இலுமினாட்டிகளின் பிரச்சாரகன்!

header

செம்பன் துரை

மேசன்களின் உலகம்

அன்புள்ள ஜெமோ அவர்களே,

நான் எப்போதுமே உங்களைப்பற்றி சொல்லிவந்த ஒரு விஷயம் நீங்கள் ஒரு இல்லுமினாட்டிக் குழுவினர் என்பது. நீங்கள் ஒரு ஃப்ரீமேசன் ரகசிய ஆதரவாளர். ஃப்ரீமேசன் என்பது இலுமினாட்டிகுழுவின் வெளிப்படையான அமைப்பு. நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பே சென்னை மதுரை நெல்லை திருவனந்தபுரம் ஆகிய ஊர்களில் அது கிளைகளை அதிகாரபூர்வமாக அமைத்துவிட்டது.

விஷ்ணுபுரம் உட்பட உங்கள் படைப்புகளில் உள்ள குறியீடுகளை ஆராய்ந்தால் மிக எளிதாக இதை எவரும் கண்டுபிடிக்கமுடியும். இலுமினாட்டிகளின் சாகாக்கலைச் சடங்கு ஒன்று கொஞ்சம் உருமாற்றி விஷ்ணுபுரத்தில் காசியபர் என்பவர் செய்வதாக வருகிறது. அப்படி ஒரு சடங்கு இந்துமதத்துக்குள் உண்டா என்று கேட்டால் யோகா ஆசிரியர்கள் கூடத் திணறுகிறார்கள். வெள்ளையானை, பத்மவியூகம் என்றெல்லாம் பல குறியீடுகள் உள்ளன

அதுபோகட்டும். இப்போது நீங்களே நேரடியாக ஆதாரம் அளித்துவிட்டீர்கள். நீங்கள் எழுதி வரலாற்றிலே நிறுத்தியவர்கள் யார் யார்? டாக்டர் கே. அல்லது வி.கிருஷ்ணமூர்த்தி என்ற யானைடாக்டர். அவர் ஒரு ரகசிய ஃப்ரீமேசன் ஆதரவாளர். அது அவருடன் பணியாற்றிய பலருக்கும் தெரியும். அவருக்கு விருது அளித்த வேணுமேனன் ஏலீஸ் என்ற அமைப்பு இலுமினாட்டி அமைப்பு. 36 வயதில் மறைந்த வேணுமேனன் ஒரு ஃப்ரீமேசன் ஆதரவாளர். ஆப்ரிக்காவிலும் பணியாற்றியவர். அது ஒன்றும் அரசு அமைப்பு கிடையாது. அது ஒரு ஆக்டிவிஸ்ட் குரூப். அவர்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடன் இயங்கும் ஒரு கூட்டம்.

யானை டாக்டரை வானளாவப் புகழ்ந்து அவரைப்பற்றிய மித்தை உருவாக்கியவர் இயான் டக்ளஸ் ஹாமில்டன் என்பவர். அவர் ஒரு இலுமினாட்டி. அவர் ஆப்ரிக்காவில் என்ன செய்துகொண்டிருந்தார் என்பதைப் பார்க்கவும்.அவருக்கும் யானை டாக்டருக்கும் என்ன உறவு? அவர் எப்படி இவரைத்தேடி இந்த அளவுக்கு வந்தார்? இவர்கள் யானையை வசப்படுத்தும் கலைகளை எப்படி ரகசியமாகப் பரிமாறிக்கொண்டார்கள்? அதற்கான சடங்குகளைச் செய்யத்தான் டாக்டர் கே குடும்பத்தைப்பிரிந்து டாப் ஸ்லிப்பில் தனியாக இருந்தார் தெரியுமா?

nata
வர்க்கலா நகரில் உள்ள நடராஜரின் சமாதி. இலுமினாட்டி லோகோவுடன் உள்ள ஒற்றுமையைக் கவனிக்கவும். இந்தவகை கட்டிடம் இந்தியாவில் உள்ள மரபா? சமாதிகள் இப்படி அமைக்கப்படுவது வழக்கமா?

[இந்தக்கட்டிடத்துக்கு ஒரிஜினல் இலுமினாட்டிகளின் இந்த சிம்பல்தான்]

நீங்கள் யானைடாக்டரை எழுதினீர்கள். அதை பல்லாயிரம் பிரதிகள் அச்சிட்டு மக்களிடம் இலவசமாக்க் கொண்டுசென்றவர் யார் யார்? எந்த அமைப்புக்கள்? இப்போது பாடத்திட்டம் வரை கொண்டுசென்றுவிட்டீர்கள். வரலாற்றிலே இடம்பெறச் செய்துவிட்டீர்கள். விவேகானந்தரைப்போல அவரையும் இலுமினாட்டிகள் சரித்திரத்தில் நிறுத்திவிட்டார்கள். உங்கள் வழியாக. இங்கே காட்டில் பணியாற்றியவர்கள் எழுதியவர்கள் ஆயிரம்பேர் இருக்க ஒருவர் மட்டும் எப்படிச் சரித்திரத்துக்குள் செல்கிறார்? இத்தனைக்கும் அவர் ஒரு நூல்கூட எழுதியதில்லை. இதுதான் இலுமினாட்டியின் பணி.

