அன்புள்ள ஐயா
கொல்கத்தா பேலூர் மடம் ஸ்வாமி அபிராமானந்தா அவர்கள் இயற்கைக்கு மாறாக மரணம் அடைந்துள்ளார். மிக மன அழுத்தத்தை தரும் இத்தகவலை செரிக்க முடியவில்லை
விவேகானந்தர் வழியில் சேவை புரிய உயிர்க்குலத்தின் மீது பெருங்கருணையுடன் அவர் மடத்தில் சேர்ந்திருப்பார். கோவையில் இருக்கும்போது மடத்தில் சேருவது பற்றி எனக்கு அறிவுரை கூறிஉள்ளார். பின் குடும்ப சூழலாலும் கோழைத்தனத்தாலும் நான் பின்வாங்கிய போது வங்கிவேலை கிடைக்காவிடின் வித்யாலயத்தில் வேலை தருகிறேன் என பொருளியல் அபயம் தந்தார். (இம்மெயிலை அநுப்புவதே என் தன்முனைப்பை தீர்த்துக்கொள்ளத்தானோ என்று படுகிறது)
1 மடத்தில் உலகியலோ மனத்தில் தமஸோ புகுந்துவிட்டால், துறவி தனித்து வந்து அலையும் அறிவராக ஆகிவிடலாமா?
2 விவேகானந்தர் ஆரம்பித்த இயக்கத்திலேயே இப்படி என்றால் எதைப்பற்றிக் கொண்டு சாதகர்கள் வாழ்வது?
பதிவிடுவதாக இருப்பின் தயவு செய்து பெயரின்றி….
தங்கள் உண்மையுள்ள
ஆர்
***
இணைப்பு
We are sorry to announce the sudden passing away of Swami Abhiramananda ji (Shivakumar Maharaj), Assistant General Secretary, Ramakrishna Math and Ramakrishna Mission. Till the afternoon of 7 June, he was quite happy and followed his daily routine cheerfully. However, since the evening of that day, he was missing from his room. After a frantic search, his dead body was found floating on the Ganges, near Belur Math Jetty Ghat, today (8 June) at about 8.15 am. He was 65. Cremation will be held at Belur Math tonight (8 June 2018) at 9.15 pm.
— Headquarters Office
Ramakrishna Math & Ramakrishna Mission
P.O. Belur Math
அன்புள்ள ஆர்,
உங்கள் கடிதத்திலிருந்து நான் புரிந்துகொள்ள முடிந்தவை இரண்டு. அவருடைய இறப்பு உங்களுக்குப் பெரிய கொந்தளிப்பை அளித்துள்ளது. அது ஏன் என்று யோசியுங்கள். ஒருவர் ‘தற்கொலை’ செய்துகொண்டால் அவருக்கு ‘வாழ்க்கை வெறுத்துவிட்டது’ என்று புரிந்துகொள்கிறீர்கள். அதற்குக் காரணம் பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியாமை, வாழ்க்கைமேல் கசப்படைதல், அமைப்புகள் அல்லது மனிதர்கள் மீதான ஏமாற்றம், பிறர் மீதான வஞ்சம் என்றெல்லாம் எண்ணிக்கொள்கிறீர்கள். ‘தற்கொலை செய்துகொள்வது கோழைத்தனம்’ என்னும் வழக்கமான வரி உங்களைப் படுத்துகிறது.
நானும் இப்படித்தான் இருந்தேன். என் தோழன்,அன்னை, தந்தை மூவருமே தற்கொலை செய்துகொண்டார்கள். ஆனால் நித்ய சைதன்ய யதியின் சுயசரிதையில் வாசித்த ஒரு காட்சி எனக்கு வேறொரு சித்திரத்தை அளித்த்து. ஒரு துறவி சகதுறவிகள் அனைவரையும் அழைத்து மிகப்பெரிய விருந்து ஒன்றை அளிக்கிறார். அதற்காக இரந்து பொருள் சேர்த்திருக்கிறார். அனைவரும் உண்டு முடித்தபின் அவர்களை வணங்கி ஒவ்வொருவரிடமாக விடைபெறுகிறார். அவர்கள் காலபைரவனை போற்றி குரலெடுத்து வாழ்த்திக்கொண்டிருக்க கைகூப்பியபடி சென்று கங்கையில் பாய்ந்து உயிர்விடுகிறார். கூடிநின்றவர்கள் வாழ்த்தொலி எழுப்புகிறார்கள்
உலகியலாளர்களுக்குத் தற்கொலை என்பது ஓரு பிழையான முடிவு. துறவிகளுக்கு அப்படி அல்ல. தேஹவியோகம் என்று நம் நூல்கள் தானாக உயிர்விடுவதைப் போற்றியே சொல்கின்றன. அது இயல்பான உயர்ந்த நிலை என்றே குறிப்பிடுகின்றன. வாழ்வாங்கு வாழ்ந்தபின் கசப்போ ஏக்கமோ இன்றி வாழ்க்கையை முடித்துக்கொள்ளுதல் ஒருவகையான தவநிறைவே. வடக்கிருத்தல், நீரிலோ நெருப்பிலோ மறைதல் அதற்கான வழியாக வகுக்கப்பட்டுள்ளது. நாம் வணங்கும் பல யோகிகள் தேகவியோகம் – உடல்நீப்பு- செய்தவர்கள். கதைகளின்படி ராமனே கூட சரயுவில் மறைந்தவர்தான்.
சுவாமியின் மறைவைப்பற்றி இத்தனை துயரம்கொள்ள, அவர் அவ்வாறு செய்திருக்க்க் கூடாது என்றெல்லாம் எண்ணிக்கொள்ள உங்களுக்கு ஏது உரிமை? அது ஒருவகை அறியாமை அல்லவா? அவர் அவ்வமைப்பின் மீதான கசப்பினாலோ வாழ்க்கைமீதான ஒவ்வாமையாலோ உயிர்துறந்தார் என்றால் நீங்கள் சொல்வது சரி, அது தவறான முடிவு. ஒரு துறவிக்குரிய வழி அல்ல. ஆனால் நான் பார்த்தவரை அவர் இறுதிநாள் வரை இயல்பாகவே இருந்துள்ளார். இறுதி மின்ன்ஞ்சல் ஒரு விடைபெறல்குறிப்பு போன்றது. அதிலும் மனக்குறைகளோ கசப்புகளோ இல்லை. அந்நிலையில் அதை ஏன் ஒர் அவமுடிவு என்று பார்க்கவேண்டும்? ஏன் துயருறவேண்டும்? ஓர் இந்து கங்கையில் மறைவது தூயமரணமாகவே நெடுநாட்களாகாக் கருதப்படுகிறது. துறவியருக்கு அது மிக உகந்த்து. அப்படியென்றால் என்ன பிரச்சினை?
அவர் ஜலசமாதி அடைந்தார் என்று கொள்வதே இயல்பான நிலை.அடிகளுக்கு என் தாள்பணிதல்
ஜெ