நகுலனின் உலகம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

கண்டாரதித்தன் விருது விழாவில் உங்களை சந்தித்து பேச முடிந்தது மகிழ்ச்சி அளித்தது.நீங்கள் பேசியதும் பிடித்திருந்தது.ஆனால் அப்படி ஒரே தளத்தில் அனைத்தையும் தொகுத்துவிட முடியாது என்றும் தோன்றியது.எனக்கு நகுலனின் கோட்ஸ்டாண்ட் கவிதைகள் ஒரு அபாரமான வாழ்க்கை தரிசனம் என்று தோன்றுகிறது.அது அவரின் கண்டுபிடிப்பு.அவரின் வாழ்க்கை வழியாகவே அதை அவர் அடைந்திருக்கக்கூடும்.

அசோகமித்திரன், நகுலன்,ஆல்பர் காம்யூ வழியாக நான் எனக்கான வாழ்க்கை தரிசனத்தை உருவாக்கிக் கொண்டேன்.நகுலனுக்கு சமர்ப்பணம் செய்யும் வகையில் நான்கு ஆண்டுகள் முன்னர் இந்தக் குறும்படத்தை எடுத்தேன்.அதன் சுட்டி கீழே.

https://youtu.be/reinxLS7vYs

ஆல்பர் காம்யூவின் தரிசனம் மீது எனக்கு அபாரமான ஈர்ப்பு உண்டு.அதன் அடிப்படையிலேயே அடுத்த வருடத்தில் ஒரு குறும்படம் எடுப்பேன்.

நீங்கள் தனிமனிதன் பற்றி சொன்னது விவாதத்திற்குரியது. பெரு நகரங்களில் தனிமனிதன் தோன்றி விட்டான் என்றே நினைக்கிறேன். சமீபத்தில் வாசித்த ஷங்கர்ராமசுப்ரமணியனின் ஆயிரம் சந்தோஷ இலைகள் அவர் வாழ்க்கை வழியாக அவர் அடைந்தவை என்றே தோன்றியது.அதே நேரத்தில் இவை எல்லாம் கருத்தியல் தளத்தில் ஏன் ஒரே போல இருக்கிறது என்ற உங்களின் கேள்வி நிச்சயம் முக்கியமானது.

நன்றி

சர்வோத்தமன்

***

அன்புள்ள சர்வோத்தமன்,

நான் சொன்னதை மீண்டும் தெளிவுபடுத்த விழைகிறேன். கவிஞர்கள் தங்கள் அனுபவத்தை எழுதவில்லை என்றோ தங்கள் வாழ்க்கையிலிருந்து தரிசனத்தைப் பெறவில்லை என்றோ நான் சொல்லவில்லை. அப்படி என்றால் அக்கவிஞர்களை மதித்தே இருக்கமாட்டேன்.

நான் சொன்னது புனைவுப்பாவனை குறித்து. அது எதிர்மறையான சொல் அல்ல. படைப்பில் ஒரு நானை கவிஞர், எழுத்தாளர் புனைந்து முன்வைக்கிறார். அந்த நான் வழியாகவே அவர் தன் அனுபவங்களை, தரிசனங்களைச் சொல்கிறார். அந்த நான் ஏன் அனைவருக்கும்  [ஏறத்தாழ] ஒன்றாக உள்ளது என்பதுதான் நான் கேட்டது. அந்தப்புனைவு பாவனையான நான் இங்கே வந்துசேர்ந்த மேலைச்சிந்தனைகளால் கட்டமைக்கப்பட்டது என்பதே நான் குறிப்பிட்டது.

அந்தப்புனைவுப்பாவனையின் எல்லைகளையே சுட்டிக்காட்டினேன். அது சற்றே பழையதாகிவிட்ட சிந்தனைகளின் உருவாக்கம் என்பதனால் அதன் மூலம் வரும் கருத்துக்களில் எனக்கு ஈடுபாடில்லை, அக்கவிஞனை அவன் கருத்துலகை மீறிச்சென்று அடையும் மொழி நிகழ்வுகளுக்காகவே என்னால் ஏற்கமுடிகிறது என்பதே நான் சொன்னது.

இது இன்றைய கவிஞர்களின் பிரச்சினை. சென்ற இருபதாண்டுகளாகத் திரண்டு வருவது. பொதுவாக கவிஞர்கள் அனைவரும் ஒரே இடத்தில் குவியும் சிறிய குழுவினராக, பொதுவான பழக்கவழக்கங்கள் கொண்டவர்களாக, ஒருவரை ஒருவர் ஏற்றாகவேண்டிய நிலையில் உள்ளவர்களகா, அதாவது ஒரு ’கிளப்’ ஆக மாறிவிட்டதன் விளைவு. நான் சொன்னதில் விதிவிலக்குகளைச் சுட்டிக்கொண்டே செல்லலாம் – ஆனால் அப்பட்டமான விதிவிலக்குகளே அந்த விவாதத்தின் வலுவான மறுதரப்பாக இருக்கமுடியும்.

நகுலன் காலகட்ட்த்தில் இந்நிலை இல்லை. பிரமிளும் நகுலனும் சி.மணியும் முற்றிலும் வேறுவேறு உலகங்களைச் சார்ந்தவர்கள். நகுலன் இருத்தலியலாலும் இணையாகவே இந்திய வேதாந்தமரபாலும் அலைக்கழிக்கப்பட்டு உருவானவர். ராமகிருஷ்ணர், ரமணர் இருவரிலும் தீவிர ஈடுபாடு உடையவர். அவர்களே தான் என்று நம்பிய ஒரு நிலையிலும் சிலகாலம் இருந்திருக்கிறார் – அப்போதுதான் நான் அவரை முதலில் சந்திக்கிறேன்.

ஆனால் நகுலனின் படைப்புலகில் அவ்வாறு ஒரு திட்டவட்டமான வாழ்க்கைப்பார்வை ஏதுமில்லை. தொடர்ச்சியான அலைக்கழிப்புகள், அவை அவருக்குரிய திறனற்ற அகவயமான மொழியில் வெளிப்படுவதன் சிலதருணங்களே உள்ளன. அவருடைய கோட் ஸ்டாண்ட் கவிதைகள், மழை மரம் காற்று போன்ற கவிதைகள் நினைவுப்பாதை, நாய்கள் போன்ற நாவல்களின் சில பகுதிகள் அவ்வகையில் படைப்பூக்கம் கொண்ட சிதறலை வெளிப்படுத்துகின்றன. அவ்வகையில் தமிழுக்கு முக்கியமானவை.

ஜெ

***

நகுலன் இலக்கியவாதியா?

நகுலன்

நகுலன் நினைவு

 

முந்தைய கட்டுரைஇலக்கியத்தில் மாற்றங்கள் -கடிதம்
அடுத்த கட்டுரைஇலுமினாட்டிகளின் பிரச்சாரகன்!