நீங்கள் முன்வைத்தவர்களின் பெயர்களையே பார்ப்போம். ஹென்றி ஸ்டீல் ஆல்காட். அவர்தான் இந்தியாவிலும் இலங்கையிலும் ஆரியவாதத்தையும் நவபௌத்தத்தையும் உண்டுபண்ணி நிலைநிறுத்தியவர். இருநாடுகளிலும் உள்ள அரசியலே அவரால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. அவருடைய தியோசபிக்கல் சொசைட்டியால் உருவாக்கப்பட்டு உலக அளவிலே நிலைநிறுத்தப்பட்டவர்தான் ஜே.கிருஷ்ணமூர்த்தி. இங்கே வழிவழியாக இருந்த எல்லா சிந்தனைகளையும் மறைத்தும் திரித்தும் அவர்கள் தங்கள் சிந்தனையை மைய ஓட்டமாக ஆக்கினார்கள். சைவம், வைணவம் போன்ற அனைத்துமே மறைக்கப்பட்டன. அயோத்திதாசர் ஆல்காட்டின் கையாள், ஆயுதம் மட்டும்தான். அவர் நவபௌத்தம் பேசியவர். நீங்கள் அவர்கள் இருவரையும் முன்வைக்கிறீர்கள்.

அயோத்திதாசர் ஏன் இங்கே முன்வைக்கப்படுகிறார்? திராவிடம் என்ற கருத்து ஆல்காட் முதலியவர்களால் முன்வைக்கப்பட்டது. அது ஆட்சியைப்பிடித்த்து. இன்றைக்குத் தமிழ்த்தேசியம் எழுந்து வரும்போது அதற்கு எதிராக தலித்துக்களை உருவாக்கும்பொருட்டே அயோத்திதாசரை கொண்டுவந்து நிறுத்துகிறார்கள். அப்படித்தான் நீங்கள் உள்ளே செல்கிறீர்கள்.

அதேபோல இலங்கையில் மரபான சைவத்தை மறுத்து குழப்பமான ஒரு கொள்கையைப்பேசியவர் மு.தளையசிங்கம். அவரை நீங்கள் இங்கே பேசிப்பேசி நிலைநிறுத்துகிறீர்கள். மு.தளையசிங்கத்தின் மெய்யுள் படித்தால் இலுமினாட்டி சிந்தனைக்கு வேறு சான்றே தேவையில்லை. அவர் தெளிவாகவே வருங்காலம் உள்ளுணர்வால் வழிநடத்தப்படும் ஒரு குழுவுக்கு உரியதுதான் என்கிறார். அதைத்தான் அவர் மெய்யுள் என்கிறார். மெய்முதல்வாதம் என்று சொல்கிறார். இலுமினாட்டிகளின் டெக்ஸ்ட் புக் என்றே அவருடைய மெய்யுள் நூலைச் சொல்லிவிடலாம். அது குழப்பமாக இருந்த்தனால் அதிகம் கவனிக்கப்படவில்லை. ஆனால் அதை நீங்கள் எவ்வளவு கடுமையான உழைப்பில் நிலைநிறுத்துகிறீர்கள் என்று பார்த்தால் நீங்கள் யார் எனத்தெரியும்.

இப்போது நீங்கள் நிலைநிறுத்திய இன்னொரு சரித்திரபிம்பம் பற்றி எழுதியிருக்கிறீர்காள். பேச்சிப்பாறை அணையைக் கட்டிய அலக்ஸாண்டர் மிஞ்சின் வெளிப்படையாகவே ஒரு இலுமினாட்டி. இங்கே ஃபிரீ மேசனுக்காக வேலைசெய்தவர். அவருக்கு அரசர் அந்த அணையிலேயே கல்லறை கட்டிக்கொடுத்தார். அரசரை வசப்படுத்தி பலகாரியங்களைச் சாதித்தார். திருவிதாங்கூடில் அவருடைய செயல்கள் எல்லாமே மர்மமானவை. ஆகவே அவரைக்கொல்ல முயன்றதாகவும் சொல்கிறார்கள்.

