அஞ்சலி : பேரா.சுஜாதா தேவி

download

 பேராசிரியர் சுஜாதாதேவி நேற்று [23- 6- 2018] அன்று மறைந்தார். மலையாளக் கவிஞர். ஆங்கிலப்பேராசிரியராகவும் சூழியல்போராளியாகவும் புகழ்பெற்றவர். மறைந்த கவிஞர் போதேஸ்வரனின் மூன்றாவது மகள். முதல்மகள் பேரா. ஹ்ருதயகுமாரி முன்னரே மறைந்தார். அடுத்தவர் புகழ்பெற்ற கவிஞரான சுகதகுமாரி. சுஜாதா மூவரில் இளையவர். இறக்கும்போது 72 அகவை.

சென்ற சில ஆண்டுகளாக உடல்நலமில்லாமல் இருக்கும் தமக்கை சுகதகுமாரியுடன் தங்கி அவரை கவனித்துக்கொண்டிருந்தார் சுஜாதாதேவி. திடீரென்று ஒருமாதம் முன்பு மூளையில் கட்டி இருப்பது கண்டடையப்பட்டது. அதற்கான மருத்துவத்தில் இருந்தார்.

B-Sujatha-Devi-featured-294x194

எனக்கு இருபத்தைந்தாண்டுகளாகவே உள்ளத்துக்கு அணுக்கமானவர். பலமுறை அவரை பார்த்திருக்கிறேன், மூன்றுமுறை மட்டுமே நீண்டநேரம் பேச வாய்த்தது. கடைசியாக சென்ற ஆண்டு வெண்முரசு மாமலர் நாவலை சுகதகுமாரிக்கு சமர்ப்பணம் செய்தபோது நூலைக் கொண்டுசென்று கொடுப்பதற்காக அவர் இல்லத்துக்குச் சென்றிருந்தேன். அப்போது இரு ஆசிரியைகளையும் சந்தித்தேன். சூழியல் சமூகப்பணி என அப்போதும் தீவிரமாக களத்தில் இருந்தார். கூடுதலாக வேதாந்த ஆர்வமும் அமைந்திருந்தது.

ஒர் இலட்சியவாதியான தந்தை தன் மகள்களை எந்த அளவுக்கு ஊக்கம் கொடுத்து முன்னிலையில் நிறுத்தமுடியும், எத்தனைகாலம் அந்தச் செல்வாக்கு நீடிக்கமுடியும் என்பதற்கு இம்மூன்று சகோதரிகளும் மிகப்பெரிய உதாரணம். இறுதிவரை அவர்கள் போதேஸ்வரனின் மகள்களாகவே நீடித்தனர். இலக்கியத்திலும் சமூகசேவையிலும் இணையான ஆர்வம் கொண்டிருந்தனர். ஹ்ருதயகுமாரி கட்டுரையாளர், கல்வியாளர், மேடைப்பேச்சாளர். சுகதகுமாரி கேரளம் கண்ட மாபெரும் ஆளுமைகளில் ஒருவர். சுஜாதாவும் அவர்களுக்கு நிகராகவே ஆளுமை கொண்டிருந்தார். மூவரும் இறுதிவரை ஒன்றாகவும் இருந்தனர். இலட்சியவாதத்தின் மீதுகொண்ட நம்பிக்கையை இறுதிவரை கைவிடவில்லை. தந்தையின் புகழை நிலைநிறுத்துவதிலும் சலிக்காமல் செயல்பட்டனர். தந்தைக்கு இம்மூன்று மகள்களும் ஆற்றிய நிகர்க்கடன் வரலாற்றிலேயே அரிதான ஒரு நிகழ்வு

ஹ்ருதயகுமாரியும் சுஜாதா தேவியும்

 

என் உத்வேகம் நிறைந்த ஒரு காலகட்டத்தின் இலட்சியக் கனவுகளின் அடையாளமாக உள்ளத்தில் என்றும் வாழும் அழகிய ஆசிரியைக்கு அஞ்சலி

ஜெ

***

அன்னையின் சொல்

மீட்சி

 

முந்தைய கட்டுரைஅபிராமானந்தரின் கங்கை
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 25