷ்டப்படுவது பொருளில்லாத்து என்று தோன்றியது. அந்நிலையை செரியன் போன்றவர்களால்தான் புரிந்துகொள்ள முடியும். அவர் ஒரு பெரிய கர்மயோகி. கர்மயோகிக்குரிய முடிவுதான் அவருடையது. ஜனகர் காட்டுக்குப்போய் வடக்கிருந்து உயிர்துறப்பது போன்றது அது.

சத்யநாராயணன்

***

 

முந்தைய கட்டுரைதன்வழிகள்
அடுத்த கட்டுரைஅந்த கதாநாயகி