சி.பி.ராமசாமி அய்யரை திருவிதாங்கூருக்கு கொண்டு சென்றவர் மிஞ்சின். திருவிதாங்கூர் தனிநாடாகவேண்டும் என்று சி.பி.ராமசாமி அய்யர் சொன்னதற்கும் போராடியதற்கும் மிஞ்சின்தான் காரணம். உலகிலேயே அதிகமான செல்வம் இருக்கும் புதையல் திருவனந்தபுரத்தில் பத்மநாபசாமி ஆலயத்தில் உள்ளது. அதற்கும் இதற்குமான உறவு  விரிவான ஒரு வலை.

Guru_Nithya_Consciousness(1) [நடராஜரின் ஒரு நூலில் உள்ள குறியீடு]

உங்கள் குருநாதரைப்பற்றி நான் விரிவாக ஆராய்ச்சி செய்தேன். அவர் ஜெயச்சந்திரன் என்ற பெயர் கொண்டவர். நித்ய சைதன்ய யதி என்று தன்னைச் சொல்லிக்கொண்டார். அவருடைய ஆசிரியர் நடராஜன். அவர் பிரான்ஸில் ஹென்றி பெர்கூசன் என்ற சிந்தனையாளரின் மாணவர். ஹென்றி பெர்கூசன் பரவலாக அறியப்பட்ட இலுமினாட்டி. ஃப்ரீமேசன் அமைப்பைப்பற்றியும் அதன் லிபரல் தியாலஜி மற்றும் கிரியேட்டிவ் இவலூஷன் பற்றியும் அவர் நிறைய எழுதியிருக்கிறார். நடராஜன் அவருடைய நேரடி மாணவர். அதன்பின் சுவிட்சர்லாந்திலும் படித்தார். பிரான்ஸிலும் சுவிட்சர்லாந்திலும் நடராஜன் தங்கியிருந்து படித்தது முழுக்கவே ஃப்ரீமேசன்களின் ஹாஸ்டல்களில். அவரே எழுதிய ஆட்டோ பயாக்ரஃபி ஆப் என் அப்சலூடிஸ்ட் என்ற சுயசரிதையில் அவர் அந்தச்செய்தியைச் சொல்கிறார். அந்நூலில் அவர் அன்றைய ஃப்ரீமேசன் அமைப்பு அவருக்கு எவ்வாறெல்லாம் உதவியது என்று சொல்கிறார். பல்வேறு ஃப்ரீமேசன் அமைப்புகளைப்பற்றி அதில் நிறையச் செய்திகள் உள்ளன

நடராஜன் இந்தியா வந்து வேதாந்தத்தை ஃப்ரீமேசன் கொள்கைகளின் படி விளக்கி எழுதிய பகவத்கீதை உரை உட்பட பலநூல்கள் புகழ்பெற்றவை. அவருடன் சேர்ந்து பணியாற்றியவர் இன்னொரு ஃப்ரீமேசன் அமைப்பின் ஊழியரான ஜான் ஸ்பியர்ஸ். அவர்கள் இங்கே வேல்யூஸ் என்ற பத்திரிகையை நடத்தினார்கள். அவர்களின் நிதியுதவியால்தான் நாராயணகுருகுலம் உருவானது. அவர்கள் நாராயணகுருவின் அமைப்புடன் தொடர்பு கொண்டவர்கள் அல்ல. அவர்கள் தனி அமைப்பு. பெயர் மட்டுமே அவர்களால் வைக்கப்பட்டுள்ளது. நடராஜனின் மாணவர்கள்தான் ஜெஃப்ரி. அவர் பெங்களூரில் ஒரு வில்வித்தை நிலையம் நடத்தினார். வெளிப்படையாகவே அவர் ஃப்ரீமேசன் அமைப்பை நடத்திவந்தார். அவருடைய மாணவர்கள் இன்றைக்கும் பெங்களூர், ஊட்டி போன்ற ஊர்களில் உள்ளனர்.

ஜெயச்சந்திரன் என்ற நித்ய சைதன்ய யதி அமெரிக்காவில் பல பற்கலைக் கழகங்களில் வேலைபார்த்தார். அவரை அங்கெல்லாம்கொண்டு சென்றது ஃபீரீ மேசன் அமைப்புதான். அவருடைய மாணவர்களிலும் பீட்டர் ஓப்பன்ஹீமர் போன்ற ஃப்ரீமேசன் அமைப்பைச்சேர்ந்தவர்கள் பலர் உள்ளனர். அந்தக்குருகுலத்தின் பின்னணி இதுதான். நீங்கள் அங்கேதான் பல கருத்தரங்குகளை ஒருங்கிணைத்து இளைஞர்களை அங்கே ஒன்றுசேர்த்து தமிழ்ச்சிந்தனையில் செல்வாக்கைச் செலுத்துகிறீர்கள். தமிழ்த்தேசியம் உள்ளிட்ட சிந்தனைகளை சிதைக்கும் நோக்கம் உங்களுக்கு உள்ளது. இந்திய ஞானமரபையும் சிதைத்து திரிக்கிறீர்கள்.

நீங்கள் முன்வைத்து எழுதி ஹீரோவாக ஆக்கிய மேலும் இரண்டுபேர் ஃப்ரீமேசன் -இலுமினாட்டி பின்னணி கொண்டவர்கள். ஒருவர் நெய்யூர் மருத்துவமனையை நிறுவியவரான டாக்டர் . ஹோவார்ட் சாமர்வெல். அவருடைய பின்னணியும் இலுமினாட்டி- ஃப்ரீமேசன் பின்னணிதான். அவர் திருவனந்தபுரம் ஃப்ரீமேசன் ஹாஸ்டல்களுடன் தொடர்பில் இருந்தார். அலக்ஸாண்டர் மிஞ்சினும் அவரும் நெருக்கமானவர்கள். அவரை நீங்கள் ஓலைச்சிலுவை கதைவழியாக ஹிரோ ஆக்கினீர்கள். அவர் மலையேற்ற நிபுணர். அவர் ஏன் நெய்யூர் வந்தார், அவருக்கு இங்கெ என்ன தொடர்பு என்பதெல்லாம் இன்றைக்கும் ரகசியம். அவர் இங்கிருந்து சென்றபின்னரும் கிறித்தவ மிஷனரியாகச் செயல்படவில்லை. ஃப்ரீமேசனாகவே இருந்தார்.

இன்னொருவர் நீங்கள் எழுதிய உலகம் யாவையும் கதையில் வரும் அமெரிக்கரான ஹாரி டேவிஸ் . அவர் உலக மதங்களுக்கு எதிரானவர். வெளிப்படையாகவே இலுமினாட்டியாக அறிவித்துக்கொண்டவர். நாடுகள் இல்லாத உலகம் என்ற கொள்கையுடன் அவர் தனி பாஸ்போர்ட்டுகளையே வெளியிட்டார்.  அவருக்கு உலகம் முழுக்க ஆதரவாளர்கள் உண்டு. அவருக்கு நேரு, இந்திராகாந்தி வரை செல்வாக்கு இருந்தது. அவர் நடராஜனின் நண்பர். அவரையும் நீங்கள் பெரிய ஆளுமையாகக் காட்டிவிட்டீர்கள்.

போகட்டும். நான் சொல்லவருவது நீங்கள் மிஞ்சினையும் இப்போது சரித்திரத்தில் நிலைநிறுத்துகிறீர்கள் என்பதை மட்டும்தான். உங்கள் எழுத்தின் நோக்கம் தெளிவாகவே தெரிகிறது. கீழ்க்கண்ட இணைப்புக்களைப் பாருங்கள். தமிழில் இதையெல்லாம் விரிவாகவே பேசிக்கொண்டிருக்கிறார்காள் இன்றைக்கு. இனி இந்தச் சதிகள் இங்கே விலைபோகாது

ஜெயராமன் மகாலிங்கம்

***

அன்புள்ள ஜெயராமன்

நான் அடிக்கடிச் சொல்லும் ஒன்றுண்டு, நல்ல புனைவு எழுத ஒரு ஸ்குரூ கொஞ்சம் லூசாக இருக்கவேண்டும். நீங்கள் நம்ம இனம்.

வருக

ஜெ

***

 

 

பார்க்க

 மேசன்களின் உலகம்

ஒளிர்பவர்கள்

ஒளிர்வோர் -கடிதங்கள்

ஓலைச்சிலுவை [சிறுகதை] -1

ஓலைச்சிலுவை [சிறுகதை] 3

ஓலைச்சிலுவை [சிறுகதை] -2

யானைடாக்டர் [சிறுகதை] -1

யானைடாக்டர் [சிறுகதை] 3

யானைடாக்டர் [சிறுகதை] 2

உலகம் யாவையும் [சிறுகதை] 1

உலகம் யாவையும் [சிறுகதை] 3

உலகம் யாவையும் [சிறுகதை] 2

மு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் 1

மு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் 2

மு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் 3

தலித் இயக்க முன்னோடி ஹென்றி ஸ்டீல் ஆல்காட்

அயோத்திதாசர் என்னும் முதற்சிந்தனையாளர்-1

அயோத்திதாசர் என்னும் முதல்சிந்தனையாளர்-2

அயோத்திதாசரின் மாற்று ஆன்மீகவரலாறு-3

அயோத்திதாசரின் மாற்று ஆன்மீகவரலாறு- 2

அயோத்திதாசரின் மாற்று ஆன்மீகவரலாறு-1

***

முந்தைய கட்டுரைநகுலனின் உலகம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 26